எமது சமய, சமூக நிறுவனங்களில் ஆயுட்காலத் தலைவர்களே அதிகம் – S.M.M மஸாஹிர்

நேர்காணல்: பேராசிரியர், கலாநிதி, எஸ்.எம்.எம். மஸாஹிர்
பீடாதிபதி, இஸ்லாமிய கற்கைகள் – மற்றும் அறபு மொழிப்பீடம் – தென்கிழக்குப் பல்கலைக்கழகம்

உங்களைப் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகத்தை வழங்கலாமே?

முஹம்மத் மஸாஹிர் என்பது எனது பெயர். எனது பெற்றோர் மர்ஹூம்களான செய்யத் முஹம்மத் மற்றும் ஸபா உம்மா ஆவர். 1967 இல் பிறந்தேன். அக்குறணை எனது பிறந்த ஊர். 1996இல் பாத்திமா நிபாஸாவைக் கரம் பிடித்த எனக்கு மூன்று பிள்ளைகள். மூத்த இருவரும் பெண் பிள்ளைகள். அவர்களுள் மூத்தவர் தென்கிழக்குப் பல்கலைக்கழகப் பட்டதாரியாவார்.

உங்கள் கல்வி வாழ்க்கையை விபரிக்க முடியுமா?

எனது ஆரம்பக் கல்வியை அக்குறணை பாலிகா மகாவித்தியாலயத்தில் (அப்போது அது ஒரு கலவன் பாடசாலை) கற்றுஇ தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றேன். பின்னர் அக்குறணை அஸ்ஹர் கல்லூரியில் இணைந்து கற்றேன். க.பொ.த. (சா{த)ப் பரீட்சையில் சித்தி பெற்றுஇ 1984ஆம் ஆண்டு ஜாமிஆ நளீமிய்யாவில் கற்பதற்காகத் தெரிவு செய்யப்பட்டேன். அங்கு 7 வருடங்கள் இஸ்லாத்தை விரிவாகக் கற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததோடு க.பொ.த. (உ{த)க் கல்வியையும் புரணப்படுத்திஇ பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விசேட கலைமாணிக் கற்கையையும் வெளிவாரி மாணவனாகத் தொடர்ந்தேன். இறுதியில் நளீமிய்யாப் பட்டப்படிப்பை நிறைவு செய்த ஒரு நளீமியாகவும் பேராதனைப் பல்கலைக்கழக விசேட கலைமாணிப் பட்டதாரியாகவும் ஆனேன். தொடர்ந்து கற்றலில் ஈடுபட்ட நான்இ 1998ஆம் ஆண்டுஇ அறபு மொழியைத் தாய் மொழியாகக கொள்ளாதோருக்கு அறபு மொழியைக் கற்பித்தல் துறையில் பட்டப்பின்படிப்பு டிப்ளோமா கற்கைநெறியை சஊதி அரேபியாஇ ரியாத் நகரில் அமைந்துள்ள மன்னர் சஊத் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தேன். பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் எனது முதுதத்துவமாணிக் கற்கையை 2006இல் புரணப்படுத்தினேன். அதைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு மலேசியாஇ கோலாலும்புரில் அமைந்துள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய காப்புறுதித் துறையில் எனது கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டேன்.

எனது தொழில் வாழ்க்கையைப் பொறுத்தளவில் ஜாமிஆ நளீமிய்யாவில் பட்டம் பெற்று வெளியேறியதைத் தொடர்ந்து (1991), அங்கேயே கிட்டத்தட்ட 4 வருடங்கள் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றினேன். 1995ஆம் ஆண்டு மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் முயற்சியால் ஸ்தாபிக்கப்பட்ட தென்கிழக்குப் பல்கலைக்கழகக் கல்லூரியில் தற்காலிக உதவி விரிவுரையாளராகும் வாய்ப்புக் கிடைத்தது. பின்னர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 1998ஆம் ஆண்டு தகுதிகாண் விரிவுரையாளராகவும், 2006இல் முதுநிலை விரிவுரையாளர், தரம் ஐஐ ஆகவும், 2012இல் முதுநிலை விரிவுரையாளர் தரம் ஐ ஆகவும், இறுதியாக 2019இல் பேராசிரியராகவும் பதவி உயர்வு பெற்றேன்.

பேராசிரியராகப் பதவியுயர்வு பெற்றுள்ள நீங்கள் எவ்வாறு உங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்கப் போகின்றீர்கள்?

பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணிபுரியக் கிடைக்கின்றமை ஒரு பெரிய வரம் என நான் நினைக்கின்றேன். அங்கு உயர் கல்வியைப் பெற்றுக் கொள்ள வரும் மாணவர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வந்து அவர்களை அறிவும், சமய உணர்வும், சமூக சிந்தனையும், பண்பாடுகளும், திறமைகளும், தேர்ச்சியும் கொண்ட புத்திஜீவிகளாக உருவாக்கி, சமூகத்துக்கு வழங்குகின்ற பாரிய பொறுப்பு அங்கு விரிவுரையாளர்களாகப் பணியாற்றுவோரின் தோளில் சுமத்தப்பட்டுள்ளது. அதனைக் கச்சிதமாக நிறைவேற்ற வேண்டும் என்பதே எனது பெருவிருப்பமாக உள்ளது. அத்தோடு சமூகத்துக்குத் தேவையாக அநேக விடயங்களில் அறிவுசார் நூல்களை எழுதி வெளியிடுவதிலும் நான் கவனம் செலுத்தி வருகின்றேன். மேலும் முஸ்லிம் சமூகத்தின் பல பக்கங்கள் ஆய்வுக்குட்படுத்தப்படாமல் உள்ளன. அவற்றை நவீன விஞ்ஞானபுர்வமான ஆய்வு முறைமைகளைப் பயன்படுத்தி ஆராய்ந்து, அவற்றுக்கான தீர்வுகளையும் விதைந்துரைகளையும் முன்வைத்து வருகின்றேன்.

முற்போக்கான ஒரு சமூக உருவாக்கத்தில் இளைய சமுதாயத்தின் வகிபங்கு குறித்த மீள்பரிசீலனை அவசியமானதா?

நிச்சயமாக. எந்த ஒரு சமுதாயத்தைப் பொறுத்தளவிலும் அதன் இளைய சமுதாயம் மிகவும் முக்கியமானது. அவர்களை சரியான திசையில் வழிகாட்டி, வளர்த்தெடுப்பது அந்த சமுதாயத்திலுள்ள மூத்தவர்களின் குறிப்பாக புத்திஜீவிகளின் பொறுப்பாகும். அவ்வாறு இடம்பெறாத போது அந்த சமூகம் தனது அடையாளத்தை இழந்து, நெறிபிறழ்ந்த ஒரு சமுதாயமாக மாறிவிடக் கூடும். இதற்கு இன்றைய நாட்டுச் சூழல் ஒரு நல்ல உதாரணம்.

இலங்கை முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தளவில் இளைஞர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பதும் அவர்களின் அறிவாளுமை சமூக மேன்பாட்டுக்காக திட்டமிட்டுப் பயன்படுத்தப்படவில்லை என்பதும் எனது அவதானமாகும். எமது சமய, சமூக நேர்காணல் நிறுவனங்களில் ஆயுட்காலத் தலைவர்களே அதிகம். இளைய தலைமுறையினருக்கு சட்டரீதியாக செயற்பாட்டுக் களத்தை அமைத்துக் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் குறைவு. அதிலும் சமூகத்தின் அரைப்பாகமாக உள்ள இளம்பெண்களின் சமூகப் பங்களிப்புக்கான வகிபாகம் கேள்விக்குறியாக உள்ளது. இப்பகுதி கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டியதாகும்

உங்களின் எழுத்துத் துறை ஈடுபாடு பற்றியும் உங்களால் எழுதப்பட்ட, மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்களைப் பற்றியும் கூற முடியுமா?

எனது பாடசாலைக் காலத்தில் எழுத்துத் துறையில் எனக்கு அவ்வளவாக ஆர்வம் இருந்ததில்லை. ஜாமிஆ நளீமிய்யா எனது வாழ்வின் எல்லாப் பகுதிகளையும் புடம்போட்டது போலவே எழுத்தார்வத்தையும் ஏற்படுத்தியது. அங்கு “றாபிதா கலமிய்யா” என்ற ஒரு வாராந்த சுவர்ப்பலகை உண்டு. அதுதான் என்னை எழுத்துத் துறையில் ஈடுபடக் களமமைத்தது என்பேன். காலப்போக்கில் நான் அதன் நிரந்தர எழுத்தாளனாக ‘குறிஞ்சிக் குரல்” மற்றும் ‘ஸம்ஸம்’ என்ற புனைப்பெயர்களில் எழுதி வந்தேன். அதன் போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசில்களையும் பெற்றுள்ளேன். அத்தோடு சிறிது காலம் ஜாமிஆ நளீமிய்யா வெளியீட்டுப் பணியகத்திலும் பணியாற்றினேன். அதன் ‘இஸ்லாமிய சிந்தனை’ முத்திங்கள் வெளியீட்டிலும் பங்களித்தேன். அப்போது நாடறிந்த எழுத்தாளர் ஸீ.எம்.ஏ. அமீன் அவர்களுடன் இணைந்து பணிபுரியும் சந்தர்ப்பமும் கிடைத்ததனால் எழுத்துத் துறையில் நிறைய அனுபவங்கள் கிடைத்தன.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இணைந்து கொண்டதைத் தொடர்ந்து, எழுத்து கட்டாயமாக மாறியது. மாணவர்களுக்கான கையேடுகள் தயாரிப்பதிலிருந்து ஆய்வுக் கட்டுரைகள், அறிவுநூல்கள் என அது விரிவடைந்தது. எழுத்து வான்மையும் சாதாரண எழுத்திலிருந்து வளர்ச்சியுற்று கல்விசார் எழுத்தாக (யுஉயனநஅiஉ றுசவைiபெ) உயர்வு பெற்றது. தற்போது வரையும் 20இற்கும் அதிகமான நூல்கள், 50இற்கும் அதிகமான ஆய்வுக் கட்டுரைகளைத் தனியாகவும் கூட்டாகவும் எழுதி வெளியிட்டுள்ளேன். வெளியிடப்பட்ட நூல்களுள் சில மொழிபெயர்ப்பு நூல்களாகும்.

உங்கள் கல்வி வாழ்க்கையிலும் எழுத்துத் துறையிலும் உங்களுக்கு பக்கபலமாக இருந்தோர் யாh் என அறியத்தர முடியுமா?

எனது வாழ்க்கை நான் ஈமான் கொண்டுள்ள ஏக இறைவனின் சீரான வழிகாட்டலில் செயற்படுத்தப்படுகின்றது என நான் உறுதியாக நம்புகின்றேன். அந்தவகையில் எனது வாழ்க்கையில் உருவான ஒவ்வொரு திருப்புமுனையின் போதும், சவால்களின் போதும் அதற்கான சரியான தீர்மானத்தை எடுப்பதற்கு அல்லாஹ் தஆலா சில நபர்களை ஏற்பாடு செய்திருந்தான். அவர்கள் அந்தந்த சந்தர்ப்பங்களில் எனக்கு உதவியாக இருந்தார்கள். அவர்கள் எனது பெற்றோர்களாக, சகோதரர்களாக, ஆசிரியர்களாக, மனைவியாக, நண்பர்களாக இருந்தார்கள். குறிப்பாக எனது தந்தை மர்ஹூம் என்.எம். செய்யத் முஹம்மத், எனது சிறிய தந்தை மர்ஹூம் என்.எம்.எம். இஸ்ஹாக் (முன்னாள் மாகாணப் பிரதிக் கல்விப் பணிப்பாளர்), எனது சகோதரன் எஸ். எம்.எம். ஷாஜஹான், எனது சிறுபராயத்து ஆசிரியர்கள், முன்னாள் தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியா் எம்.எம்.எம். நாஜிம், மர்ஹூம் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி, உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸூர், உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத், எனது வகுப்புத் தோழன் அஷ்ஷெய்க் எம்.எச். எம். புகாரி போன்றோர் முக்கியமானவர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக எனது மனைவியின் ஒத்துழைப்பும் அவ்வப்போது அவர் எனக்குத் தந்த ஊக்கமும் எனது வாழ்வின் உயரங்களைத் தொடுவதற்கு பெரிதும் துணையாக அமைந்தன.

உங்கள் சமூக செயற்பாடுகள், திட்டமிடல்கள் பற்றி அறியத்தர முடியுமா?

எமது சமூகத்தின் சமய, கல்வி, பொருளாதார, சமூக மேன்பாடு குறித்து நீண்ட காலமாக சிந்தித்தும் செயற்பட்டும் வருகின்றேன். இலங்கை முஸ்லிம் சமூகத்தின் இருப்பும் நிலைபேறான அபிவிருத்தியும் அதன் கல்வி வளர்ச்சியில் தங்கியுள்ளது. அதனை முறைசார் கல்வியோடு மாத்திரம் சுருக்கிவிடக் கூடாது. அக்கல்வி இஸ்லாமிய உணர்வையும் மார்க்க விழுமியங்களையும் கொண்டதாக அமைய வேண்டும் என நம்புகின்றேன். அதனை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் சமூகத்திற்கு என்னாலான பங்களி்ப்புகளை மேற்கொண்டு வருகின்றேன்.

எமது அக்கினிச் சிறகுகள் சஞ்சிகை தொடர்பான உங்கள் அபிப்பிராயங்களைக் கூறலாமே?

காலத்திற்கு தேவையான மிகச் சிறந்ததொரு சஞ்சிகை. தரமாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டு மாதாமாதம் பல்வேறு ஆக்கங்களை தாங்கி ஒரு சஞ்சிகையை வெளியிடுவதென்பது இலகுவான விடயமல்ல. அதனை கனகச்சிதமாக செய்து வரும் ஆசிரிய குழாத்திற்கு பாராட்டுக்கள். எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டவர்களுக்கான ஒரு சிறந்த களத்தினை ஏற்படுத்திக் கொடுக்கும் அக்கினிச் சிறகுகள் சஞ்சிகை இன்னும் பல விடயங்களை வெளிக்கொணர மனமார வாழ்த்துகிறேன்.

அக்கினிச் சிறகுகள் சஞ்சிகையின் அபிமான வாசகர்களுக்கு நீங்கள் கூறவிழைவதென்ன?

சமூகத்தில் வாசிப்பு ரீதியாக ஒரு கலாசார மாற்றத்தை ஏற்படுத்த முனைய வேண்டும். வாசிக்கும் ஒரு சமூகமாக நாம் மாற வேண்டும். அதன் மூலமாக ஒரு சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப அடித்தளமிட வேண்டும். எழுத்திலும் மிகுந்த ஈடுபாட்டினை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

நேர்காணல்: முஷ்தாக் அஹ்மத் (மூலம் அக்கினி சிறகுகள் சஞ்சிகை)

Check Also

75வருட பூர்த்தியினை காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் பாடசாலை

பவள விழா காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் முஸ்லிம் வித்தியாலயம் ஒரு பார்வை கண்டி மாவட்டத்தில் கட்டுகஸ்தோட்டைக் கல்வி வலயத்தில் …

Free Visitor Counters Flag Counter