முமுமையான வெற்றியென்பது, இலக்கின் இறுதியாகும் என்பதை சகலரும் நினைவில் கொள்ளவேண்டும். சில நேரங்களில் குறுக்கு வழியில் இலக்கை எட்டக்கூடும். நேர்வழியில் செல்வதால், கால தாமதமாகலாம். ஜூலை 9′ போராட்டத்தின் இலக்கு இன்னும் இறுதியாக்கப்படவில்லை என்பதால், அடுத்தது என்னவென்பதே மக்களிடத்தில் இருக்கும் பெருங்கேள்வியாகும்.
ஜூலை 9′ போராட்டக்காரர்கள் கைப்பற்றியிருக்கும் மூவிடங்களும் மிகவும் முக்கியமானவை என்பதே எந்நேரத்தில் நினைவில் கொண்டிருக்கவேண்டும். இதற்கிடையே ஐனாதிபதி மாளிகை, அலரி மாளிகையை பார்வையிடச்செல்லும் பொது மக்களில் ஒருசிலர், அங்கிருக்கும் நினைவுச்சின்னங்களையும் விலையுயர்ந்த பொருட்களையும் உடைத்து நாசமாக்கியுள்ளனர்.
அழிவுகளின் மீதான வரிச்சுமை மக்கள் மீதே சுமத்தப்படும் என்பதில் கவனம் கொள்ளவேண்டும். இதற்கிடையே சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைக்கும் வகையில் தங்களுடைய பதவிகளை இராஜினாமா செய்வதாக பிரதமரும் ஏனைய அமைச்சர்களும் அறிவித்துள்ளனர்.
இன்னும் சில அமைச்சர்கள் இராஜினாமா செய்துவிட்டனர். ஆனாலும், ஜனாதிபதி அந்த இராஜினாமாக்களை ஏற்கவில்லையெனவும், பிரதமர் தலைமையில் நேற்று (11) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்றிருந்தனர் என்றும் அறியமுடிகின்றது.
மறுபுறத்தில், புதிய பிரதமர், புதிய ஜனாதிபதி யார்? என்பது தொடர்பில் எதிரணியிடம் ஒர் உறுதியான தீர்மானம் நேற்று (11) வரையிலும் எட்டப்படவில்லை. இது, நாட்டை மென்மேலும் சீர்குலைத்துவிடும் என்பதை கவனத்தில் கொள்க. ஆக, ஸ்திரமான அரசாங்கமொன்றை நிறுவுவதே காலத்தின் அவசர தேவையாகும்.
நாட்டில் நிர்வாக ஆட்சியொன்று இன்றேல், சர்வதேசமும் கைகளை விரித்துவிடும். எனினும், இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியன, தங்களுடைய ஆதரவுக் கரங்களை ஸ்திரமான ஆட்சியின் தேவையையும் வலியுறுத்தியுள்ளன.
ஆகையால், பேச்சு, சந்திப்பு என காலத்தையும் நேரத்தையும் இழுத்தடித்து கொண்டிருக்காது, ஸ்திரமான ஆட்சிக்கு செல்லவேண்டும். இல்லையேல், நாடும் மக்களும் இன்னும் பல ஆண்டுகளுக்குப் பின்னோக்கி செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்படும்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இன்னும் நான்கு வருடங்களுக்கு மேல் அதாவது 2027 வரையிலும் செல்லலாமென சர்வதேச நாணய நிதியமும் கோடிட்டுக் காட்டியிருந்தது. ஆகையால், காலத்தை வீணடிக்காமல் தீர்மானங்களை அவசரமாக எடுக்கவேண்டும்.
இரண்டு நாள்களுக்குப் பின்னர், எரிபொருளுக்கான வரிசைகள் ஆரம்பமாகியுள்ளன. போக்குவரத்து ஒரளவுக்குத் தான் வழமைக்குத் திரும்பியுள்ளது. நடந்து செல்வோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மக்களின் தேவைகளும் கூடியுள்ளன. அத்துடன், ஊழல், மோசடிகள் ஏமாற்றுவேலைகள் அதிகறித்துள்ளன. இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமாயின், ஆட்சி நிர்வாகம் கட்டாயமானது,
ஓர் அரசாங்கம் இல்லாத நாடென குறிப்பிட்டு கையை விரித்துவிடுவதற்கு முன்னர், ஸ்திரமான ஆட்சியை அவசரமாக நிறுவ வேண்டியது தற்போதைய மக்கள் பிரதிநிதிகளின் முன்னிருக்கும் பணியாகும்.
தமிழ்மிரர் 12/7/22 பக்கம் 06