ஐரோப்பிய நாடுகளிலிருந்து தபாலில் அனுப்பப்பட்ட ரூ. 7 கோடி பெறுமதியான போதைப்பொருள் மீட்பு
மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் கைப்பற்றல்
ஜெர்மன், கனடா ஐக்கிய ராஜ்ஜியம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்கு தபால் பொதி மூலம் அனுப்பப்பட்டுள்ள 7 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய போதைப் பொருளை சுங்க அதிகாரிகள் நேற்று கைப்பற்றியுள்ளனர்.
மேற்படி நாடுகளிலிருந்து கொழும்பிலுள்ள தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு அனுப்பப்பட்டிருந்த பொதிகளையே சுங்கத்திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுதந்த சில்வா தெரிவித்துள்ளார்.
சுங்கத்திணைக்களத்தின் தபால் பெறுமதி நிர்ணைய பிரிவு அதிகாரிகள் சந்தேகத்திற்கு இடமான வகையில் தடுத்து வைத்துள்ள 13 பார்சல்கள் சுங்கத்திணைக்கள போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள், தபால் திணைக்கள அதிகாரிகள், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு செயலணி அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதன் போதே அந்த பார்சல்களில் சூட்சுமமாக பொதி செய்து மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குஷ் ரக போதைப்பொருள் 921 கிராம், ஐஸ் ரக போதைப்பொருள் 106 கிராம், கஞ்சா விதைகள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள ஒரு லீற்றர் திரவ எண்ணெய், 5272 மெனமிப்டமய்க் ரக போதைப் பொருள் வில்லைகள், 425 போதைப்பொருள் கட்டிகள், மென்ட் ரக போதைப்பொருள் 2 கிராம், ஐஸ் ரக போதைப் பொருள் 4 கிராம் ஆகியன அதில் உள்ளடங்குவதாகவும் சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த போதைப் பொருட்களின் பெறுமதி 7 கோடியே 30 இலட்சத்து 65,000 ரூபாவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக அதனை பொலிஸ் தலைமையக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.