அவசரகால சட்டம் அவசியம்தானா?

அவசரகால சட்டத்துக்கு பாராளுமன்றம்‌ அங்கீகாரம்‌ வழங்கியுள்ளது. சபாநாயகர்‌ மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில்‌ நேற்றுமுன்தினம்‌ பாராளுமன்றம்‌ கூடிய போது அவசரகால சட்டத்துக்கு அங்கீகாரம்‌ பெறுவதற்கான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து நாள்‌ முழுவதும்‌ விவாதம்‌ இடம்பெற்றது. இதனையடுத்து வாக்கெடுப்பு இடம்பெற்றபோது பிரேரணைக்கு ஆதரவாக 120 பேரும்‌ எதிராக 63 பேரும்‌ வாக்களித்தனர்‌. இதனால்‌ 57 மேலதிக வாக்குகளினால்‌ அவசரகால சட்டம்‌ நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாட்டில்‌ ஏற்பட்டுள்ள அரசியல்‌ நெருக்கடிகளையடுத்து பதில்‌ ஜனாதிபதியான ரணில்‌ விக்கிரமசிங்கவினால்‌ கடந்த 18 ஆம்‌ திகதி அவசரகாலச்சட்டம்‌ நாடு தழுவியரீதியில்‌ பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த சட்டத்தை தொடர்வதற்கான அங்கீகாரமே பாராளுமன்றத்தினால்‌ தற்போது வழங்கப்‌பட்டுள்ளது.

அவசரகால சட்டத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள்‌ சக்தி, மக்கள்‌ விடுதலை முன்னணி, தமிழ்த்‌ தேசியக்கூட்டமைப்பு, தமிழ்த்‌ தேசிய மக்கள்‌ முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம்‌ காங்கிரஸ்‌, தமிழ்‌ முற்போக்குக்கூட்டணி ஆகிய கட்சிகள்‌ வாக்களித்திருந்தன. பாராளுமன்றத்தில்‌ சுயாதீனமாக செயற்படும்‌ டலஸ்‌ அழகப்பெரும தரப்பினரும்‌ எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்‌.

இலங்கைத்‌ தொழிலாளர்‌ காங்கிரஸ்‌, விமல்‌ வீரவன்ச தலைமையிலான சுயாதீன அணி ஆகிய கட்சிகள்‌ ஆளுந்தரப்புடன்‌ இணைந்து பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்திருந்தன.

அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில்‌ உரையாற்றிய எதிர்க்கட்சித்‌ தலைவர்‌ சஜித்‌ பிரேமதாச மக்களுக்கு பல அவசர தேவைகள்‌ காணப்படுகின்றபோதிலும்‌ அரச பயங்கரவாத செயலை செயற்படுத்துவதற்கு அவசரகால சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய தேவை அரசுக்கு உள்ளது. இதனால்‌ இந்தப்‌ பிரேரணைக்கு நாம்‌ பூரண எதிர்ப்பை தெரிவிக்கின்றோம்‌ என்று சுட்டிக்காட்டியிருந்தார்‌.

இதேபோன்றே தமிழ்த்‌ தேசியக்‌ கூட்டமைப்பின்‌ பேச்சாளர்‌ எம்‌.ஏ.சுமந்திரன்‌ இந்தப்‌ பிரேரணை மீதான விவாதத்தில்‌ உரையாற்றுகையில்‌, நாட்டில்‌ தற்போது இயல்பான நிலை காணப்படும்‌ பின்னணியில்‌ அவசரகால சட்டத்தை தொடர்ந்து அமுல்படுத்த வேண்டிய தேவை கிடையாது. நெருக்கடியான சூழ்நிலையில்‌ சட்டத்துக்கு முரணாக செயற்பட்டால்‌ அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்‌ என்று தெரிவித்‌திருந்தார்‌.

இங்கு உரையாற்றிய கூட்டமைப்பின்‌ பாராளுமன்ற உறுப்பினரும்‌ ரெலோவின்‌ தலைவருமான செல்வம்‌ அடைக்கலநாதன்‌, அவசரகால சட்டத்தைப்‌ பயன்படுத்தியே முன்னாள்‌ ஜனாதிபதி ஜே.ஆர்‌.ஜெயவர்த்தன ஆயுதப்போராட்டத்தை தோற்றுவித்துள்ளார்‌. மக்களின்‌ போராட்டத்தை தவறான நிலைக்கு கொண்டுசெல்ல வேண்டாம்‌ என்று சுட்டிக்காட்டியிருந்தார்‌.

இதேபோன்றே ஏனைய எதிரணியைச்‌ சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும்‌ அவசரகால சட்டத்துக்கு எதிராக கருத்துத்‌ தெரிவித்ததுடன்‌ அந்த சட்டத்தை இல்லாதுஒழிக்க வேண்டும்‌ என்றும்‌ வலியுறுத்தியிருந்தனர்‌. யுத்தம்‌ இடம்பெற்ற மூன்று தசாப்தகாலமாக நாட்டில்‌ அவசரகால சட்டம்‌ நீடிக்கப்பட்டு வந்தது. 2009 ஆம்‌ ஆண்டு யுத்தம்‌ முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து சில வருடங்களின்‌ பின்னர்‌ அவசரகால சட்டம்‌ முற்றாக நீக்கப்பட்டிருந்தது.

2019 ஆம்‌ ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து அவசரகால சட்டம்‌ நாடுதழுவிய ரீதியில்‌ மீண்டும்‌ பிறப்பிக்கப்பட்டது. சில மாதங்கள்‌ நடைமுறையில்‌ இருந்த இந்த சட்டம்‌ பின்னர்‌ நாடு வழமைக்கு திரும்பியதையடுத்து நீக்கப்பட்டிருந்தது.

கடந்த ஏப்ரல்‌ மாதம்‌ 9 ஆம்‌ திகதி முதல்‌ நாட்டில்‌ அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள்‌ ஆரம்பிக்கப்பட்டதையடுத்து அவசரகாலச்‌ சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகள்‌ முன்னெடுக்கப்பட்டன. ஏப்ரல்‌ மாதத்துக்கு பின்னர்‌ மூன்று தடவைகள்‌ அவசரகாலச்சட்டம்‌ நடைமுறைப்படுத்தப்பட்டது. முன்னாள்‌ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ ஷ கடந்த மே மாதம்‌ அவசரகாலசட்டத்தை அமுல்படுத்தியபோது அது நீதிமன்றில்‌ சவாலுக்குட்படுத்தப்பட்டது. அதனைத்‌ தொடர்ந்து மீண்டும்‌ அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச்சட்டம்‌ பாராளுமன்றத்தில்‌ விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாமல்‌ இயல்பாகவே ரத்தாகியிருந்தது. இதனைத்‌ தொடர்ந்து கடந்த 18 ஆம்‌ திகதி பதில்‌ ஜனாதிபதியினால்‌ தற்போது அவசரகாலச்சட்டம்‌ அமுல்படுத்தப்பட்டிருக்கின்றது.

யுத்தம்‌ இடம்பெற்ற காலப்பகுதியில்‌ அவசரகாலச்சட்டத்தைப்‌ பயன்படுத்தி தமிழ்‌ இளைஞர்‌, யுவதிகள்‌ வகை தொகையின்றி கைது செய்யப்பட்டனர்‌. எந்த கேள்வி நியாயமுமின்றி இரவு பகல்‌ என்று பாராது சுற்றிவளைப்புக்களும்‌ தேடுதல்களும்‌ தொடர்ந்தன. கைது செய்யப்பட்ட தமிழ்‌ இளைஞர்‌, யுவதிகள்‌ தடுப்புக்காவலில்‌ வைக்கப்பட்டனர்‌.

நீதிமன்றத்தில்‌ ஆஜர்‌ செய்யப்படாது பல வருடங்கள்‌ தடுப்பு முகாம்களில்‌ சித்திரவதைகளை எதிர்நோக்கும்‌ நிலைமை தமிழர்களுக்கு ஏற்பட்டிருந்தது.

தமிழர்கள்‌ அனைவரும்‌ புலிகள்‌ என்ற எண்ணத்தில்‌ கைதுகளும்‌ தடுத்து வைப்புக்களும்‌ தொடர்கதையாக இடம்பெற்றிருந்தன. அவசரகாலச்சட்டத்தின்‌ கீழ்‌ கைது செய்யப்பட்டவர்களுக்கு குற்றச்சாட்டுகள்‌ சோடிக்கப்பட்ட வகையில்‌ சுமத்தப்பட்டன. எந்தக்‌ குற்றங்களையும்‌ செய்யாவிட்டாலும்‌ அவசரகால சட்டத்தின்‌ 5 ஆம்‌ பிரிவின்‌ கீழ்‌ உள்ள சரத்தின்‌ அடிப்படையில்‌ காட்டித்தராத குற்றம்‌ என்ற பெயரில்‌ தமிழ்‌ இளைஞர்‌, யுவதிகளுக்கு சிறைத்‌ தண்டனைகள்‌ வழங்கப்பட்டிருந்தன.

இதனால்‌ தமிழர்கள்‌ அவசரகால சட்டத்தின்‌ கீழ்‌ சொல்லொணா துன்பங்களை மூன்று தசாப்த காலங்களாக அனுபவித்து வந்தனர்‌. படையினருக்கும்‌ பொலிஸாருக்கும்‌ அதிகூடிய அதிகாரங்களை வழங்கும்‌ வகையிலேயே அவசரகாலச்சட்டம்‌ அமைந்திருந்தது.

அன்று தமிழ்‌ மக்கள்‌ இந்தச்சட்டத்தினால்‌ பெரும்பாதிப்புக்களுக்கு உள்ளாகியிருந்தபோது அதற்கு எதிராக தமிழ்‌ அரசியல்‌ தலைமைகள்‌ கருத்துக்களைத்‌ தெரிவித்து வந்தன. ஆனால்‌ சிங்கள தலைமைகளோ, சிங்கள மக்களோ அன்றைய சந்தர்ப்பத்தில்‌ இந்த சட்டத்தின்‌ கொடூரமுகத்துக்கு எதிராக குரல்கொடுக்கவில்லை. பாராளுமன்றத்தில்‌ மாதந்தோறும்‌ அவசரகாலச்சட்டம்‌ நிறைவேற்றப்படும்‌ போதும்‌ அதற்கு ஆதரவாகவே பெரும்பான்மையான சிங்கள எம்‌.பி.க்கள்‌ வாக்களித்திருந்தனர்‌.

தற்போது தெற்கில்‌ இடம்பெற்று வந்த அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை கட்டுப்படுத்தும்‌ வகையிலேயே அவசரகாலச்சட்டம்‌ அமுல்படுத்தப்பட்டிருக்கின்றது.

தெற்கில்‌ போராட்டத்தில்‌ ஈடுபடும்‌ மக்களை அடக்குவதற்காகவே இந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தற்போது எதிரணியினர்‌ குற்றஞ்சாட்டி வருகின்றனர்‌. இன்று சிங்கள மக்களுக்கு எதிராக அவசரகாலசட்டம்‌ திரும்பியுள்ள நிலையில்‌ அதன்‌ ஆபத்துக்கள்‌ குறித்து தற்போது தான்‌ அந்த மக்கள்‌ சிந்திக்கத்‌ தொடங்கியிருக்கின்றனர்‌. அன்று தமிழ்‌ மக்கள்‌ இந்தச்‌ சட்டத்தினால்‌ அடக்கி ஒடுக்கப்பட்டபோது குரல்கொடுக்காத தெற்கின்‌ அரசியல்‌ தரப்பினர்‌, சிவில்‌ சமூகத்தினர்‌ தற்போது எதிர்ப்புக்குரல்‌ எழுப்பி வருகின்றனர்‌.

அவசரகாலச்சட்டத்தைப்பயன்படுத்தி தற்போது போராட்டத்தில்‌ ஈடுபட்டவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள்‌ எடுக்கப்பட்டு வருகின்றன. கடத்தல்‌ பாணியில்‌ கைதுகள்‌ இடம்பெறுவதாகவும்‌ குற்றச்சாட்டுக்கள்‌ முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நாட்டில்‌ ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாகவே மக்கள்‌ வீதிக்கு இறங்கும்‌ நிலைமை ஏற்பட்டிருந்தது. இத்தகைய மக்களின்‌ போராட்டத்துக்கு நடுவே தீய சக்திகளும்‌ ஊடுருவி தமது எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிப்பது வழமையான நடவடிக்கையாக உள்ளது. இத்தகைய சக்திகளை களைய வேண்டிய நிலைமை அரசாங்கத்துக்கும்‌ உள்ளது. ஆனாலும்‌ ஜனநாயக ரீதியில்‌ தமது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போராடும்‌ உரிமை மக்களுக்கு உள்ளது. அதனை ஒரு போதும்‌ அரசாங்கம்‌ தட்டிக்கழித்திட முடியாது.

தற்போதைய சூழ்நிலையில்‌ நாட்டில்‌ பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணப்படவேண்டும்‌. அதற்கு அரசியல்‌ நெருக்கடிக்கான தீர்வு அவசியமாகும்‌. அரசியல்‌ ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்கு அரசாங்கம்‌ நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

ஆனாலும்‌ அதற்காக ஜனநாயக ரீதியிலான மக்களின்‌ போராட்டங்களை நசுக்குவதற்கு அரசாங்கம்‌ முனையக்கூடாது. தற்போதைய நிலையில்‌ அவசரகால சட்டத்தினை நீக்குவதற்கு அரசாங்கம்‌ நடவடிக்கை எடுக்க வேண்டும்‌.

அதேபோன்று போராட்டங்கள்‌, ஆர்ப்பாட்டங்கள்‌ என்று தொடர்வதனால்‌ நாட்டின்‌ அரசியல்‌ ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடி தீவிரமடையும்‌ நிலையும்‌ ஏற்படும்‌ என்பதையும்‌ நாம்‌ கவனத்தில்‌ கொள்ள வேண்டியுள்ளது. எனவே அரசாங்கமானது அவசரகால சட்டத்தை நீக்கும்‌ அதேவேளை பொருளாதார நலன்கருதியும்‌ நாட்டின்‌ நலன்‌ கருதியும்‌ சகல தரப்பினரும்‌ ஒத்துழைப்புக்களை வழங்குவதும்‌ இன்றியமையாதது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்‌.

வீரகேசரி 29/07/2022

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter