திலினி பிரியமலி என்ற ஒரு மங்கை விரித்த பணமோசடி வலைக்குள் மூவாயிரம் கோடி ரூபாயும் மூவாயிரத்துக்கும் அதிகமான முஸ்லிம்களும் சிக்கியுள்ளதாக சமூக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இன்னுமொரு மோசடியிலும் பதினாலாயிரம் கோடி ரூபாயும் எண்ணாயிரம் பேரும் சிக்கியுள்ளதாகவும் தகவலுண்டு. அதில் எத்தனை பேர் முஸ்லிம்கள் என்பது தெரியாது. நாடே பொருளாதாரச் சீரழிவுக்குட்பட்டு வங்குரோத்தாகி பிச்சைப்பாத்திரம் ஏந்துகிற நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ள ஒரு காலகட்டத்தில் திலினியின் முதலீட்டுத் திருவிளையாட்டின் பகடைகளாக முன்னை நாள் முஸ்லிம் ஆளுனர் அசாத் சாலி உட்பட பல அரசியற் பிரபலங்களும் வர்த்தகர்களும் உத்தியோகத்தர்களும் ஏன் பௌத்த துறவிகளும்கூட காய் நகர்த்தப்பட்டுள்ளனர் என்றும் அதே தகவல்கள் வெளிப்படுத்துகின்றன. இந்தத் திருவிளையாடல் பற்றிய மேலும் பல சுவையான விபரங்கள் விரைவில் அம்பலமாகலாம். விசாரணைகள் தொடர்கின்றன. அவையெல்லாம் ஒரு புறமிருக்க, இவ்வாறான மோசடிகள் இடம்பெறுவதற்கும் நாட்டின் அரசியல் பொருளாதார சமூகச் சூழலுக்கும் தொடர்புண்டா என்பதையும் பெரும்பாலான முஸ்லிம்கள் இவ்வாறான மோசடிகளுக்கு ஏன் பலியாகின்றனர், அதனால் ஏற்படும் பேராபத்து என்ன என்பவற்றையும் எண்ணிப்பார்ப்பது நல்லது. அதுவே இக்கட்டுரையின் நோக்கமும்.
நாட்டின் அரசியற் சட்டகத்தின் சீர்கேடு
இலங்கையின் நிர்வாகத்தையும், பொருளாதாரத்தையும், நீதித்துறையையும் திறம்பட இயங்க முடியாமல் சீரழித்துக் கொண்டிருப்பது நாட்டின் சிந்தனைச் சட்டகம். இதைப்பற்றி ஏற்கனவே இப்பத்திரிகையில் வெளிவந்த எனது கட்டுரைகள் ஒன்றிரண்டு விமர்சித்துள்ளன. சுருக்கமாகக் கூறினால் இந்த நாடு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே உரிய ஒரு நாடு; ஆதலால் இங்கு வாழும் ஏனைய இனங்கள் பெரும்பான்மை இனத்தின் தயவில் வாழும் நீண்டகாலக் குடியினரே என்ற ஒரு பேரினவாதச் சித்தாந்தம் அந்தச் சட்டகத்தின் ஆணிவேராய் அமைந்துள்ளது. அந்தச் சித்தாந்தமே அரசியல் தலைமையையும் ஆட்கொண்டிருப்பதால் அரசாங்கமும் பொருளாதாரமும் சட்ட ஒழுங்கும் நீதித்துறையும் பெரும்பான்மை இனத்துக்குச் சாதகமகவே பயன்பட வேண்டும் என்ற வரையப்படாத ஒரு நியதி சுதந்திரம் கிடைத்த காலம் தொட்டே நிலவிவந்துள்ளது. இந்த நியதியே குறிப்பாகக் கடந்த பதின்மூன்று வருடங்களாக பசுந்தரையாய் இருந்த இலங்கையை பாலைவனமாக்கியுள்ளதென்றால் அது மிகையாகாது. அந்தப் பாலைவனத்தில் முளைத்த ஒரு கள்ளிச் செடியே திலினி பிரியமலி என்றும் கூறலாம்.
ஊழல்கள் மலிந்த ஓர் ஆட்சியில் எந்த அதிகாரியையும் பணத்தாலோ பகட்டாலோ வாங்கிவிடலாம் என்பதை அந்த இளநங்கை நன்றாக அறிந்துள்ளார். அதே ஊழலைப் பயன்படுத்தி குறுக்கு வழிகளிற் திரட்டிய செல்வத்தை சட்டத்தின் பிடிகளுக்குட் சிக்காமல் காப்பாற்றலாம் என்ற சூட்சுமத்தையும் நங்கையின் நாடகத்தின் கதாபாத்திரங்களும் உணர்ந்திருந்தனர். அதன் விளைவே இந்த மோசடி. இதில் சிக்கிய முதலீடுகள் அனைத்தும் ஏதோ ஒரு நிதி ஸ்தாபனத்தின் ஊடாகத்தானே கைமாறி இருக்க வேண்டும்? அதேபோன்று முதலீடு செய்தவர்களின் பணம் எவ்வாறு அவர்களிடம் குவிந்தது என்பதும், அந்த முதலீட்டாளர்கள் அரசுக்குச் சேரவேண்டிய வரித்தொகையை முறைப்படி செலுத்தினார்களா என்ற விபரங்களும் வரித்திணைக்களத்திடம் இருக்கத்தானே வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அரசாங்கத்தின் கண்களுக்குள் மண்ணைத்தூவி விட்டே இப்பெருச்சாளிகள் செல்வத்தைக் குவித்திருக்க வேண்டும். எனவே இந்த மோசடிக்கு அரசும் மறைமுகமான உடந்தையாக இருந்துள்ளதென்று கருதுவதிலும் தவறில்லை.
தனிப்பட்ட ஒருத்தி செய்த மோசடி பிடிபட்டுப் பிரபலமாகி விட்டது. ஆனால் அரசாங்கத்துக்குள் மந்திரிகளாகவும் அதிகாரிகளாகவும் இருந்துகொண்டு செய்த மோசடிகளும் கொள்ளைகளும் ஏன் இன்னும் பிடிபடாமல் இருக்கின்றன? அந்த மோசடிகள்தானே நாட்டை வங்குரோத்தாக்கியுள்ளன?
இவையெல்லாம் உணர்த்தும் ஓர் உண்மை என்னவெனில் நடைமுறையிலிருக்கும் சிந்தனைச் சட்டகத்தை களைந்தெறியாமல் நிர்வாகத்தையும் சமுதாயத்தையும் இந்த நாட்டில் கட்டி எழுப்ப முடியாது என்பதே. ஆகையால் இவ்வாறான மோசடிகள் இன்னும் தொடரும். ஊழல் நிறைந்த ஒரு சமுதாயத்தின் கண்ணாடிக்குள் தெரியும் ஒரு முகங்களே மோசடிகள். மத்திய வங்கி ஆளுனர் ஒருவர் செய்த பணமுறி மோசடி ஏற்கெனவே யாவரும் அறிந்த ஒன்று. எனவேதான் நடைமுறையில் இருக்கும் சிந்தனைச்சட்டகத்தை முற்றாக மாற்று என்ற கோரிக்கையுடன் ஓர் இளைஞர் கூட்டம் ஏழு மாதங்களுக்குமுன் கொதித்தெழுந்தது. அந்த எழுச்சியை படைகொண்டு முடக்கி அதன் தலைவர்களையும் சிறையில் தள்ளி சட்டகத்தைக் காப்பாற்றியவரே இன்றைய ஜனாதிபதி. அதாவது சிந்தனைச் சட்டகத்தை மாற்றுவதற்குப் பதிலாக அதனை மேலும் பலப்படுத்துவதாக அமைந்துள்ளது அவரது அராஜக நடவடிக்கைகள். இந்த நிலையில் மேலும் பல மோசடிகளை நாடு எதிர்கொள்ள வேண்டி நேரிடும்.
முஸ்லிம்கள் சிக்குவதேன்?
வியாபாரத்துறையில் வரலாற்றுப் புகழ் பெற்றவர்கள் முஸ்லிம்கள். இஸ்லாத்துக்கும் வர்த்தகத்துக்கும் இடையேயுள்ள நெருக்கம் வேறு எந்த ஒரு மதத்துக்கும் வர்த்தகத்துக்கும் இல்லை. இலங்கை முஸ்லிம்களும் வர்த்தகர்களாகவே வந்தனர், வர்த்தகர்களாகவே வளர்ந்தனர். இன்றும் பல தடைகளுக்கு மத்தியிலும் பெரும்பாலானோர் அதே துறையிலேதான் ஈடுபாடு கொண்டுள்ளனர். ஆனால் எவ்வாறு வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதற்கு இஸ்லாத்தில் பல வரையறைகள் உண்டு. அவற்றையெல்லாம் இங்கே விளக்குவது பொருத்தமாகாது. ஒரே வசனத்தில் கூறுவதானால் வர்த்தகத்தின் ஊடாகவோ முதலீடுகளின் ஊடாகவோ கொள்ளை லாபம் திரட்டுவதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை. ஆனால் திலினியின் முதலீட்டு மோசடி அந்த வரையறைகளுக்கு அப்பாற்பட்டதொன்று. அப்படியானால் அந்த முதலீட்டில் ஏன் முஸ்லிம்கள் தமது பணத்தை முடக்கினார்கள்?
பொருளீட்டலில் இஸ்லாமிய விழுமியங்கள் எங்கே?
இலங்கையில் இன்று வாழும் முஸ்லிம் சந்ததியை மத ரீதியாக நோக்கின் அவர்களை தப்லீக் இயக்கத்தின் நிழலில் வளர்ந்த ஒரு சந்ததி என வருணிக்கலாம். அந்த இயக்கத்தின் ஓயாத பிரச்சாரத்தாலேதான் இன்றைய பள்ளிவாசல்கள் குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் பக்தர்களால் நிரம்பி வழிகின்றன. அது வரவேற்கப்பட வேண்டியதொன்று. ஆனால் அந்தப் பிரச்சாரத்திலும் வெள்ளிதோறும் நடைபெறும் குத்பா பிரசங்கங்களிலும் மார்க்கக் கடமையை தவறாது செய்யுங்கள் என்று வலியுறுத்தப்படுகின்றதே தவிர முஸ்லிம்கள் எவ்வாறு தமது உழைப்பையும் தொழில்களையும் முதலீடுகளையும் இஸ்லாமிய தர்மத்தின்படி செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துவது மிகவும் குறைவு. அதை நிவர்த்தி செய்வதற்கு பிரச்சாரகர்களுக்கும் பிரசங்கிகளுக்கும் இஸ்லாம் போதிக்கும் வாழ்வியல் விழுமியங்களைப்பற்றிய அறிவு வேண்டும். இஸ்லாமியப் பொருளியல் பற்றியோ முதலீடு செய்யும் வழிகள் பற்றியோ விபரிப்பதற்கு இக் கட்டுரையின் நீளம் இடந்தரமாட்டாது.
இந்த வாழ்வில் எப்படி வேண்டுமானாலும் பொருளீட்டலாம். ஆனால் மார்க்கக் கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றினால் சுவனம் புகலாம் என்ற ஒரு தப்பான தத்துவம் மறைமுகமாக முஸ்லிம்களிடையே முஸ்லிம் போதகர்களால் போதிக்கப்படுகிறது. உதாரணமாக, ஒரு முறை ஒரு பள்ளிவாசலில் ஒரு வெள்ளிக்கிழமையன்று குத்பாப் பிரசங்கம் நிகழ்த்திய ஒரு மார்க்கப் பிரசங்கி ‘அரசாங்க வரிகளிலிருந்து தப்புவதற்காக நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கணக்குக் காட்டலாம். ஆனால் இறைவனுடைய சக்காத் வரியை மட்டும் சரியாகக் கணக்குப்பார்த்துக் கொடுத்து விடுங்கள்’ என்று கூறினார். இந்தப் போதனை வருமான வரித் திணைக்களத்தின் செவிகளுக்கு எட்டுமானால் அதன் தாக்கம் எப்படிப்பட்டது என்பதை வாசகர்களே மட்டிடட்டும்.
முஸ்லிம்களின் ஆபத்தான எதிர்காலம்
சிங்கள பௌத்த பேரினவாதம் இப்பொழுது முஸ்லிம்களைக் குறிவைக்கிறது என்பது எல்லாருக்குமே தெரிந்த ஒரு விடயம். சில வருடங்களுக்கு முன்னர் சிங்கள மொழியில் சம்பிக்க ரணவக்க என்ற ஓர் அரசியல்வாதியால் எழுதி வெளிடப்பட்ட இஸ்லாமியத் தீவிரவாதம் பற்றிய ஒரு நூல் எத்தனையோ ஆதாரமற்ற செய்திகளைக் கொண்டுள்ளது என்பதை வாசகர்கள் உணரவேண்டும். உதாரணமாக மன்னாரிலிருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்டு உடுத்த உடையுடன் புத்தளத்துக்கு அகதிகளாக வந்த முஸ்லிம்கள் அங்கே சிங்கள மக்களின் நிலத்தை அபகரித்துள்ளனர் என்ற ஓர் அபாண்டத்தை அந்த நூலில் ரணவக்க பொறித்துள்ளார். இந்த நூலுக்கு இதுவரை எந்த ஒரு முஸ்லிம் தலைவனோ புத்திஜீவியோ மறுப்புரை ஒன்றை எழுதாதது புதுமையாகத் தெரியவில்லையா? அதேபோன்று இன்னும் பல அரசியல்வாதிகளும் பௌத்த பிக்குகளுட் சிலரும் முஸ்லிம்கள்மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளனர். அவற்றுக்கும் முஸ்லிம் தலைவர்களிடமிருந்து மறுப்புரை பேச்சிலும் இல்லை, எழுத்திலும் இல்லை.
இந்த அவதூறுகளால் முஸ்லிம்களின் வர்த்தக வாய்ப்புகளும் திட்டமிட்டதுபோல் தடைகளுக்குள்ளாக்கப்பட்டுள்ளன. அவர்களுக்குக் காணிகள் வாங்கவும் கடைகளைத் திறக்கவும் வேறு தொழில்களை ஆரம்பிக்கவும் எத்தனையோ தடைகள் குறுக்கே நிற்கின்றன. இந்த நிலையில் எப்படியும் செல்வத்தைத் திரட்டிக்கொண்டு சக்காத் கொடுப்பதன் மூலமும் பள்ளிவாசல்களையும் மதரசாக்களையும் கட்டுவதன் மூலமும் ஏழை முஸ்லிம் குமரிகளுக்கு விவாகம் செய்துவைப்பதன் மூலமும் பொருளீட்டும் முறையிலுள்ள பாவங்களுக்கு விமோசனம் பெறலாம் என்ற ஒரு தவறான கொள்கை மேற்கூறிய மோசடிகளுக்கு முஸ்லிம்களை ஆளாகச் செய்யலாம் என்பதை மறுக்கலாமா? ஏற்கனவே முஸ்லிம்கள் பலர் அதுவும் பெண்கள் உட்பட போதைக்கு ஆளாகியமை மட்டுமல்லாமல் போதை விற்பனையும் செய்கின்றார்கள் என்று காவல்துறையினர் கூறுகின்றனர். இந்த நிலையில் மூவாயிரத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் பணமோசடியிலும் இறங்கியுள்ளனர் என்பதையும் சிங்கள மொழி ஊடகங்கள் பிரபலப்படுத்துமானால் முஸ்லிம் சமூகத்தின் கதி என்னவாகும் என்பதை முஸ்லிம் அரசியவாதிகளும் மதத் தலைவர்களும் புத்திஜீவிகளும் எண்ணிப்பார்த்தல் வேண்டும்.
தேவையான கருத்தரங்குகள்
இவ்வாறான பொருளீட்டல் முறையிலுள்ள குறைபாடுகள் வையத்து வாழ்வாங்கு வாழ்வது எப்படி என்பது பற்றியும் இஸ்லாம் என்ன போதிக்கின்றது என்பதை ஒட்டிய கருத்தரங்குகள் ஒவ்வொரு பள்ளிவாசலிலும் தொடர்ந்து நடைபெற வேண்டும். ஒருவர் அறியாமல் செய்யும் பாவங்கள் மன்னிக்கப்படலாம். ஆனால் விடயம் தெரிந்தவர்கள் அந்த அறியாமையை அகற்றுவதற்கு வழிசெய்யாவிடின் அது மிகப் பெரிய பாவம். இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்கொண்டிருக்கும் பேராபத்தான நிலையில் இவ்வாறான கருத்தரங்குகள் தவிர்க்க முடியாதவை. அவற்றை புத்திஜீவிகள் முன்னின்று நடத்த வேண்டும். அதற்குப் பொருத்தமான இடம் பள்ளிவாசல்களே.–Vidivelli
கலாநிதி அமீரலி, மேர்டொக் பல்கலைக்கழகம், ற்கு அவுஸ்திரேலியா
(விடிவெள்ளி இதழ் 03/11/2022)