பலதார மணத்துக்கு தடைவிதிக்க முஸ்லிம்களே கோரிக்கை விடுத்தனர்

முஸ்லிம்களுக்கு பலதார மணம் சட்டத்தின் மூலம் அனுமதிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களே முறைப்பாடுகளைச் செய்துள்ளார்கள். சென்ற இடங்களிலெல்லாம் திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார்கள். இதனாலே பலதார மணத்துக்கு தடைவிதிக்க வேண்டுமென கடந்த கால அரசாங்கத்தின் அமைச்சரவை கோரியிருந்தது என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனைக்குழுவிடம் தெரிவித்தார்.

குறிப்பிட்ட ஆலோசனைக் குழுவுக்கும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்குமிடையில் கலந்துரையாடலொன்று அண்மையில் நீதியமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின் போதே நீதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முஸ்லிம்களின் பலதார மணம் தொடர்பில் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்காக வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனைக் குழு நீதியமைச்சரிடம் கருத்து தெரிவிக்கையில் முஸ்லிம்களின் பலதார மணம் தொடர்பில் குர் ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இலங்கையில் பலதார மணம் சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படலாம். சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் சில நிபந்தனைகளுடன் பலதார மணம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

முன்னைய மனைவியர்கள் மற்றும் பிள்ளைகளுக்குப் பாதிப்புகள் ஏற்படாத வகையில் தாபரிப்பு போன்ற விடயங்களில் சட்ட ஏற்பாடுகளைச் செய்து இலங்கையில் பலதார மணம் அ-னுமதிக்கப்படும் வகையில் சட்டத்தில் திருத்தங்களைச் செய்யலாம் என குறிப்பிட்ட குழு நீதியமைச்சரிடம் சுட்டிக்காட்டியது.

இதற்குப் பதிலளித்த நீதியமமைச்சர் ‘உங்கள் மார்க்கத்தில், குர்ஆனில் பலதார மணம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தால் நிபந்தனைகளுடம் பலதார மணத்தை அனுபதிப்பது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்கிறேன் என்று உறுதியளித்தார்.

முஸ்லிம் விவாக,விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்கு முன்னாள் நீதியமைச்சர் சட்டத்தரணி அலி சப்ரியினால் வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீனின் தலைமையில் இக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(ஏ.ஆர்.ஏ.பரீல்) விடிவெள்ளி 30-06-2022 பக்கம் 01

Check Also

பர்தா அணிந்த மாணவிகள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள்

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச அளவில் பேசப்படுகின்றது, ஆனால், இன்னும் உள்நாட்டில் பல காரண …

Free Visitor Counters Flag Counter