எமது நாட்டில் அமுலிலுள்ள முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென நீண்ட காலமாகவே கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுவந்துள்ளன. இடைக்கிடை திருத்தங்கள் தொடர்பில் ஆராய்ந்து சிபாரிசுகளை முன்வைப்பதற்கு குழுக்களும் நியமிக்கப்பட்டன.
இவ்வாறான முன்னெடுப்புகளில் 2009ஆம் ஆண்டு அப்போதைய நீதியமைச்சர் மிலிந்த மொரகொடவினால் நியமிக்கப்பட்ட குழுவைக் குறிப்பிடலாம். முஸ்லிம் தனியார் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களைச் சிபாரிசு செய்வதற்காக இக்குழு நியமிக்கப்பட்டது. குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் நியமிக்கப்பட்டிருந்தார். இக்குழுவில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி, அப்போதைய செயலாளர் மர்ஹூம் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக் மற்றும் நீதிபதிகள், சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணிகள், கல்விமான்கள், முஸ்லிம் பெண்கள் செயல் ஆராய்ச்சி முன்னணியின் பிரதிநிதிகள் என்போர் உட்பட மொத்தம் 18 உறுப்பினர்கள் அங்கம் பெற்றிருந்தனர். 2009 இல் தனது பணிகளை ஆரம்பித்த இக்குழு 2018 ஜனவரி மாதமே தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. இதுவோர் நீண்ட பயணமாகும். இந்தத் தாமதத்திற்கு எதிராக முஸ்லிம் பெண்கள் அமைப்புகள் அமைதி ஆர்ப்பாட்டங்களையும் நடாத்தின. இதனையடுத்தே அறிக்கை அப்போதைய (2018) நீதியமைச்சர் தலதா அத்துகோரளவிடம் கையளிக்கப்பட்டது.
இரு வேறுபட்ட அறிக்கைகள்
முஸ்லிம் தனியார் சட்ட திருத்த சிபாரிசு குழுவின் தலைவர் சலீம் மர்சூப் குழு அங்கத்தவர்களை ஒரே நிலைப்பாட்டில் வைத்துக்கொள்ள முயற்சித்தாலும் அது அவரினால் முடியாமற் போனது. குழுவிற்குள் சில திருத்தங்களில் முரண்பாடுகள் உருவாகின. குழுவின் அறிக்கை தயாரிக்கப்பட்டு அங்கத்தவர்களின் கையொப்பங்கள் அறிக்கையில் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அங்கத்தவர்களில் சிலர் தனியாக வேறோர் அறிக்கையைத் தயாரித்து தலைவரிடம் கையளித்தனர். அதில் 9 பேர் கையொப்பமிட்டிருந்தனர்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி இந்த அறிக்கையை சலீம் மர்சூபிடம் கையளித்தார். அறிக்கையில் ரிஸ்வி முப்தி, உலமா சபையின் செயலாளர் எம்.எம்.ஏ. முபாரக், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, நீதிபதி எ.டப்ளியு.ஏ. சலாம், நீதிபதி மொஹமட் மக்கி, ஜனாதிபதி சட்டத்தரணி சிப்லி அஸீஸ், கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி, சட்டத்தணி நத்வி பஹாவுதீன் மற்றும் பஸ்லட் சஹாப்தீன் ஆகியோர் இதில் கையொப்பமிட்டிருந்தனர்.
குழுவின் தலைவர் சலீம் மர்சூப், செயலாளர் உட்பட ஏனைய 9 பேரும் மற்றைய குழுவில் அடங்கியிருந்தனர். குழுவின் தலைவர் தயாரித்த அறிக்கையில் அவர்கள் மாத்திரம் கையொப்பமிட்டிருந்தனர்.
முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் 2018ஆம் ஆண்டிலே திருத்தங்களைச் செய்திருக்க முடியும். குறித்த குழு எட்டு வருடங்களாக ஒன்று கூடி கருத்துக்களை பரிமாறி செயற்பட்டாலும் இறுதியில் சில விடயங்களில் முரண்பட்டுக் கொண்டமையின் பிரதிபலனையே நாம் இன்று அனுபவிக்கிறோம். திருத்தங்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறோம்.
நீதியமைச்சர் தலதா அத்துகோரளவிடம் இரு அறிக்கைகள் கையளிக்கப்பட்டதால் அமைச்சர் எந்த அறிக்கையை ஏற்பது என்று திண்டாடினார். இறுதியில் அறிக்கையை ஆராய்ந்து தீர்மானமொன்றினை எய்துவதற்கு அமைச்சரவை உபகுழுவுக்கு கையளிக்கப்பட்டது. அமைச்சரவை உப குழுவில் அமைச்சர்களான ரிசாத் பதியுதீன், எம்.எச்.ஏ.ஹலீம், ரவூப் ஹக்கீம், கபீர் ஹாசிம், பைசர் முஸ்தபா, சந்திராணி பண்டார, சுதர்சனி பெர்னான்டோ புள்ளே ஆகியோர் அங்கம் வகித்தனர்.
என்றாலும் அமைச்சரவை உபகுழுவினாலும் விரைவான தீர்மானமொன்றினை எய்த முடியாமற் போனது. காலதாமதமானது.
இறுதியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்பு புதிய அரசாங்கத்தில் நீதியமைச்சராக பதவி வகித்த அலி சப்ரி முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்கு வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவொன்றினை நியமித்தார்.
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் சிபாரிசுகள் கிடைக்கும் வரை ஒத்திவைப்பு
தற்போதைய வெளி விவகார அமைச்சரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நீதியமைச்சராக பதவி வகித்த காலத்தில் கடந்த பெப்ரவரி மாதம் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்காக அமைச்சரவைப் பத்திரமொன்றினைச் சமர்ப்பித்திருந்தமையை நாம் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
குறிப்பிட்ட அமைச்சரவை பத்திரத்துக்கு அன்று அமைச்சர்கள் சிலர் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார்கள். இதனையடுத்து அவ் அமைச்சரவைப் பத்திரம் நிராகரிக்கப்பட்டது. இதேவேளை அன்றைய அமைச்சரவைக்கு தலைமை வகித்த அப்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் சிபாரிசுகள் கிடைக்கும் வரை முஸ்லிம் தனியார் சட்டத்தில் எவ்வித திருத்தங்களையும் செய்வதில்லை என உறுதியளித்திருந்தார்.
அன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முஸ்லிம் ஆண்களின் பலதார மணம் கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட வேண்டும் என அமைச்சர் அலிசப்ரி வாதாரடினார். அமைச்சரவைப் பத்திரத்திலும் இதனை உள்ளடக்கியிருந்தார். மலேசியா போன்ற நாடுகளில் பலதார மணம் அனுமதிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டினார்.
அத்தோடு காதி நீதிமன்ற முறைமையை இல்லாதொழிக்காது ‘குடும்ப சமரசம்’ (Family Conciliate) என்ற பெயரில் அதனை இயங்கச் செய்ய வேண்டும். குடும்ப சமரசத்துக்கென ஆலோசனைச் சபையொன்று நியமிக்கப்பட வேண்டும். இங்கு தீர்க்கப்பட முடியாத பிரச்சினைகள் மாவட்ட நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்பதும் அமைச்சரவைப் பத்திரத்தில் அடங்கியிருந்தது. ஆனால் அன்றைய அமைச்சரவையில் இருந்த அமைச்சர்களான சரத்வீரசேகர, விமல் வீரவன்ச, உதயகம்மன்பில ஆகியோர் கடுமையான எதிர்ப்பு வெளியிட்டதால் அலிசப்ரியின் அமைச்சரவைப் பத்திரம் நிராகரிக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதமும் அன்றைய நீதியமைச்சர் அலிசப்ரி முஸ்லிம் விவாக , விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக அமைச்சரவைப் பத்திரமொன்றினை சமர்ப்பித்திருந்தார். அதில் முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை 18 ஆக நிர்ணயிக்கப்பட வேண்டும். திருமணப் பதிவில் மணப் பெண்ணின் கையொப்பம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும். தாபரிப்பு பெற்றுக் கொள்ளல் மஜிஸ்திரேட் நீதிமன்றினால் முன்னெடுக்கப்பட வேண்டும். முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூபின் தலைமையில் நியமிக்கப்பட்டிருந்த குழுவின் சிபாரிசுகள் முழுமையாக அமுல்நடத்தப்பட வேண்டும். முஸ்லிம் பெண்கள் காதிநீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டும் எனும் உள்ளடக்கங்களே அமைச்சரவைப் பத்திரத்தில் அடங்கியிருந்தன.
இதனையடுத்து 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவை உபகுழு முன்வைத்த பிரேரணைக்கு அமைவாக முஸ்லிம் ஆண்களின் பலதார மணத்தை தடை செய்வதற்கும் முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லையை 18 ஆக அதிகரிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இத்திருத்தங்களுக்கு முஸ்லிம் சமூகத்தில் பலத்த எதிர்ப்பு வெளியிடப்பட்டது . இதனால் முஸ்லிம் சமூகத்தில் பல பிரச்சினைகள் உருவாகலாம் என்பதனாலேயே சில திருத்தங்களை உள்ளடக்கி கடந்த 2022 பெப்ரவரி 21ஆம் திகதி அலிசப்ரி அமைச்சரவை பத்திரமொன்றினை கையளித்தார். இவ் அமைச்சரவைப் பத்திரமே அமைச்சர்கள் சிலரினால் பலமாக எதிர்க்கப்பட்டு நிராகரிக்கப்பட்டது. அத்தோடு ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் அறிக்கை சமர்ப்பிக்கும் வரை இச்சட்டத்தில் மேலதிகமாக எவ்வித தீர்மானமும் மேற்கொள்வதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டது.
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் அறிக்கை கையளிப்பு
ஞானசார தேரரின் தலைமையிலான ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் பரிந்துரைகள் அடங்கிய இறுதியறிக்கை கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
8 அத்தியாயங்களைக் கொண்ட இவ்வறிக்கை 43 பரிந்துரைகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டிருந்தது.
இப்பரிந்துரையில் நாட்டில் சகல இனங்களுக்கும் ஒரே சட்டம் அமுல்படுத்தப்படவேண்டும் எனவும் காதி நீதிமன்றங்கள் ஒழிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. செயலணியின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதாக அப்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ செயலணியின் தலைவர் ஞானசார தேரரிடம் உறுதியளித்திருந்தார்.
ஆனால் ஆட்சியில் திடீரென ஏற்பட்ட மாற்றங்கள் முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக் கருவினை கிடப்பில் தள்ளி விட்டன.
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் சிபாரிசுகளை அமுல்படுத்துவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருக்கிறார். ஆட்சி மாற்றம், அரசியலில் மாற்றம் என்பன முஸ்லிம்களின் தனியார் சட்டத்தை பாதுகாத்துவிட்டன என்றே கூற வேண்டும்.
முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் குறித்த ஆலோசனைக் குழு
முஸ்லிம் தனியார் சட்டதிருத்தங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரியினால் நியமிக்கப்பட்ட சீர்திருத்த ஆலோசனைக் குழு கடந்த வாரம் தனது அறிக்கையை நீதியமைச்சர் விஜயதாச ராஜபக் ஷவிடம் கையளித்தது.
குழுவின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் அறிக்கையை அமைச்சரிடம் கையளித்தார்.
குழுவின் தலைவர் சப்ரி ஹலீம்தீன் அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிடுகையில், இச்சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்கான சிபாரிசுகளை முன்வைப்பதற்கு ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த குழு பலதார மணம் தொடர்பில் எவ்வித சிபாரிசுகளையும் முன்வைக்கவில்லை. குழு சமர்ப்பித்த ஏனைய திருத்தங்களின் சட்டவரைபு ஏற்கனவே பூரணப்படுத்தப்பட்டுள்ளது. என்றாலும் பலதார மணம் தொடர்பான விவகாரத்தினால் அத்திருத்தங்கள் இன்னும் அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.
பலதார மணத்தை கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதிப்பதற்கு சிபாரிசு செய்துள்ளோம். குழுவின் 9 உறுப்பினர்களில் 7 பேர் இதற்கு ஆதரவு வழங்கியுள்ளார்கள். இருவர் எதிர்த்துள்ளார்கள்.
காதிநீதிமன்றங்களுக்குப் பதிலாக சமரசம் செய்து வைப்பவர்கள் (Conciliator) நியமிக்கப்பட வேண்டும். முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை 18 ஆக அதிகரிக்கப்பட வேண்டும். விவாகப் பதிவில் மணப்பெண்ணின் கையொப்பம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் ‘வொலி’யின் கையொப்பம் பெற்றுக்கொள்வதை விருப்பத்துக்குரியதாக சிபாரிசு செய்துள்ளோம். மணப்பெண் ‘வொலி’யின் கையொப்பம் தேவையெனக் கருதினால் பெற்றுக்கொள்ளலாம். திருமணம் வலிதாவதற்கு ‘வொலி’ கட்டாயமில்லை என்றார்.
முஸ்லிம் சமூகத்தின் விருப்பப்படி திருத்தங்கள்
முஸ்லிம் சமூகத்தின் விருப்பப்படியே முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
இச்சட்டத்தில் திருத்தங்கள் ஏனைய சமூகங்களுடன் முரண்படாத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும். இது எமது பொறுப்பாகும். முஸ்லிம் தனியார் சட்டம் இலங்கை சுதந்திரம் பெற்றுக் கொள்வதற்கு முன்பிருந்தே நடைமுறையில் இருந்துவருகிறது.
முன்னாள் நீதியமைச்சர் அலிசப்ரியின் காலத்தில் இச்சட்டத்திருத்தங்களை உள்ளடக்கிய சட்ட மூலமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. காதி நீதிமன்ற முறைமையை இல்லாமற் செய்தல், திருமணத்திற்கு மணப் பெண்ணின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளல், பலதார மணத்தை இல்லாமற் செய்தல் போன்ற பரிந்துரைகள் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
என்றாலும் திருத்த ஆலோசனைக்குழு பலதார மணம் கடும் நிபந்தனைகளுடன் அங்கீகரிக்கப்பட வேண்டுமென பரிந்துரைத்துள்ளது. முஸ்லிம் தனியார் சட்டம் அவர்களது மதத்தின் அடிப்படையிலான சட்டமாகும். அவர்களது கருத்துகளுக்கு மதிப்பளித்து திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றார்.
சமூகத்தின் எதிர்பார்ப்பு
முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் சமூகத்தின் பெரும்பான்மையினரின் விருப்பப்படியே திருத்தப்படவேண்டும். முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தின் மூலம் பெண்களே பாதிப்படைகிறார்கள் என்ற கருத்து சமூகத்தின் மத்தியில் பரவலாக உள்ளது. எனவே முஸ்லிம் பெண்கள் பாதிப்புக்குள்ளாகாத வகையிலான திருத்தங்களே காலத்தின் தேவையாகும். விவாக பதிவில் மணப்பெண் கட்டாயம் கையொப்பமிட வேண்டும். பலதார மணம் கடும் நிபந்தனைகளுக்குள்ளாக்கப்பட வேண்டும். நியாயமான காரணங்களின்றி தலாக் பெற்றுக் கொள்ளும் கணவர் கட்டாயமாக மத்தாஹ் வழங்க வேண்டும். பெண்கள் காதிநீதிபதிகளாக நியமனம்பெற வேண்டும் போன்ற திருத்தங்களே இன்று எதிர்பார்க்கப்படுகின்றன. அத்தோடு திருத்தங்கள் குர் ஆன், ஹதீஸுக்கு முரண்படாத வகையில் அமைய வேண்டுமென்பதே சமூகத்தின் நிலைப்பாடாகும்._
ஏ.ஆர்.ஏ.பரீல்– விடிவெள்ளி இதழ் 13/10/2022