பள்ளிவாசல்கள் தொடர்பில் புலனாய்வு பிரிவு ஆராய்வு

நாட்டின் சில பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்களில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் குழுக்களுக்கிடையிலான மோதல் சம்பவங்கள் மற்றும் அசம்பாவித நிகழ்வுகளையடுத்து அரச புலனாய்வுப் பிரிவு அவ்வாறான பள்ளிவாசல்கள் தொடர்பிலான தகவல்களைச் சேகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பள்ளிவாசல்களின் இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வக்பு சபை என்பன விசாரணைகளை முன்னெடுத்து வருவதாயின் அப்பள்ளிவாசல்களின் பெயர்பட்டியலை வழங்குமாறு திணைக்களத்தினைக் கோரியுள்ளதாகவும் அறிய முடிகிறது.

அண்மையில் கிந்தோட்டை அவ்லியா மலைப் பள்ளிவாசலில் இடம் பெற்ற அசம்பாவித சம்பவங்களின் பின்பே அரச புலனாய்வுப் பிரிவு இந்நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அண்மைக்காலமாக கிந்தோட்டை, அநுராதபுரம், புல்மோட்டை பள்ளி வாசல்களில் குழுக்களுக்கிடையில் முரண்பாடுகள் உருவாகியுள்ளமையை அரச புலனாய்வுப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

அநுராதபுரம், அசரிகம ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற உழ்ஹிய்யா இறைச்சி விநியோகத்தில் முரண்பாடு காரணமாக பள்ளிவாசலின் முன்னாள் நிர்வாக சபை உறுப்பினர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் பள்ளிவாசலின் நிர்வாக சபை உறுப்பினராவார்.

புல்மோட்டை பள்ளிவாசல் பிரச்சினை தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் புல்மோட்டை கிளைத்தலைவர் அபுல்கலாம் மௌலவியை விடிவெள்ளி தொடர்புகொண்டு வினவிய போது ‘புல்மோட்டை முஹியத்தீன் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபை தொடர்பில் பிரச்சினை நிலவி வருகிறது. வக்பு சபை இடைக்கால நிர்வாக சபையொன்றினை ஒருவருட காலத்துக்கு நியமித்துள்ளது. தற்போது இச்சபையின் பதவிக்காலமும் கால வதியாகியுள்ளது. இந்நிர்வாக சபை 65 பேரின் பெயர்களை ஜமா அத்தார் பட்டியலில் உள்வாங்க மறுக்கிறது. இவர்களை உள்வாங்கினால் புதிய நிர்வாக சபை தேர்வின் போது தங் களுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்றே அவர்களை உள்வாங்க மறுக் கிறார்கள். இப்பிரச்சினையை வக்பு சபையே தீர்த்து வைக்க வேண்டும்’ என்றார்.

இதேவேளை அவ்லியா மலைப் பள்ளி விவகாரத்தில் இரு தரப்பினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்ப டுகிறது. இவ்வாறான நிலைமைகளே அரச புலனாய்வுப் பிரிவினரின் கவனம் பள்ளிவாசல்களின் பக்கம் ஈர்க்கப்படுவதற்கு காரணமாய் அமைந்துள்ளது.

(ஏ.ஆர்.ஏ.பரீல்) விடிவெள்ளி இதழ் 03/10/22

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter