இறுதி நேரத்தில் கோத்தாவை காப்பாற்றிய இராணுவ ஒபரேஷன்

போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையின் நுழைவாயிலை உடைத்துக் கொண்டு உட்போக முயற்சித்த போது ஜனாதிபதி கோத்தாபய அவரது மாளிகைக்குள்ளேயே இருந்தார்.

இராணுவம் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடாத்துவதற்கான அனுமதியினை ஜனாதிபதியிடம் கோரியது. அப்போது ஜனாதிபதி போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டாம் என்று வேண்டிக்கொண்டார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது தனிப்பட்ட சொந்த மிரிஹான வீட்டிலிருந்து கடந்த மார்ச் 31 ஆம் திகதியே ஜனாதிபதி மாளிகைக்கு வந்து சேர்ந்தார். போராட்டக்காரர்களால் மிரிஹான இல்லம் சுற்றிவளைக்கப்பட்டதனையடுத்தே அவர் ஜனாதிபதி மாளிகைக்கு வந்து சேர்ந்தார். தனது மனைவி அயோமா ராஜபக்ஷவுடன் ஜனாதிபதி மாளிகைக்கு வந்து சேர்ந்த கோத்தாபய ராஜபக்ஷவின் உயிருக்-கு ஆபத்தான நிலைமை இருந்தது. இதனையடுத்தே அவர் ஜனாதிபதி மாளிகையில் அடைக்கலமானார்.

அரச புலனாய்வுப் பிரிவின் சிபாரிசுகளை கவனத்திற்- கொண்ட ஜனாதிபதியின் பாதுகாப்பு செயலணி அவரை எந்தச் சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி மாளிகையிலிருந்தும் அப்புறப்படுத்துவதற்கு ஏற்கனவே திட்டங்களைத் தயாரித்திருந்தது.

ஜனாதிபதி மாளிகையில் இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு இதற்கு முன்பு ஜே.ஆர்.ஜயவர்தன மாத்திரமே ஆளாகியிருந்தார். இந்திய – இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட சந்தர்ப்பத்தில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இதனைக் கவனத்திற்கொண்ட அப்போதைய இந்திய பிரதமர் ரஜீவ் காந்தி கமாண்டோ வீரர்கள் அடங்கிய கப்பலொன்றை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தியிருந்தார். ஜனாதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் ஜனாதிபதி மாளிகைக்குள் அதிரடியாகப் புகுந்து அவரைப் பாதுகாப்பாக இந்திய கப்பலுக்கு அழைத்து வரும் பொறுப்பு இந்த இந்திய கமாண்டோக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த விபரங்கள் அப்போது இலங்கையிலிருந்த இந்திய உயர் ஸ்தானிகர் ஜே.ஆர்.டிக்சிட் எழுதியுள்ள கொழும்பு பூகம்பம் எனும் நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்றாலும் அன்று ஜே.ஆர்.ஜயவர்தனவுக்கு கப்பலில் ஏற வேண்டிய நிலைமை ஏற்படாது விட்டாலும் 33 வருடங்களுக்குப் பின்பு ஜனாதிபதி மாளிகையிலிருந்து கோத்தாபய ராஜபக்ஷவுக்கு தனது உயிரைக்காப்பாற்றிக் கொள்வதற்காக கப்பலில் ஏறவேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இதற்கு முன்பு கொழும்பிலிருந்து கப்பலில் ஏறி வாழ்நாளில் இலங்கைக்கு வராமல் சென்ற இலங்கையின் இறுதி அரசன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்க ஆவார். இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்பு கப்பல் ஏறி கடலுக்குச் சென்று அங்கிருந்து மீண்டும் கரைக்கு வந்து கோத்தாபய ராஜபக்ஷ விமானம் மூலம் இலங்கையிலிருந்தும் வெளியேறிச் சென்றார்.

கடந்த 9 ஆம் திகதி பகல் 12 மணிக்கு போராட்டக்காரர்களால் ஜனாதிபதி மாளிகை சுற்றி வளைக்கப்பட்டபோது ஜனாதிபதி அதனுள்ளேயே இருந்தார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன மற்றும் முப்படைகளின் தளபதிகளும் ஜனாதிபதி மாளிகையில் அப்போது ஜனாதிபதியுடனே இருந்தார்கள். இதனிடையே நாடெங்கும் கதையொன்று பரவியது. ஜனாதிபதி இராணுவ பாதுகாப்புடன் கட்டுநாயக்க அதிவேக வீதியூடாக விமான நிலையத்துக்குச் சென்று கொண்டிருக்கிறார் என்பதே அந்த பரபரப்புக்கதையாகும். கமாண்டோ வீரர்களுடன் 4 டிபெண்டர் வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையூடாக சென்றமையையடுத்தே இவ்வாறான கதை பரவியது.

ஆனால் பாதுகாப்பு தொடர்பான மாநாடொன்றில் கலந்து கொள்வதற்காக இந்தியாவுக்குச் சென்றிருந்த பாதுகாப்பு பிரிவின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா நாடு திரும்பிய நிலையில் அவரை விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு அழைத்து வருவதற்காகவே குறிப்பிட்ட டிபெண்டர் வாகனங்கள் அனுப்பப்பட்டிருந்தன.

ஜனாதிபதி மாளிகை சுற்றி வளைக்கப்பட்ட சந்தர்ப்பம்
போராட்டக்காரர்களால் ஜனாதிபதி மாளிகை சுற்றி வளைக்கப்பட்டு அவர்கள் இறுதி நுழைவாயில் கேட்டை அண்மிப்பதற்கு முன்பே பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஜனாதிபதி மாளிகையிலிருந்தும் வெளியேறுமாறு ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கினார்கள்.

அச்சந்தர்ப்பத்தில் “ பார்ப்போம்” அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று ஜனாதிபதி கோத்தாபய பாதுகாப்பு உயரதிகாரியிடம் தெரிவித்தார்.
இந்நிலைமையில் ஜனாதிபதியை, ஜனாதிபதி மாளிகையிலிருந்தும் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு பாதுகாப்பு உயரதிகாரிகள் இரண்டு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிட்டிருந்தனர்.

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த கஜபாகு கப்பல் மூலம் ஜனாதிபதியை ஜனாதிபதி மாளிகையிலிருந்தும் வெளியேற்றிக்கொள்வது ஒரு திட்டமாகும். இத்திட்டத்துக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிசாந்த உளுகேதென்ன பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார். அடுத்த திட்டத்துக்குப் பொறுப்பாக விமானப்படைத்தளபதி எயார் மார்சல் சுதர்சன பதிரன நியமிக்கப்பட்டிருந்தார். கொழும்பு துறைமுகத்துக்குள் ஹெலிகப்டர் ஒன்றினை தரையிறக்கி அதன்மூலம் ஆகாய மார்க்கமாக ஜனாதிபதியை மாளிகையிலிருந்து வெளியேற்றிக்கொள்வது இரண்டாம் திட்டமாகும்.

இதற்காக விமான நிலையத்தில் நிலைகொண்டுள்ள முக்கிய பிரமுகர்களுக்கான போக்குவரத்து சேவை வழங்கும் 4 ஆம் இலக்க பாதுகாப்பு படையணிக்குச் சொந்தமான ஹெலிகப்டர் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையின் இறுதி வாயிலை எட்டிய நிலையில் ஹெலிகப்டர் ஆகாயத்தில் வட்டமிட்டது. ஜனாதிபதியை ஆரம்பத்திலே அழைத்துச் செல்வதற்கு படைத்தளபதிகள் மற்றும் உளவுப் பிரிவின் உயரதிகாரிகள் தீர்மானித்திருந்தார்கள். என்றாலும் ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய அவர்கள் நண்பகல் 12 மணிவரை அங்கு தங்கியிருந்தார்கள்.
சேர், மேலும் தாமதித்தால் போராட்டக்காரர்கள் நுழைவாயிலை உடைத்துக்கொண்டு உள்ளே வந்து விடுவார்கள். நீங்கள் இங்கிருந்தால் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியாவது அவர்களை தடுக்க வேண்டியேற்படும்”. என பாதுகாப்பு அதிகாரிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்கள்.

இல்லை யார் மீதும் துப்பாக்கி சூடு நடத்தாதீர்கள். நான் இங்கிருந்து வெளியேறுவதற்கு ஆயத்தமாகிறேன் என்று ஜனாதிபதி பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
துறைமுகத்தில் ஹெலிகப்டரை தரையிறக்கினால் அவ்விடத்துக்குப் போராட்டக்காரர்கள் வரலாம் என்பதால் ஜனாதிபதியை கப்பலுக்கு அழைத்துச் செல்வதற்குத் திட்டமிட்டார்கள். வெளிவிவகார அமைச்சின் பக்கத்திலிருந்து கொழும்பு துறைமுகத்துக்கு செல்வதற்காக அமைந்துள்ள பாதுகாப்பான பாதையூடாக ஜனாதிபதியை அழைத்துச் செல்வதற்குத் தீர்மானிக்கப்பட்டது இதனாலாகும். பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி “கஜபாகு” கப்பலுக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார். ஜனாதிபதி கஜபாகு கப்பலுக்குள் உட்பிரவேசித்த நிலையில் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையின் வாயிற் கதவினை உடைத்துக் கொண்டு உட்பிரவேசித்தார்கள்.

கடற்படை தளபதியுடன் கடற்படையின் கப்பல் ஜனாதிபதியையும் அவரது பாரியாரையும் சுமந்து நீரில் பயணித்தது. பாதுகாப்பாக டோன இயந்திரமும் பயணித்தது. போராட்டக்காரர்கள் ஜனாதிபதியை ஜனாதிபதி மாளிகையில் தேடிக்கொண்டிருக்கையில் அனைவரையும் ஏமாற்றிவிட்டு ஜனாதிபதியுடன் கப்பல் இரகசியமாக திருகோணமலை கடற்படை துறைமுகம் வரை பயணித்தது. அங்கு திருகோணமலை துறைமுகத்தில் அதிதீவிரமான பாதுகாப்பான இடமொன்றில் ஜனாதிபதிக்கும் அவரது பாரியாருக்கும் தங்குமிடம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. விமானப்படையின் அதியுயர் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

அங்கு திருகோணமலையில் ஜனாதிபதி தங்கியிருந்தபோது அவரை அவசரமாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அரச இராஜதந்திர ஒத்துழைப்புடன் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் ஜனாதிபதியை அழைத்துச் செல்லும் திட்டங்களை தயாரித்தனர்.

மறுதினம் அதாவது கடந்த 10 ஆம் திகதி பிரபுக்களை (விசேட பிரமுகர்கள்) போக்குவரத்துச் செய்வதற்காக பயன்படுத்தப்படும் இரண்டு ஹெலிகப்டர்கள் இரத்மலானையிலிருந்து திருகோணமலை கடற்படை முகாமுக்குப் பறந்தன. பிரபுக்கள் பாதுகாப்பு படையணியின் கட்டளை பிறப்பிக்கும் அதிகாரியின் கீழ் இந்த ஹெலிகப்டர்கள் திருகோணமலை கடற்படை முகாமுக்குச் சென்றன. ஜனாதிபதி இந்த ஹெலிகப்டரில் பயணித்தவேளை அதன் விமானியாக கட்டளை அதிகாரியே கடமையாற்றினார்.

போராட்டக்காரர்களால் முழுநாடும் குழப்பமான நிலையிலிருந்த சந்தர்ப்பத்திலே ஜனாதிபதி மீண்டும் கொழும்புக்கு வருவதற்கு தீர்மானித்தார். ஜூலை 11 ஆம் திகதி ஜனாதிபதியும் அவரது பாரியாரும் விசேட பிரமுகர்கள் பயணிக்கும் ஹெலிகப்டரில் இரத்மலானை விமானப்படை முகாமுக்கு பிற்பகல் 1 மணியளவில் வந்து சேர்ந்தார்கள். திருகோணமலை கடற்படை முகாமிலிருந்தே அவர்கள் வந்து சேர்ந்தார்கள். கடற்படை தளபதியும் ஜனாதிபதியுடன் பயணத்தில் இருந்தார்.

அப்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு சபை பிரதானி, விமானப்படை தளபதி, இராணுவத்தளபதி ஆகியோரும் இரத்மலானை விமானப்படைமுகாமுக்கு வருகை தந்திருந்தனர்.

ஜனாதிபதி இரத்மலானை விமானப்படை முகாமில் பாதுகாப்பு படைகளின் தலைவர்களுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார். ஜனாதிபதியின் பாரியார் அயோமா ராஜபக்ஷ பாதுகாப்பாக மோட்டார் வண்டியில் மிரிஹான இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

நாட்டிலிருந்து வெளியேறிச் செல்வதற்கு முன்பு தனது முக்கிய ஆவணங்கள் மற்றும் தேவையான பொருட்களை வீட்டிலிருந்து எடுத்துச் செல்வதற்கே அவர் அவ்வாறு சென்றிருந்தார். மிரிஹான இல்லத்தின் சாவிக் கொத்து அவரிடமே இருந்தது.
மிரிஹான இல்லத்திலிருந்து தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு இரண்டு மணித்தியாலங்களுக்குள் முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு பிரிவினர் ஜனாதிபதியின் பாரியாரை இரத்மலானை முகாமுக்கு மீண்டும் அழைத்து வந்தனர்.

இரத்மலானையிலிருந்து ஜனாதிபதியையும் பாரியாரையும் மீண்டும் இரண்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று பாதுகாக்கும் பொறுப்பு விமானப்படை தளபதிக்கு வழங்கப்பட்டது. கட்டுநாயக்க விமானப்படை முகாமில் விமானப்படை தளபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் உட்பட இருபாதுகாப்பு இல்லங்கள் ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்டது.

முழு நாட்டிலும் ஜனாதிபதியை பதவி விலகுமாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. என்றாலும் நாட்டிலிருந்து வெளியேறிச் செல்லும் வரை தான் பதவியிலிருந்தும் விலகுவதை ஜனாதிபதி தவிர்த்து கொண்டார். ஜனாதிபதி பதவியின்றி நாட்டிலிருந்து சாதாரண பிரஜை போல் வெளியேறினால் அவரது உயிருக்கு ஆபத்து என உளவு பிரிவினர் தொடர்ந்து ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கி வந்தனர்.

ஜனாதிபதிக்கு அமெரிக்க விசா நிராகரிக்கப்பட்ட நிலையில் வேறு சில நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. வாடகைக்கு பெற்றுக்கொள்ளப்படும் வணிக விமானம் மூலம் ஜனாதிபதிக்கு வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்புகள் உள்ளனவா என முயற்சித்தனர். இதற்கு மேலைத்தேய நாடுகள் உட்பட பல நாடுகளிலிருந்து அனுமதி கிடைக்கவில்லை.

ஜனாதிபதியை இந்தியாவுக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து பாதுகாப்பாக சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லும் முயற்சியும் பலனளிக்கவில்லை. ஸ்ரீலங்கன் விமானம் மூலம் ஜனாதிபதியை அழைத்துச் செல்வது ஆபத்தானது என பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

விமானிகள் மற்றும், விமான பணியாளர்கள் ஜனாதிபதியை விமானத்தில் அழைத்துச் செல்ல முடியாதென்பதை தெளிவுபடுத்தியதே இதற்கான காரணமாகும். தொழிற்சங்கம் இது தொடர்பில் பலத்த எதிர்ப்பினை வெளியிட்டது.

ஜூலை 12 ஆம் திகதி பகல் தரைமார்க்கமாக பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஜனாதிபதி பத்தரமுல்ல இராணுவ தலைமையகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அன்று பகல் இராணுவ தலைமையகம் ஜனாதிபதியின் பாதுகாப்பான இடமாக மாறியது. அங்கு பாதுகாப்பு படை பிரதானிகள், படைத்தளபதிகள் உட்பட பாதுகாப்புச் சபையை ஒன்று கூட்டிய ஜனாதிபதி எதிர்கால நடவடிக்கை பற்றி கலந்துரையாடினார். மற்றும் சபாநாயகருடனும் பேச்சு வார்த்தை நடத்தினார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இராணுவ தலைமையகத்தில் இருந்து ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் பங்கு கொண்டார்.’

பத்தரமுல்ல இராணுவ தலைமையகத்தை நிறுவியது கோத்தாபய ராஜபக்ஷ என்பதை சிரச தொலைக்காட்சி வீடியோ பதிவொன்றின் மூலம் பகிரங்கப்படுத்தியது. பத்தரமுல்ல இராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி வெளிநாடொன்றுக்குச் சென்றவுடன் இராஜினாமா செய்வதென்பது இறுதித்தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. வாடகைக்கு பெற்றுக்கொள்ளும் வணிக விமானம் மூலம் ஜனாதிபதி நாட்டைவிட்டு வெளியேறுவதில் உள்ள சவால்கள் கவனத்தில் கொள்ளப்பட்டு விமானப்படையின் விமானமொன்றின் மூலம் வெளிநாடு செல்வது இறுதி திட்டமாக அமைந்தது.

விமானப்படைக்குச் சொந்தமான அன்ட நோவ் 32 விமானம் மூலம் ஜனாதிபதியை அழைத்துச் செல்வதென தீர்மானிக்கப்பட்டது. விமானப்படையிடம் உபயோகிக்கக்கூடிய நிலைமையிலிருந்த அன்டனோவ் விமானங்கள் மூன்றும் ரஷ்ய யுக்ரேன் யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்பு யுக்ரேனுக்கு அனுப்பப்பட்டு மீள் புதுப்பிக்கப்பட்டவையாகும்.
ஜனாதிபதி தான் வெளிநாடுகளுக்குச் செல்லும் முயற்சிகள் தோல்வி கண்டதனையடுத்து இராணுவ தலைமையகத்தில் இருந்து கொண்டே மாலைதீவு ஜனாதிபதியை தொடர்பு கொண்டார். மாலைதீவு ஜனாதிபதி மாலைதீவுக்கு வரும்படி அழைத்ததையடுத்தே பயணத்திற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

மாலைதீவில் ஜனாதிபதி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவுக்குச் செல்வதற்கு அந்நாட்டு ஜனாதிபதியின் அனுமதியைப் பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளை அந்நாட்டின் சபாநாயகரும் முன்னாள் ஜனாதிபதியுமான மொஹமட் நஷீட்மேற்கொண்டார்.அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டபோது அவரை இலங்கைக்கு அழைத்து வந்து பாதுகாப்பு வழங்கியது அப்போதைய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவார்.

அன்றிரவு இராணுவ தலைமையகத்தில் கோத்தாபய ராஜபக்ஷ இரவு உணவை எடுத்தார். பின்பு உடனடியாக இரவு 10 மணியளவில் விசேட பாதுகாப்புக்கு மத்தியில் கட்டுநாயக்க நோக்கிப்புறப்பட்டார். கட்டுநாயக்க விமானப்படைமுகாமில் ஜனாதிபதிக்கும் அவரது பாரியாருக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டது.

அன்று இரவு 12 மணியாகும்போது விமானப்படை அதிகாரிகள் ஜனாதிபதியினதும் பாரியாரதும் விமானப் பயணத்துக்கான ஆவணங்களை சுங்க திணைக்களம் மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் சமர்ப்பித்து அதற்கான அனுமதியினைப் பெற்றுக்கொண்டனர்.ஜனாதிபதியின் பாதுகாப்பினை அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளான மேஜர் ஜெனரல் மஹிந்த ரணசிங்க, கமாண்டோ பிரிவின், பிரிகேடியர் மதுர விக்கிரமரத்ன ஆகியோர் பெறுப்பேற்றனர்.

அன்டநோவ் விமானத்தின் விமானியாக விமானப்படையின் 2ஆவது பிரிவின் கட்டளை அதிகாரி குரூப் கெப்டன் தான் வெலகெதர செயற்பட்டார்.

கோத்தாபய ராஜபக்ஷவின் விமான பயணத்துக்கு மாலைதீவு அரசு அனுமதி வழங்கியிருந்தாலும் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்குவதற்கு அனுமதி கிடைக்கவில்லை. அதனால் விமானப் பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்டநோவ் விமானம் மாலைதீவு விமான நிலையத்தின் அனுமதி கிடைக்கும்வரை தரித்திருந்ததது.

மாலைதீவு விமான நிலையத்திலிருந்து அனுமதி கிடைக்கப்பெற்றதையடுத்து கடந்த 13 ஆம் திகதி அதிகாலை 1 மணிக்கு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. ஒரு மணித்தியாலயம் 40 நிமிட பயணத்தின் பின்பு, ஜனாதிபதியும் பாரியாரும் மாலைதீவு விமான நிலையத்தில் இறங்கினார்கள். விமானம் மீண்டும் காலை 7 மணிக்கு இலங்கைக்கு திரும்பியது.

விமானப்படை உட்பட ஏனைய பாதுகாப்புப் படையினர் இந்த செயற்பாடுகளை கோத்தாபயராஜபக்ஷவுக்காக மேற்கொள்ளவில்லை. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி என்ற ரீதியில் படைகளின் தலைவர் என்ற வகையிலுமே இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முப்படைகளின் தளபதி என்ற வகையில் அவர் வழங்கும் சட்ட ரீதியான உத்தரவுகளை முப்படையினர் ஏற்றுக்கொள்வதற்கு கட்டுப்பட்டுள்ளனர். உத்தரவுகளைப் புறக்கணிப்பது அரச துரோக குற்றமாகும். இந்தக் குற்றத்துக்காக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து மரணதண்டனை வழங்க முடியும்.

இந்நிலையில் உணர்ச்சி மேலீட்டினால் ஆவேசத்துக்குள்ளாகியிருக்கும் மக்கள் நாட்டின் அரசியல் யாப்பு மற்றும் முப்படைகளின் சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரங்கள் என்பனவற்றை அறியாது கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வெளிநாட்டுக்குச் செல்வதற்கு விமானம் வழங்கியது எவ்வாறு? எப்படி அவருக்குப் பாதுகாப்பு வழங்கமுடியும் என்று கேள்வியெழுப்புகின்றனர்.

இக்கடமைகளை படையினரால் நிறைவேற்றாது இருக்க முடியாது. ஏனென்றால் அவர் கோத்தாபய ராஜபக்ஷ என்றாலும் பதவியினால் ஜனாதிபதியாவார்.
புதன்கிழமை அதிகாலை மாலைதீவைச் சென்றடைந்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அங்கு தனியார் சொகுசு விடுதி ஒன்றில் தங்கியிருந்தார். பின்னர் அங்கிருந்து மறுநாள் வியாழக்கிழமை அவர் சிங்கப்பூருக்குப் பயணித்தார். ஹஜ் யாத்திரிகர்களை ஏற்றிக் கொண்டு மாலைதீவு வழியாக சிங்கப்பூர் நோக்கிப் பயணித்த சவூதி எயார்லைன்ஸ் விமானத்திலேயே அவர் சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூரில் தரையிறங்கியதும் முதல் வேலையாக அவர், தனது இராஜினாமாக் கடிதத்தை மின்னஞ்சல் வழியாக சபாநாயகருக்கு அனுப்பி வைத்தார். பின்னர் அவரது கையெழுத்திடப்பட்ட இராஜினாமாக் கடிதம் சிங்கப்பூரிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. இதனையடுத்து, கோத்தாபய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஏ.ஆர்.ஏ.பரீல் – விடிவெள்ளி பத்திரிகை 21/7/2022

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

Free Visitor Counters Flag Counter