குருநாகல் நகரில் மாட்டு இறைச்சி வியாபாரத்துக்கான தடை நீங்கியது

குருநாகல் மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் மாட்டிறைச்சி வியாபாரம் செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

குருநாகல் மாநகர சபை எல்லைக்குள் கடந்த நான்கு வருடங்களாக மாட்டிறைச்சிக்கடை நடத்துவதற்கும் விற்பனை செய்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டு வந்தநிலையில், தடையை நீக்குவது தொடர்பான பிரேரணை கடந்த திங்களன்று மாநகர சபையில் கொண்டுவரப்பட்டபோது சபையிலிருந்த உறுப்பினர்களால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மாநகர சபையின் அமர்வு கடந்த 15 ஆம் திகதி மாநகர சபைத் தலைவர் துஷார சஞ்சீவ தலைமையில் சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன் போது மாநகர சபை உறுப்பினர் அஷாருத்தீன் முஈனுத்தீன் மாட்டிறைச்சிக்கடை தொடர்பாக பிரேரணையை முன்வைத்து உரை நிகழ்த்தினார்.

அவர் அங்கு உரையாற்றுகையில், “கடந்த நான்கு வருடங்களாக குரு நாகல் மாநகர எல்லைக்குள் மாட்டிறைச்சிக்கடை நடத்துவதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் நாட்டில் ஆங்காங்கே திட்டமிட்டு ஒரு இனத்தின் மீது வீண் பழி சுமத்தப்பட்டு பொருளாதாரமும் நசுக்கப்பட்டது. இந்த மாட்டிறைச்சிக்கடைகள் மூடப்பட்டதும் இனவாத பின்னணியை கொண்டதாகும். இவ்வாறு மாட்டிறைச்சி விற்பனை குருநாகல் மாநகர எல்லைக்குள் தடை செய்யப்பட்டதால் இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பலர் பாதிக்கப்பட்டனர். தற்பொழுது மக்கள் நிலைமைகளை புரிந்து செயல்படுவதோடு முன்பிருந்த நிலைகளும் சீரடைந்து வருகிறது. எனவே இந்த சந்தர்ப்பத்தில் இந்த சபையால் தடை செய்யப்பட்ட மாட்டிறைச்சிக்கடைகளை மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்” என்றார்.

இரண்டு முஸ்லிம் உறுப்பினர்கள் உட்பட 21 உறுப்பினர்களைக் கொண்ட மாநகர சபையில் அன்றைய தினம் 18 உறுப்பினர்கள் சமுகமளித்திருந்தனர். இதற்கமைய உறுப்பினர்களின் ஆட்சேபனையின்றி மாட்டிறைச்சி கடைகள் திறக்கப்பட வேண்டும் எனக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

விடிவெள்ளி பத்திரிகை 08/8/2022

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter