இலங்கை அரசியலில் 2022 ஆம் ஆண்டு மே, ஜூன், ஜூலை மாதங்களின் 9ஆம் திகதிகள் திகில் நிறைந்த நாட்களாகப் பதிவாகியிருக்கின்றன. பொருளாதார நெருக்கடிகளுக்கும் பிரச்சினைகளுக்கும் உள்ளாகி மக்கள் திணறிக்கொண்டிருக்கின்ற சூழலில் இந்தத் தினங்கள் பரபரப்பும் பதற்றமும் நிறைந்த நாட்களாக மாறியிருந்தன. அந்த வரிசையில் ஜூலை 9ஆம் திகதிக்குப் பின்னரான தினங்களில் வரலாறு காணாத அரசியல் சம்பவங்கள் நடந்தேறின. இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போன்று ஜூலை 20 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தினால் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட நிகழ்வு நடந்தேறியது.
இந்த ஜனாதிபதித் தெரிவு இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிக முக்கிய திருப்பு முனையாக அமைந்திருக்கின்றது.
ஜனாதிபதி கோட்டாபய அரசாங்கத்தின் தீர்க்கதரிசனமற்ற கொள்கைகள், தேசிய பொருளாதார நலன்களுக்கு முரணான செயற்பாடுகள், பொறுப்பு கூறும் விடயங்களுக்குப் பொறுப்புடன் செயற்படாமை, போர்க்காலச் செயற்பாடுகளுக்குப் பொறுப்பேற்காமல் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரப் போக்கைத் தீவிரமாகக் கடைப் பிடித்தமை, குடும்ப அரசியலை முதன்மைப்படுத்தியமை, அரசியலமைப்புச் சட் டங்களைத் துச்சமென மதித்துச் செயற்பட்டமை போன்ற பல்வேறு காரணங்களினால் நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல் நிலைமைகளில் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. பல்வேறு பிரச்சினைகளும் தலையெடுத்திருந்தன.
மக்கள் தமது அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் பேரிடருக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர். உணவு, எரிபொருள், சமையல் எரிவாயு என்பனவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வீதிகளில் நீண்ட வரிசைகளில் பல மணித்தியாலங்கள் கால் கடுக்க காத்திருக்க நேர்ந்தது. பல மணித்தியாலங்கள் பின்னர் பல நாட்கள் என்ற நிலைமைக்கு மோசமடைந்தன. அன்றாட வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் மக்கள் அரசுக்கு எதிராகத் தன்னெழுச்சி கொண்டு திரண்டு போராடத் தொடங்கினார்கள். வரலாறு காணாத வகையிலான இந்தப் போராட்டமே மே, ஜுன், ஜூலை மாதங்களை கொதிநிலை மாதங்களாக மாற்றி அமைத்திருந்தன. தொடர்ந்து பாராளுமன்ற ஜனாதிபதி தேர்தல் என்ற அரசியல் திருப்புமுனை நிகழ்வுக்கு வழிகோலியிருந்தன.
ஜனாதிபதித் தேர்தல் என்பது இரண்டு நிலைகளில் இடம்பெறுவதற்கு அரசியல்மைப்பு வழி செய்திருக்கின்றது. மக்கள் நேரடியாகப் பங்கேற்கின்ற ஜனாதிபதி தேர்தல் அவற்றில் முதன்மையானது. இது ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும். நாடு முழுவதும் ஒரே தேர்தல் தொகுதியாக மாறி இந்தத் தேர்தலில் மக்கள் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று தமது வாக்குகளைப் பிரயோகித்து ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்வார்கள்.
இதையும்விட மக்கனால் தெரிவு செய்யப்பட்ட ஒரு ஜனாதிபதி தனது ஆட்சிக்காலத்தில் ஏதேனும் ஒரு காரணத்திற்காகத் தனது செயலகத்தில் இருந்து அல்லது தனது அதிகாரபூர்வ மாளிகையில் இருந்து செயற்பட முடியாத நிலைமை உருவாகும் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் ன்றிணைந்து ஒரு ஜனாதிபதியைத் தெரிவு செய்வார்கள். பதவியில் உள்ள ஜனாதிபதி இராஜினாமா செய்துள்ளபோது, அல்லது வேறு காரணங்களுக்காக அவர் பதவியை விட்டு விலகியுள்ளார் என்று கருதப்படும் போது இந்தத் தெரிவின் மூலம் ஜனாதிபதி ஒருவர் இடைக்காலத்திற்காகத் தெரிவு செய்யப்படுவார்.
அந்த வகையிலேயே ஜூலை 20ஆம் திகதி ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். இதேபோன்றதொரு நிகழ்வு இதற்கு முன்னர் 1993ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்தது. ஜனாதிபதியாக இருந்த ரனாசிங்க பிரேமதாசா 1989ஆம் ஆண்டு டி.பி.விஜே துங்கவை பிரதமராக நியமித்திருந்தார். அப்போது 1993 ஆம் ஆண்டு மே தினத் தன்று அப்போதைய ஜனாதிபதி பிரேமதாச விடுதலைப்புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து, அரசியலமைப்புச் சட்டத்திற்கமைவாக பிரதமராக இருந்த விஜேதுங்க பதவி வழியாக பதில் ஜனாதிபதியானார். தொடர்ந்து பாராளுமன்றத் தெரிவின் மூலம் அந்த ஆட்சிக்காலம் முடியும் வரையிலான 1994 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையில் நாட்டின் ஜனாதிபதியாகச் செயலாற்றி இருந்தார்.
ஆனால் அன்றைய விஜேதுங்கவின் நிலைமை வேறு. இப்போதைய ரணில் விக்கிரமசிங்கவின் நிலைமை வேறு. இரண்டுக்கும் இடையில் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கின்றது. அன்று மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராகிய விஜேதுங்க அமைச்சரவை அந்மஸ்துடைய அமைச்சராக இருந்து பிரதமராக நியமிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து பிரதமராகப் பதவி வகித்தபோதே அவர் பதில் ஜனாதிபதியாகினார். பின்னர் பாராளு மன்றத்தினால் ஜனாதிபதியாகவும் தெரிவாகினார்.
ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜ பக்ஷவின் ஆட்சியில் ரணில் விக்கிரமசிங்க 2020 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தார். அத் துடன் அவருடைய கட்சியினால் ஒரு ஆசனத்தைக்கூட கைப்பற்ற முடியாமல் படுதோல்வி அடைந்திருந்தது. தேசியப் பட்டியலின் மூலமாக பாராளுமன்ற உறுப்புரிமையை பெற்றிருந்த ரணில் விக்கிரமசிங்க சாதாரண எம்.பி.யாக இருந்த நிலையிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பிரதமராக நியமிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து இடம்பெற்ற பாராளுமன்றத் தெரிவில் அவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.
இந்த நிகழ்வில் மற்றுமொரு விடயம் சட்டரீதியான முறையில் முக்கியத்துவம் பெறுகின்றது. பாராளுமன்றத்தினால் ஜனா திபதி ஒருவர் தெரிவு செய்யப்படும்போது. பாராளுமன்றம் ஒரு தேர்தல் தொகுதியாக மாறுகின்றது. அது பாராளுமன்றம் என்ற சிறப்புரிமையிலிருந்து அப்போது விலகிவிடுகின்றது. அங்கு தேர்தல் நடைபெறும் போது இயல்பான சுதந்திரமான சூழல் நிலவ வேண்டியது அவசியம்
தேர்தலில் போட்டியிடுகின்றவர்களோ அல்லது வாக்களிக்கின்ற வாக்காளர்களாகச் செயற்படுகின்ற மக்கள் பிரதிநிதிகளோ அச்சுறுத்தல்கருக்கோ அல்லது நெருக்கு தல்களுக்கோ ஆளாகாத நிலைமை உறுதி உ செய்யப்பட வேண்டியது அவசியம். இத்த கைய சூழல் சுதந்திரமானதும், அமைதியானதுமான ஒரு தேர்தல் நடைபெறுவதற்கு அவசியம் என்பது தேர்தல் சட்டம்
ஆனால் நாட்டின் எட்டாவது ஜனாதிபதியை, இடைக்காலத்திற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்தபோது, அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது. அந்தச் சட்டத்தை பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிறப்பித்திருந்தார் அந்தத் தேர்தலில் அவரும் முக்கிய வேட்பாளராகக் களமிறங்கியிருந்தார் என்பது குறிப்பி டத்தக்கது. தேர்தல் நடைபெறுகின்ற பாராளுமன்றத்தைப் போராட்டக்காரர்கள் சூழ்ந்து அழுத்தங்களையும், அச்சுறுத்தல்கள் ஆபத்துக்களை விளைவிக்காமல் இருப்பதற்காக பாராளுமன்றம் பலத்த முப்படைகளின் பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. பொது மக்களின் பாதுகாப்புக்காகவே இந்த அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்ததாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காரலாம் கூறியிருந்தார்.
பதில் ஜனாதிபதியாகிய அவருக்கு எதிராக, அவரைப் பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டப் போராட்டம் காலிமுகத்திடலில் நடைபெற்றுக்கொண்டிருந்த தருணத்தில் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டி ருந்தது. இதனை சட்டரீதியாக ஏற்றுக் கொண்டாலும், அதே அவசரகாலச் சட்டம் வாக்களிப்பில் கலந்துகொண்ட மக்கள் பிர திநிதிகளின் சுதந்திரமான வாக்களிப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்திருந்தது என ஏன் கருதக்கூடாது என்ற கேள்வி அரசியல் ஆய்வாளர்களினால் எழுப்பப்பட்டிருக்கின்றது.
பொதுஜன பெரமுன கட்சி அரசாங்சுத்தின் மீது நம்பிக்கை இழந்து. ஜனாதிபதி மற்றும் பிரதமராகிய ராஜபக்ஷக்களைப் பதவி விலக வேண்டும் எனக்கோரி தன்னெழுச்சி பெற்றிருந்த மக்கள் போராட்டம் நடத்தி வந்தார்கள். அந்த அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் வலுவாக முன்வைத் திருந்தார்கள். இந்த நிலையில் அந்த அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கும் ராஜப க்ஷகளைப் பிணை எடுப்பதற்குமாகவே ரணில் விக்கிரமசிங்க பிரதமராகினார் என்ற குற்றச்சாட்டும் மக்களால் முன்வைக்கப் பட்டிருத்தது இந்த நிலையிலேயே ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலக வேண்டும் என்ற போராட்ட கோரிக்கை முன்வைக்கப் பட்டிருந்தது.
இத்தகைய அரசியல் பின்னணியிலேயே பாராளுமன்றம் ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்புக்குத் தயாராகி இருந்தது. அந்தத் தேர்தல் சூழலில் பிறப்பிக்கப்பட்டிருந்த அவசரகாலச் சட்டம் முறையற்றது என்று சட்டத்துறை சார்ந்தவர்களும், ஏனைய பலதரப்பினரும் சுட்டிக்காட்டி, அதனை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என கோரியிருந்தார்கள்.
இந்த நிலையில் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி ஒரு தேர்தலை நடத்த முடியுமா என்ற சட்டரீதியிலான ஒரு கேள்வி எழுகின்றது நாடு கொந்தளித்துக் கொண்டிருந்த சூழலில், நிலைகுலைந்து போயிருந்த அரசியல் நிலைமையை ஸ்திரப்படுத்துவ தற்காக தேர்தல் நடத்தப்பட்டபோது, அவசரகாலச் சட்டம் அவசியமாகி இருந்தது. அதனால் அதனை வாக்களிப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான அச்சுறுத்தலாகவோ அல்லது நெருக்குதலாகவோ கருதலாகாது என்று காரணம் கூறப்படலாம். இந்தக் காரணம் சட்ட ரீதியானதா, நியாயமானதா என்பது ஆய்வுக்கு உரியது.
மறுபுறத்தில் இந்தத் தேர்தலில் வாக்காளர்களாகக் கலந்துகொண்டிருந்த மக்களின் பிரதிநிதிகள், ஜனாதிபதி தெரிவில் மக்களுடைய அபிலாஷைகளைப் பிரதிபலிக்கத் தக்க வகையில் வாக்களித்தார்களா, அந்த வகையில் வாக்களிக்க முடிந்ததா என்ற கேள்வியும் எழுகின்றது.
சட்டத்துக்கு அமைவாக சட்ட ரீதியாகவே பாராளுமன்றத் தெரிவு முறையில் ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. நடைபெற்று முடிந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. சட்டரீ தியான செயற்பாடாக இருக்கலாம். ஆனால் மக்களுடைய அபிலாஷையும் கருத்துநிலைப்பாடும் அங்கு பிரதிபலிக்கப்பட்டதா என்பதும், சட்ட முறைமையிலான அந்தச் செயற்பாடு நியாயமானதா, நியாய முறைமையின்பாற்பட்டதா என்ற கேள்வியும் எழுந்திருக்கின்றது.
எது எப்படியாயினும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கும், மக்-களுடைய வாழ்வியல் நெருக்கடிகள் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் பிரதமராகப் பதவியேற்றிருந்த ரணில் – விக்கிரமசிங்கவினால் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. அத்தகைய நடவடிக்கைகளின் மூலம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுகின்ற முயற்சி காத்திரமான ஒரு கட்டத்தை எட்டியிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலைமையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் அமையவுள்ள அரசு சட்டரீதியான செயற்பாடுகளை மட்டுமே கருத்திற் கொண்டு செயற்படாமல் சட்ட நடவடிக்கைகள் நியா=யமானதாகவும் இருத்தல் வேண்டும் என்பதைக் கருத்திற்கொண்டு செயற்படுதல் அவசியம்.
அதேவேளை ஜனாதிபதியாகியுள்ள ரணில் விக்கிரமசிங்க பதவிவிலக வேண்டும் என்றும் அவ்வாறு பதவி விலகும்வரையில் தமது போராட்டம் தொடர்ந்து வலுவாக முன்னெடுக்கப்படும் என்றும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் சூளுரைத்திருக்கின்றனர். அவர்களுடைய போராட்டத்தையும், போராட்டத்திற்கான சூளுரைப்பையும் புதிய -தற்காலிக அரசு எந்த வகையில் எதிர்கொள்ளும் என்பது தெரியவில்லை.
பாராளுமன்றத் தெரிவின் மூலம் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவாகியிருப்பது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனை என்ற அதே வேளை, மக்களின் எதிர்ப்புக்கும் மறுப்புக்கும் இடையில் ஜனாதிபதித் தெரிவு இடம்பெற்றிருக்கின்ற ஒரு சூழல் நேரெதிர் நிலையிலான ஒரு திருப்புமுனையாகவே :அமைந்திருக்கின்றது வேண்டும் என்றே கூறவேண்டும்
பி. மாணிக்கவாசகம் – வீரகேசரி 22/7/2022