கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகத்தின் பணிப்புரையின் பேரில் இஸ்லாம் பாட நூல் விநியோகம் நிறுத்தப்பட்டமை மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாடநூல்கள் மீளப் பெறப்பட்டமையால் முஸ்லிம் பாடசாலை மாணவர்களின் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனால், 11 மாதங்களாக மாணவர்களின் இஸ்லாம் பாட கல்வி போதித்தல் மற்றும் கற்றல் நடவடிக்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வி உரிமை திட்டமிடப்பட்டு மறுக்கப்பட்டுள்ளதாக குறித்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நீதிக்கான மையத்தின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச். இஸ்மாயீல், சட்டத்தரணி ஜிப்ரியா இர்ஷாத் ஊடாக இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நீதிக்கான மையத்தின் தலைவர் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த வருடம் டிசம்பர் மாதம் இலங்கையின் கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகத்தினால் தரம் 6,7,10 மற்றும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மாணவர்களுடைய இஸ்லாம் பாடநூல் விநியோகத்தை உடன் நிறுத்துமாறும், ஏற்கனவே விநியோகிக்கப்பட்ட பாடப் புத்தகங்களை மீளப்பெறுமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைவாக, அனைத்து பாடசாலை அதிபர்களாலும் வழங்கப்பட்ட பாட புத்தகங்கள் மீளப்பெறப்பட்டதோடு இஸ்லாம் பாடநூல் விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஆணையாளர் பாடநூல் விநியோகம் தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பாடப் புத்தகங்கள் மீளவும் துரிதமாக மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இருப்பினும் 9 மாதங்கள் கடந்துள்ள நிலையில் பாடப் புத்தகங்கள் இன்னமும் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் இடம்பெற உள்ளது.
கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தர மாணவர்கள் பரீட்சைக்காக தரம் 10 மற்றும் 11 பாடப் புத்தகங்களைக் கொண்டே பரீட்சைக்குத் தயாராக வேண்டும். மேலும் தரம் 6 மற்றும் 7 மாணவர்களும் பாடப் புத்தகம் இன்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
2006 கல்வித் திட்டத்திற்கு அமைவாக பாடசாலைகளில் சாதாரண தரம் கல்வியிலும் மாணவர்கள் தமது சமயம் சார்ந்த பாடத்தை தெரிவு செய்வது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சமயப் பாடத்தை கற்பதற்கு பாடநூல் இல்லை.
இந்நிலையில், பாடநூல் சம்பந்தமாக முன்வைத்த பணிப்புரையை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் மாணவர்களிடம் இருந்து மீள பெறப்பட்ட புத்தகங்களை உடனடியாக அவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதோடு மாணவர்களுக்கான இஸ்லாம் பாடநூல் விநியோகத்தை உடன் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கல்வி வெளியீட்டு ஆணையாளருக்கு நாம் கோரிக்கை முன்வைக்கிறோம் என்றார்.
(எம்.வை.எம்.சியாம்) – விடிவெள்ளி பத்திரிகை 06/10/2022 ( பக்கம் -01 )