உழ்ஹிய்யா விநியோக முரண்பாடு; பள்ளி நிர்வாகி படுகொலை

அனுராதபுரம் மாவட்டம், பரசன்கஸ்வெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கம்மிரிகஸ்வெவ, அசிரிக்கமவில் கடந்த 12 ஆம் திகதி ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து, பள்ளிவாசலின் நிர்வாக சபையின் முன்னாள் உறுப்பினர் ஒரு மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பள்ளிவாசலில் ஆரம்பித்த தகராறுக்காக, வீடு வரை சென்று ஒருவர் உயிரிழக்கும் வரை தாக்குதல் நடாத்துவது என்பதும், அதனை பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் ஒருவரே முன்னெடுப்பது என்பதும் எமது முஸ்லிம் சமூக கட்டமைப்பு தொடர்பிலான மீள் வாசிப்பை வலியுறுத்தும் விடயமாகவே பார்க்க வேண்டியுள்ளது. அனுராதபுரம் பரசன்கஸ்வெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கம்மிரிகஸ்வெவ, அசிரிக்கம பிரதேசத்தில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது. கட்டுத் தம்பி ஷரீப் எனும் 67 வயதான நபரே இவ்வாறு கொல்லப்பட்டவராவார்.

‘விடிவெள்ளி’க்கு கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின் படி, இந்த கொலைச் சம்பவத்தின் பின்னணி கடந்த ஜூலை 10 ஆம் திகதி கொண்டாடப்பட்ட ஹஜ்ஜுப் பெருநாள் உழ்ஹிய்யாவுடன் தொடர்புபட்டதாகும்.

ஹஜ்ஜுப் பெரு நாள் தினத்தன்று பல ஊர்களிலும் உழ்ஹிய்யா கடமைகள் நிறைவேற்றப்படுவதை போலவே அசிரிக்கமவிலும் கூட்டு முறையில் அக்கடமை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்போது, அறுக்கப்பட்ட பிராணிகளின் மாமிசம், ஊர் ஜமா அத்தினருக்கு பங்கு பிரிக்கப்பட்டு பொதியிடப்பட்ட பின்னர், மேலும் ஒரு தொகை இறைச்சி பிறிதொரு தனவந்தரிடமிருந்து அசரிக்கம பள்ளிவாசலுக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் ஏற்கனவே அறுக்கப்பட்ட பிராணிகளின் மாமிசம் பொதியிடப்பட்டிருந்தமையால் முதலில் அதனை பகிரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர் சில இறைச்சிப் பொதிகளும், பின்னர் தனவந்தர் ஒருவர் மூலமாக கிடைக்கப் பெற்ற இறைச்சித் தொகையுமாக சேர்த்து ஒரு தொகை இறைச்சி மிகுதியாக இருந்துள்ளது.

இவ்வாறிருக்கையில், நாட்டில் பரவலாக இடம்பெறும் மின் தடை அசரிக்கமவிலும் அமுல் செய்யப்படுவதால், பின்னர் கிடைத்த இறைச்சியை இருளில் பகிர்வது சாத்தியமில்லாமல் போகவே, உழ்ஹிய்யா கடமையை முன்னெடுத்தவர்கள் குறித்த இறைச்சியை பள்ளிவாசல் அறை ஒன்றில் வைத்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர். எனினும் இறைச்சியை விநியோகிக்காது பள்ளிவாசலுக்குள் வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த மற்றொரு குழு, பள்ளிவாசலின் அறையை உடைத்து அவ்விறைச்சியை வெளியே எடுத்துள்ளதுடன், அவ்விறைச்சித் தொகையை பள்ளிவாசல் நிர்வாகம் மறைத்து வைத்திருந்ததாக குற்றம் சுமத்தியுள்ளனர்.

எனினும் ஊர் மக்கள் அனைவருக்கும் நிலைமை பின்னர் விளக்கப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஊர் மக்கள் அனைவருக்கும் பகிர குறித்த இறைச்சி போதுமானதாக இல்லை என்பதால், ஊரிலுள்ள விதவைகளுக்கு அதனை பகிர்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த இறைச்சிப் பிரச்சினை தொடர்பில் பொலிசாருக்கும் யாரோ ஒருவரால் அறிவிக்கப்படவே, அங்கு வந்துள்ள பொலிஸாரும் அதனை சமரசம் செய்துவிட்டு திரும்ப முயன்றுள்ளனர்.

எனினும் அங்கிருந்த ஒரு குழுவினர், இறைச்சியை மறைத்து வைத்தமைக்காக நிர்வாக சபையினரைக் கைது செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

பின்னர் நிலைமையை சமாளிக்க, பொலிஸார் பள்ளிவாசலின் நிர்வாக சபை தலைவர் மற்றும் செயலாளரை பொலிஸ் பொறுப்பில் எடுத்து பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றுள்ளதுடன், இறைச்சித் தொகையையும் பொலிஸ் பொறுப்பில் எடுத்துள்ளனர். எனினும் குறித்த ஒரு தொகை இறைச்சி பழுதடைந்தமையால் அதனை பொலிஸிலேயே விட்டுவிட்டு வந்துள்ளனர்.

இந்த உழ்ஹிய்யா விடயத்தில் பொலிஸார் செயற்பட்ட விதம் பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. அதாவது பள்ளிவாசலை உடைத்து இறைச்சியை எடுத்தோரை வீட்டுவிட்டு, பள்ளி நிர்வாக சபையினரைக் கைது செய்ய பொலிஸார் எடுத்த நடவடிக்கையே அதற்கான காரணமாகும்.

இவ்வாறான நிலையில், பள்ளியின் தலைவர், செயலாளர் கைது செய்யப்பட்ட தினத்தின் இரவு வேளையில் அசரிக்கமவில் நிர்வாக சபை உறுப்பினர்களின் வீடுகளுக்கு அடையாளம் தெரியாதோர் கல் வீச்சு தாக்குதலையும் நடத்தியுள்ளனர். இந்த சர்ச்சை காரணமாக ஹஜ்ஜுப் பெருநாளை தொடர்ந்து வந்த வெள்ளிக்கிழமையன்று சம்பந்தப்பட்ட பள்ளிவாசல் நிர்வாக சபை கலைந்துவிட்டதாக பள்ளிவாசல் இமாம் மூலம் ஜும்ஆ தொழுகையின் பின்னர் அறிவிக்கப்பட்டு புதிய நிர்வாக சபையை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி அதற்கு அடுத்த ஜும்ஆ தினத்தன்று 12 பேர் கொண்ட நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாக சபையிலிருந்த நால்வர் அதிலிருந்து விலகுவதாக பின்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடர் சம்பவங்கள் அசரிக்கமவில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்த பின்னணியிலேயே கடந்த 12 ஆம் திகதி வெள்ளியன்று நிர்வாக சபையிலிருந்து விலகியவர்கள் தொடர்பில் ஆராயப்பட்ட போது மீள பிரச்சினை உருவாகியுள்ளது. இதன்போது பள்ளிவாசலுக்குள்ளேயே மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. அணிந்திருந்த சாரன்களை மடித்துக் கட்டிக்கொண்டு, மிக அநாகரிகமான முறையில் இரு சாராரும் மோதியுள்ளனர்.

இதன்போது, முன்னைய நிர்வாக சபையில் உறுப்பினராக இருந்த (அதாவது ஹஜ்ஜுப் பெருநாள் உழ்ஹிய்யா குறித்த பிரச்சினை ஏற்பட்ட போது) கட்டுத் தம்பி ஷரீப் எனும் 67 வயதான முன்னாள் சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர் தள்ளிவிடப்பட்டு, கீழே வீழ்ந்துள்ளார். எவ்வாறாயினும் அங்கிருந்தவர்கள் அவருக்கு உதவியுள்ளதுடன் பள்ளிவாசலுக்கு அருகே அமைந்துள்ள அவரது வீட்டுக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

இவ்வாறான நிலையில், புதிதாக தெரிவு செய்யப்பட்ட நிர்வாக சபையில் அங்கத்தவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் எனக் கூறப்படும் நபர் ஒருவரும், அவரது சகோதரர், சகோதரரின் மகன், மனைவி, தகப்பன், சகோதரியின் மகன் என ஒரு குழு கட்டுத் தம்பி ஷரீப்பின் வீட்டுக்குச் சென்று அவர் மீது பொல்லுகள் கொண்டு சரமாரியாக தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

ஜும்ஆ தொழுகையின் பின்னர் பள்ளிவாசலில் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து, சுமார் பிற்பகல் 1.45 மணியளவில் இந்த தாக்குதல் நடந்ததாக பொலிஸ் தரப்பில் கூறப்படுகின்றது.

இதன்போது படுகாயமடைந்துள்ள கட்டுத் தம்பி ஷரீப் எனும் 67 வயதான நபர், பரசன்கஸ்வெவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இந் நிலையில் பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து முதலில் நால்வரைக் கைது செய்ததுடன் பின்னர் சரணடைந்த பெண் ஒருவர் உள்ளிட்ட இருவரை கைது செய்தாக கூறப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்களில் பள்ளிவாசலில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட நிர்வாக சபை உறுப்பினர் ஒருவரே முக்கிய சந்தேக நபர் எனவும், ஏனையோர் அவரது உறவினர்கள் எனவும் அறிய முடிகின்றது. கைது செய்யப்பட்ட ஆறு பேரும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் பரசன்கஸ்வெவ பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனினும் பரசன்கஸ்வெவ பொலிசாரின் விசாரணைகள் தொடர்பில் கம்மிரிகஸ்வெவ, அசரிகம பிரதேச மக்களிடையே பாரிய விமர்சனம் நிலவுகிறது. இது விடயத்தில் பொலிசார் நீதியாக செயற்படுவார்களா என்பதில் பொது மக்கள் சந்தேகம் கொண்டுள்ளனர். எனவே இந்த கொலைச் சம்பவம் மற்றும் அதன் பின்னணி, பொலிஸாரின் வினைத்திறனன்ற செயற்பாடுகள் தொடர்பில் உரிய விசாரணைகள் அவசியம் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோல, பள்ளிவாசல் நிர்வாக சபைகள், அதன் அங்கத்தவர்கள் தொடர்பிலும், இலங்கை வக்பு சபையும் இதனைவிட அவதானமாக செயற்பட வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் மேலதிக சான்றாகும்.

கொழும்பு உள்ளிட்ட நகர பகுதிகளின் பள்ளிவாசல் நிர்வாக சபை தெரிவுகள் குறித்து வக்பு சபை அதன் அதிகாரத்துக்கு உட்பட்டு அவதானம் செலுத்தியிருந்தாலும் (விதி விலக்கான சம்பவங்கள் உள்ளன) முஸ்லிம் கிராமங்களில் அல்லது நகர் பகுதிகளுடன் தொடர்பற்ற இடங்களின் பள்ளிவாசல் நிர்வாகம் தொடர்பிலும் மேலதிக அவதானம் செலுத்தப்படுதல் அவசியமாகும். பள்ளி நிர்வாக சபை சார்ந்து ஏதேனும் பிரச்சினை ஒன்று மேலெழும் போது உடனடியாக தலையீடு செய்யும் வகையில், வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பன விரைந்து செயற்படும் விதமாக பொறிமுறை ஒன்று உடனடியாக அவசியமாகும். இல்லையேல், பள்ளிவாசல்கள் கொலைக் களமாகும் நமது சமூகத்தின் தொடர் வரலாறுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது போய்விடும். கடந்த காலங்களிலும் பள்ளிவாசல் நிர்வாக முரண்பாடுகள், கொள்கை முரண்பாடுகளால் பல கொலைகள் பதிவாகியுள்ளன என்பதையும் இந்த இடத்தில் நினைவூட்ட விரும்புகிறோம்.

எம்.எப்.எம்.பஸீர் – விடிவெள்ளி பத்திரிகை பக்கம் 01 – 18/08/2022

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter