எவ்வாறான நெருக்கடிகள் ஏற்பட்டாலும், சாதாரண மக்களே பலிக்கடாக்களாக ஆக்கப்படுகின்றனர். நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு உரிய தீர்வு காணப்படாமலே, இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டு செல்கின்றது. அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு கண்டால்தான், பொருளாதார பிரச்சினையை தீர்க்கலாம் என்றொரு விம்பத்தை காண்பித்து, அரசியல் சித்துவிளையாட்டை இவ்வரசாங்கம் விளையாடிக் கொண்டிருக்கின்றது.
பொருளாதார நெருக்கடிக்கு, டொலர் கிடைக்காமை, ஏற்றுமதி பாதிப்பு, கட்டுக்கடங்காத இறக்குமதி, அந்தியசெலாவணி கையிருப்பில் குறைந்துள்ளமை, உக்ரேன்-ரஷ்யா யுத்தம் உள்ளிட்டவை பிரதான காரணங்களாகக் காண்பிக்கப்படுகின்றன.
இவற்றால், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, மக்களின் கழுத்தை நெரித்துக்கொண்டு நிற்கின்றது. இதற்கிடையே நேரடியான மற்றும் மறைமுக வரிகளை அறிமுகப்படுத்தும் அரசாங்கம், மக்கள் மீது சுமைகளை சுணிமூடித்தனமாகத் திணித்துள்ளது. இதற்கிடையே, சமூகப் பாதுகாப்பு வரியை அறிமுகப்படுத்தி, மக்களை வாட்டி வதைத்துக்கொண்டிருக்கின்றது.
”வரி’ என்பது ஒவ்வொருவரும் முணுமுணுக்கும் வார்த்தையாகிறது. கண்டி இராசதானியில் அறவிடப்படாத எந்தவொரு வரியும் இல்லையாம். நமது நாட்டை பொறுத்தவரையில், நிகழ்கால யதார்த்தத்தில் மட்டுமன்றி, வரலாற்றிலும் வரி முறைமைக்கு பெயர்பெற்றே இருந்திருக்கின்றது.
1848களில் உடலுக்கு வரி, நாய் வரி உள்ளிட்ட ஏழு வரிகள் அறவிடப்பட்டுள்ளன. பெண்களின் மார்பகங்களுக்கான ‘முலைவரி’ கேரளாவில் இருந்துள்ளது. அது, ‘முலை வரியல்ல’, ‘முளை வரி’; அதாவது, விளைச்சலுக்கான வரி எனப் பின்னைய நாள்களில் விளக்கமளிக்கப்பட்டது.
ஆங்கிலேயரின் ஆட்சியில் அறவிடப்பட்ட 2 ரூபாய் உடல் வரியை வழங்காத, ஆண்களுக்கு நடுவீதியில் இரண்டு நாள்கள் கற்கள் உடைக்கவேண்டும். கைகளில் கொப்புளங்கள் பழுத்தாலும் கையிலேந்தியிருக்கும் சம்மட்டியை கீழே வைக்கமுடியாது. சாப்பாட்டுக்கு அரைமணிநேரம் இடைவேளை; அவ்வளவுக்கு ஆங்கிலேயரின் சட்டம் கடுமையாக இருந்தது.
அதேபோன்றுதான் தற்போது நேரடி, மறைமுக வரிகள் திணிக்கப்படுகின்றன. இதனால் பொருட்களின் விலைகள், சேவைகளின் கட்டணங்கள் எகிறிகொண்டே போகின்றன. ஒருசில பொருட்களுக்கான விலைகளை ஆயிரம் ரூபாய்ளில் அதிகரித்த அரசாங்கம், நூறு ரூபாய் அல்லது அதற்கும் குறைந்த இரண்டிலக்கங்களில் குறைத்து, மக்களை ஏமாற்றி வருகின்றது.
வேலைவாய்ப்பு இன்மை, குறைந்தளவான சம்பளம், கொடுப்பனவுகளோ, மேலதிக கொடுப்பனவுகளோ இல்லாமல் பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்கள் திண்டாடுகின்றனர்.
ஆகையால், வரிகளுக்கு மேல் வரிகளை விதிப்பதால், மக்கள் படும் துன்பங்கள் ஏராளம். இதில் மறைமுக வரிகளுக்கு குறைவே இல்லை. அண்மையில் அறிமுகப்படுத்தியிருக்கும் ‘சமூகப் பாதுகாப்பு வரி’ முழு சமூகத்தையும் வாட்டி வதைக்கும் வரியாக இருகிறது என்பது மட்டுமே உண்மையாகும்.
ஆகையால், சாதாரண மக்களின் மீதான சுமையை அதிகரிக்கும் வரிகளை அகற்றிவிட்டு, வரி ஏய்போர்களை இலக்காகக் கொள்வதே சாலச் சிறந்தது. (Tamil Mirror Page 06 6/10/22)