சவூதி அரேபியாவில் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு மரண தண்டனைக்கு உள்ளாகி சிறையில் வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண் ஒருவர் 7 வருடங்களின் பின்பு அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் அண்மையில் விடுதலையாகி இலங்கை திரும்பியுள்ளார்.
சவூதி அரேபியாவில் வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்து கொண்டிருந்தபோது எஜமானரின் பிள்ளையொன்றினை சூனியம் செய்து கொலை செய்ததாக குறிப்பிட்ட இலங்கைப் பெண்மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றம் அப்பெண்ணை குற்றவாளியாக இனங்கண்டு மரண தண்டனை விதித்திருந்தது. வழக்கு நடைபெற்றிருந்த 7 வருட காலமாக இலங்கைப் பெண்மணி சிறை வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
சூனியம் செய்து கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட குழந்தையின் பிரேத பரிசோதனையில் குழந்தை நோய்வாய்ப்பட்டிருந்தமை அறியப்பட்டதனையடுத்தே மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த குறிப்பிட்ட பெண்மணி நீதிமன்றினால் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலைமையினை எதிர்கொண்ட பெண்மணி பாத்திமா சமருத்தி என்பவராவார். 48 வயதான திருமணமாகாத இவர் அவிஸ்ஸாவலை தல்துவ எனும் பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
தனது குழந்தையை சூனியம் செய்து கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டதாக பாத்திமா சமருத்தி பணிப்பெண்ணாக வேலை செய்த வீட்டார் அவருக்கெதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். இதனையடுத்து சவூதி அரேபியாவிலிருக்கும் இலங்கைத் தூதுவராலய அதிகாரிகள் முன்வந்து அனைத்து சட்ட பிரிவுகளினதும் ஒத்துழைப்புடன் இவ்விவகாரம் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இறந்த குழந்தையின் உடற்பாகங்கள் பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டன.
ரியாத், அமெரிக்கா மற்றும் தம்மாமில் நடத்தப்பட்ட உடற்பாகங்களின் வைத்திய பரிசோதனைகளில் குழந்தை புற்று நோயின் தாக்கத்தினாலே இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. குழந்தை இறந்தமைக்கான உண்மைக்காரணம் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டதன் பின்பு பாத்திமா சமருத்தி கடந்த ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார்.
வறுமை நிலையிலிருந்தும் மீள்வதற்கு பணம் தேடுவதற்காக சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாகச் சென்ற குறிப்பிட்ட பெண்மணி தான் எதிர்கொள்ள வேண்டியேற்பட்ட துக்ககரமான நிலைமையை அழுது கொண்டே ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
“நான் கடந்த மாதம் 2 ஆம் திகதி வந்து சேர்ந்தேன். மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நான் தாய்நாட்டுக்குத் திரும்பி வருவேன் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை. சிறையில் கடந்த 7 வருடங்களாக நான் அனுபவித்த வேதனைகள் பற்றி என்னால் விபரிக்க முடியாது. நான் இறந்து பிழைத்து வந்துள்ளேன் என்றே எண்ணத் தோன்றுகிறது.
எனக்கு ஏற்பட்ட நிலைமையை நினைத்து வேதனைப்பட்டு எந்நேரமும் கண்ணீர் சிந்திக்கொண்டிருந்த எனது பெற்றோர் நோய்வாய்ப்பட்டு காலமாகி விட்டார்கள். நான் மாத்திரமே அவர்களுக்கிருந்த ஒரே பிள்ளை. இன்று எனக்கு ஒருவருமில்லை. இன்று நான் எனது தூரத்து உறவினரான சகோதரி ஒருவரின் வீட்டிலே காலத்தைக் கடத்துகிறேன்.
நான் பணிப்பெண்ணாக பாடுபட்டு உழைத்ததில் எனக்கு எதுவும் மிஞ்சவில்லை. நான் குற்றமற்றவள். நிரபராதி, கொலைகாரியல்ல என நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. 7 வருடங்கள் சிறையில் தனிமையில் மரண தண்டனைக்காக காத்திருந்தேன். எனக்கு எந்தவித நஷ்டஈடும் வழங்கப்படவில்லை. விடுதலை மாத்திரமே கிடைத்துள்ளது.
இப்போது என்னிடம் எதுவும் இல்லை. நான் அநாதையாகிவிட்டேன். எனது பெற்றோர் வேதனையால் நோய்வாய்ப்பட்டு காலமானதற்கும் என்மீது பொய்க் குற்றம் சுமத்தியவர்களே பொறுப்புக்கூற வேண்டும்.
சவூதி அரேபியா மனித நேயமில்லாத மோசமான நாடு. அவர்களிடம் மனிதாபிமானம் இல்லை. சவூதி அரேபியாவுக்கு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்ல வேண்டாமென நான் என் நாட்டு மக்களை வேண்டிக்கொள்கிறேன். சவூதி அரேபியாவில் எனக்கேற்பட்ட அநீதி தொடர்பில் கவனம் செலுத்தி இலங்கை அரசாங்கம் எனக்கு சவூதி அரேபிய அரசாங்கத்திடமிருந்து நஷ்ட ஈடு பெற்றுத்தர ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது எனது கோரிக்கையாகும்.
நான் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி பணிப்பெண்ணாக வேலை வாய்ப்பு பெற்று சவூதி அரேபியாவுக்குச் சென்றேன். சவூதியில் அந்நாட்டு பிரஜை ஒருவரது வீட்டில் பணிப்பெண்ணாக இரண்டு வருடங்களும் 3 மாதங்களும் வேலை செய்து இலங்கைக்கு திரும்பிவர ஆயத்தமாக இருந்த நிலையில் எஜமானரின் மகள் திடீரென சுகவீனமுற்றார். எஜமானரின் பிள்ளைக்கு நான் சூனியம் செய்ததால் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டதாக எஜமான் பொலிஸில் புகார் செய்தார். இதனையடுத்து நான் சவூதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டேன். நீதிமன்றம் என்னை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது. நான் சிறையில் இருக்கும்போது எஜமானரின் மகள் நோயினாலேயே காலமானார். இதன்பின்பே எனக்கு மரண தண்டனை விதிப்பதற்கான நடவடிக்கைகளை நீதிமன்றம் முன்னெடுத்தது.
நான் 7 வருடகாலம் சிறையில் இருந்தேன். இந்நிலையில் இலங்கை தூதரக அதிகாரிகள் என்னை தொடர்பு கொண்டு அவ்விடயம் தொடர்பில் பேசினார்கள். மீண்டும் இந்த வழக்கை நீதிமன்றில் விசாரிப்பதற்கு ஏற்பாடு செய்தார்கள்.
நீதிமன்றம் காலமான பிள்ளையின் வைத்திய அறிக்கை மூன்றினை சமர்ப்பிக்கும்படி கோரியது. அதற்கிணங்க வைத்திய அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த வைத்திய அறிக்கைகளே பிள்ளை புற்று நோயினால் பாதிக்கப்பட்டே மரணித்தது என்பதை உறுதி செய்தன என்றார்.
ஏ.ஆர்.ஏ. பரீல் (விடிவெள்ளி இதழ் 03/11/2022)