மனைவியை தன்னிடம் அழைத்துக்கொள்ளும் முன் அல்லாஹ் அவரை அழைத்துக் கொண்டான்

‘நான் உங்களது விசா விடயமாக எம்பசிக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். விசா ஏற்பாடுகள் முடிந்த பிறகு மீண்டும் போன் பண்ணுகிறேன்.’

தென்கொரியாவின் தலை நகர் சியோலில் இருந்து மொஹமட் ஜினாத் இறுதியாக தனது மனைவி பாத்திமா சப்னாவுடன் உரையாடிய வார்த்தைகள் இவை.
அதன்பின்பு மொஹமட் ஜினாத் மனைவியை தொடர்பு கொள்ளவில்லை.
தென் கொரியாவின் சியோல் நகரில் கடந்த மாதம் 29 ஆம் திகதி சனிக்கிழமை இடம் பெற்ற பாரிய சன நெரிசலில் சிக்குண்டு அவர் வபாத்தானார்.

27 வயதான முனவ்வர் மொஹமட் ஜினாத் கண்டி மாவட்டம் உடதலவின்னையில் அலுகொல்ல என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். அனர்த்தம் இடம் பெற்று அவர் வபாத்தான அன்றைய தினமே அவரது பெற்றோருக்கு மரணச் செய்தி அறிவிக்கப்பட்டது. எதிர்பாராத துயரச் செய்தி பெற்றோர், மனைவி, உறவினர்கள் மற்றும் கிராமத்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உறவினர்களால், ஊராரினால் அவர் மிகவும் நேசிக்கப்பட்டவர்.அனைவர் மீதும் கருணையுள்ளவர்.

மொஹமட் ஜினாத் உடதலவின்னை ஜாமியுல் அஸ்ஹர் கல்லூரி மற்றும் வத்தேகெதர முஸ்லிம் வித்தியாலயத்தில் கல்வி கற்றவர். அவர் 2 வருடங்களுக்கு முன்பு தென் கொரியாவுக்குச் சென்று தொழில் புரிந்து விட்டு 4 மாதங்களுக்கு முன்பு இலங்கை திரும்பியிருந்தார். இலங்கை திரும்பிய அவர் பாத்திமா சப்னா (25) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மனைவி தற்போது கர்ப்பிணியாகவுள்ளார்.

திருமணத்தின் பின்பு அதாவது ஒன்றரை மாதங்களுக்கு முன்புதான் அவர் தென்கொரியாவுக்குத் திரும்பியிருந்தார். இந்தக் குறுகிய காலத்தில் இந்த அனர்த்தத்துக்கு ஆளாகியுள்ளார்.

அவர் தனது மனைவி மீது உயிரிலும் மேலாக அன்பு செலுத்தியதாக உறவினர்கள் தெரிவிக்கிறார்கள்.

தனது மனைவியை தான் வதியும் கொரிய நாட்டுக்கே அழைத்துக்கொள்ள வேண்டுமென விரும்பி அதற்கான ஏற்பாடுகளை வேகமாக முன்னெடுத்து வந்தார். என்றாலும் மனைவியை அவர் தன்னிடம் அழைத்துக் கொள்வதற்கு முன்பு இறைவன் அவரை தன்பக்கம் அழைத்துக்கொண்டான். அவருக்கு ஜென்னதுல் பிர்தெளஸ் கிட்ட வேண்டும் என பிரார்த்திப்போமாக.

தென்கொரியாவின் சியோல் தலைநகரில் ஓர் குறுகிய வீதியிலே ஹெலோவின் திருவிழா நடந்துள்ளது. இந்தத் திருவிழாவில் பங்கேற்பதற்கென்று அவர் அங்கு செல்லவில்லை. அன்று அவர் தனது மனைவிக்கான கொரியா விசாவைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக இலங்கை தூதரகத்திற்குச் சென்று விட்டு தான் தங்கியிருக்கும் இடத்துக்கு புகையிரதத்தில் திரும்பி வந்துள்ளார்.

ஹெலோவின் திருவிழா நடைபெற்ற வீதிக்கு அருகிலேயே அவர் தங்கியிருந்த அறை அமைந்துள்ளது. அறைக்கு திரும்பி வந்தபோதே திருவிழா சனநெரிசலில் சிக்கி இப்பரிதாப நிலைக்குள்ளாகியுள்ளார்.

மொஹமட் ஜினாத் தொழில் நிமித்தமாக வெளிநாடு சென்றவரல்ல எனவும் கல்வி நடவடிக்கைகளுக்காகவே தென்கொரியா சென்றுள்ளார் எனவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் ஆர்.பி.எ.விமலவீர தெரிவித்துள்ளார். இதேவேளை அவர் கொரியாவிலிருந்து இரண்டு வருடங்களின் பின்பு நாடு திரும்பி வந்து மீண்டும் விசிட் விசாவில் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வெளிநாட்டு தொடர்பு பிரிவினர் தென்கொரியாவிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு இவ்விபத்து மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர்.

மொஹமட் ஜினாத்தின் ஜனாஸாவை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவரது பெற்றோர் வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கிணங்க ஜனாஸாவை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வெளிவிவகார அமைச்சர் சட்டத்தரணி அலிசப்ரி இதற்கான நடவடிக்கைகளுக்கு அனுமதியளித்துள்ளார்.

இதேவேளை ‘ஹெலோவின் கொண்டாட்ட சன நெரிசலில் சிக்குண்டு மேலும் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்பது தொடர்பில் அறிந்து கொள்வதற்கு தூதரக அதிகாரிகளை சியோல் பொலிஸ் நிலைத்துக்கும் வைத்தியசாலைக்கும் அனுப்பி வைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.
தென்கொரியாவில் மொஹமட் ஜினாதின் ஜனாஸா தொழுகை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

ஜனாஸா கொண்டு வரப்படுகிறது
மொஹமட் ஜினாத்தின் ஜனாஸா இன்று கொரியாவிலிருந்து இலங்கையை வந்தடையவுள்ளது. இன்று (03) காலை 4.25 மணிக்கு விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் என அவரது பெற்றோர் தெரிவித்தார்கள்.
ஜனாஸாவை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை கொரியாவில் தொழில் புரியும் அவரது நண்பர்கள் மேற்கொண்டிருந்தார்கள்.

மொஹமட் ஜினாத்தின் தந்தை
மொஹமட் ஜினாத்தின் தந்தை முனவ்வரை ‘ விடிவெள்ளி’ தொடர்பு கொண்டபோது அவர் பின்வருமாறு தெரிவித்தார்.

‘‘மகனின் மரணச் செய்தியை அறிந்து கொண்டதிலிருந்து நாங்கள் அதிர்ச்சிக்குள்ளா கியுள்ளோம். அவரது மனைவி அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை.
மகன் ஜினாத் பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில் தேடியே கொரியாவுக்குச் சென்றார். நானும் எனது மனைவியும் வயோதிபர்கள். நோயாளிகள். எங்களையும், மனைவியையும் பராமரிப்பதற்காகவே அவர் வெளிநாடு சென்றார்.
மகனுக்கு ஜென்னத்துல் பிர்தெளஸ் கிட்ட வேண்டும். அவருக்காக அனைவரும் துஆ பிரார்த்தனை செய்யுங்கள் ’’ என்றார்.

154 பேர் பலி
சியோல் ஹெலோவின் கொண்டாட்டத்தின்போது சன நெரிசலில் சிக்குண்டு பலியானவர்களின் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பெரும்பாலானவர்கள் அந்நாட்டின் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியான 154 பேரில் 19 பேர் வெளிநாட்டவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையிலிருந்து கொரியாவுக்கு வேலை வாய்ப்பு பெற்று, வெளிநாட்டு பணியகத்தில் தங்களை பதிவு செய்து கொண்டு அங்கு சென்றிருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 23 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.- Vidivelli

ஏ.ஆர்.ஏ.பரீல் (விடிவெள்ளி இதழ் 03/11/2022)

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter