அக்குறணை A.H.M. நஸீர்‌ -இலங்கை அரசசேவை, உயர்பதவிகளில் பலரை உருவாக்கிவர்

அரச நிருவாக சேவையில்‌ கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ள அக்குறணை மண்ணில்‌ பிறந்து வளர்ந்து அக்குறணை மண்‌ணுக்காகவும்‌ இலங்கை வாழ்‌ அரச நிர்வாக சேவைகளிலும்‌, அரச பணிகளிலும்‌ மற்றும்‌ ஏனைய அரச உயர்‌ பதவிகள்‌ வகிக்கின்ற அரச அதிகாரிகள்‌ அனைவரும்‌ ஏ. எச்‌. எம்‌. நஸீர்‌ அவர்களைத்‌ தெரியாமல்‌ இருக்கமுடியாது. அரசாங்கத்தினால்‌ நடத்‌தப்படடும்‌ பொதுப்‌போட்டிப்‌ பரீட்சைகளுக்கான பிரத்தியேக வகுப்புக்களை நடத்துவதுடன்‌ அவர்‌ அப்பரீட்சைக்கு உரித்தான 25க்கும்‌ மேற்பட்ட நூல்களை வெளிக்கொணர்ந்து பெருமளவுக்கு மாணவர்களுடைய கல்வித்‌தேவையை நிறைவு செய்தவர்‌.

அவர்‌ பிரதேச செயலாளராக இருந்த கால கட்டத்தில்‌ பொதுமக்களின்‌ மேம்பாட்டுக்காக நிறையப்‌ பங்களிப்புக்களைச்‌ செய்து தன்‌ஆளுமையை வெளிப்படுத்தி மக்கள்‌ மத்தியில்‌ பாராட்டினையும்‌ நன்மதிப்பையும்‌ பெற்றவர்‌.

இவர்‌ பற்றிய தேடலையும்‌ விளக்கங்களையும்‌ சமூகச்‌ செயற்பாட்டாளரும்‌ ஐடெக் கல்வி நிலையத்தின்‌ இயக்குனருமான ஐ.ஐனுடீன்‌ தினகரன்‌ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில்‌ தெரிவித்தார்‌.

கேள்வி: இலங்கை நிருவாக சேவை உத்தியோகஸ்தராக கடமையாற்றி ஓய்வு நிலையிலுள்ள அப்துல் ஹை முஹம்மது நஸீர் அவர்களுடைய கல்வி நிலை குறித்துக் கூறுவீர்களா?

இவர் 1960 இல் பிறந்தவர்.அக்குறணை அல் அஸ்ஹர் கல்லூரியில் ஆரம்பக் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை கற்று 1980 களில் யாழ். பல்கலைக்கழகத்திற்கு வர்த்தக முகாமைத்துவப் பிரிவுக்கு தெரிவு செய்யப்பட்டார். அவர் அங்கு வர்த்தகப் பிரிவை சிறப்பு பாடமாகக் கற்று இரண்டாம் நிலையில் சித்தி எய்தியவர். 1986 இல் இலங்கை நிர்வாக சேவைக்கான போட்டிப் பரீட்சைக்குத் தோற்றினார்.1986 இல் அக்கால கட்டங்களில் மக்கள் விடுதலை முன்னணியின் கலவரம் காரணமாக அதன்பெறுபேறு வெளியிடப்படவில்லை. அதன் பெறுபேறு காலம் பிந்தி 1990 இல் வெளியிடப்பட்டது. அவர் தெரிவு செய்யப்பட்டவர்களில் இலங்கையில் மூன்றாவது நிலையில் சித்தியினை அடைந்திருந்தார். 1991-.01-.01 ஆம் திகதி அவருக்கு முதல் நியமனம் வழங்கப்பட்டது.

எனினும் அக்குறணையைப் பொறுத்தவரையில் இலங்கை நிர்வாக சேவையில் முதலாவது நியமனம் பெற்றவராக வைத்தியர் மஹ்ரூப்பின் தம்பி எம். எச். எம். பாரூக் அவர்களும், இரண்டாவதாக ஜிப்ரி அவர்களும் மூன்றாவதாக நஷிர் அவர்களும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ் எம்.பி. ஏ. உயர் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக சம்பளத்துடன் அரசாங்க விடுமுறை வழங்கப்பட்டது. 1996 இல் கொழும்பு ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.

கேள்வி: இவர் கல்வி கற்ற காலங்களில் எதிர்நோக்கிய சவால்கள்?

அவருடைய குடும்பத்தில் நான்கு சகோதரர்களும் ஒரு சகோதரியுமாக ஒரு சாதாரண குடும்பம். குறிப்பாக எல்லோரும் ஒரே அறையில் தான் வாழக் கூடிய ஒரு கஷ்டமான கால கட்டம். வறுமையின் காரணமாக மூன்று நேரமும் பிலாக்காய் தான் உண்ண வேண்டிய நிலைமை இருந்தது. தந்தை ஒரு சமூக சேவையாளர் கிராம சபை உறுப்பினர். எவ்வாறாயினும் இந்தக் பொருளாதார நெருக்கடி நிலைமையின் காரணமாக தவிர்க்க முடியாமல் அவர் பிரத்தியேகமான வகுப்புக்களை நடத்த ஆரம்பித்தார். அவர் பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொண்டிருந்தாலும் தீடிரென தான் நடத்தி வந்த பிரத்தியேக வகுப்புக்களுக்கு சமுகமளித்து அதன் மூலம் வரும் வருமானத்தில் குடும்பப் பாரத்தை சுமக்க வேண்டிய பாரிய பொறுப்பு அவருக்கு இருந்தது.

அவர் பல்கலைக்கழகத்தில் அதிக விடுமுறைகளை எடுத்துக் கொண்டு பிரத்தியேகமான வகுப்புக்களில் கூடுதலான முனைப்பினைக் காட்டி வந்தாலும் சக பல்கலைக்கழக மாணவர்களுடைய பாடப் புத்தகங்களை வாங்கி சுயமாக படித்து அப்பாடங்களை மீளவும் தன்னுடைய சக பல்கலைக்கழக மாணவர்களுக்கு விளக்கப்படுத்துவதிலும் கற்பிப்பதிலும் அவரிடம் அலாதியானதொரு திறமை இருந்து வந்தது. இக்கால கட்டங்களில் 1993 இல் தந்தை மரணம் எய்தினார். 1985 இல் தாயாரும் மரணமானார். பல்கலைக்கழக கல்வி வாழ்க்கையில் வறுமை தாண்டவமாடியதால் பிரத்தியேகமான வகுப்புக்களை நடத்துவதற்காக ஒரு கையில் வெண்கட்டியும் மறு கையில் பேனாவுமாக இருந்து கடுமையாக உழைத்தார்.

1985 இல் யாழ்ப்பாணம் முதல் கொழும்பு, கண்டி, மாத்தளை, புத்தளம், சிலாபம், அக்குரணை வரையிலுமான எல்லா இடங்களுக்கும் சென்று பிரத்தியேக வகுப்புக்களை நடத்தினார். அப்பொழுது அக்குறணையில் 22 மாணவர்கள் கல்வி கற்றவர்களில் 19 பேர் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்டனர். வர்த்தகம், கலை பிரிவுகளில் உள்ள அனைத்து பாடங்களையும் கற்பிப்பதில் ஆற்றலும் அதிக திறனுமிக்கவர். இது அவருக்கு இறைவன் வழங்கிய அருள் என்று தான் குறிப்பிடலாம்.

ஆவை மட்டுமல்ல க. பொ. த சாதாரண தரம், வணிகம், சமூகக் கல்வி, விஞ்ஞானம் அனைத்துப் பாடங்களை கற்பிப்பதில் பன்முக ஆளுமைகளைக் கொண்ட ஒரு வல்லர். வெளிவாரிப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான வகுப்புக்களை நடத்துதல், பொது நிர்வாக உத்தியோகஸ்தர் தெரிவுக்கான போட்டிப் பரீட்சையில் பங்கேற்பவர்களுக்கான வகுப்புக்கள் நடத்துதல், வெளிநாட்டு நிர்வாக சேவையில் தோற்றவுள்ளவர்களுக்கான வகுப்புக்கள், கல்வி நிர்வாக சேவையில் தோற்றவுள்ளவர்களுக்கான வகுப்புக்கள், அதிபர் தரத்தில் இணைத்து கொள்வதற்கான போட்டிப் பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களுக்கான வகுப்புக்கள், கிராம உத்தியோகஸ்தர், சட்டக் கல்லூரி அனுமதிக்கான போட்டிப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளவர்களுக்கான வகுப்புக்கள் உள்ளிட்ட அரசாங்கத்தின் அனைத்துப் போட்டிப் பரீட்சைகளுக்கும் பிரத்தியேக வகுப்புக்களை நடத்தி இந்நாட்டுக்கு எண்ணற்ற இலங்கை நிருவாக சேவை அதிகாரிகளையும் மற்றும் அரச சேவை உத்தியோகஸ்தர்களையும் அரசாங்க சேவைக் கதிரையில் அமரச் செய்வதற்கு வழிகாட்டிய ஒருவர். இவரிடம் கற்ற மாணவர்களில் சுமார் 42 பேர் இலங்கை அரச நிருவாக சேவையில் கடமையாற்றி வருகின்றனர். இதுவரைக்கும் இலங்கை அரச நிருவாக சேவைப் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றக் கூடியவர்களுக்கான 25 க்கும் மேல்பட்ட பயிற்சி நூல்களை வெளிக்கொணர்ந்துள்ளார். அதில் குறிப்பாக பொது உளச் சார்பு நூல்கள், பொது அறிவு நூல்கள், முகாமைத்துவம், கிரகித்தல், மாதிரி வினா விடை நூல்கள் போன்ற நூல்கள் அரச போட்டிப் பரீட்சைக்காக வெளியிட்டுள்ளார்.

கேள்வி:அவர் அரச நிருவாக சேவையில் நியமனம் பெற்று கடமையாற்றிய இடங்களும் அவர் ஆற்றிய பணிகள் தொடர்பில்….

ஆம். அவர் அதற்கு முன்னர் 1979 இல் அம்பகொட்ட என்ற இடத்திலுள்ள ஒரு பாடசாலையில் ஆசிரியர் நியமனம் பெற்று கடமையாற்றினார். பின்னர் இலங்கை நிருவாக சேவையில் சித்தியடைந்ததுடன் அவருடைய முதல் நியமனம் கல்பிட்டி பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராக பணியாற்றினார். அவர் அகதிகள் சம்பந்தப்பட்ட விடயங்களிலும் பொறுப்பதிகாரியாக கடமையாற்றினார். 1992 இல் கல்பிட்டிய பிரதேச செயலகத்தில் இருந்து இடமாற்றம் பெற்று ஹரிஸ்பத்துவ பிரதேச செயலகத்திற்கு வருகை தந்தார். அங்கு உதவிப் பிரதேச செயலாளராக ஆறு மாதம் கடமையாற்றினார். பூஜாப்பிட்டிய பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராகக் கடமையாற்றினார். அதேவேளையில் 1992- 1995 காலப் பகுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாமையின் காரணமாக பிரதேச சபையின் தவிசாளராகவும் விசேட அரசாங்க ஆணையாளராகவும் கடமையாற்றினார். பின்னர் கடற்றொழில் அமைச்சின் உதவிச் செயலாளராகவும் பதவி உயர்த்தப்பட்டார். அதில் அவர் வழக்குகள் தொடர்பில் பிரதான பொறுப்பதிகாரியாக கடமையாற்றினார். 1998 இல் அவர் மீண்டும் பதவி உயர்த்தப்பட்டு அக்குறணை, பூஜாப்பிட்டிய, கட்டுகஸ்தோட்டை, ஹரிஸ்பத்துவ ஆகிய பிரதேச செயலகங்களில் உதவி செயலாளராக கடமையாற்றினார். குருநாகல் அதிகவேப் பாதை அமைப்பதற்கான பொறுப்பதிகாரியாகவும் அதற்காக பெறப்பட்ட காணிகளுக்கான நஷ்டஈடுகளை வழங்குவதற்கான பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றினார். 2005 இல் அக்குறணை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக கடமையாற்றினார். அதன் போது துனுவில, வத்தேகம வீதி காபட் வீதியாக நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அக்குறணையில் அடிக்கடி நிலவும் வெள்ளத் தடுப்பை மேற்கொள்வதற்காக குழாய், வடிகான் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார். டெலிபோன் இணைப்பினை மீள்நிர்மாணம் செய்து சிறந்த தொலைபேசி வசதியை ஏற்படுத்தினார். 2005 முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலும் அக்குறணையில் பிரதேச செலயகத்தில் கடமையாற்றினார். 2014 -2020 கூட்டுறவு ஆணையாளர் அலுவலகத்தின் செயலாளராகவும் இருந்தார். 2013 காலப் பகுதியில் மூதூர் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராகக் கடமையாற்றினார். இக்கால கட்டத்தில் ஏற்பட்ட சுனாமினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிரந்தர வீடு இல்லாத மக்களுக்கு வீடுகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

2000 ஆம் ஆண்டு முதல் வகுப்பு நிலையை அடைந்த அவர் 2020 இல் ஓய்வு நிலை அடையும் வரையிலும் தன்னுடைய தன்னமலற்ற சேவையை சிறப்புடன் செய்து முடித்துள்ளார்.

கேள்வி:அவர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?

தற்போது கடும் சுகயீனமுற்ற நிலையில் உள்ளார். அவர் வீட்டில் இருந்தாலும் இலங்கை நிருவாக சேவை, கல்வி நிருவாக சேவை, சட்டக் கல்லூரி நுழைவுக்கான அனுமதிப் பரீட்சைக்கான வகுப்புக்களை சூம் தொழில்நுட்பத்தின் மூலம நடத்தி வருகிறார்.

Mr. Inudeen & Mr. Nazeer

கேள்வி:உங்களுக்கும் நஸீர் அவர்களுக்கிடையிலான தொடர்பு எவ்வாறு ஏற்பட்டது?

எனது வீட்டிற்கு முன்னாலேயே நஸீர் சேர் பிரத்தியேகமான வகுப்புக்களை நடத்தி வந்தார், அப்பொழுது அந்த கல்வி நிலையத்தின் பெயர் ‘சி’ கல்வி நிலையம்’ என அழைக்கப்பட்டது. 1988 இலிருந்து 1989 வரை அவரிடம் மாணவனாக இணைந்து கொண்டேன். அந்த வகையில் அவர் என்னோடு ஒரு ஆசிரியராக அல்ல நல்ல நண்பனாகப் பழகினார். அதற்குப் பின்னர் நானும் கூட ஆங்கில மொழி கல்வி கற்பிக்கின்ற ஓர் ஆசிரியராக மாணவர் மத்தியில் அறிமுகமானேன். என்னுடைய குடும்பப் பின்னணியில் ஆங்கில அறிவு இருந்தமையால் ஓர் ஆங்கில ஆசிரியராக மாறினேன். முதலில் கண்டியிலுள்ள ‘ஈபிஐ’ என்ற கல்வி நிலையத்தில் ஆரம்பித்தேன். அப்பொழுது என்னையும் அவருடன் சேர்ந்து கற்பிக்க வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார். அக்கால கட்டத்தில் கொழும்பு, கண்டி போன்ற பல இடங்களில் வகுப்புக்களை நடத்த வேண்டிய நிலைமை இருந்தது. அப்பொழுது இன்றைய ‘என்சிஐ’ ஆக உள்ள கல்வி நிலையம் ‘கிளசிக் இன்சுடியூட்’ என்ற பெயரில் நான் அங்கு கல்வி கற்றுக் கொண்டிருந்தேன். ‘ஈபிஐ’ என்ற கல்வி நிறுவனம் இருக்கும் போது இன்னுமொரு கல்வி நிறுவனம் ஆரம்பிப்பது கடினமாக இருந்தது. எனினும் மசூத் ஆலீம் அவர்களுடைய மகன் அக்ரம், கொழும்பில் கல்வி கற்பிக்கும் பிரபல்யமான ஆசிரியர்களை கண்டிக்கு அழைத்து நடத்தி வந்தார். அது வெற்றிகரமாக நடத்தப்பட்டு வந்தது.

அதேவேளையில் நஸீர் சேர் கூட தானும் கண்டிக்கு வர வேண்டும். இந்த கல்வி நிலையத்தை விரிவாகச் செய்வோமா என என்னிடம் கேட்டார். அதற்கு சம்மதம் தெரிவித்தேன். அதன் பின்பு இருவரும் சேர்ந்து வகுப்புக்கள் நடத்தினோம்.

அந்த கால கட்டம் மக்கள் விடுதலை முன்னணியின் கலவரக் காலம். 1990 இல் இருந்து 1996 வரையிலும் செய்தோம். அதன் பின்பு நான் முழுமையாக நஸீர் சேரிடம் அந்தக் கல்வி நிலையத்தைப் பொறுப்புக் கொடுத்து விட்டு ‘ஈபிஐ’ என்ற கல்வி நிலையத்திற்கு மீண்டும் இணைந்து கொண்டேன்.

ஏனென்றால் நிர்வாகம் செய்யும் அளவுக்கு நேரம் எனக்குப் போதாது. அப்பொழுது அதிகம் கேள்வி எனக்கு இருந்தது.பாடசாலை நேரத்திலும் பிரத்தியேக வகுப்புக்கள் நடத்தி வந்தேன்.

அந்தளவுக்கு ஆங்கில மொழிக்கு மிகப் பிரபல்யம் பெற்றிருந்தேன். குருநாகல், கண்டி, மாத்தளை, கொழும்பு, கம்பளை போன்ற இடங்களில் கற்பித்து வந்தேன். ‘ஈபிஐ’ என்ற கல்வி நிறுவனத்தின் இயக்குனர் நான் கல்வி கற்ற ஆசிரியர்களில் ஒருவர்தான் ராஜரட்ணம் சேர். அவரிடம் கணிதம், விஞ்ஞானம் கற்றவன், இவர்தான் என்னை பிரத்தியேக வகுப்புக்களை செய்வதற்கு அறிமுகம் செய்தவர். ஆதலால் அவர் அழைக்கின்ற சந்தர்ப்பத்தில் அவருடைய கல்வி நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டது.

அங்கு பெரிய வகுப்புக்கள் நடத்துவதற்கான வசதிகளும் இருந்தன. அப்படிச் செய்து கொண்டிருக்கும் போது திரும்பவும் நஸீர் சேர் வந்து ‘தான் செய்த ‘என்சிஐ’ என்ற கல்வி நிலையத்தை இன்னுமொருவருக்கு கொடுத்து விட்டேன்’ என்று கூறினார். பின்பு நஸீர் சேர் நடத்தக் கூடிய பாடங்களுடன் அப்பொழுது கணினிப் பாடம் அறிமுகமாகிக் கொண்டிருந்த கால கட்டத்தில் கண்டி கட்டுகஸ்தோட்டை வீதியில் வித்தியார்த்த கல்லூரிக்கு முன்னால் ஒரு கார் சேல் ஒன்றின் கீழ் தட்டில் ‘ரோயல் இன்பமேசன் டெக்னோலெஜி’ என்ற பெயரில் புதிய கல்வி நிலையம் ஒன்றை 1995 இல் ஆரம்பித்து தொடர்ந்து 1998 வரையிலும் மூன்று வருடம் செய்தோம். நஸீர் அவர்களுக்கு தொடர்ந்து வகுப்புக்கள் நடத்திக் கொள்ள முடியாதளவுக்கு வேலைப் பளு ஏற்பட்டது.

‘ஈபிஐ’ என்ற கல்வி நிலையம் என்னுடைய வீடு மாதிரி. அக் கல்வி நிலையத்தில் நான் மீண்டும் இணைந்து கொண்டேன். கண்டியில் நஸீர் சேருடைய வகுப்புக்களை நடத்துவதற்கு ஒழுங்குபடுத்திக் கொடுப்பேன். கொழும்பு, கொட்டாஞ்சேனை போன்ற இடங்களிலும் அவருடைய பிரத்தியேக வகுப்புக்கள் நடத்தப்பட்டன. ஊர் என்ற வகையிலும் அவருடன் கல்வி கற்ற மாணவன் என்ற வகையிலும் அவருடன் சேர்ந்து பிரத்தியே வகுப்புக்களை நடத்தி வந்தேன். அந்த வகையில் மிகுந்த நட்புடனும் மரியாதையுடனும் பழகி வருகின்றேன். அவர் எந்தப் பிரதேசத்தில் அரச கடமையில் ஈடுபட்டாலும் என்னோடு தொடர்பு கொண்டு சுக துக்கங்களை அறிந்து கொள்ளக் கூடிய ஓர் உயர்ந்த குணம் படைத்த ஒரு நல்ல மனிதர். தற்போது அவர் சுகயீனமுற்ற நிலையில் இருக்கிறார். அவர் நோயில் இருந்து பூரண குணமடைய இறைவன் நல்லருள் புரிய வேண்டும் இந்தச் சந்தர்ப்பத்தில் அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றேன்.

கேள்வி:அவருடைய குடும்பம் தொடர்பில் சிறு குறிப்புக்கள்…

1990 இல் திருமணம் முடித்தார் . மனைவி ஷக்கியா சுக்ரான், மூத்த மகள் பாத்திமா உஸ்னா மரியம், இவர் வியாபாரம் செய்கிறார். அடுத்து ஆயிஷா ரிபா. இவர் திறந்த பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞானப் பிரிவில் கற்று பட்டம் பெற்றவர். மகன் அலவி வர்த்தக முகாமைத்துவப் பிரிவில் தனியார் கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றுள்ளார்.

கேள்வி:அவருடைய சமூப் பணிகள் யாவை?

இவருடன் சேர்ந்து பல சமூகப் பணிகள் செய்துள்ளேன் அரசாங்கத்தின் பொது வர்த்தமானியில் பொது பரீட்சைகள் குறித்து வெளியிடப்படும் விளம்பரங்களை பள்ளிவாசல்களின் விளம்பரப் பலகையிலும் பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கியிலும் விளம்பரப்படுத்தி இத்தொழில்களுக்கு விண்ணப்பம் செய்வதற்கான தூண்டுதல்களைச் செய்வோம்.

ஆதலால் அரசாங்கத் தொழில்களில் நாட்டம் இல்லாதவர்கள் கூட இதற்கு விண்ணப்பம் செய்வார்கள். ஒரு தடவை கிராம உத்தியோகஸ்தர்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டிருந்தன. இதற்கு எல்லா மாணவர்களையும் தயாராகுமாறு அறிவுறுத்தல் விடுத்தோம். அதன் பின்பு மத்திய மாகாணத்தில் அதிகளவிலான கிராம உத்தியோகஸ்தர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். இப்படி அக்குறணைப் பிரதேசத்தில் மாணவர்களை கல்வியில் ஆர்வம் ஊட்டுவதற்காக பல்வேறு வேலைத் திட்டங்களை இவர் மேற்கொண்டார். ஆதலால்தான் நான் கூட அவருடைய வழிகாட்டலின் கீழ் சமூகப் பணிகளிலும் பிரத்தியேக வகுப்புக்கள் நடத்துவதிலும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுப்புகின்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றேன்.

இவை தவிர பிரத்தியேக வகுப்புகளுக்கு வரும் வறிய பிள்ளைகளை இனங்கண்டு அவர்களிடமிருந்து கட்டணங்கள் அறவிடுவதில்லை. அவர்கள் தொடர்ந்து படிப்பதற்கான வசதிகளையும் சலுகைகளையும் செய்து கொடுப்பதுடன் அவர்களுடைய தேவையை அறிந்து உதவி செய்தல் போன்ற பல விடயங்கள் உள்ளன.

கேள்வி: நஸீர் சேருடைய பிரத்தியேக வகுப்பில் முதல் மாணவனாக நியோன் கம்பனியின் உரிமையாளர் ஹரிஸ் முஹமட் பற்றி நீங்கள் மேலும் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

நஸீர் சேருடைய பிரத்தியேக வகுப்பில் முதல் மாணவனாகத்தான் ஹரிஸ் முஹமட் இணைந்துள்ளார். ஒரு கால கட்டத்தில் நஸீர் சேர் அவருடன் மிகவும் நெருங்கிய சக நண்பர்களில் ஒருவராகப் பழகினார். அவர் அக்காலத்தில் கல்வி கற்பதில் நாட்டம் இருந்த போதிலும் அவர் நஸீர் சேருடன் இணைந்து சக நண்பராகப் பழகியதால் நஸீர் சேருடைய ஆற்றுப்படுத்தலினால் இன்று வர்த்தகத் துறையில் நல்லதொரு உயர்ந்த நிலையை அடைந்துள்ளார்.

Mr Harees & Mr. Inudeen

இவரைப் போன்று எமது அக்குறணை ஊரிலும் முழு நாட்டிலும் சிறந்த நிர்வாக சேவையாளர்களையும் அரச சேவையாளர்களையும் உருவாக்குவதற்கு அளப்பரிய பங்களிப்பை செய்துள்ளார்.நஸீர் சேரின் அரிய சேவையை நான் மட்டுமல்ல நண்பர் ஹரிஸ் முஹம்மட் அவருடைய சிநேகிதர்கள் அனைவரும் பெரு மதிப்புடன் நினைவு கூருவதில் மகிழ்ச்சியடைகின்றோம். அதேவேளை அவருடைய உன்னதமான சேவையினை அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் பொருந்திக் கொள்ள வேண்டும் என்பதுடன் அவர் நோயில் இருந்து குணமடைய நாம் எல்லோரும் அல்லாஹ்வைப் பிரார்த்திப்போமாக.

அரச நிருவாக சேவையில் கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ள அக்குறணை மண்ணில் பிறந்து வளர்ந்து அக்குறணை மண்ணுக்காகவும் இலங்கை வாழ் அரச நிர்வாக சேவைகளிலும், அரச பணிகளிலும் மற்றும் ஏனைய அரச உயர் பதவிகள் வகிக்கின்ற அரச அதிகாரிகள் அனைவரும் ஏ. எச். எம். நஸீர் அவர்களைத் தெரியாமல் இருக்க முடியாது. அரசாங்கத்தினால் நடத்தப்படும் பொதுப் போட்டிப் பரீட்சைகளுக்கான பிரத்தியேக வகுப்புக்களை நடத்துவதுடன் அவர் அப்பரீட்சைக்கு உரித்தான 25 க்கும் மேற்பட்ட நூல்களை வெளிக்கொணர்ந்து பெருமளவுக்கு மாணவர்களுடைய கல்வித் தேவையை நிறைவு செய்தவர்.

அவர் பிரதேச செயலாளராக இருந்த கால கட்டத்தில் பொது மக்களின் மேம்பாட்டுக்காக நிறையப் பங்களிப்புக்களைச் செய்து தன் ஆளுமையை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் பாராட்டினையும் நன்மதிப்பையும் பெற்றவர். இவர் பற்றிய தேடலையும் விளக்கங்களையும் சமூகச் செயற்பாட்டாளரும் ஐடெக் கல்வி நிலையத்தின் இயக்குனருமான ஐ. ஐனுடீன் தினகரன் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். மூலம் : தினகரன் இதழ் 14/10/2022 பக்கம் 07

Check Also

75வருட பூர்த்தியினை காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் பாடசாலை

பவள விழா காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் முஸ்லிம் வித்தியாலயம் ஒரு பார்வை கண்டி மாவட்டத்தில் கட்டுகஸ்தோட்டைக் கல்வி வலயத்தில் …

Free Visitor Counters Flag Counter