வக்பு சபை இடைநிறுத்தத்தின் பின்னணி என்ன?

“புதிய வக்பு சபையொன்றினை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 1982ஆம் ஆண்டு 33ஆம் இலக்க திருத்தப்பட்ட வக்பு சட்டத்தின் முதலாவது அத்தியாயத்தின் 05ஆம் பிரிவின்படி அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் தற்போது பதவியிலுள்ள வக்பு சபையின் செயற்பாடுகள் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே கூட்டங்கள் கூட வேண்டாம். தீர்மானங்கள் மேற்கொள்ள வேண்டாம். தீர்மானங்களை அறிவிக்க வேண்டாம்”. இவ்வாறான ஒரு கடிதம் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீனுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

MBRCA/07/MUSLIM/15 ஆம் இலக்க 2022.06.28ஆம் திகதியிட்ட குறிப்பிட்ட கடிதம் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதான பதிரனவினால் கையொப்பமிடப்பட்டிருந்தது.

வக்பு சபையின் செயற்பாடுகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடை நிறுத்தப்பட்டதையடுத்து முஸ்லிம் சமூகம் அமைச்சர் விதுரவிக்ரம நாயக்கவின் உத்தரவினை ஏற்கமறுத்தது. எந்தவித காரணங்களையும் தெரிவிக்காது வக்பு சபையின் பணிகளை இடைநிறுத்த முடியாது. இது முஸ்லிம் விவகாரங்களில் இடம்பெறும் அநாவசிய தலையீடுகள் என முஸ்லிம் சமூக புத்திஜீவிகளும் , சிவில் சமூக அமைப்புகளும் அமைச்சருக்கு தெளிவுபடுத்தின.

இவ்வாறான நெருக்குவாரங்களும் சவால்களும் தலையெடுப்பதற்கு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட சிலரே காரணம் என்பதை இவ்விடத்தில் சுட்டிக்காட்டியே ஆகவேண்டும். ‘உங்கள் சமூகத்தைச் சேர்ந்த சிலரே வக்பு சபையை விமர்சித்ததுடன், அதனைக் கலைக்குமாறும் புதியவர்களை வக்பு சபைக்கு நியமிக்குமாறும் என்னிடம் கோரிக்கை விடுத்தார்கள்’ என்று அமைச்சர் விதுரவிக்ரமநாயக்க தன்னைச் சந்தித்த முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகளிடமும், வக்பு சபையின் தலைவர் உட்பட உறுப்பினர்களிடமும் தெரிவித்துள்ளார்.

எம்மவர்களே எங்கள் சமூகத்தைப் பற்றி தங்களது சுயநலம்கருதி அரசியல்வாதிகளிடமும், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளிடமும் பொய்களைக் கூறி விமர்சிக்கும்போது குறிப்பிட்ட அதிகாரத்திலுள்ளவர்களால் இவ்வாறான இடை நிறுத்தல்களையும், தடைகளையுமே விதிக்க முடியும். முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாமற் செய்வதற்கான முயற்சிகள் மற்றும் இஸ்லாமிய நூல்கள், குர்ஆன் பிரதிகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் என்பன எம்மவர்கள் சிலரின் முறைப்பாடுகளையடுத்தே அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டன. இஸ்லாம் சமய பாட நூல்களில் சில வசனங்கள் மற்றும் கருத்துக்கள் அப்புறப்படுத்தப்பட்டமைக்கும் எம்மவர்கனே காரணமாக இருந்துள்ளார்கள் என்று கூறினால் அதிலும் தவறில்லை.

வக்பு சபையின் இடைநிறுத்தம் வாபஸ்

அமைச்சர் விதுரவிக்ரம நாயக்க அண்மையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தியிருந்த வக்புசபையின் செயற்பாடுகளை ரத்துச் செய்து மீண்டும் தற்போதைய வக்பு சபை தனது பணிகளைத் தொடர்வதற்கு அனுமதி வழங்கியுள்ளார் . அதற்கான உத்தரவினை அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபதிரனவுக்கு வழங்கியுள்ளார். அதற்கிணங்க அவர் ஏற்கனவே வக்பு சபைக்கு அனுப்பியிருந்த கடிதத்தை ரத்துச் செய்து வக்பு சபை கடமைகளைத் தொடர்வதற்கான உத்தியோகபூர்வமான அறிவிப்பை நேற்று முன்தினம் கடிதம் முலம் வழங்கியுள்ளார்.

முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளின் கடிதம்

12 முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள் கடந்த 7ஆம் திகதி புத்தசாசனம், மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்திருந்தன. கடிதத்தில் 25ஆவது வக்புசபையின் செயற்பாடுகளை இடைநிறுத்திய அமைச்சரின் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு சிவில் சமூக அமைப்புகள் கோரியிருந்தன.

கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, ‘தற்போதைய வக்பு சபை முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய சேவைகளைச் செய்துள்ளது. பள்ளிவாசல் நிர்வாகங்களில் முன்னேற்றகரமான திருத்தங்களைச் செய்துள்ளது. கொவிட் 19 காலத்தில் கடுமையான நிபந்தனைகளை பள்ளிவாசல்களில் அமுல்படுத்தி சவால்களை எதிர்கொண்டுள்ளது. வரலாற்றில் முதல்தடவையாக வக்பு சபை சட்ட அதிகாரி ஒருவரை நியமித்துள்ளது. பள்ளிவாசல் நிர்மாணம் மற்றும் திருத்த வேலைகளின் போது சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென பள்ளிவாசல் நிர்வாகங்களை அறிவுறுத்தியுள்ளது.மாவட்ட பள்ளிவாசல் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

மெளலவிகளின் திறமையை அதிகரிப்பதற்காக பயிற்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. என்றாலும் கொவிட் 19 காரணமாக இதில் தாமதம் ஏற்பட்டது என்பன உட்பட மேலும்பல வக்பு சபையின் செயற்பாடுகள் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இக்கடிதம் இலங்கை முஸ்லிம் தலைவர்கள் போரத்தின் (Sri Lanka Muslim Leaders Forum) அழைப்பாளர் சட்டத்தரணி சிராஸ் நுர்தீனினால் கையொப்பமிட்டு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில், தேசிய சூரா சபை, வை.எம்.எம்.ஏ, இஸ்லாமிய சோனகர் கலாசார நிலையம், முஸ்லிம் மீடியா போரம், ஸ்ரீ லங்கா இஸ்லாமிய கற்கை நிலையம், முஸ்லிம் சிவில் சமூகம், ஸ்ரீ லங்கா ஜமாஅத்தே இஸ்லாமி, ஜம்இய்யத்துல் ஷபாப் (AMYS) அகில இலங்கை முஸ்லிம் இளைஞர் அமைப்பு (RPSL CONSORTIUM) ஆகிய அமைப்புகளின் சார்பாக இக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இதேவேளை கடந்த திங்கட்கிழமை புத்தசாசனம், மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சில் அமைச்சர் விதுரவிக்ரமநாயக்கவுடன் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துரையாடலொன்றிலும் ஈடுபட்டனர். இக்கலந்துரையாடலில் என்.எம்.அமீன், சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், நத்வி பஹாவுதீன், ஜெபாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

வக்பு சபை – அமைச்சர் சந்திப்பு

முஸ்லிம் சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்த அமைச்சர் உடனடியாக வக்பு சபையின் உறுப்பினர்களையும் அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார். வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் வக்பு சபையின் செயற்பாடுகளை விளக்கினார். வக்பு சபையின் செயற்பாடுகள் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சிலரினால் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. வக்பு சபையைக் கலைத்துவிட்டு புதியவர்களை சபைக்கு நியமியுங்கள் என்று அவர்கள் என்னைக் கோரினார்கள் என அமைச்சர் வக்பு சபை அங்கத்தவர்களிடம் தெரிவித்தார்.

வக்பு சபை வக்பு சட்டத்தை முழுமையாக அமுல்நடத்துகிறது. அதறகுப் புறம்பாக ஒவ்வொருவரும் எதிர்பார்க்கும் வகையில் வக்பு சட்டத்தை அமுல்படுத்த முடியாது. ஒரு சிலர் அவர்களுக்கு சார்பாக வக்பு சபை செயற்பட வேண்டும். அவர்களுக்கு சார்பாக தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும். விசாரணையில் அவர்களுக்கு சார்பாக வக்பு சபை செயற்பட வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்.

இவ்வாறானவர்களே தவறான தகவல்களை வழங்கி உங்களை (அமைச்சரை) பிழையாக வழி நடத்தியிருக்கிறார்கள் என்றார்.

மேலும் அமைச்சர் ஸியாரங்கள் மூடப்பட்டுள்ளமை தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த வக்பு சபையின் தலைவர் வக்பு சபைக்கு இவ்வாறான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் மாத்திரமே அது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள முடியும் என்றார்.

இச்சந்திப்பில் வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீனுடன் உறுப்பினர் ஸக்கி அஹமட், அஷ்ஷெய்க் அர்கம் நூராமித், ரபீக் இஸ்மாயில், எம்.சிராஜ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். போக்குவரத்து பிரச்சினை காரணமாக உறுப்பினர் மெளலவி பஸ்ருல் ரஹ்மான் மற்றும் ஏ.உதுமான் லெப்பை ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் (வக்பு சபை உறுப்பினர்)

புத்தசாசனம், மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரிடம் வக்பு சபை பற்றியும் என்னைப் பற்றியும் தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. நான் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளராகப் பதவி வகிக்கும் அதே நேரம் வக்பு சபையின் உறுப்பினராகவும் பதவிவகிப்பது தவறென்றும், அவ்வாறு பதவி வகிப்பதால் உலமா சபையின் கருத்துக்களுக்கு வாய்ப்பளிக்கும் சந்தர்ப்பம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான் பதவி வகிப்பது தவறென்றால் வக்பு சபையின் அங்கத்தவர் பதவியை இராஜினாமா செய்து விடுவதற்குத் தயாராக இருப்பதாக அமைச்சரிடம் தெரிவித்தேன். மேலும் நான் காலி முகத்திடல் ‘அரகலய’ (போராட்டத்தை) ஆதரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத தலைவர் என்ற வகையில் நானும் சர்வமத தலைவர்கள்அமைப்பில் இருக்கிறேன். இந்த அமைப்பு ‘அரகலய’ போராட்டத்தை எதிர்க்கவில்லை. ஆதரவு வழங்குகிறது. அந்த வகையிலே ‘அரகலய’வுக்கு நாம் ஆதரவு வழங்குகிறோம். இது ஒரு அரசியல் செயற்பாடல்ல, நாட்டினதும் நாட்டு மக்களினதும் எதிர்கால நன்மை கருதியே இப்போராட்டம் நடைபெறுகிறது என்பதை அமைச்சருக்கு தெளிவுபடுத்தினேன் என்று அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் தெரிவித்தார்.

வக்பு சபை சுயாதீனமாக செயற்படும் ஒரு நிறுவனமாகும். அதன் சுயாதீனத்தை உறுதிசெய்வதற்காகவே சுயாதீனமாக இயங்கும் சிவில் சமூக அமைப்புகள் அமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளன. பள்ளிவாசல்களில் ஸியாரங்களை திறப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. ஸியாரங்கள் மூடிவைக்கப்பட்டுள்ளன எனவும் வக்பு சபைக்கெதிராக அமைச்சரிடம் முறையிடப்பட்டிருந்தது.

ஸியாரங்கள் மூடப்பட்டுள்ளமைக்கு எதிராக வக்பு சபைக்கு முறைப்பாடு செய்யப்பட்டாலே அது தொடர்பில் விசாரணை நடாத்த முடியும். கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் ஸியாரம் மூடப்பட்டுள்ளமை தொடர்பில் மாத்திரமே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை அமைச்சரிடம் தெளிவுபடுத்தினேன் என்றார்.

சட்டத்தரணி சிராஸ் நூர்தீன்

முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவின் கலந்துரையாடலில் கலந்து கொண்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் கருத்துத் தெரிவிக்கையில், வக்பு சட்டத்தின் 5(4) பிரிவின்படி வக்பு சபை உறுப்பினர் ஒருவர் தனது கடமையை திருப்தியாக செய்யாவிட்டால் விசாரணையின் பின்பு அவரை பதவி நீக்குவதற்-கு அமைச்சருக்கு அதிகாரமிருக்கிறது. ஆனால் எவ்வித காரணமுமின்றி முழு சபையையும் பதவி நீக்கம் செய்ய முடியாது என்றார்.

சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அமைச்சருடனான கலந்துரையாடலின் போது நாங்கள் இங்கு ஒரு தனிநபருக்காக பேசுவதற்கு வரவில்லை. முழு முஸ்லிம் சமூகத்துக்காகவும் பேசுவதற்கே வந்துள்ளோம். வக்பு சபை முஸ்லிம்களின் பொக்கிஷம். அதனைக் கலைக்க வேண்டாம்.

வக்பு சபையில் உள்ளவர்கள் அரசியல் செய்வதில்லை. அவ்வாறு எவரும் இருந்தால் விலகச் சொல்கிறோம். அரகலய வேறு. அரசியல் வேறு. அரகலயவுக்கு ஆதரவு வழங்குவது அரசியல் ஆகாது. வக்பு சபை இடை நிறுத்தப்பட்டுள்ளதை நீக்கிக்கொள்ள சமரசமாக பேசுவதற்கே நாம் இங்கு வந்துள்ளோம்.

தற்போதைய வக்பு சபை சமூகத்துக்கு பாரிய சேவைகளை செய்துள்ளது. கொவிட் 19 கால கட்டத்தில் கூட மும்முரமாக செயற்பட்டுள்ளது என விளக்கினார்.

அமைச்சர் உறுதியளித்தபடி வக்பு சபையின் நிறுத்தப்பட்டுள்ள செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றில் அமைச்சரின் உத்தரவுக்கு எதிராக ரிட்மனு தாக்கல் செய்யவுள்ளதாக சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் விடிவெள்ளிக்குத் தெரிவித்திருந்தார்.

ஏ.பி.எம். அஷ்ரப் (திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர்)

புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எவ்வித காரணமும் தெரிவிக்காமல் வக்பு சபையின் செயற்பாடுகளை நிறுத்தியமையை ஏற்றுக் கொள்ளமுடியாது என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் ஏற்கனவே கருத்து வெளியிட்டிருந்தார்.

வக்பு சட்டத்தின் பிரகாரம் சபையின் உறுப்பினர் ஒருவரின் தவறான செயல் காரணமாக மாத்திரமே அவரை பதவியிலிருந்து நீக்கலாம். ஆனால் முழு வக்பு சபையையும் கலைத்து விடுவதற்கு அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. உறுப்பினர் ஒருவர் இராஜினாமா செய்யலாம் அல்லது தவறான நடத்தை காரணமாக அவர் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

என்.எம்.அமீன் (தலைவர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில்)

முஸ்லிம்களது நீண்டகால உரிமைகளில் ஒன்றே வக்பு சபையாகும். இந்நிறுவனத்தின் செயற்பாடுகளை திடீரென சட்டத்துக்கு முரணாக இடைநிறுத்துவது ஒருபோதும் அனுமதிக்க முடியாததாகும்.

நாட்டிலுள்ள பள்ளிவாசல்களை நிர்வகிக்கும் நிறுவனம் இது. இந்நிறுவனம் அரசியல் தலையீடுகளின்றி புறம்பாக இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் தீர்மானங்களை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தாமதமின்றி அமுல்படுத்த வேண்டும்.

அமைச்சருடனான கலந்துரையாடல் வெற்றியளித்துள்ளது. அமைச்சர் வக்பு சபையின் இடைநிறுத்தத்தை நீக்குவதாக உறுதியளித்துள்ளார். இது தொடர்பான உத்தரவுகளை அமைச்சின் செயலாளருக்கு வழங்கியுள்ளார் என என்.எம்.அமீன் தெரிவித்தார்.

சமூகம் ஒற்றுமைப்பட வேண்டும்

முஸ்லிம் சமூகத்தில் கொள்கை முரண்பாடுகள் நிலவுகின்றமையே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணமாய் அமைந்துள்ளது.

காதிநீதிமன்ற முறைமையை இல்லாமற் செய்ய வேண்டும் என்று எம்மவர்களில் ஒரு சாராரே வேண்டி நின்றார்கள். அதற்கான முன்னெடுப்புகள் இடம்பெற்று வருகின்றன. இதேபோன்று வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இஸ்லாமிய நூல்கள் மற்றும் குர்ஆன் பிரதிகள் கண்காணிப்புக்குட்படுத்தப்பட வேண்டும். அவற்றில் அடிப்படைவாத கொள்கைகள் புகுத்தப்பட்டுள்ளன என்று அதிகாரத்தில் உள்ளவர்களிடம் எம்மவர்களில் சிலரே முறையிட்டார்கள். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிலும் சாட்சியமளித்தார்கள். அதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் இஸ்லாமிய நூல்கள், குர்ஆன் பிரதிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பின்பே பாதுகாப்பு அமைச்சு மற்றும் கலாசார அமைச்சினால் அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த வரிசையில் தற்போது வக்புசபை பற்றியும் அதிகாரத்தில் உள்ளவர்களிடம் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இம்முறைப்பாடுகளை முன்வைப்பவர்கள் முஸ்லிம் சமூகத்தை மேலும் சவால்களுக்குட்படுத்துகின்றனர்.
எனவே முஸ்லிம் சமூகம் அரசியல் மற்றும் கொள்கை முரண்பாடுகளைக் களைந்து சமூகத்தின் மீட்சிக்காக செயலில் இறங்க வேண்டும்.

ஏ.ஆர்.ஏ.பரீல் – விடிவெள்ளி பத்திரிகை 14/7/2022 பக்கம் 01

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter