சவூதியின் தேசியதின உபசாரத்தில் ஞானசாரர்!

சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்ற சவூதி அரேபியாவின் 92வது தேசியதின விருந்துபசாரத்தில் இலங்கையின் பிரதமரும் மற்றும் அமைச்சர்கள் சிலரும் முஸ்லிம் தலைவர்களும் பங்குபற்றியிருந்தனர். ஆனால் அவர்களுள் பொதுபல சேனையின் சர்ச்சைக்குரிய செயலாளர் ஞானசார தேரரும் அழைக்கப்பட்டிருந்தமை முஸ்லிம் சமூகத்துக்குள் பல விமர்சனங்களை தோற்றுவித்துள்ளன. ஆனால் உண்மையிலேயே விமர்சிக்கப்பட வேண்டியது ஞானசாரரைப் பற்றியல்ல. மாறாக, உலகின் பல பாகங்களிலும் சிறுபான்மை இனங்களாக வாழும் முஸ்லிம்கள் தொடர்பில் சவூதி அரேபியா கடைப்பிடிக்கும் கொள்கையைப்பற்றியே. அது தொடர்பாக சில சிந்தனைகளை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

உலக சனத்தொகையில் 20 சதவீதமானவர்கள் முஸ்லிம்கள். மதவாரியாக நோக்கினால் கிறிஸ்தவர்களின் சனத்தொகை அதிகரிப்பை விட முஸ்லிம்களின் சனத்தொகை அதிகரிப்பு வீதம் உயர்வாகவுள்ளது. அதில் சுமார் 20 சதவீதத்தினர் சிறுபான்மை இனங்களாக முஸ்லிம் அல்லாத நாடுகளில் வாழ்கின்றனர். அவர்களுள் மிகப் பெரும்பாலானவர்கள் இந்தியாவைத் தாயகமாகக் கொண்டுள்ளனர். அவ்வாறு சிறுபான்மையினராக வாழ்கின்ற முஸ்லிம் சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எத்தனையோ.

உதாரணமாக, நரேந்திர மோடியின் ஆட்சியில் இந்துத்துவாக்களால் முஸ்லிம்கள் படும் இன்னல்களையும் சீனாவிலே உய்கர் முஸ்லிம்கள் பொதுவுடமைக் குடியரசின் இன ஒழிப்புத் திட்டத்துக்குப் பலியாவதையும் உலகே அறியும். பலஸ்தீனிய முஸ்லிம்களுக்கு இஸ்ரவேல் இழைக்கும் அநீதிகள் அனந்தம். ஆனால் அவர்களின் பிரச்சினைகளை உலக அரங்கில் வலுவுடன் எடுத்துக்கூறி அந்த அரசுகளுக்கெதிராக மற்றைய நாடுகளுடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள ஒரு பலமுள்ள முஸ்லிம் நாடு இல்லையே என்பதுதான் இன்றுள்ள பெரும் குறை.

உலகத்திலே ஒரு முஸ்லிம் எங்கு வாழ்ந்தாலும் அந்த முஸ்லிமின் கிப்லா புனித கஃபதுல்லாதான். அது இருக்கும் நாடு சவூதி அரேபியா. ஆகவே அந்த நாடு என்னென்ன குறைகள் இருந்தபோதும் முஸ்லிம்களின் உள்ளங்களில் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது என்பது உண்மை. இருந்தபோதும் பல சந்தர்ப்பங்களில் சவூதி அரசியல் தலைவர்களே சிறுபான்மை முஸ்லிம்களின் நலன்களுக்கு எதிராக செயற்படுவது வருந்தத்தக்கது. பலஸ்தீன முஸ்லிம்களை பயங்கரவாதிகளென இஸ்ரவேல் உலகெங்கும் பறைசாற்ற அதற்கு ஆமா போடுவதுபோல் சவூதி அமைச்சர்கள் இஸ்ரவேலுடன் நெருங்கிய உறவு கொண்டாடுவதையும், சீன முஸ்லிம்களை தீவிரவாதிகளென சீன அரசு பட்டம் சூட்டியபோது அதை ஆமோதித்ததையும், மோடியின் ஆட்சியில் இந்திய முஸ்லிம்கள் படுகின்ற துன்பங்களை அறிந்திருந்தும் அதைப்பற்றி எந்தக் கவனமும் செலுத்தாமல் மோடியுடன் கைகோர்த்து நிற்பதையும் சவூதியின் ராஜதந்திரம் என்ற போர்வைக்குள் மூடிமறைப்பது பொருந்துமா? இந்தப் பின்னணியிலேதான் இலங்கையில் ஞானசாரருக்கு விடுக்கப்பட்ட சவூதித் தூதரக அழைப்பையும் நோக்குதல் வேண்டும்.

முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்கின்ற நாடுகளுள் இலங்கைக்கு ஒரு தனிச் சிறப்புண்டு. சுமார் எட்டாம் நூற்றாண்டளவில் இலங்கைக்குள் வியாபாரிகளாகக் காலடியெடுத்து வைத்த அரேபிய முஸ்லிம்கள் பொருள்தேடி மட்டும் வரவில்லை. இஸ்லாத்தின் பிரதிநிதிகளாகவும் அவர்கள் செயற்பட்டனர். அவர்களின் வாக்கும் செயலும் பௌத்த மன்னர்களைக் கவர்ந்திருக்காவிட்டால் அவ்வியாபாரிகளின் உறவை வியாபாரத்துடன் மட்டும் நிறுத்திக்கொண்டு அவர்களை அன்னியர்களாகவே கணித்து நடந்திருப்பர். ஆனால் இலங்கை மன்னர்கள் அவர்களுக்கு நீட்டிய நேசக்கரமும் காட்டிய ஆதரவும் முஸ்லிம்களை இந்த நாட்டின் நிரந்தரக் குடிகளுள் ஒன்றாக வளரச்செய்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாட்டின் சிங்கள பௌத்த மக்களுடன் பின்னிப்பிணைந்து முஸ்லிம்கள் வாழ்ந்ததுபோன்று வேறு எந்த ஒரு நாட்டிலும் வாழ்ந்ததற்கு ஆதாரங்கள் கிடையாது.

ஆனால் இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் இந்த உறவிலே சில கசப்பான வெடிப்புகள் ஏற்படத் தொடங்கின. அவற்றிற்கான கரரணங்களை ஒவ்வொன்றாக விளக்குவதற்கு இக்கட்டுரையின் நீளம் இடம்தராது என்பதால் சவூதி அரேபியாவோடு சம்பந்தப்பட்ட ஒன்றை மட்டும் எடுத்துக்காட்டுவது அவசியமாகின்றது.

சவூதி அரேபியா இஸ்லாத்தின் இரண்டு புனிதத் தலங்களை தனது மண்ணகத்தே கொண்டுள்ளது. அவற்றை ஒரு முஸ்லிம் எங்கு வாழ்ந்தபோதிலும் தனது வாழ்க்கையில் ஒரு முறையாவது தரிசிக்காவிட்டால் பூரண முஸ்லிமாக விளங்கமுடியாது. அதே சமயம் அந்த நாட்டின் தேசியக் கொள்கைளுள் ஒன்று வஹ்ஹாபித்துவ இஸ்லாம். அது அரசியலோடு சம்பந்தப்பட்ட ஒரு மார்க்க வழிபாடு. அதற்கெனச் சில தனிப்பட்ட மார்க்கக் கொள்கைகளும் சம்பிரதாயங்களும் நடை உடை பாவனைகளும் காலவோட்டத்தில் உருவாகியுள்ளன. எனினும் புனிதத் தலங்களை தரிசிக்கப்போகும் எந்தவொரு முஸ்லிமும் வஹ்ஹாபித்துவ மரபுகளைப் பேணுதல் வேண்டும் என்ற நியதி இல்லை. அதனால் பல நூற்றாண்டு காலமாக மக்காவுக்கும் மதீனாவுக்கும் யாத்திரை சென்றுதிரும்பிய எந்த ஒரு இலங்கை முஸ்லிமும் வஹ்ஹாபித்துவ இஸ்லாத்தின் ஒரு பிரதிநிதியாகத் திரும்பவில்லை. ஆனால் 1980களுக்குப் பின்னர் வஹ்ஹாபியத்தின் சில சாயல்கள் இலங்கைக்குள் ஊடுருவத் தொடங்கின. இதனைச் சற்று விரிவாக விளக்கவேண்டியுள்ளது.

இலங்கையில் 1978 இல் அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கை முஸ்லிம்களுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்று கூறுவதில் மிகையில்லை. ஒரு புறத்தில் எண்ணெய் வளத்தால் செல்வத்தில் மிதந்து தமது நாடுகளை நவீனப்படுத்தத் துணிந்த சவூதி அரேபியாவும் ஏனைய வளைகுடா நாடுகளும், மறுபுறத்தில் பொருளாதார வறுமையால் பீடிக்கப்பட்டுத் தொழில் வாய்ப்பற்று வாடிய பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகளை உள்ளடக்கிய இலங்கை போன்ற வளர்ச்சிகுன்றிய நாடுகளும். சவூதி அரேபியா தொழிலாளிகளைத்தேடி தனது கதவுகளைத் திறந்துவிடவே இலங்கையின் தொழிற்படை அதிலும் குறிப்பாக முஸ்லிம் தொழிலாளிகள், ஆண்களும் பெண்களும் உட்பட, சாரிசாரியாக அங்கே நுழையத் தொடங்கினர். வருடக்கணக்காக அங்கு வாழ்ந்த இத்தொழிலாளிகள் வஹ்ஹாபித்துவக் கொள்கைகளினதும் அதன் கலாசார மரபுகளினதும் பாதிப்புகளுக்குப் பலியாகாது வாழ்ந்திருக்க முடியாது. குறிப்பாக அரபு மக்களின் உடைகள் இத்தொழிலாளிகளிற் சிலரையோ பலரையோ கவரலாயின. தொழிற்காலம் முடிந்து அவர்கள் தாய்நாடு நோக்கித் திரும்புகையில் அவ்வுடைகளும் அவர்களைத் தொடர்ந்தன. இந்த உடையினால் ஏற்பட்ட முஸ்லிம்களின் வெளித்தோற்றம் அவர்களை ஏதோ இந்த நாட்டுக்குச் சொந்தமானவர்கள் அல்ல என்ற ஒரு தப்பான கருத்தை பெரும்பான்மை மக்களிடையே வளர்த்துவிட்டமை தவிர்க்க முடியாத ஒரு துர்ப்பாக்கியமே.

அதே சமயம் ஏற்கனவே 1950களிலே தொடங்கிய தப்லீக் பிரசாரங்கள் பள்ளிவாசல்களில் தொழ வருகின்றவர்களின் எண்ணிக்கையை பல்லாயிரக்கணக்கில் பெருக்கவே இடவசதியற்ற எத்தனையோ பள்ளிவாசல்களைப் பெருப்பிக்கவும் புதிதாகப் பள்ளிவாசல்களை கட்டவும் வேண்டிய ஓர் அவசியம் ஏற்பட்டது. முஸ்லிம் நாடுகளின் நன்கொடைகள் மூலம் பல பள்ளிவாசல்களும் மதரசாக்களும் நிர்மாணிக்கப்பட்டன. ஆனால் சவூதி அரேபியாவின் நன்கொடைகளால் கட்டப்பட்ட பள்ளிவாசல்களும் மதரசாக்களும் வஹ்ஹாபியக் கருத்துக்களை பரப்பத்தொடங்கியதால் முஸ்லிம்களுக்குள்ளேயே மதப்பிளவுகள் ஏற்பட்டு அவை கோஷ்டிச் சண்டைகளாகவும் மாறலாயின. இவ்வாறு உடைகளும், தொழுவோர் எண்ணி;க்கையும், கட்டிடங்களின் பெருக்கமும் ஏற்படுத்திய வெளித்தோற்றம் ஒரு விதமான பீதியை அதாவது முஸ்லிம்கள் இந்த நாட்டையே இஸ்லாமிய நாடாக மாற்ற விளைகின்றனர் என்ற ஒரு மனோபயத்தை பெரும்பான்மையினரிடையே தோற்றுவிக்கலாயிற்று. அதை வளர்ப்பதில் சில அதிதீவிர பௌத்த சிங்கள இயக்கங்கள் ஆர்வம் காட்டின. அவற்றுள் ஒன்றுதான் ஞானசேரரின் பொதுபல சேனை.
அவ்வியக்கங்களின் இஸ்லாமோபோபியச் செயற்பாடுகள் 2009க்குப் பின்னர் ஒரு புதிய உத்வேகத்தை அடைந்தது. பல கலவரங்களில் ஞானசாரரே முக்கிய பங்கு கொண்டுள்ளார் என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரங்களுண்டு. அவரின் முஸ்லிம் எதிர்ப்புப் பிரச்சாரமே வன்முறைச் சம்பவங்களுக்கு வழிவகுத்தன. அதனால் முஸ்லிம்கள் அனுபவித்த துன்பங்களும் இழப்புகளும் அனந்தம்.

அண்மையில் காத்தான்குடிக்கு விஜயம் செய்த ஞானசாரர் நாரதர்போல் நடித்து அங்கு புரையோடிக்கிடந்த ஒரு மதப்பிளவுக்கு மேலும் தூபமிட்டதை இப்பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரை எற்கனவே விளக்கியுள்ளது. இவையெல்லாம் சவூதி அரசுக்கு நன்றாகத்தெரியும். தெரியவில்லை என்றால் சவூதியின் கொழும்புத் தூதரகம் தனது கடமையை ஒழுங்காகச் செய்யவில்லை என்றுதான் முடிவுகட்டவேண்டும். இந்தப் பின்னணியில் ஞானசாரரை ஏன் சவூதித் தூதுவர் தேசியதின ஒன்று கூடலுக்கு அழைத்தார் என்பது ஒரு புதிராக இருக்கிறது. “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்” என்பதற்கேற்ப சவூதித் தூதரகம் நடந்து கொண்டதா அல்லது அதையும் ஒரு ராஜதந்திரம் என்று கருதுவதா என்பது தெரியவில்லை.

ஆனால் சிங்கள பௌத்த பேரினவாதம் சிறுபான்மை இனங்களை வலுவிழக்கச் செய்து அவர்களை அரசியல் அனாதைகளாக்குவதற்கு எடுக்கும் நடவடிக்கைகள் யாவும் உலக அரங்கில் இன்று பேசுபொருளாகி விட்டன. 2021 இல் ஐ.நா.வின் மனித உரிமைகள் சபை இலங்கை அரசுக்கெதிராக நிறைவேற்றிய கண்டனத் தீர்மானமும் அதனைத் தொடர்ந்து உலக இஸ்லாமிய கூட்டுறவுத்தாபனம் நிறைவேற்றிய கண்டனத் தீர்மானமும் சவூதி அரசுக்குத் தெரயாமலில்லை. இன்று இலங்கை எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளின் மத்தியில் இவ்வாறான கண்டனத் தீர்மானங்கள் நாட்டின் நிலைமையை மேலும் மோசமாக்கும். ஆகவே ஞானசாரர் போன்ற நாரதர்களுக்கு ஒரு கடும் எச்சரிக்கையையாவது சவூதித் தூதுவர் விடுத்திருக்க வேண்டும். அதுவும் நடைபெறவில்லை என்றால் இலங்கை முஸ்லிம்களுக்கு சவூதி அரசு ஒரு பெரும் ஏமாற்றமே._

கலாநிதி அமீரலி, மேர்டொக் பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா
– விடிவெள்ளி இதழ் 13/10/2022 ( பக்கம் -01 )

Check Also

Janaza – நிஸாம்தீன் (NizamDeen) – தொடங்கொள்ள (Dodangolla),

187 தொடங்கொள்ள (Dodangolla), பிலால் மஹல்லா (Bilal Mahallah) நிஸாம்தீன் அவர்கள் காலமானார்கள்Nizam Deen Passed Away இன்னா-லில்லாஹி வஇன்னா …

Free Visitor Counters Flag Counter