வக்பு சபையின் செயற்பாடுகளை மீண்டும் தொடர்வதற்கு அனுமதி

புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரம நாயக்கவினால் அண்மையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வக்பு சபையின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கான அனுமதியினை அமைச்சர் வழங்கியுள்ளார். அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபதிக்கு அது தொடர்பான உத்தரவினை வழங்கியுள்ளார்.

வக்பு சபையின் செயற்பாடுகள் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளரினால் வக்பு சபையின் தலைவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தை வாபஸ் பெறுமாறும், வக்பு சபையின் பதவிக்காலம் தொடர்ந்தும் செயற்பாட்டில் இருக்குமெனவும் அமைச்சின் செயலாளர் நேற்று முன்தினம் வக்பு சபைக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிலரே வக்பு சபையை விமர்சித்து அதனைக் கலைத்துவிட்டு புதியதோர் சபையை நிறுவுமாறு தன்னிடம் கோரியதாக அமைச்சர் விதுர விக்ரம நாயக்க தன்னைச் சந்தித்த முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகளிடமும் வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் மற்றும் உறுப்பினர்களிடமும் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை காலை அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா, வை.எம்.எம்.ஏ.ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில்,சூராகவுன்ஸில்,ஷரீஆ கவுன்ஸில் உட்பட முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளின் பிரதநிதிகள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவை அவரது அமைச்சில் சந்தித்து வக்பு சபையின் செயற்பாடுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளமைக்கு அதிருப்தி வெளியிட்டதுடன் அதன் செயற்பாடுகள் வழமைபோன்று நடைபெறுவதற்கு இடமளிக்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதே வேளை 17 சிவில் சமூக அமைப்புகள் வக்பு சபையின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்படக்கூடாது என அமைச்சரை கடிதம் மூலம் வேண்டியிருந்தனர். வக்பு சபையின் சேவைகள் தொடர்பிலும் விளக்கமளித்திருந்தனர். வக்பு சட்டத்தை மீறாது தற்போதைய வக்பு சபை தொடராக செயற்பட்டு வந்துள்ளமையையும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளின் சந்திப்பினையடுத்து அமைச்சர் வக்பு சபையின் உறுப்பினர்களை தனியாக சந்தித்து கலந்துரையாட்டினார்.

இச்சந்திப்பில் வக்புசபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் உட்பட 5 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மெளலவி பஸ்ருல் ரஹ்மான் மற்றும் ஏ.உதுமா லெப்பை ஆகிய இருவரும் கலந்து கொள்ளவில்லை.

வக்பு சபையின் செயற்பாடுகள் தொடர்பில் அதன் தலைவர் சப்ரி ஹலீம் தீன் அமைச்சரிடம் விளக்கமளிக்கையில் “சமூகத்தில் ஒரு சிலர் அவர்களுக்கு சாதகமான முறையில் வக்பு சபை செயற்படவேண்டும் என நினைக்கிறார்கள்.

வக்பு சட்டத்தின் படியன்றி குறுக்கு வழியில் தீர்மானங்கள் எடுக்கப்படவேண்டும். தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அவ்வாறானவர்களே உங்களை (அமைச்சரை) தவறாக வழிநாடத்தி சபையின் செயற்பாடுகளை இடை நிறுத்தியுள்ளார்கள்.

வக்பு சபை சட்டத்தை 100 வீதம் அமுல்படுத்துகிறது. அரசியல் மற்றும் தனியார் செல்வாக்கு இடமளிப்பதில்லை. இதனாலேயே ஒரு சிலர் தற்போதைய வக்பு சபை கலைக்கப்படவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள் என்றார்.

இந்நிலையில் தொடர்ந்தும் வக்பு சபை செயற்பட்டு வக்பு சட்டத்தின் படி தனது கடமைகளை முன்னெடுக்க வேண்டுமென அமைச்சர் வேண்டிக்கொண்டார்.

(ஏ.ஆர்.ஏ.பரீல்) விடிவெள்ளி 14/7/22 பக்கம் 01

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter