20ஐ ஆதரித்த 3 மு.கா. எம்.பி.களுக்கு மன்னிப்பு; கட்சிக்குள்ளும் உள்ளீர்ப்பு?

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானத்தினை மீறி ஆதரவளித்த அக்கட்சியின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மன்னிப்பு வழங்கி மீண்டும் அவர்களை கட்சிக்குள் உள்வாங்க நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் விடிவெள்ளிக்கு தெரிவித்தன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 30ஆவது பேராளர் மாநாடு எதிர்வரும் 7ஆம் திகதி திங்கட்கிழமை புத்தளம் கே.ஏ. பாயிஸ் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டுக்கு முன்னதாக 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற திட்டமிடப்பட்டுள்ள கட்டாய அதியுயர் பீட கூட்டத்திலேயே குறித்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மன்னிப்பு வழங்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நடவடிக்கை எடுத்து வருவதாக அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

குறித்த சட்டத்திற்கு ஆதரவளித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசீம், எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் எம்.எஸ். தௌபீக் ஆகியோர் கட்சியின் பதவிகளி ஆசிலிருந்து கடந்த பல மாதங்களாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

அது மாத்திரமல்லாமல், இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு நியமிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் முன்னர் அறிவித்திருந்தார். எனினும், குறித்த குழு இன்று வரை நியமிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, ஆளும் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து அமைச்சர் பதவியினை பொறுப்பேற்றமையினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்புரிமையிலிருந்து ஹாபீஸ் நசீர் அஹமட் நீக்கப்பட்டுள்ளதுடன், இதற்கு எதிராக அவர் உயர் நீதிமன்றில் வழக்கொன்றினையும் தாக்கல் செய்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் தற்போது வெற்றிடமாகவுள்ள பிரதித் தலைவர் , அரசியல் விவகார பணிப்பாளர், இணைந்த அமைப்புக்களிற்கான பணிப்பாளர், பிரதிதேசிய அமைப்பாளர், அரசியல் மற்றும் சமய விவகார இணைப்பாளர், கல்வி மற்றும் கலாசார விவகார இணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான புதிய நியமனம் இந்த போராளர் மாநாட்டில் இடம்பெறவுள்ளது.

இறுதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு கண்டியில் 23.02.2020ஆம் திகதி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. (விடிவெள்ளி இதழ் 03-11-2022)

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter