பள்ளிவாசல் நிர்வாகிகளின் கடமை பள்ளிவாசலையும், பள்ளிவாசல் சொத்துக்களையும் பாதுகாத்தலும் அவற்றை நிர் வகிப்பதுவுமாகவே இருக்க வேண்டும். மாறாக தாம் நினைத்தவாறு சமூகத்துக்குப் பாதிப்பான தீர்மானங்களை அவர்களால் மேற்கொள்ள முடியாது. என வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தெரிவித்தார்.
கிந்தோட்டை அவ்லியா மலைப் பள்ளிவாசலில் இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் அப்பிரதேச துன்மஹல் பன்சலையின் அதிபதி வீரக்கெட்டிய சஞ்சயதேரரினால் தீர்த்துவைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் வினவியபோதே வக்புசபையின் தலைவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், பள்ளிவாசல்களில் தொடர்ந்து பாரம்பரியமாக இடம்பெற்றுவரும் சம்பிரதாயங்கள் மற்றும் ஓதுதல் போன்றவற்றை பள்ளிவாசல் நிர்வாகிகளால் அறிவித்தல்கள் மூலம் தடை செய்ய முடியாது. அவ்லியா மலைப்பள்ளிவாசலில் இவ்வாறு நிறுத்தப்பட்ட சம்பிரகாயங்களுக்கு வக்பு சபை மீண்டும் அனுமதி வழங்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பள்ளிவாசல்களில் உருவாகும் இவ்வாறான பிரச்சினைகளுக்கு வக்பு சபை மூலமே பள்ளி வாசல் நிர்வாகங்கள் தீர்ப்பு பெற்றுக்கொள்ள வேண்டும். பள்ளிவாசல்களின் சம்பிரகாய செயற்பாடுகளைத் தடைசெய்ய முடியாது என்றார்.
அவ்லியா மலைப்பள்ளி விவகாரம் தொடர்பில் வக்பு சபையில் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
(ஏ.ஆர்.ஏ. பரீல்) -விடிவெள்ளி 27/10/2022