1990 ஆம் மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடத்தில் வைத்து கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு அங்கு புதைக்கப்பட்டுள்ள 100க்கு மேற்பட்ட முஸ்லிம்களின் உடல்களை தோண்டி எடுத்து இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய அனுமதியளிக்க வேண்டும். அதற்கான சிபாரிசினை வலிந்து காணாமலக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டும் என காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஜனாதிபதி ஆணைக்குழு முன் கோரிக்கை முன் வைத்துள்ளது.
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹோட்டல் பீச்வே மண்டபத்தில் சாட்சியங்களை பதிவு செய்தது. இதன்போது, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ரஊப் ஏ மஜீத் இந்த கோரிக்கையை முன் வைத்தார்.
சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் திகதி குருக்கள் மடத்தில் வைத்து கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 100க்கு மேற்பட்ட எமது சகோதரர்களுக்கு நீதியும் நியாயமும் வேண்டும். அதில் புனித ஹஜ் கடமையை முடித்து வந்தவர்கள், அங்காடி வியாபாரிகள் என பலர் அடங்குகின்றனர்.
இங்கு கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட எமது சகோதரர்களை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யவேண்டும். அதற்கான சிபாரிசை வலிந்து காணாமலாக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும். அத்தோடு முஸ்லிம்களும் வலிந்து காணாமலாக்கப்பட்டு கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை சர்வதேச சமூகத்துக்கு தெரியப்படுத்தி இதற்கான நீதி நியாயமும் கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
இங்கு கருத்து தெரிவித்த காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.சபீல் (நளீமி), யுத்தம் நிலவிய காலத்தில் காத்தான்குடியை மையப்படுத்தி நான்கு பாரிய சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.
அதில் குருக்கள் மடத்தில் இடம் பெற்ற கடத்தல் படுகொலையும் பள்ளிவாயல்களில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் காணிகளை இழந்திருக்கின்ற நிலைமையும் அயல் கிராமங்களில் இருந்து காத்தான்குடிக்கு இடம் பெயர்ந்த நிலையில் அவர்களின் இழப்பீடுகள் போன்ற நான்கு விடயங்களை மையப்படுத்தியதான மகஜர் ஒன்றினை ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளோம்.
இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்களை விசாரணை செய்ய சுயாதீன ஆணைக்குழுவொன்று அமைக்கப்படல் வேண்டும். இழப்புக்களினால் கடும் துன்பங்களுக்குள்ளாகியிருக்கும் குடும்பங்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கப்படல் வேண்டும். முஸ்லிம்கள் இழந்த காணிகளை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மீள்குடியேறியுள்ள மக்களுக்கான வீட்டுத்திட்டம் வாழ்வாதாரம் வழங்குவதை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை நாம் ஆணைக்குழு முன்னிலையில் முன் வைத்துள்ளோம். பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்கு நீதியும் நியாயமும் கிடைக்கும் என நம்புகின்றோம் என தெரிவித்தார். _
(எம்.எஸ்.எம்.நூர்தீன்) – விடிவெள்ளி இதழ் 27/10/2022