‘திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட இஸ்லாம் சமய பாடநூல்கள் அடுத்த மாதம் நவம்பர் ஆரம்பத்தில் அதிபர்கள் ஊடாக மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும். கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சையைக் கருத்திற்கொண்டு 10 ஆம் மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பாடநூல்களுக்கு விநியோகத்தில் முன்னுரிமை வழங்கப்படும்’ என கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பீ.என்.அயிலப்பெரும ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதத்துக்கு முன்பு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இஸ்லாம் பாடநூல்கள் மாணவர்களுக்கு மீள வழங்கப்படும் என கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏற்கனவே தெரிவித்திருந்தார். என்றாலும் திருத்தப்பட்ட இஸ்லாம் பாடநூல்கள் அச்சிடுவதற்கான காகிதம் தட்டுப்பாட்டினால் தாமதமேற்பட்டதாகவும் அவர் கூறினார்.
மாணவர்களின் கல்வியில் தடைகள் ஏற்படுவதற்கு கல்வி வெளியீட்டுத்திணைக்களம் ஒருபோதும் உடந்தையாக இருக்காது எனவும் அவர் உறுதியளித்தார். உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பாக ஆராய்ந்து வாக்கு மூலம் பெற்றுக்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்வைத்த பரிந்துரைகள் மற்றும் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான ஞானசார தேரரின் தலைமையிலான ஜனாதிபதி செயலணியின் பரிந்துரைகளுக்கு அமைய இஸ்லாம் சமய பாடநூல்கள் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட தீர்மானிக்கப்பட்டதால் மாணவர்களுக்கான பாடநூல் விநியோகம் உடனடியாக நிறுத்தப்பட்டன.
விநியோகிக்கப்பட்டிருந்த பாடநூல்கள் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் மீள பெற்றுக்கொள்ளப்பட்டன.
தரம் 6, 7, 8, 10 மற்றும் 11 ஆம் தரங்களுக்குரிய இஸ்லாம் பாடநூல்களில் அடிப்படைவாத வசனங்கள் உள்ளடங்கியுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலமளிக்கப்பட்டதனையடுத்தே அந்நூல்களின் விநியோகம் உடனடியாக நிறுத்தப்பட்டதுடன் விநியோகிக்கப்பட்டிருந்த நூல்கள் மீளப்பெற்றுக் கொள்ளப்பட்டன.
பீ.என்.அயிலப்பெரும இவ்விவகாரம் தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், இஸ்லாமிய சமய பாடநூல்களில் அடங்கியிருந்த சில சர்ச்சைக்குரிய கருத்துக்கள் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டன. சில வசனங்கள் நீக்கப்பட்டன. சில வசனங்கள் மாற்றியமைக்கப்பட்டன. இஸ்லாம் மார்க்கத்துக்கு பாதிப்பில்லாத வகையில் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் இஸ்லாமிய கற்கைகளுக்குப் பொறுப்பான முஸ்லிம் அதிகாரிகளின் சிபாரிசின்படி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
திருத்தங்களைச் செய்து பாடநூல்கள் அரச அச்சக திணைக்களத்துக்கு கடந்த மே மாதம் அனுப்பி வைக்கப்பட்டன. ஒரு நூல் தனியார் அச்சகத்துக்கு வழங்கப்பட்டது.தனியார் அச்சகம் நூல்களை அச்சிட்டுள்ளது. அரச அச்சக திணைக்களமும் அச்சிடும் பணிகளை பூர்த்தி செய்துள்ளது. காகித தட்டுப்பாடே தாமதத்திற்கு காரணமாகும்.
6,7,8,10 மற்றும் 11 ஆம் தரங்களுக்குரிய இஸ்லாம் மத பாடநூல்கள் சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் திருத்தங்களுடன் மீள அச்சிடப்பட்டுள்ளன.தரம் 1 முதல் 5 வரையும் மற்றும் 9ஆம் தர பாடநூல்களில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
கல்வி வெளியீட்டுத்திணைக்களம் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. ஆனால் அச்சகத்தின் தாமதம் எமது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதாகும்.
எவ்வாறெனினும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் திருத்தப்பட்டு அச்சிடப்பட்டுள்ள புதிய இஸ்லாமிய பாடநூல்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும். அதற்கான ஏற்பாடுகளை திணைக்களம் முன்னெடுத்துள்ளது என்றார்.
இதேவேளை அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் பாடசாலைகளில் 6,7,10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் இஸ்லாம் பாடத்தை ஒரு பாடமாக்கப்பட்டிருக்கும் மாணவர்களுக்கு 2021 டிசம்பர் முதல் பாடநூல்கள் இல்லை என நீதிக்கான மையம் எனும் சிவில் அமைப்பு மாணவர்கள் சார்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றினை அண்மையில் முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.
(ஏ.ஆர்.ஏ.பரீல்) – விடிவெள்ளி இதழ் 20/10/2022