ஜனாஸா எரிப்பு விவகாரம் ஆணைக்குழுவை நியமிக்க வலியுறுத்துகிறார் ஹக்கீம்

“உலக சுகாதார நிறுவனம் கொரோனா ஜனாஸாக்களை எரிக்கவும் முடியும், அடக்கம் செய்யவும் முடியும் என்று திட்டவட்டமாகக் கூறிய போதிலும், எங்களது ஜனாஸாக்களை பலவந்தமாக எரித்து படுபாதகச் செயல்களைச் செய்தார்கள்.

அதன் பின்னணியில் யார் யாரெல்லாம் இருந்தார்கள் என்பதைக் கண்டறிய ஜனாதிபதி ஒர் ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 30 வது பேராளர் மாநாடு புத்தளம் கே.ஏ. பாயிஸ் ஞாபகார்த்த மண்டப கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை நடைபெற்றபோது அங்கு பிரதான உரையை ஆற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

அவர் இதன்போது மேலும் தெரிவித்ததாவது, உலக சுகாதார நிறுவனம் கொரோனா ஜனாஸாக்களை எரிக்கவும் முடியும் அடக்கம் செய்யவும் முடியும் என்று திட்டவட்டமாகக் கூறிய போதிலும், எங்களது ஜனாஸாக்களை எரித்து படுபாதகச் செயல்களை செய்தார்கள். அந்த அவஸ்தைக்கு மத்தியில், இந்தப் பேராளர் மாநாட்டின் மூலமாக முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரித்ததற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும், அதன் பின்னணியில் யார் யாரெல்லாம் இருந்தார்கள் என்பதைக் கண்டறிய இந்த ஜனாதிபதி ஓர் ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுகின்றேன். இவ்வாறான அநியாயம் இந்த நாட்டில் எந்தவொரு சமூகத்துக்கும் பலவந்தமாக இனிமேல் ஒருபோதும் நிகழ்த்தப்பட கூடாது.

தமிழர்களுக்கு 30 வருட யுத்தத்தின் போது, நடந்த அநியாயங்களை நினைவு கூர்வதற்காக ஜெனிவாவில் முறைப்பாடுகள் தொடர்ந்தும் திரும்ப திரும்ப செய்யப்படுகின்றன. அநீதிஇழைக்கப்பட்ட எங்களின் சார்பிலும் அவ்வாறான முறைப்பாட்டை ஜெனிவாவில் பிரேரணையை முன்மொழிந்த நாடுகள் உள்வாங்கின. இஸ்லாமிய நாடுகளின் ஒன்றியம் இந்த அரசாங்கத்துக்கு சார்பாக வாக்களிப்பதை தவிர்ந்து கொண்டதும்,எதிராக வாக்களித்ததற்கு காரணமாக அமைந்ததும் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிக்கின்ற அந்த பிரேரணையாகும். இவற்றையெல்லாம் செய்து விட்டு, எல்லா அரபு நாடுகளின் தூதுவர்களும், இஸ்லாமிய நாடுகளின் ஒன்றியத்தின் தூதுவர்களும் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தை குப்பை தொட்டியில் போட்ட ஜனாதிபதிக்கு ஈற்றில் என்ன நடந்தது என்பதை நாம் பார்த்தோம். சதிகாரர்களை மிகைத்த சதிகாரன் மேலே இருக்கின்றான் என்பதில் முஸ்லிம்களான நாம் நம்பிக்கை கொண்டவர்கள் என்றார். (விடிவெள்ளி இதழ் 10/11/2022)

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter