தப்பியோடுபவர்களின் புகலிடமா துபாய் நாடு?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த வாரம் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டு நாட்டை விட்டு வெளியேற முயற்சித்தபோது, அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸை (யுஏஇ) தேர்ந்தெடுத்ததாக தகவல்கள் வெளியாகின. தற்போது அவர் சிங்கப்பூரில் தங்கியிருக்கின்ற போதிலும் விரைவில் அவர் ஐ.அ.எமிரேட்ஸை சென்றடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆளும் ராஜபக்ச குடும்பத்தின் ‘பாரசீக வளைகுடா நிதி மையத்துடன்’ (Persian Gulf financial hub)உள்ள உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பு (ICIJ)தலைமையிலான கடல்கடந்த நிதி தொடர்பான உலகளாவிய புலனாய்வுத் திட்டமான பண்டோரா பேப்பர்ஸில் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் சிலரின் மறைத்து வைக்கப்பட்டுள்ள சொத்துக்கள் கடந்த வருடம் வெளிப்படுத்தப்பட்டன. ஆளும் குடும்பத்தின் வாரிசான நிருபமா ராஜபக்சவும், அவரது கணவர் தொழிலதிபர் திருக்குமார் நடேசனும், இரகசிய ஷெல் நிறுவனங்கள் (அலுவலகங்களோ ஊழியர்களோ இல்லாத, வெறும் பெயரில் மாத்திரம் இயங்கும் நிறுவனங்கள், ஆனால் அவற்றுக்கு பாரிய சொத்துக்கள் இருக்க முடியும்) மற்றும் அறக்கட்டளைகளை பயன்படுத்தி, 18 மில்லியன் டொலருக்கும் அதிகமான பெறுமதியுடைய சொத்துக்களை லண்டன் மற்றும் சிட்னியில் வைத்திருந்ததை ஆவணங்கள் வெளிப்படுத்தின.

14 வெளிநாட்டு சேவை வழங்குநர்களிடமிருந்து கசிந்த பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்கள், இந்த ராஜபக்ச குடும்பத்தின் தம்பதியருக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் ரகசிய சொத்துக்கள் இருப்பதைக் காட்டுகின்றன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடியுரிமை அடையாள அட்டை மற்றும் 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, நடேசன் மற்றும் தம்பதியரின் இரண்டு பிள்ளைகள் துபாயில் வசிப்பவர்கள் என்பதைக் காட்டும் பிற பதிவு ஆவணங்களும் இந்த புலனாய்வுத் திட்டத்தில் வெளிப்படுத்தப்பட்டன. அவர்களுக்கு வானுயரமான சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் சொத்துக்கள் உள்ளதாக இந்த ஆவணங்கள் காண்பிக்கின்றன. எனினும் ராஜபக்ச குடும்பத்திற்கு சொந்தமான சொத்துக்கள் அதில் இருக்கிறதா என்பது தெரியவரவில்லை.

2016 ஆம் ஆண்டு துபாயை தளமாகக் கொண்ட பிரபல வியாபாரியின் முகாமையாளராக ஆவணங்களில் அடையாளம் காணப்பட்ட நடேசன், தனது ஷெல் நிறுவனங்களில் ஒன்றின் வங்கிக் கணக்கைத் திறப்பதற்கான விண்ணப்பத்தில் மற்றொரு துபாய் முகவரியை தனது வசிப்பிடமாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒக்டோபரில் நிருபமா மற்றும் நடேசன் தம்பதியினரின் கடல்கடந்த சொத்துக்கள் பற்றி பண்டோரா ஆவணங்கள் தகவல் வெளியிட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கவுள்ளதாக குறிப்பிட்டார். அத்துடன் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) விசாரணையைத் தொடங்கியது. ஆனால், நடேசன் மற்றும் நிருபமா ராஜபக்சவின் கணக்குகள் குறித்த தகவல்களை வழங்குவதில் வங்கிகள் தாமதம் காட்டியதாக ஊடகங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில், நிருபமா ஒரு முறையாவது துபாய்க்கு பயணம் செய்துள்ளார் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கசிந்துள்ள ஆவணங்களின்படி எமிரேட்டில் வசிக்கும் அவர்களின் மகன், தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட செல்ஃபிகளில் அவர்கள் வளைகுடாவில் வாழும் ஆடம்பரமான வாழ்க்கை முறையைக் கண்டுகொள்ள முடிகிறது.

நாடுகளிலிருந்து வெளியேறியவர்கள் தஞ்சம்புகும் இடமா துபாய்?
சமீபத்திய ஆண்டுகளில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அரசியல் பின்புலம் கொண்ட பெரும் பண முதலைகள் மற்றும் குற்றவாளிகள் தங்கள் செல்வத்தை பாதுகாப்பாக மறைத்து வைப்பதற்கான புகலிடமாக மாறியுள்ளது. ஏனைய பல நாடுகள் தமது கடல் எல்லைகளில் கடும் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்திய போதிலும் எமிரேட்ஸ் நெகிழ்வுத்தன்மைமிக்க நடைமுறைகளைப் பின்பற்றுகின்றமை கவனிக்கத்தக்கதாகும்.

துபாயிலுள்ள 27 வீதமான சொத்துக்கள் வெளிநாட்டவர்களுக்குச் சொந்தமானவை என்றும் இவர்களில் கணிசமானோர் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகின்ற அல்லது போர் போன்ற முரண்பாடுகள் நிலவுகின்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் ஐரோப்பிய ஒன்றிய வரிக் கண்காணிப்பு நிறுவனத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2020 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 408 இலங்கைப் பிரஜைகளுக்குச் சொந்தமான 590 சொத்துக்கள் துபாயில் இருப்பதாவும் இவற்றின் பெறுமதி 205 மில்லியன் டொலர்கள் என்றும் மேற்படி நிறுவனத்தின் தரவுகள் கூறுகின்றன.

மார்ச் மாதத்தில், உலகின் முக்கிய பணமோசடி தடுப்பு கண்காணிப்பு குழு ஐக்கிய அரபு எமிரேட்ஸை அதிக கண்காணிப்பு தேவைப்படும் நாடுகளின் ‘சாம்பல் பட்டியலில்” சேர்த்தது. பாரிஸை தளமாகக் கொண்ட நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) எமிரேட்ஸ், ஆபத்துமிக்க பணமோசடி அச்சுறுத்தல்களை முறியடிப்பதற்கான விசாரணைகள் மற்றும் சட்டங்களை துரிதப்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது.

ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் துபாய் வங்கிக் கணக்குகளில் நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்களை பதுக்கி வைத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம்சுமத்தி வருகின்றன. எனினும் ராஜபக்ஷாக்கள் அவற்றை மறுத்து வருகின்றனர்.

தலிபான்கள் காபூலைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அந்நாட்டு ஜனாதிபதி அஷ்ரப் கானி, துபாயிலேயே தஞ்சம் புகுந்தார். அதேபோன்று தாய்லாந்தின் முன்னாள் பிரதமர்களான தக்ஷின் சினவத்ரா, யிங்லுக் சினவத்ரா, பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப், ஸ்பெய்னின் முன்னாள் மன்னர் ஜுஆன் கார்லோஸ், கொல்லப்பட்ட முன்னாள் யெமன் ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் சாலிஹின் மகன் அஹ்மத் சாலிஹ் என பலர் இவ்வாறு தமது நாடுகளை விட்டும் தப்பியோடி துபாயில் தஞ்சம் புகுந்தவர்களாவர். இவர்களது பட்டியலிலேயே இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவி வகித்த கோத்தபாய ராஜபக்சவும் இணைந்து கொள்ளப் போகிறார்.

விடிவெள்ளி பத்திரிகை 21/7/2022 பக்கம் 03

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter