கல்வியைக் கைவிடும் மாணவர் சமுதாயம்

நாட்டிலுள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் தமது கல்வியை இடைநடுவில் கைவிட்டு, தொழில்துறைகளை நாடிச் செல்லும் நிலைமைகள் அதிரிகத்து வருவதாக கல்வித்துறை சார்ந்தவர்கள் கவலைகளை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

கொவிட் முடக்கம், ஆசிரியர் போராட்டங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நீண்ட காலமாக பாடசாலைகள் முறையாக இயங்கவில்லை. கொவிட் முடக்க காலத்தில் இணைய வழியாக வகுப்புகள் நடைபெற்ற போதிலும் அவை வெற்றியளிக்கவில்லை. இது ஒரு தோல்வியடைந்த முறை என்பதை கல்வியமைச்சே ஏற்றுக் கொண்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து இந்த வருட ஆரம்பம் முதலே எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டமையால் மாணவர்களும் ஆசிரியர்களும் பாடசாலைகளுக்குச் செல்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கினர். குறிப்பாக எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கடந்த மாதம் முழுவதும் பாடசாலைகள் நடைபெறவில்லை. ஓரிரு நாட்கள் நடைபெற்ற போதிலும் மாணவர்களும் ஆசிரியர்களும் குறிப்பிடத்தக்களவு சமுகமளிக்கவில்லை . நிலைமை இவ்வாறிருக்க, தொடர்ச்சியாக பாடசாலைகள் இடம்பெறாத காரணத்தினாலும் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டதனாலும் மாணவர்கள் கல்வியின்பால் கொண்டிருந்த ஆர்வத்தை வெகுவாக இழந்துள்ளனர். இதன் காரணமாக பாடசாலைகளை விட்டு விலகி, சிறு தொகையேனும் வருமானம் தரக் கூடிய தொழில்வாய்ப்புகளை நோக்கி தமது கவனத்தை திருப்பியுள்ளனர். நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இன்று பலரும் தொழில்வாய்ப்புகளை இழந்து வருமானமின்றித் தவிக்கின்றனர். இதன் காரணமாக இவ்வாறு வருமானமிழந்துள்ள பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதை விடுத்து, அன்றாட கூலித் தொழில்களுக்கு அனுப்பி வைக்கின்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களே இவ்வாறு தமது பாடசாலைக் கல்வியை கைவிட ஆரம்பித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் தொழிற்சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்ணான்டோ சுட்டிக்காட்டியுள்ளார். சாதாரண தரத்தில் நல்ல பெறுபேறைப் பெற்று, உயர்தரம் கற்க வந்த மாணவர்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக இவ்வாறு இடைவிலகிச் செல்வது அவர்களதும் நாட்டினதும் எதிர்காலத்தை வெகுவாகப் பாதிக்கும் என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். முஸ்லிம் பிரதேசங்களில் கூட இதே நிலைமையை எம்மால் அவதானிக்க முடிகிறது. கல்வியில் நம்பிக்கையிழந்த ஓர் இளம் சமுதாயம் நம்மத்தியில் உருவாகி வருகிறது. குறுக்கு வழியில் பணம் சம்பாதித்து, ஆடம்பரமாக வாழ்வது எப்படி என இந்த இளம் சந்ததியினர் சிந்திக்கத் தலைப்பட்டுள்ளனர். பலர் போதைக்கு அடிமையாகியுள்ளதுடன் போதைப் பொருள் வியாபாரத்திலும் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

எனவேதான் இந்த சந்தர்ப்பத்தில் சகல தரப்பினரும் இணைந்து மாணவர்கள் தமது கல்வி வாழ்க்கையை உரிய முறையில் பூர்த்தி செய்வதற்குத் தேவையான உதவி ஒத்தாசைகளை வழங்க முன்வர வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம். கல்வியமைச்சு இந்த அபாயமான நிலைமை தொடர்பில் எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாகத் தெரியவில்லை. கல்வியமைச்சு இதற்குத் தீர்வு தரும் என நம்புவதை விடுத்து, பாடசாலைகள் ரீதியாக இவ்வாறு இடைவிலகும் மாணவர்களைக் கண்டறிந்து மீண்டும் அவர்கள் கல்வியைத் தொடர்வதற்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டியதே அவசியமானதும் அவசரமானதுமான பணியாகும். அதேபோன்று முஸ்லிம் பிரதேசங்களில் பள்ளிவாசல்களுக்கும் பொது நிறுவனங்களுக்கும் இதில் முக்கிய பங்கிருக்கிறது. மஹல்லா ரீதியாக இவ்வாறான கல்வியைக் கைவிட்ட மாணவர்களை இனங்கண்டு மீண்டும் அவர்களை பாடசாலைகளுடன் இணைப்பதற்கும் அவர்களுக்குத் தேவையான பொருளாதார உதவிகளை வழங்குவதற்குமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. மேலும் பிரதேசவாரியான புலமைப்பரிசில் திட்டங்களையும் இதற்காக அங்குரார்ப்பணம் செய்து முன்னெடுக்கலாம். பிரதேச ரீதியாக ஆய்வுகளை முன்னெடுத்து தேவைகளை இனங்காண முடியும். அவற்றை அடிப்படையாகக் கொண்டு திட்டங்களை வகுத்து செயற்பட முடியும்.

உண்மையில் இது மிகவும் கவனத்தை வேண்டி நிற்கின்ற விடயமாகும். குறிப்பாக வெள்ளிக்கிழமை குத்பா பிரசங்கங்களிலும் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் கல்விக்காக உதவி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் உலமாக்கள் வலியுறுத்த கடமைப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவரையும் கூடுதல் கவனம் செலுத்துமாறும் கல்வியைக் கைவிட்டு, தவறான பாதையில் பயணிக்கின்ற ஒரு சமுதாயம் உருவாவதைத் தடுக்க கைகோர்க்குமாறும் வேண்டுகோள்விடுக்க விரும்புகிறோம்.

விடிவெள்ளி பத்திரிகை 4/8/2022 – பக்கம் 02

Check Also

பர்தா அணிந்த மாணவிகள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள்

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச அளவில் பேசப்படுகின்றது, ஆனால், இன்னும் உள்நாட்டில் பல காரண …

Free Visitor Counters Flag Counter