அவ்லியா மலைப் பள்ளியில் நடந்தது என்ன?

முஸ்லிம்கள் நாம் சமாதானத்தை விரும்புபவர்கள். நாட்டின் ஏனைய இன மக்களுடன் புரிந்துணர்வுடனும் நல்லிணக்கத்துடனும் வாழுபவர்கள் என்று நமக்கு நாமே மார்தட்டிக்கொள்கிறோம்.

இவையெல்லாம் வெறும் கண்துடைப்பா? என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது. அண்மைக்கால சில நிகழ்வுகள் இதனை நிரூபிக்கின்றன.
சமாதானத்தையும் கருணையையும் சகோதரத்துவத்தையும் போதிக்கும் இவற்றுக்கு சின்னமாகத் திகழும் பள்ளிவாசல்களில் கம்பு, தடிகள், இரும்புக் கம்பிகள் கொண்டு எம்மவர்களே ஒருவருக்கொருவர் தாக்கிக்கொள்ளும் துர்ப்பாக்கிய நிலை சமூகத்துக்குள் உருவாகியிருக்கின்றமை கவலைக்குரியதாகும்.

இவ்வாறான ஒரு நிலைமை கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி இரவு சுமார் 7.30 மணியளவில் காலி, கிந்தோட்டையில் அமைந்துள்ள அவ்லியா மலைப்பள்ளிவாசலில் ஏற்பட்டுள்ளது. கடற்கரைக்கு அண்மித்து அழகான சூழலில் அமையப்பெற்றிருப்பதே அவ்லியா மலைப்பள்ளியாகும். இங்கு முஹம்மத் வலியுல்லாஹ்வின் ஸியாரம் அமையப் பெற்றுள்ளது. இந்த ஸியாரம் சுமார் 1700 வருட காலம் பழைமையானது எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவ்லியா மலைப்பள்ளிவாசலின் நிர்வாகம் அப்பள்ளிவாசலுக்கு சுமார் 800 மீற்றர்களுக்கு அப்பால் இருக்கும். மீரான் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தினாலேயே நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

அண்மையில் அவ்லியா மலைப்பள்ளிவாசலில் மசூரா மூலம் தீர்த்துக்கொள்ளப்படவேண்டிய கருத்து முரண்பாடுகளுடன் கூடிய பிரச்சினையொன்று அப்பகுதியிலுள்ள பன்சலைவரை சென்று தற்காலிகமாக சமாதானம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இருதரப்புகளுக்கிடையில் கைகலப்பு
இந் நிலையில்தான் கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி இரவு சுமார் 7.30 மணியளவில் அவ்லியா மலைப்பள்ளிவாசலில் இரு தரப்பினருக்குமிடையில் உருவான மோதல் கைகலப்பில் முடிந்து 12 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளின் பின்பு வைத்தியசாலையிலிருந்தும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நால்வர் காலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். நீதவான் குறிப்பிட்ட நால்வரையும் சரீர பிணையில் விடுவித்தார்.

இருதரப்பினருக்குமிடையில் கைகலப்பு இடம்பெற்ற வேளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து ஸ்தலத்துக்கு விஜயம் செய்த பொலிஸாரே சந்தேக நபர்கள் நால்வரையும் கைது செய்தனர்.

கடந்த 26ஆம் திகதி இரவு சுமார் 7.30 மணியளவில் சூபி முஸ்லிம்கள் பள்ளிவாசல் வளாகத்தில் கொடியேற்றியபோது அங்கு வருகை தந்திருந்த பெரும் எண்ணிக்கையிலான தெளஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். கொடியேற்ற வேண்டாம் என்றார்கள். நாங்கள் ஏற்றிய கொடியை இறக்குவதற்கு மறுத்தோம். இந்நிலையில் இருதரப்பினருக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டது. நாங்கள் சிறிய எண்ணிக்கையானோரே இருந்தோம். நாங்கள் 7 பிள்ளைகள் உட்பட 12 பேரும் பெண்கள் சுமார் 20 பேரும் இருந்தோம். தெளஹீத் ஜமா அத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 100 பேர் வரை இருந்தார்கள் என கொடியேற்றத்தில் ஈடுபட்ட தரப்பைச் சேர்ந்த முஸ்லிம் அப்துல்லாஹ் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், நானும் தாக்கப்பட்டு காயங்களுக்கு உள்ளானேன். எனது மகன் உட்பட உறவினர்கள் காயங்களுக்குள்ளாகி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்கள். அவர்கள் இரு தினங்களில் சிகிச்சையின் பின்பு வைத்தியசாலையிலிருந்தும் வெளியேறினார்கள் என்றார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்திக் கொள்கின்றனர். யார் தாக்குதல் மேற்கொண்டார்கள்? யார் தாக்கப்பட்டார்கள்? என்பதை பாதுகாப்பு பிரிவினரே விசாரணையின் பின்பு கண்டறிய வேண்டும்.

முஸ்லிம் அப்துல்லாஹ் தொடர்ந்தும் தெரிவிக்கையில், இப்பள்ளிவாசலில் நாங்கள் 18 வருடகாலமாக கொடியேற்றி வருகிறோம். தற்போது கொடியேற்றத்துக்கு தடைவிதிக்கிறார்கள். முஸ்லிம்கள் எங்களுக்கு பிரிவுகள் தேவையில்லை. சம்பிரதாய முஸ்லிம்களான சூபி முஸ்லிம்கள் எங்கள் பள்ளியைப் பிடிப்பதற்கு வருகிறார்கள் என அவர்கள் எங்கள் மீது குற்றம் சுமத்துகிறார்கள். நாங்கள் பள்ளியை பிடிப்பதற்கு செல்லவில்லை. எமது சம்பிரதாய மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவற்காகவே பள்ளிவாசலுக்குச் செல்கிறோம். இந்த தாக்குதலில் எமது வேனும் தாக்கப்பட்டுள்ளது. அதற்கான சேதம் 2 ½ இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

பன்சலையில் ஏற்கனவே தீர்த்துவைக்கப்பட்ட பிணக்கு
அவ்லியா மலைப்பள்ளிவாசலில் இரு தரப்பினரிடையே நிலவி வந்த பிணக்கு ஏற்கனவே அப்பிரதேச பன்சலையில் தீர்த்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
கொடியேற்றம் மற்றும் சம்பிரதாய நிகழ்வுகள் தொடர்பில் பள்ளிவாசலில் இரு தரப்பினருக்குமிடையில் பிரச்சினைகள் உருவாகியபோது அது ஏற்கனவே கிந்தோட்டை துன்மஹல் விகாரையில் விகாராதிபதி வீரகெட்டிய சஞ்சய தேரரினால் தீர்த்து வைக்கப்பட்டிருந்தமை கவனத்திற்கொள்ளப்பட வேண்டியதாகும். வீரக்கெட்டிய சஞ்சய தேரர் இரு தரப்பினரையும் பன்சலைக்கு அழைத்து பிரச்சினை தொடர்பில் விசாரணை நடத்தி இருதரப்பினருக்கும் அறிவுரை வழங்கியிருந்தார்.

இவ்விவகாரம் தொடர்பில் அவ்லியா மலைப்பள்ளிவாசல் நிர்வாக சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் தெரிவிக்கையில், ‘ஒரு பிரிவினர் சில காலங்களுக்கு முன்பு அவ்லியாமலைப் பள்ளிவாசலுக்கு வந்து தமது சமய வழிபாடுகளை நடாத்துவதற்கு அனுமதி கேட்டார்கள்.

அவர்களுக்கு கிழமைக்கு ஒரு நாள் அனுமதி வழங்கப்பட்டது. பின்பு அதனை அவர்களாகவே கிழமைக்கு இரண்டு நாட்களாக அதிகரித்துக்கொண்டார்கள். ஒவ்வொரு மாதமும் கொடியேற்றுவார்கள். இதனால் முரண்பாடுகள் ஏற்பட்டன. பிணக்குகள் பல தடவைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. காலி பொலிஸ் நிலையத்திலும் பல தடவைகள் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இரு தரப்பினருக்குமிடையில் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க நாம் பன்சலைக்கு அழைக்கப்பட்டோம். அக்குழுவினரும் வருகை தந்திருந்தார்கள். பெண்களும் வந்திருந்தார்கள். இரு தரப்பினரும் சண்டையிட்டுக் கொள்வதில்லை என்று புனித குர்ஆனை சாட்சியாக வைத்து உறுதி பூணுங்கள் என்று பன்சலையின் பிரதம குரு வீரகெட்டிய சஞ்சய தேரர் சமாதானப்படுத்தி வைத்தார்.

இவ்வாறு சமாதானம் செய்து வைக்கப்பட்டு இருவாரங்களின் பின்பே இரு தரப்பினரும் பள்ளிவாசலில் கொடியேற்றும் விவகாரத்தில் முரண்பட்டுக் கொண்டு அடிதடியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறான நிலைமை இன்றைய சூழலில் முஸ்லிம் சமூகத்துக்குப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. பள்ளிவாசல்களை மையப்படுத்தி மீண்டும் அடிப்படைவாதம் தலை தூக்குவதாக உளவுப்பிரிவு கருதும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.

வக்பு சபையிலும் விசாரணை
அவ்லியா மலைப்பள்ளிவாசலில் சமய நிகழ்வுகள் தொடர்பான விசாரணைகள் வக்பு சபையிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளிவாசலில் தமது பாரம்பரிய சமய வழிபாடுகளுக்கு பள்ளிவாசல் நிர்வாக சபை தடைவிதிப்பதாக பாரம்பரிய முஸ்லிம்கள் வக்பு சபையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கடந்த 27 ஆம் திகதி இப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்குவதற்கு வக்பு சபை தீர்மானித்திருந்தது. என்றாலும் பள்ளிவாசலில் இடம்பெற்ற கைகலப்பினைத் தொடர்ந்து ஒரு தரப்பு 27 ஆம் திகதிய விசாரணையில் கலந்து கொள்ளவில்லை. இதனையடுத்து விசாரணை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அவ்லியா மலைப்பள்ளி மஹல்லாவாசி ஒருவர்
அவ்லியா மலைப்பள்ளிவாசல் கொடியேற்றத்தின்போது ஏற்பட்ட அசம்பாவிதங்கள் தொடர்பில் அவ்லியா மலைப்பள்ளி மஹல்லாவாசியொருவரைத் தொடர்பு கொண்டு விடிவெள்ளி தகவல்களைச் சேகரித்தது. பெயர் குறிப்பிடவிரும்பாத மஹல்லாவாசி விளக்கமளிக்கையில், பள்ளிவாசல் நிர்வாகத்தில் பல்வேறு கொள்கைகளைக் கொண்டவர்கள் கலந்து இருக்கிறார்கள். இப்பள்ளிவாசலில் மெளலூது ஓதுதல், கொடியேற்றம் போன்ற விவகாரங்களில் தொடர்ந்து முரண்பாடுகள் நிலவி வருகின்றன.
முஹர்ரம் மாதத்திற்காக ஊர் ஜமா அத்தார்களே கொடியேற்றினார்கள். வைபவத்தில் பள்ளிவாசல் நிர்வாகமும் கலந்து கொண்டது.

கடந்த மாதம் 26 ஆம் திகதி இரவு 7.30 மணியளவில் ஊர் மக்கள் ஏற்றியிருந்த கொடியை அடுத்ததரப்பினர் பலவந்தமாக கழற்றி அவர்களது கொடியை ஏற்றி விட்டார்கள். இந்த செய்தியறிந்து பள்ளிவாசல் நிர்வாகம் அங்கு சென்றது. ஊர்மக்களின் கொடியை கழற்றிவிட்டு புதிதாக கொடியேற்றியவர்கள் அக்கொடியை கழற்றுவதற்கு அனுமதிக்கவில்லை. கொடியை அவிழ்க்க வேண்டாம் அடிப்போம் என்றார்கள். கொடியை கழற்ற முற்பட்டபோது தாக்கினார்கள். கல் எறிந்தார்கள். பொல்லுகளால் தாக்கினார்கள். பெண்களும் தாக்குதலில் ஈடுபட்டார்கள். இந்தக் கைக்கலப்பிற்கும் தெளஹீத் ஜமா அத்துக்கு எந்த தொடர்பும் இல்லை.

தெளஹீத் கொள்கை வாதிகள் பள்ளிவாசலை உரிமை கொண்டாடவில்லை. இக்கொள்கைவாதிகளுக்கும் இந்த தர்காவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் எங்களை தெளஹீத்வாதிகளே தாக்கினார்கள் என்றார்கள்.

இது கொடியேற்றத்தில் உருவான பிரச்சினை. இவ்வாறான பிரச்சினைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.

ஒன்று படவேண்டும்
முஸ்லிம் சமூகம் இவ்வாறான சிறிய விடயங்களில் முரண்பட்டுக் கொள்வது நகைப்புக்குரியதாக உள்ளது. கொடியேற்றத்தில் உருவான தாக்குதல்கள் 12 பேரை காயங்களுக்குள்ளாக்கியுள்ளது. பள்ளிவாசலில் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளார்கள்.

இவ்வாறான சம்பவங்கள் முஸ்லிம் சமூகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பவையாகவே உள்ளன. கடந்த காலங்களில் கொள்கை ரீதியான பிளவுகள் காரணமாக உயிரிழப்புகள் கூட பதிவாகியுள்ளன. இவ்வாறான சம்பவங்கள் முஸ்லிம்கள் மீது பிற சமூகங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதாகவே உள்ளன.
எனவேதான் எம்மிடையே நிலவும் கொள்கை முரண்பாடுகள் களையப்பட வேண்டும். சகிப்புத் தன்மை வளர்க்கப்பட வேண்டும். வன்முறைகள் ஒருபோதும் தீர்வாகாது என்பதை அனைவரும் உணர வேண்டும்.

ஏ.ஆர்.ஏ.பரீல் (விடிவெள்ளி இதழ் 03/11/2022)

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

Free Visitor Counters Flag Counter