‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செய­ல­ணியின் பரிந்­து­ரை­களை ஏற்­பது அரசின் பொறுப்பு

முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையிலான ‘ஒரே நாடு ஒரே சட்டம்’  எனும் ஜனாதிபதி செயலணியின் இறுதி அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதில்லை என்று தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் இறுதி அறிக்கையில் எந்தவோர் இனத்தையும் மதத்தையும் இலக்காகக் கொண்ட பரிந்துரைகள் உள்ளடங்கியில்லை என அதன் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

அதனால் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் பரிந்துரைகளை அமுல்படுத்தப்போவதில்லை என மறுத்துள்ள நிலையில் அவரின் தீர்மானத்துக்கு பதிலளிக்கும் வகையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே ஞானசார தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

செயலணியின் பரிந்துரைகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட சில அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளமையால் அரசு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. என்றாலும் அறிக்கையில் தவறான பரிந்துரைகள் எதுவும் உள்ளடங்கியில்லை. அப்பரிந்துரைகள் மிகவும் சிறந்தவைகள். நல்லதோர் அறிக்கை. அறிக்கை எந்தவோர் மதத்தையோ குறிப்பிட்ட இனத்தையோ இலக்கு வைத்து தயாரிக்கப்படதல்ல. அதனால் அறிக்கையை விமர்சிப்பவர்கள் முதலில் அறிக்கையில் உள்ளடங்கியுள்ளவற்றை வாசித்துப் பார்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது, ‘அறிக்கையில் முஸ்லிம் சமூகம் உட்பட சிறுபான்மையினரின் சில சட்டங்களை இல்லாதொழிக்கும் வகையில் பரிந்துரைகள் உள்ளடங்கியுள்ளதாக சில கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. ஆனால் இவ்வாறான பரிந்துரைகள் அறிக்கையில் உள்ளடங்கியில்லை. பரிந்துரைகள் அனைத்து மதங்கள் மற்றும் இனங்களுக்கு பொருந்தும் வகையிலே முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே அரசாங்கம் இப்பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும்.

சில அரசியல் கட்சிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் இறுதி அறிக்கை தொடர்பாக அண்மையில் எதிர்மறையான கருத்துகளை வெளியிட்டிருந்தன. இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த அறிக்கையை நீக்கிவிடுமாறு கோரியுள்ளது என்றார்.

இந்நிலையில் தற்போதைய நாட்டின் நெருக்கடியான நிலையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற எண்ணக் கருவை செயற்படுத்துவதைவிட அதிக கவனம் செலுத்தப்படவேண்டிய பல முக்கிய பிரச்சினைகள் உள்ளன. அவை முதலில் தீர்க்கப்பட வேண்டுமென பொதுவான கருத்து நிலவுகிறது.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் இறுதி அறிக்கை கடந்த 2022 ஜூன் மாதம் 29ஆம் திகதி அதன் தலைவர் ஞானசார தேரரினால் அப்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

8 அத்தியாயங்களைக் கொண்ட இவ்வறிக்கை 43 பரிந்துரைகளை உள்ளடக்கியதாகும். நாட்டின் அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில் புத்திஜீவிகள், மதக் குழுக்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள், சட்ட வல்லுனர்கள், பல்வேறு சமூக பிரதிநிதிகள்,பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக அமைப்புகள், பல்கலைக்கழக பேராசிரியர்களை உள்ளடக்கி 1200 பேரின் சாட்சியங்கள் இதில் உள்ளடங்கியுள்ளது. (ஏ.ஆர்.ஏ.பரீல்)

– விடிவெள்ளி பத்திரிகை 13/10/2022 ( பக்கம் -01)

Check Also

ஆளை அடித்து வளர்த்தாட்டி இருக்கிறேன் – முஸ்அப் மரணத்தில் நடந்தவை

“தலையில் தொப்பி போடாது, நின்று கொண்டு ‘சூ’ பெய்திருக்கிறான் ஆளை அடித்து வளர்த்தாட்டியிருக்கிறேன்” சாய்ந்தமருது சபீலிர் ரசாத் மத்ரசாவில் மாணவர் …

Free Visitor Counters Flag Counter