முஸ்லிம் சமூகத்துக்கென நிர்மாணிக்கப்பட்டு தற்போது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இயங்கிவரும் 9 மாடி கட்டிடத்தை சுவீகரிக்கும் நடவடிக்கைகளை புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருட ஆரம்பத்தில் கட்டிடத்தை புத்தசாசன அமைச்சு கையேற்பதற்கு அனுமதி பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த 9 மாடி கட்டிடத்தை பொறுப்பேற்று அங்கு இந்து விவகார, மற்றும் கிறிஸ்தவ விவகார திணைக்களங்களை இடமாற்றத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இக்கட்டித்தில் மூன்று மாடிகளை தற்போது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பயன்படுத்தி வரும் நிலையில் ஏனைய மாடிகள் பூரணப்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்றன.
ரயில்வே திணைக்களத்துக்கு சொந்தமான தற்போது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இயங்கிவரும் கட்டிட காணி நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் கையேற்கப்பட்டு வழங்கப்பட்டதாகும். இந்தக் கட்டித்துக்கான உறுதி முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு மாற்றம் செய்வதற்கான இறுதி கட்டத்தில் உள்ள நிலையிலே புத்தசாசன அமைச்சினால் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மூன்று மாடிகள் தவிர்ந்த ஏனைய மாடிகளின் சாவிக் கொத்துகளை திருப்பி கையளிக்குமாறு கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இக்கட்டிடம் முஸ்லிம் சமூகத்தின் சொத்தாகும். தற்போது பூரணப்படுத்தப்படாதுள்ள மாடிகளில் தற்போது இட நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் காதிகள் மேன்முறையீட்டு சபையை இங்கு இடமாற்ற முடியும். மற்றும் ஹஜ் முகவர்கள் சங்கத்துக்கும், முஸ்லிம் சமூகநல இயக்கங்களுக்கும் வாடகைக்கு விடமுடியும்.
இவ்விவகாரம் தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தலையிட்டு கட்டிடத்தை பாதுகாப்பதற்கு செயலில் இறங்க வேண்டும். தற்போதைய அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க முஸ்லிம் சமூகத்துடன் நெருக்கிய தொடர்புகளைப் பேணுபவர். அவர் இதுவிடயம் தொடர்பில் மீள்பரீசீலனை செய்ய வேண்டுமென முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
(ஏ.ஆர்.ஏ.பரீல்) விடிவெள்ளி பத்திரிகை 15/9/2022 பக்கம் 01