தொழுகைக்கு பள்ளிவாசலின்றி தவிக்கும் மஹர பகுதி மக்கள்

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் முஸ்லிம் சமூகத்தை பல கோணங்களில் பாதிப்புக்குள்ளாக்கி விட்டன.

இவ்வாறான பாதிப்புகளிலிருந்து சமூகத்தை மீட்டெடுக்க சிவில் சமூக இயக்கங்களோ அல்லது விடயங்களுக்குப் பொறுப்பானவர்களோ எந்தவித முன்னெடுப்புகளையும் மேற்கொள்ளாமை கவலைக்குரியது.

இந்த வகையில் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து ராகம, மஹர பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்கள் தொழுவதற்கு பள்ளிவாசலொன்று இல்லாது படுகின்ற கஷ்டங்கள் குறித்தே இக் கட்டுரை விளக்க முனைகிறது.

மஹர சிறைச்சாலை வளாகத்தினுள் அமைந்திருந்த பள்ளிவாசலையே அப் பகுதி மக்களும் பயன்படுத்தி வந்தனர். பின்னர் இப் பள்ளிவாசல் பலவந்தமாக சிறைச்சாலை அதிகாரிகளால் மூடப்பட்டுவிட்டதால் அப்பள்ளிவாசலில் இயங்கி வந்த அஹதிய்யா பாடசாலையும் மூடப்பட்டுவிட்டது. 2019 இல் அஹதிய்யாப் பாடசாலையில் 56 மாணவ, மாணவிகள் கற்றார்கள். 8 ஆசிரியர்கள் கடமையில் இருந்தார்கள். அனைத்துக்கும் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதலின் பின்பு மூடுவிழா நடத்தப்பட்டுவிட்டது.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதியின் பின்பு பள்ளிவாசலுக்குள் முஸ்லிம்கள் பிரவேசிப்பது முழுமையாக தடைசெய்யப்பட்டுவிட்டது. சிறைச்சாலைகள் ஆணையாளர் இத்தடை உத்தரவினைப் பிறப்பித்தார்.

2019 ஆம் ஆண்டு நோன்பு காலமது. முஸ்லிம்களின் நோன்பு ஏற்பாடுகளுக்கும், விசேட தொழுகைகளுக்கும் தடைவிதிக்கப்பட்டது. நோன்பு பெருநாள் தொழுகையை நடாத்துவதற்குக் கூட அனுமதிக்கப்படவில்லை.

ஜும்ஆ தொழுகைக்காக கஷ்டப்படும் மக்கள்

மஹர சிறைச்சாலை வளாகத்தில் இயங்கி வந்த பள்ளிவாசல் நிர்வாகத்தின் கீழ் 400 குடும்பங்கள் தங்களைப் பதிவு செய்து கொண்டிருந்தன. தற்போது 300 குடும்பங்களே இருக்கின்றன. இக்குடும்பங்கள் ஜமா அத்தார் சங்கத்தில் பதிவு செய்து கொண்டுள்ளன. பதிவு செய்து கொள்ளாத குடும்பங்களும் இப்பிரதேசத்தில் வாழ்கின்றன. அப்பகுதி மக்களில் 90 வீதத்தினர் மலே சமூகத்தினர்களாகும்.

பள்ளிவாசல் மூடப்பட்டு விட்டதால் இப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆ தொழுகைக்கு செல்வதில் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். அவர்கள் மஹர பகுதிக்கு அண்மித்துள்ள மாபோலை, எண்டரமுல்ல, அக்பர் டவுண் பள்ளிவாசல்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது. இப்பள்ளிவாசல்கள் மஹரயிலிருந்து சுமார் 5 கிலோ மீற்றர்களுக்கும் அப்பாலே அமைந்துள்ளன. இதனால் வயோதிபர்கள் மற்றும் நோயாளிகள் ஜும்ஆ தொழுகைக்காக குறிப்பிட்ட பள்ளிவாசல்களுக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. பெருநாள் தொழுகைகளுக்கும் அந்நிலைமையே காணப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம் பெற்று மூன்று வருடகாலம் பூர்த்தியாகிவிட்ட நிலையில் மஹர பகுதி முஸ்லிம்கள், குறிப்பாக மஹர சிறைச்சாலை பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் குடும்பங்கள் தொழுவதற்கு இடமின்றி அல்லலுறுவதை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. 116 வருட கால வரலாற்றினைக் கொண்ட பள்ளிவாசலை சிறைச்சாலை நிர்வாகம் மூடிவிட்டு, பள்ளிவாசலை பயன்படுத்த முஸ்லிம்களுக்குத் தடை விதித்துவிட்டு அங்கே புத்தர் சிலையொன்றினை வைத்து சிறைச்சாலை அதிகாரிகளின் ஓய்வு அறையாக மாற்றி அமைத்திருக்கின்றமை மிகப் பெரிய அநீதியாகும். முஸ்லிம்களின் மத உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதுடன் முழுதாக இதுவோர் இன ஒடுக்கு முறையென்றே கூற வேண்டும்.

சிறைச்சாலை அதிகாரிகளின் ஓய்வு அறையாக மாற்றம்

மஹர சிறைச்சாலை வளாக பள்ளிவாசல் 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி சிறைச்சாலை அதிகாரிகளின் ஓய்வறையாக மாற்றப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

அங்கு புத்தர் சிலையொன்றும் வைக்கப்பட்டது. பள்ளிவாசலில் இருந்த ஆவணங்கள் மற்றும் குர்ஆன் பிரதிகளுக்கு என்ன நடந்தது என்பது எவருக்கும் தெரியாது.
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து பள்ளிவாசலுக்குள் முஸ்லிம்கள் எவரும் பிரவேசிக்கக் கூடாது, மத அனுஷ்டானங்கள் இடம்பெறக்கூடாது என்ற உத்தரவினை சிறைச்சாலை அத்தியட்சகர் வழங்கியிருந்தார். அதனால் பள்ளிவாசலுக்குள் என்ன நடக்கிறது என்பதை அப்பகுதி ஜமாஅத்தார்கள் எவரினாலும் அறிந்து கொள்ள முடியவில்லை.

பள்ளிவாசல் சிறைச்சாலை அதிகாரிகளின் ஓய்வறையாக மாற்றப்பட்டமை மற்றும் அங்கு புத்தர்சிலை வைக்கப்பட்டு பெளத்த மத அனுஷ்டானங்கள் இடம்பெற்றமை போன்ற விபரங்களை தான் முகநூல் பக்கம் மூலமாகவே அறிந்து கொண்டதாக பள்ளிவாசலின் தலைவர் ஹபீல் லக்சானா கூறுகிறார்.

அஹதியா பாடசாலைக்கும் மூடுவிழா

மஹர சிறைச்சாலை வளாக பள்ளிவாசல் மூடப்பட்டதால் பள்ளிவாசலில் இயங்கிவந்த அஹதிய்யா பாடசாலையும் மூடப்பட்டுள்ளது. அஹதிய்யா பாடசாலையை தொடர்ந்தும் நடத்த முடியாது இப்பகுதி மக்கள் கடந்த மூன்று வருடங்களாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

2019 ஏப்ரல் மாதம் பள்ளிவாசல் மூடப்பட்டபோது அஹதிய்யா பாடசாலையில் 53 மாணவ மாணவிகள் கல்வி கற்றுக் கொண்டிருந்தார்கள். தற்போது இப்பகுதியில் சுமார் 100 மாணவ மாணவிகள் இருக்கிறார்கள். கடந்த மூன்று வருடங்களாக இம்மாணவர்கள் குர் ஆனைக் கற்க முடியாது மார்க்கக் கல்வியைக் கற்க முடியாது பின்னடைவு கண்டுள்ளனர்.

பள்ளிவாசல் நிர்வாகம் மூடப்பட்டுள்ள பள்ளிவாசலுக்குப் பக்கத்தில் கட்டிடமொன்றில் அஹதிய்யா பாடசாலையை ஆரம்பிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டபோதும் பெரும்பான்மை இன மக்களின் எதிர்ப்பு காரணமாக இதற்கு கிராம அலுவலர் அனுமதி தர மறுத்துவிட்டார் என பள்ளிவாசல் நிர்வாகத் தலைவர் ஹபீல் லக்சானா தெரிவித்தார்.

அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித், உலமா சபையின் வத்தளை கிளை மூலம் அஹதிய்யா பாடசாலையை மீள ஆரம்பிப்பது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்திருக்கிறார். பிரதேச மக்களும் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபை இதுவிடயத்தில் நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

மஹரயில் இயங்கிவந்த அஹதிய்யா பாடசாலை மூடப்பட்டு மூன்று வருடங்களாகியும் உலமா சபை இதுவரை மெளனம் சாதிப்பது கவலைக்குரியதாகும். உலமா சபை இது விடயத்தில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மையவாடி

மஹர மையவாடி காணி 1970 இல் பிரதேச சபையினால் ஒதுக்கப்பட்டதாகும். இதற்கான உறுதி இருக்கிறது. என்றாலும் அது பாராளுமன்றின் மூலம் அனுமதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என நீர்வழங்கல் சபை தெரிவிக்கிறது. இந்தக்காணி துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான காணியாகும். இக்காணி நகர அபிவிருத்தி அதிகார சபைக்-கு வழங்கப்பட்ட பின்பு பிரதேச சபைக்கு வழங்கப்பட்டு பிரதேச சபை மூலம் அனுமதிக்கப்படவேண்டியுள்ளது. ஆனால் நகர அபிவிருத்தி அதிகார சபை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் ஹபீல் தெரிவிக்கிறார்.

இம்மையவாடியில் இதுவரை சுமார் 115 ஜனாஸாக்களை அடக்கம் செய்துள்ளதாகவும் அவர் கூறினார். தற்போது பள்ளிவாசல் மூடப்பட்டு சிறைச்சாலை அதிகாரிகளின் ஓய்வு அறையாக மாற்றப்பட்டுள்ளதால் இப்பகுதி மக்கள் ஜனாஸா நல்லடக்கங்களின் போது ஜனாஸா தொழுகையை நடாத்துவதில் பல அசெளகரியங்களை எதிர்நோக்குகின்றனர். மையவாடியிலே ஜனாஸா தொழுகையினை நடாத்த வேண்டியுள்ளது.

பள்ளிவாசலை இடம் மாற்றுக

தற்போது மூடப்பட்டுள்ள சிறைச்சாலை வளாக பள்ளிவாசலை சிறைச்சாலை வளாகத்துக்கு அருகில் வேறோர் இடத்துக்கு இடம் மாற்றித்தருமாறு- பள்ளிவாசல் நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. மையவாடிக்கு அருகில் இதற்கான காணியை இனங்கண்டுள்ளோம். இந்தக் காணி சிறைச்சாலை மதிலுக்கு அப்பால் தூரத்தில் அமைந்துள்ளது.
2020 ஆம் ஆண்டு மஹர பள்ளிவாசல் சிறைச்சாலை அதிகாரிகளின் ஓய்வறையாக மாற்றப்பட்டு அதற்குள் புத்தர் சிலை வைத்து சிலை அதிகாரிகள் மத அனுஷ்டானங்களை மேற்கொண்டதிலிருந்து அப்பகுதிமக்கள் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரிடமும் அரசியல் தலைவர்களிடமும் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமும் கோரிக்கை விடுத்தும் பலன் ஏற்படாத நிலையில் பள்ளிவாசலை வேறோர் இடத்தில் நிர்மாணித்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

பள்ளிவாசலை வெறோர் இடத்தில் நிர்மாணித்துக் கொள்வதற்கான அரச காணியொன்றினை ஒதுக்கித்தருமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் இப்றாஹிம் அன்ஸார் கம்பஹா மாவட்ட செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவருடன் திணைக்களம் உத்தியோகபூர்வமாக பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளது.

இதேவேளை பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு அரச காணியொன்று ஒதுக்கப்படாவிட்டால் தனியார் காணியொன்றினை கொள்வனவு செய்வது தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. முன்னாள், நீதி,மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா மூடப்பட்ட மஹர சிறைச்சாலை வளாக பள்ளிவாசலை மீண்டும் முஸ்லிம்களிடம் கையளிக்குமாறு சிறைச்சாலை ஆணையாளருக்கு உத்தரவு பிறப்பித்திருநதும் அந்த உத்தரவு அதிகாரிகளால் புறக்கணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பள்ளிவாசலின் வரலாறு

மஹர சிறைச்சாலையில் பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் 1902 ஆம் ஆண்டு சிறைக்கைதிகளுக்கிடையே கலகம் ஒன்று ஏற்பட்டது. இதன் காரணமாக கடமையிலிருந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்குப் பதிலாக மலே இனத்தைச் சேர்ந்த சிறைச்சாலை பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கடமையிலிருந்த சிங்கள அதிகாரிகள் மீது அரசு நம்பிக்கை இழந்ததனையடுத்தே மலே இனத்தவர்கள் அப்பதவிகளுக்கு நியமனம் பெற்றனர். மலே இனத்தவர்கள் தொழுவதற்கு பள்ளிவாசல் அமைப்பதற்கு நிலம் ஒதுக்கப்பட்டதுடன் மையவாடிக்கும் நிலம் ஒதுக்கப்பட்டது. பள்ளிவாசலும் நிறுவப்பட்டது.

இப்பள்ளிவாசல் சிறைச்சாலை அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்டது. பின்பு முஸ்லிம் அதிகாரிகளின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டதனையடுத்து அப்பகுதியிலுள்ள முஸ்லிம்கள் மற்றும் ஓய்வு பெற்ற சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பத்தவர்களினால் பள்ளிவாசல் பயன்படுத்தப்பட்டது.

இந்த மஹர சிறைச்சாலை பள்ளிவாசல் ‘மஹர பள்ளிவாசல்’ என்ற பெயரின் கீழ் 1962 ஆம் ஆண்டு வக்பு சபையினால் பதிவு செய்யப்பட்டது. 1962 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் திகதி R/1076/GM/31 எனும் இலக்கத்தின் கீழ் இப்பள்ளிவாசல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பள்ளிவாசலை ராகம, கடவத்த, மஹர, கிருந்திவல, வல்பொல, குருத்தலாவ, பேரலந்த போன்ற பகுதி மக்கள் தொழுகைகளுக்காக பயன்படுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

பள்ளிவாசல் சுமார் 119 வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டதாகும். 72 வருடங்களுக்கு முன்பு தற்போதைய (மூடப்பட்டுள்ள) கட்டிடத்துக்கு இடமாற்றப்பட்டதாகும்.
பள்ளிவாசல் வக்புசபையில் பதிவு செய்யப்பட்டு 55 வருடங்கள் கடந்துள்ளன.

உடனடி தீர்வு வழங்கப்பட வேண்டும்

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்பு இப்பள்ளிவாசல் முஸ்லிம்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

இதனால் இப்பகுதியிலுள்ள சுமார் 300 முஸ்லிம் குடும்பங்கள் தங்களது சமயக் கடமைகளை நிறைவேற்றிக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளன.
இப்பகுதியில் வாழும் வயோதிபர்களும், நோயாளிகளும் ஜும்ஆ தொழுகை பெருநாள் தொழுகைகள் மற்றும் நோன்புகால விசேட தொழுகைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலையில் இருக்கின்றனர்.

இப்பகுதி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் ஜனாஸாக்களின் ஜனாஸா தொழுகைகள் திறந்த வெளியில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அஹதிய்யா பாடசாலை மாணவ, மாணவிகள் கல்வியைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மஹர பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் நிரந்தர தீர்வொன்றினைப் பெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கது. பள்ளிவாசலை பிறிதோர் இடத்தில் நிர்மாணித்துக் கொள்வதற்காக அரச காணியொன்றினைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இம்முயற்சிகளுக்கு அரச சார்பு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைசர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அரசாங்கத்துக்கு அமுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.

முஸ்லிம்களுக்கு தடை செய்யப்பட்டுள்ள நூற்றாண்டுக்கு மேற்பட்ட வரலாறு கொண்ட பள்ளிவாசல் தற்போது சிறைச்சாலை அதிகாரிகளின் ஓய்வு அறையாக மாற்றப்பட்டுள்ளது. ஓய்வு அறை மாத்திரமல்ல பெளத்த மத அனுஷ்டானங்களும் அங்குமேற்கொள்ளப்படுகின்றன. புத்தர் சிலையொன்றும் வைக்கப்பட்டுள்ளது.

பழைமை வாய்ந்த பள்ளிவாசலை மூடிவிட்டு அவ்விடத்தில் புத்தர் சிலையுடன் கூடிய ஓய்வு அறை இயங்கி வருகின்றமையை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
புத்தர் சிலை நிறுவுவதை முஸ்லிம்கள் எதிர்க்கவில்லை. பள்ளிவாசலுக்குள் புத்தர்சிலை வைக்கப்பட்டுள்ளமை முஸ்லிம்களை கவலைகொள்ளச் செய்துள்ளது. மஹர சிறைச்சாலை வளாகத்தில் புறம்பான ஓரிடத்தில் புத்தர் சிலை நிறுவப்பட்டிருக்கலாம். ஆனால் சிறைச்சாலை அதிகாரிகள் அதற்கு முயற்சிக்கவில்லை. அப்பிரதேசத்திலிருந்தும் முஸ்லிம் சமூகத்தை ஒதுக்கி வைத்துள்ளனர்.

தற்போதைய கலாசார அலுவல்கள் அமைச்சரும், புதிய ஜனாதிபதி மற்றும் பிரதமரும் மஹர பள்ளிவாசல் விவகாரத்துக்கு உடனடித்தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும்.

ஏ.ஆர்.ஏ.பரீல் – விடிவெள்ளி பத்திரிகை 18/08/2022

Check Also

பர்தா அணிந்த மாணவிகள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள்

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச அளவில் பேசப்படுகின்றது, ஆனால், இன்னும் உள்நாட்டில் பல காரண …

Free Visitor Counters Flag Counter