2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாட்டில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளில் சிலவற்றின் தடைகளை நீக்குவது குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது.
இதனடிப்படையில் தடைசெய்யப்பட்டுள்ள சிலோன் தெளஹீத் ஜமாஅத் (CTJ) மற்றும் ஐக்கிய தெளஹீத் ஜமா அத் (UTJ) ஆகிய இயக்கங்களின் பிரதிநிதிகளுடன் பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரிகள் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இப்பேச்சுவார்த்தை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
இரு இயக்கங்களும் தனித்தனியாக அழைக்கப்பட்டு சுமார் தலா இரண்டரை மணித்தியாலங்கள் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. குறிப்பாக இரு இயக்கங்களினதும் தடையை ஏன் நீக்கவேண்டுமென்ற அறிக்கையொன்று அமைப்புகளிடம் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளால் கோரப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்பு பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து 11 இஸ்லாமிய அமைப்புகள் அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டன. இந்த 11 அமைப்புகளில் 5 அமைப்புகளின் தடைகள் விரைவில் நீக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா தெளஹீத் ஜமாஅத் (SLTJ), அகில இலங்கை தெளஹீத் ஜமாஅத் (ACTJ), சிலோன் தெளஹீத் ஜமாஅத் (CTJ), ஐக்கிய தெளஹீத் ஜமாஅத் (UTJ), ஜமாஅத்துல் அன்ஸாரி சுன்னத்துல் முஹம்மதியா (JASM) ஆகிய 5 அமைப்புகளின் தடைகள் நீக்கப்படுவதற்கான முன்னெடுப்புகளே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நேற்றுமுன்தினம் நடந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட இரு அமைப்புகளைத் தவிர்ந்த ஏனைய மூன்று அமைப்புகளான ஸ்ரீலங்கா தெளஹீத் ஜமாஅத், அகில இலங்கை தெளஹீத் ஜமாஅத் மற்றும் ஜமா அத்துல் அன்ஸாரி சுன்னத்துல் முஹம்மதியா என்பனவற்றுடனான பேச்சுவார்த்தைகளை பாதுகாப்பு அமைச்சு கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
11 இஸ்லாமிய அமைப்புகளில் 6 அமைப்புகளின் தடை நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச ரீதியிலும் இத்தடை அமுலில் உள்ளது. இது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தாருல் அதர், தேசிய தெளஹீத் ஜமாஅத், ஜமா அத்தே இஸ்லாமி மாணவர் அமைப்பு , ஜமா அத்தே மில்லத்தே இப்றாஹிம், விலாயத் சைலானி, சேவ் த பேர்ள் ( Save the Pearl) ஆகிய அமைப்புகளே தொடர்ந்தும் தடை செய்யப்பட்டுள்ளன.
இஸ்லாமிய அமைப்புகளின் தடையை நீக்குவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹ்மான், எச்.எம்.எம்.ஹரீஸ் என்போர் அரசுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
(ஏ.ஆர்.ஏ.பரீல்) – விடிவெள்ளி பத்திரிகை 29/9/2022 ( பக்கம் -01 )