விபச்சாரத் தொழிலில் தள்ளப்படும் இலங்கை பெண்கள்

இலங்கையிலிருந்து ஓமான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப் பெண்கள் என்ற போர்வையில் அழைத்துச் சென்று அங்கு அவர்களை விபச்சாரம் உள்ளிட்ட சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்கும் கும்பல் ஒன்று தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன.

இதன் பின்னாலுள்ள கும்பலை கண்டறிந்து சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க 18 நாடுகளுக்கு விசாரணை குழுக்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சட்ட விரோத செயற்பாட்டுடன் தொடர்புடைய முகவர் நிறுவனங்கள், தூதரக அதிகாரிகள், குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஓமான் பாதுகாப்பு இல்லமொன்றில் இவ்வாறு விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டமையால் பாதிக்கப்பட்ட 41 பேர் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 9 பேர் சுய நினைவை இழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந் நிலையில் முதலில் ஓமானுக்கு செல்லவுள்ள விசாரணைக் குழு அங்கு பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்கு மூலம் பெற்று, சந்தேக நபர்களை அடையாளம் காணும் ஆரம்ப நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் ஏனைய 17 நாடுகளுக்கும் 17 குழுக்கள் அனுப்பட்டு தகவல்கள் சேகரிக்கப்படவுள்ளதாகவும் அறிய முடிகிறது.

தேசிய மனிதக் கடத்தல் தடுப்பு செயலணி உருவாக்கப்பட்டதிலிருந்து இவ்வாறான விசாரணை ஒன்றினை முன்னெடுக்கும் முதல் சந்தர்ப்பம் இது என்றும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆயிரக் கணக்கானோர் வெளிநாடுகளுக்குத் தொழில்வாய்ப்புகளைத் தேடி தினமும் பயணித்தவண்ணமுள்ளனர். இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 2 இலட்சம் பேர் இவ்வாறு வெளிநாடு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தகவல்கள் கூறுகின்றன. இந்த வருடத்தில் மாத்திரம் மொத்தமாக 330,000 பேர் வெளிநாடுகளுக்கு தொழில்வாய்ப்புகளுக்காகச் செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு ஏராளமானோர் தொழில்தேடி நாட்டை விட்டு வெளியேறும் வாய்ப்பை பயன்படுத்தி சில திட்டமிட்ட கும்பல்கள் மனிதக் கடத்தல்களில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இதன் மூலமாக பல பெண்களின் வாழ்க்கை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பலர் உடல், உள ரீதியாகவும் பாதிப்புக்களைச் சந்தித்துள்ளனர்.

வெளிநாட்டில் கௌரவமான தொழில்களை பெற்றுத் தருவதாக பொய்களைக் கூறி, அங்கு அழைத்துச் சென்று விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்துகின்ற இந்த மனிதாபிமானமற்ற கும்பலின் செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கவையாகும். இவ்வாறான கும்பல்களின் பின்னால் அரசியல்வாதிகள், தூதரக அதிகாரிகள், அரச அதிகாரிகள் எனப் பலர் இருப்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவருக்கு எதிராகவும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

அதுமாத்திரமன்றி, வெளிநாட்டு அந்நியச் செலாவணியைப் பெற்றுக் கொள்வதை மாத்திரம் குறியாகக் கொண்டு பெண்களை நினைத்தவாறு வெளிநாடுகளுக்கு அனுப்புவதை அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது. மாறாக இது தொடர்பான சட்டங்களை இறுக்கமாக்க வேண்டும். குறித்த நாடுகளில் உள்ள தூதரகங்கள் மூலமாக இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் மூலம் மில்லியன் கணக்கான டொலர்களை வருமானமீட்டும் இலங்கை, ஒரு போதும் அவர்களது தொழில் உரிமைகள், பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை. இந் நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும்.

இன்று நாடு எதிர்நோக்கியுள்ள அந்நியச் செலாவணி நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இவ்வாறான தொழிலாளர்களின் பங்களிப்பு அவசியமானதாகும். அவர்களது தொழில் பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்படும் பட்சத்திலேயே அவர்களால் வருமானமீட்டி இலங்கைக்கு பணத்தை அனுப்ப முடியும். மாறாக அவர்கள் இவ்வாறு மனிதக் கடத்தல்காரர்களின் வலையில் சிக்குண்டால் அவர்களது எதிர்காலம் பாதிக்கப்படுவதுடன் வெளிநாடு செல்லும் பெண்களின் எண்ணிக்கையிலும் வீழ்ச்சி ஏற்படும். அது இலங்கையின் வருமானத்தை வெகுவாகப் பாதிக்கும்.

எனவேதான் இந்த ஆட்கடத்தல் கும்பல்களிடமிருந்தும் சர்வதேச விபச்சாரத் தொழில் வலையமைப்பிலிருந்தும் நமது நாட்டின் பெண்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடப்பாடாகும் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.
(விடிவெள்ளி பத்திரிகை 22/9/22 பக்கம் 3)

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter