இலங்கை நெருக்கடி: கள்ள மௌனம் காக்கும் சிங்கள இனவாதிகள்

இன்று நாட்டில் தோன்றி இருக்கும் பாரிய சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது பதவிக் காலத்தில் (2010 – 2015) ஊன்றப்பட்ட விஷ வித்துக்களின் அறுவடையாகவே பார்க்க வேண்டி இருக்கிறது. அது மக்கள் மத்தியில் ஒருபோதும் இல்லாத விதத்திலான ஒரு பேரச்சத்தையும், எதிர்காலம் குறித்த ஒரு நிச்சமற்ற உணர்வையும் எடுத்து வந்திருக்கிறது. அண்மைய வருடங்களில், இலங்கை அரசியல் சமூகத்தில் ஒரு பெரும் சக்தியாக எழுச்சியடைந்திருக்கும் சிங்கள இனவாதிகள் மற்றும் தேசியவாதிகள் இந்த நெருக்கடியை தமது வாழ்நாளில் சந்திக்க நேரிட்ட மிகப் பெரிய ஒரு சோதனையாகப் பார்க்கிறார்கள்.

இந்த மோசமான பொருளாதார நெருக்கடி குறித்தோ அல்லது அது எடுத்து வந்திருக்கும் எடுத்து வரவிருக்கும் பயங்கரமான பின்விளைவுகள் குறித்தோ வாய் திறக்க முடியாத நிலையில் இந்தத் தரப்புக்கள் இருந்து வருகின்றன. அவர்களுடைய இந்த கள்ள மௌனத்துக்கான காரணம் இந் நெருக்கடியின் சூத்திரதாரிகள் தம்மால் போஷித்து வளர்க்கப்பட்ட ராஜபக்சாக்கள் என்ற பகிரங்க இரகசியத்தை ஏற்றுக் கொள்வதிலுள்ள தயக்கம் மற்றும் குற்ற உணர்ச்சி.

1956 இன் பின்னர் முதல் தடவையாக சிங்கள மக்களை இன மத அடிப்படையில் ஒன்று திரட்டிய சாதனையை 2010 இல் நிகழ்த்திக் காட்டிய அவர்கள், இப்பொழுது அந்தப் பெரும் கனவு சிதைந்து போவதைப் பார்த்து கடும் விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். ‘அப்படியான ஒரு அணி திரட்டலுக்கான வாய்ப்பு அடுத்து வரும் வருடங்களில் அநேகமாக சாத்தியமில்லை‘ என்ற யதார்த்தம் அவர்களுடைய கவலைக்கான முக்கிய காரணம்.

ஜனாதிபதியின் அதிகாரத்தைப் பெருமளவுக்குக் குறைக்கும் அரசியல் யாப்புக்கான 21 ஆவது திருத்தம் குறித்த நகர்வுக்கு சிங்கள சமூகத்தில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அளவுக்கு எதிர்ப்புக்கள் கிளம்பாமல் இருப்பதை மற்றொரு பின்னடைவாகப் பார்க்கிறார்கள் இந்த தேசியவாதிகள்.

ஞானசார தேரர் போன்றவர்கள் சந்திக்கும் நெருக்கடி வேறு விதமானது. தமக்கு எப்பொழுதும் பாதுகாப்பு வழங்கி, அரவணைத்துக் கொள்ளும் போஷகர் நிலையில் இருந்து வரும் கோட்டாபய ராஜபக்ச இப்பொழுது எதனையுமே செய்ய முடியாத அளவுக்கு பலவீனமடைந்து போயிருப்பது அவர்களுக்கு மத்தியில் ஒரு விதமான அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. ‘எந்த ஒரு நேரத்திலும் சட்டம் தம் மீது பாய முடியும்‘ என்ற பீதியும் இப்பொழுது அவர்களை அலைக்கழித்து வருகிறது.

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ செயலணியின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட நிகழ்வு – சிங்கள பௌத்த செயல்திட்டத்தின் மற்றொரு வரலாற்று மைல் கல்லாக கருதப்பட்டிருக்கக் கூடிய நிகழ்வு – எத்தகைய பரபரப்புக்களோ, ஊடகங்களின் உயர் அளவிலான கவனமோ இல்லாத விதத்தில் கடந்து போயிருக்கிறது. ஒரு விதத்தில், இன்றைய இலங்கையின் புதிய கள யதார்த்தத்தை துல்லியமாக எடுத்துக் காட்டும் ஒரு மாற்றமாக அதனைக் கருத முடியும்.

அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகள் என்பவற்றின் கடுமையான தட்டுப்பாடு, வரலாறு காணாத விதத்திலான விலையேற்றங்கள் என்பவற்றுடன் கூடிய ஒரு பொருளாதார நெருக்கடி நாட்டின் வாசல்படியில் வந்து நின்றிருந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் நடுப் பகுதியில் ‘ஹிரு’ டிவி காதி நீதிமன்றங்கள் குறித்து நடத்திய ‘Talk Show’ வை இங்கு நினைவூட்டுவது பொருந்தும்.

சிங்கள ஊடகங்கள் நாட்டின் முன்னுரிமைகளை எந்த அளவுக்கு குழப்பியடித்துக் கொண்டிருந்தன என்பதற்கான நல்ல உதாரணம் அது. நாட்டின் குடித்தொகையில் 9% ஆக மட்டுமே வாழ்ந்து வரும் ஒரு சிறுபான்மைச் சமூகம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையை, அவர்களே தமக்குள் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு பிரச்சினையை காட்சி ஊடகங்களின் மொழியில் ‘Prime Time’ என்று அழைக்கப்படும் இரவு 07 மணிக்கும் 09 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஒன்றரைக் கோடி சிங்களப் பார்வையாளர்களுக்கு (சிங்கள மொழியில்) ஒளிபரப்பியது ஏன்?

முஸ்லிம் தனியார் சட்டங்கள் சிங்கள பௌத்தர்களின் இருப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன என்ற செய்தியையே அதன் மூலம் ‘ஹிரு’ டிவி சிங்கள மக்களுக்கு சொல்ல முயன்றது. அதை விட அபத்தம் வேறு எதுவும் இருக்க முடியாது.
Ratings ஐ மட்டுமே கருத்தில் கொண்டு செயற்பட்டு வரும் ஊடகங்கள் இப்பொழுது நாட்டில் எழுச்சியடைந்து வரும் புதிய நிலைமைகளுடன் அனுசரித்துச் செல்லும் விதத்தில் தமது நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டிருப்பதை பார்க்க முடிகின்றது.

‘திவயின’ நாளிதழ் எவ்வித ஆதாரங்களையும் முன்வைக்காமல் கொட்டை எழுத்துத் தலைப்புச் செய்தியொன்றின் மூலம் டாக்டர் ஷாபி தொடர்பான புரளியை கிளப்பி, முழு நாட்டுக்கும் தீ மூட்டிய பாவ காரியத்தைச் செய்தது. இப்பொழுது அது குறித்த எவ்விதமான குற்ற உணர்ச்சியும் இல்லாமல், இன்றைய நெருக்கடியின் பின்புலத்தில், ‘இலங்கை சர்வதேச ரீதியில் எந்த அளவுக்குக் கேவலப்படுத்தப்பட்டிருக்கின்றது‘ என்பதை விலாவாரியாக எடுத்து விளக்கும் விதத்தில் அது ஆசிரியர் தலையங்கங்களைத் தீட்டிக் கொண்டிருக்கிறது.

தம்மை சிங்கள தேசியவாதிகள் எனச் சொல்லிக் கொள்ளும் ஆட்களின் நிலைமை மிகவும் பரிதாபம். ராஜபக்ச ஆட்சிக்கு 2005 ஆம் ஆண்டு தொடக்கம் அவர்கள் நிபந்தனையற்ற விதத்தில் ஆதரவளித்து வந்திருக்கின்றார்கள். போர் வெற்றி அந்த ஆதரவை மேலும் பலப்படுத்தியது. அதனால் 2010 – 2015 ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பாரிய ஊழல்கள், மோசடிகள், முறைகேடுகள், ஜனநாயக விரோதச் செயல்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சியில் ஏற்பட்ட சீர்குலைவு ஆகிய எல்லாவற்றையும் அவை என்றோ ஒருநாள் நாட்டை பெரும் நெருக்கடிக்குள் தள்ளி விட முடியும் என்பதை நன்கு தெரிந்து கொண்டே இவர்கள் கண்டும் காணாமலும் இருந்தார்கள்.

கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் ‘அறகலய’ வடிவில் தோன்றிய பாரிய மக்கள் எழுச்சி என்பவற்றை அடுத்து நாட்டில் உருவாகி இருக்கும் புதிய நிலவரம், தேசியவாதிகள் ‘மரணப் பொறி‘ என வர்ணிக்கும் 21 ஆவது திருத்தத்துக்கு பெருவாரியான மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கு உசிதமானதொரு சூழ்நிலையை உருவாக்கியிருக்கின்றது. குறிப்பாக, சிங்கள பொதுசன அபிப்பிராயம் அதற்கு சார்பான விதத்தில் திருப்பப்பட்டிருக்கிறது.

‘ராஜபக்ச சகோதரர்களில் பசில் ராஜபக்சவே மிகவும் மோசமான ஆள்; ஊழல் பேர்வழி; ஏகாதிபத்தியவாதத்தின் அடிவருடி. ஆனால், மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச இருவரும் மாபெரும் தேசாபிமானிகள்’ என்ற நிலைப்பாட்டிலேயே சிங்கள தேசியவாதிகள் இது வரையில் இருந்து வந்துள்ளார்கள். ஆனால், ரணில் விக்கிரமசிங்கவை பிரதம மந்திரியாக நியமனம் செய்ததன் மூலம் அந்த தேசியவாதிகளின் முகத்தில் கரியைப் பூசியிருக்கிறார் கோட்டாபய ராஜபக்ஷ.

இந்த நிலைமைக்கு கணிசமான அளவிலான பங்களிப்பை வழங்கி வந்திருக்கும் இனவாதிகளும், தேசியவாதிகளும் இப்பொழுது அந்த விடயம் குறித்து பேசுவதை கவனமாக தவிர்த்து வருகிறார்கள். அதற்குப் பதிலாக, ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதன் விளைவாக சிங்கள மக்கள் எதிர்கொள்ள வேண்டி வரும் மோசமான பின்விளைவுகள் குறித்து மட்டும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

தேசியவாத அமைப்புக்களின் ஒன்றியம், தேசிய மக்கள் சபை மற்றும் ‘56 இன் குழந்தைகள்’ அமைப்பு என்பன கடந்த வாரம் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த “அரசியல் யாப்புக்கான 21 ஆவது திருத்தம் என்ற மரணப் பொறியில் கால் வைக்காதிருப்போம்” என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வில் இந்தக் கரிசனைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. அங்கு உரை நிகழ்த்திய சிங்கள தேசியவாதத்தின் பிதாமகர்களில் ஒருவராகக் கருதப்படும் குணதாச அமரசேகர தெரிவித்திருக்கும் பின்வரும் கருத்துக்கள் இந்தப் பின்னணியில் முக்கியத்துவம் பெறுகின்றன:

”21 ஆவது யாப்புத் சீர்த்திருத்தத்தின் நோக்கம் எமது பண்பாட்டின் ஆணிவேரான சிங்கள – பௌத்த பாரம்பரியத்தை முற்றாக நிர்மூலமாக்கி, நாட்டை ஏகாதிபத்தியவாதிகளின் ஒரு விளையாட்டுக் களமாக மாற்றியமைப்பதாகும்.”

”எமது நண்பர்களும், எதிரிகளும் 21 ஆவது திருத்தம் குறித்து ஒரே மாதிரியான கருத்துக்களைக் கொண்டுள்ளார்கள். 19 ஆவது திருத்தத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட ஜனநாயகத்தை அது மேலும் வலுப்படுத்தும் என்பதே அவர்களின் நிலைப்பாடு. 21 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவது இலங்கையின் ஜனநாயகத்துக்கு கிடைத்திருக்கும் ஒரு வெற்றி என்றும் அவர்கள் சொல்லி வருகிறார்கள்.”

“ஆனால், இந்த 21 ஆவது திருத்தம் நமது தேசத்தினதும், இனத்தினதும் அஸ்தமனத்தை எடுத்து வரும் ஒரு மரணப் பொறியாக இருந்து வருகின்றது என்றே நாங்கள் கருதுகின்றோம்.”

”இலங்கை இன்று அனர்த்த ஏகாதிபத்தியவாதம் (Disaster Imperialism) என்று அழைக்கப்படும் ஒரு நிலைமைக்கு இரையாகியுள்ளது. மேலைய ஏகாதிபத்தியவாதிகள் கையிலெடுத்திருக்கும் புதிய ஆயுதம் ‘அனர்த்த ஏகாதிபத்தியவாதம்’ என்பது. அதாவது, ஒரு நாடு ஓர் அனர்த்த நிலைமையை, ஒரு கொந்தளிப்பு நிலைமையை எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்களில் ஏகாதிபத்தியவாதிகள் அங்கு போய் இறங்கி, அந்நிலையை தமக்குச் சாதகமாக பயன்படுத்தி, அந்நாட்டை அடிமைப்படுத்த முயற்சிக்கிறார்கள். கடந்த காலத்தில் ஈராக்கிலும், லிபியாவிலும் இடம்பெற்ற சம்பவங்கள் இதற்கான சிறந்த உதாரணங்கள்… சமீப காலமாக நமது அயல் நாடான இந்தியாவும் இலங்கை தொடர்பாக இதே தந்திரோபாயத்தை பன்மடங்கில் மேற்கொண்டு வருவதனை நாங்கள் பார்க்கிறோம்.”

“இந்த ‘அனர்த்த ஏகாதிபத்தியவாதத்துக்கு’ மூன்று வழிகளில் செயல்வடிவம் கொடுக்கப்படுகின்றது. –

ஆட்சி மாற்றம் (Regime Change) / அரசியலமைப்பு மாற்றம் (Constitutional Change)

இராணுவத் தலையீடு (Military Intervention). சுப்ரமணியம் சுவாமி இந்த வகையிலான இராணுவத் தலையீடு தொடர்பாக ஏற்கனவே பேசி இருக்கிறார்.”

“இலங்கையில் இந்த அனர்த்த ஏகாதிபத்தியவாதிகள் மிகவும் இரகசியமான விதத்தில் செயற்பட்டிருக்கிறார்கள். அதற்கான சிறந்த உதாரணம் அண்மையில் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம். ஆனால், மக்கள் இன்னமும் அதனைப் புரிந்து கொள்ளவில்லை. 69 இலட்சம் மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொண்ட கோட்டாபய ராஜபக்ச இன்னமும் ஆட்சி பீடத்தில் இருக்கிறாரென சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிறிசங்கபோ மன்னன் தனது தலையைத் தானமாகக் கொடுத்தது போல, ஏகாதிபத்தியவாதிகளின் செல்லப் பிள்ளையான ரணில் விக்ரமசிங்கவிடம் கோட்டாபய ராஜபக்ச தனது தலையைத் தானமாகக் கொடுத்திருக்கிறார்.”

“21ஆவது அரசியல் யாப்புத் திருத்தம் 13ஆவது திருத்தத்துடன் உள்வாங்கப்பட்டால் அது ஒரு தேசிய அனர்த்தமாகவே இருக்கும். அது, நாங்கள் எமது கைகளாலேயே எமது கழுத்தை நெரித்துக் கொள்வதற்கு இணையானதாகும். 21ஆவது திருத்தம் முன்வைக்கப்பட்டிருப்பது எப்படிப் போனாலும், அதற்கு நாட்டில் இது வரையில் எத்தகைய எதிர்ப்புக்களும் தெரிவிக்கப்படாதிருப்பதே இங்குள்ள கொடுமை.”

குணதாச அமரசேகர போன்றவர்கள் இப்பொழுது முதல் தடவையாக கோட்டாபய ராஜபக்சவின் தேசாபிமானத்தை சந்தேகிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்கிய செயல் மன்னிக்கவே முடியாத ஒரு துரோகச் செயல் எனக் கருதுகிறார்கள்.

சிங்கள தேசியவாதிகளும், இனவாதிகளும் இன்று எதிர்கொண்டு வரும் தடுமாற்ற நிலை ராஜபக்சாக்கள் களத்திலிருந்து வெளியேறுவதனை அடுத்து, தமது நிகழ்ச்சி நிரலை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு தாம் எந்த அணியுடன் சேர்ந்து கொள்வது என்பதாகும்.

இலங்கை அரசியல் களம் பெருமளவுக்கு சிக்கலடைந்திருப்பதுடன், புதிதாக உருவாகப் போகும் அரசியல் அணிகள் குறித்த ஒரு தெளிவான சித்திரம் இன்னமும் முழுமையாக உருப்பெறவில்லை. வழமையாக பெரிய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து தேர்தல்களில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகளும் அதே தடுமாற்ற நிலையில் இருந்து வருகின்றன.

M.L.M. Mansoor
“இலங்கையின் பொருளாதார நெருக்கடி: சிங்கள இனவாதிகளின் கள்ள மௌனம்!”
விடிவெள்ளி பத்திரிகை 07/06/2022 பக்கம் 06

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter