ஊழலற்ற அரசியல் தலைவர்களை உருவாக்குவது யார் பொறுப்பு?

இன்றைய மக்கள் மற்றும் இளம் தலைமுறையினர் எதிர்பார்க்கும் பாரியளவிலான அரசியல் மாற்றம் அல்லது அரசியலமைப்பு மாற்றங்கள், தற்போது System change (முறைமை மாற்றம்) என வர்ணிக்கப்படும் பயன் தரும் மாற்றங்களானது சிறந்த அரசியல் தலைவர்கள் மூலமும் ஜனநாயக ரீதியிலான தேர்தலின் மூலமுமே இலங்கை நாட்டில் கொண்டு வரப்பட முடியும். System change இன்றைய தலைவரை விரட்டியடிப்பது மாத்திரமல்ல ஊழல் நிறைந்த தன்னலம் பேணும் அரசியல் தலைமைகளை களையெடுத்து புதிய தலைமைத்துவத்தை தெரிவு செய்வதில் பெரிதும் தங்கியிருக்கிறது.

System change எனப்படும் அரசியல் அமைப்புசார் மாற்றங்களை ஏற்படுத்த வல்ல சக்தியை ஜனநாயக நாடு என்ற ரீதியில் மக்கள் இறைமையின் கீழ் ஒவ்வொரு குடிமகனும் கொண்டுள்ளோம். இருப்பினும், செயற்பாட்டு ரீதியாக மக்கள் குறித்த மாற்றத்தில் பங்கு பற்ற முடியாத அவல நிலை காணப்படுவதுடன் அதற்கான தகுந்த தீர்வாகவே பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்பியும் வைத்துள்ளோம், நமக்கு தேவையான System change இனை பாராளுமன்றத்தினால் மாத்திரமே ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய துர்ப்பாக்கிய நிலையில் நாங்கள் காணப்படுகிறோம். பாராளுமன்றமானது மக்களின் இறைமையை செயற்படுத்தும் மன்று என்ற வகையில் மக்கள் உணர்ச்சிவசமாகியுள்ள இந்த சூழலே System change இனை ஏற்படுத்துவதற்கான சரியான சந்தர்ப்பம்,System change என்பது அடிப்படையில் இருந்து கொண்டு வரப்பட வேண்டும் என்பதேயாகும். எங்களுக்கான மாற்றத்தைக் கொண்டு வரத் தகுந்த தலைவர்களை சிறப்பான முறையில் தெரிவு செய்து கொள்வதில் எங்களுக்கு பெரும் பங்கு காணப்படுகிறது. அற்ப சலுகைகளுக்காக எங்களது ஜனநாயக உரிமையான வாக்குரிமையை அடகு வைக்கும் கலாச்சாரத்தின் மூலம் ஊழல் ஆசாமிகளை மக்கள் மன்றிற்கு அனுப்பி வைத்து விட்டு எங்களது எதிர்பார்ப்பை அவர்கள் நிறைவேற்றாத போது அவர்களை வசைபாடுவது எங்களை நாங்களே வசைபாடுவதற்கு சமமானது என்றால் அது மிகையான கருத்தல்ல.

எனவே, நமது ஒவ்வொருவரினதும் வாக்கு நமது கொள்கையை பிரதிபலிக்க வேண்டும். ஏனென்றால் நமது வாக்கு நமது எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. வாக்களித்து தலைவர்களையும் பிரதிநிதிகளையும் தெரிவு செய்தல் வெறுமனே ஒரு நாள் நிகழ்வாக முடிந்து விடாமல் அது வரலாறுகளாக பார்க்கப்பட வேண்டும். ஊழலற்ற அரசு என்ற கோஷமானது ஊழலற்ற தலைவர்கள் உருவாக்கத்தில் உயிர்த்தெழ வேண்டும். மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் கொள்ளையர்களுக்கல்லாது அபிலாஷைகளை முன்னிறுத்தும் கொள்கைவாதிகளுக்கு வாக்குகள் வழங்கப்பட வேண்டும் என்பதை விட ஊழல் ஆசாமிகள் ஒதுக்கப்பட்டு சிறந்த தலைமைத்துவங்கள் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றே சொல்ல வேண்டும்.

இளைஞர்களின் உணர்வலைகளும் நாளைய தலைவர்களும்

இன்று இலங்கையில் பாரிய அரசியல் மாற்றம் ஒன்று நிகழ்ந்து உலக நாடுகள் நம்மை திரும்பிப் பார்க்கச் செய்யும் நிகழ்வொன்று நடந்தேறுவதற்கு கற்றறிந்த இளைஞர்களின் உணர்வலை பொங்கிய போராட்டம் மிகப் பெரிய மைற்கல்லாகிப் போனது. System change இனை நோக்கிய அவர்களது போராட்டமும் உணர்ச்சிப் பெருக்குமே நாட்டு மக்களை ஒன்று திரட்டியது. அது பாராட்டப்பட வேண்டிய வரலாற்று நிகழ்வு.

இன்று இந்த உணர்வலைகளுடன் கூடிய இளைஞர்கள் தங்களது போராட்டத்தை முன்னெடுத்த வண்ணமே கொஞ்சம் சாதுர்யமாக சிந்திக்க வேண்டிய நேரத்தில் இருக்கின்றனர். இன்றும் சரி நாளையும் சரி ஒப்பந்தங்களுக்கு மத்தியில் தனது அரசியல் நகர்வுகளை கொண்டு செல்லும் கொண்டு செல்ல காத்திருக்கும் மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லப்படும் டீல் அரசியல்வாதிகளிடம் இருந்து நாட்டைப் பாதுகாத்து ஊழலற்ற தலைமைகளிடம் நமது நாட்டை கையளிக்கும் சாத்வீக போராட்டத்தை பற்றியும் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

எதிர்வரும் ஜனநாயக ரீதியிலான தேர்தலினை இலக்கு வைத்து தமது விழிப்புணர்வூட்டல் செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். தங்களது வாழ்வாதாரம் சீர் குலைந்தமையால் வீதிக்கு போராடுவதற்காய் வந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தூரநோக்குடனான அரசியல் தலைமைத்துவம் குறித்து விளக்கமளிக்க வேண்டும்.

இன்று கண்ணெதிரே ஊழலில் ஈடுபட்டு டீல் பேசி மக்களின் அபிலாஷைகளை துச்சமாக மதிக்கும் அனைத்து மட்ட (பிரதேச, மாநகர, மாகாண மற்றும் பாராளுமன்ற பிரதிநிதிகள்) அரசியல் பிரமுகர்களையும் அடுத்து வரும் ஒவ்வொரு தேர்தல்களிலும் எவ்வாறு ஓரம் கட்டுவது என்ற பரந்த பார்வையையும் திட்டத்தையும் முன்வைக்க வேண்டும். பல கோடிகளை தேர்தல் காலத்தில் உலாவ விடும் அரசியல்வாதிகளுக்கான இடத்தை இல்லாது செய்து தேர்தல் பிரச்சாரங்களையேனும் செய்து முடிக்க முடியாத பொருளாதார நிலையில் இருக்கும் கொள்கைவாதிகள், நேர்மையான ஊர் தலைவர்கள், ஓய்வு பெற்ற நேர்மையான அரச அதிகாரிகள் என அரசியலில் ஆர்வமும் நேர்மையும் உடைய கனவான்கள் இனங்காணப்பட்டு பிரசாரம் பண்ணப்பட வேண்டும்.

ஐயாயிரம் ரூபாய் பணத்திற்கும், மல்லிகை பொருட்களுக்கும் வாக்குகளை விற்போரையும் அரச வேலை, இலவச வீடு என வாக்குறுதிகளை நம்பி வாக்குகளை வாரி வழங்குபவர்களையும் இந்த செயற்பாடுகளில் இருந்து தடுப்பதற்கு இயலுமான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். கொள்கையை பாராது தற்காலிக சலுகைகளை மாத்திரம் கண்கொண்டு அளிக்கப்படும் வாக்குகள் நமது எதிர்காலத்தை கேள்விக் குறியாக்குவதை கேள்விக் குறியாக்கி இருப்பதை அவர்களுக்கு விளங்குகின்ற விதத்தில் விளக்க வேண்டும்.

வாக்குகளை பாதுகாக்க வேண்டும், தேர்தலின் நூறு வீத ஜனநாயக தன்மையினை பாதுகாக்க வேண்டும். அனைவரும் எதிர்பார்க்கும் System change இனை ஊழலற்ற அரசியல் தலைமைத்துவங்களை வைத்தே எட்ட முடியும். நாட்டின் அதியுயர் சட்டம் அரசியலமைப்பு என்ற ரீதியில் நாங்கள் அதை மதிக்க வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றோம், நாங்கள் முதன்மைச் சட்டமாக மதிக்கும் அரசியலமைப்பில் மாற்றங்களை கொண்டு வருவதன் மூலமே நாம் எதிர்பார்க்கும் System change இனை முழுதாக சுவைக்க முடியும். ஊழலற்ற நேர்மையான மக்களுக்காக மக்களாக இயங்கும் பிரதிநிதிகள் மக்கள் மன்றிற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். அவர்களைக் கொண்டே குறித்த System change செய்யப்பட வேண்டும். பாராளுமன்றத்தை வைத்தே முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன System change கொண்டு வந்தார், பாராளுமன்றை வைத்தே அதன் பிற்பாடு ஆட்சி பீடம் ஏறிய பல தலைவர்கள் அவரவர்களுக்கு தேவையான System change இனை கொண்டு வந்தனர். போராட்டங்களுக்கு அப்பால் System change பாராளுமன்றின் துணையுடனேயே கொண்டு வரப்பட வேண்டும். ஊருக்கு ஊர் தெருவிற்கு தெரு மக்கள் அரசியல் விழிப்புணர்வூட்டல்கள் தற்போது அவசியமாகி இருக்கின்றது. ஊழலற்ற தலைவர்களின் உருவாக்கம் அவசியமாகி இருக்கின்றது. ஊழல் அரசியல் வாதிகளே மீண்டும் மீண்டும் மக்கள் மன்றம் செல்ல வழி வகுப்போமேயானால் போராடி வென்ற அரிய விடயங்களும் சக்தியிழந்து போய் விடும்.

எனவே, நாடு எதிர்பார்க்கும் System change இனை கொண்டு வருவதற்கு இன்றைய உணர்ச்சிப் பெருக்குள்ள இளைஞர்கள் போதுமானவர்கள், அவர்கள் சிந்தித்து செயற்படக் கடமைப் பட்டவர்கள், எதிர்கால தேர்தல்களை நோக்கி காய் நகர்த்தக் கூடியவர்கள்.

சட்டத்தரணி கிப்சியா செய்னுல் ஆப்தீன் (விடிவெள்ளி பத்திரிகை)

Check Also

ஆளை அடித்து வளர்த்தாட்டி இருக்கிறேன் – முஸ்அப் மரணத்தில் நடந்தவை

“தலையில் தொப்பி போடாது, நின்று கொண்டு ‘சூ’ பெய்திருக்கிறான் ஆளை அடித்து வளர்த்தாட்டியிருக்கிறேன்” சாய்ந்தமருது சபீலிர் ரசாத் மத்ரசாவில் மாணவர் …

Free Visitor Counters Flag Counter