பல்லினங்கள் வாமும் நாட்டில், இனங்களுக்கு இடையில் பிரிவினை நஞ்சை விதைத்து, தங்களுடைய அற்ப ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதில் அரசியல்வாதிகள் கைதேர்ந்தவர்கள் என்பதற்கு, நமது நாடு மட்டுமே நல்லதோர் உதாரணமாகும்.
இனவாதம், மதவாதம், பிரிவினைவாதம் யாவும் தேர்தல் பிரசாரக் காலங்களில் சூடுபிடித்திருக்கும். இனம், மொழி, மதம் நீதியில் பிரிக்கப்படும் வாக்காளர்கள், துரநோக்கு சிந்தனைகளின்றி வாக்களிப்பர். அதில், பிரிவினைவாதங்களை கக்குவோரே வெற்றிப்பெறுவர்.
கடந்த காலத் தேர்தல்களின் கசப்பான பெறுபேறுகளால், மக்கள் இன்னமும் நடுவீதிகளில் நின்று கொண்டிருக்கின்றனர். வரிசையை குறைப்பதற்கு விடைதேடாது, அந்த வரிசைகளுக்குள் புகுந்து, இனவாதத்தை கக்க முயன்ற முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, துரத்தியடிக்கப்பட்டார். ஆக, இனிமேலும் இனவாதம் எடுபடாது என்பதற்கு, ஆரம்பப்புள்ளி இடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு, குருந்தூர் மலையில் புத்தர் சிலையை வைக்கும் முயற்சி தடுக்கப்பட்டமையை இனவாத கண்ணோடு பார்த்த சரத் வீரசேகர, பெளத்த-சிங்கள மக்களின் இரத்தத்தைச் சூடேற்றும் வகையில் உரையாற்றியிருந்தார். அப்படியான அவரையே, ‘ஹுூ சத்தமெழுப்பி கேலி, கிண்டல் செய்து மக்கள் துரத்தியடித் துள்ளனர்.
அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பவும் ஜனாதிபதியை வீட்டுக்குச் செல்லுமாறும் வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் கோட்டா கோ கம’வை, இனவாதக் கண்கொண்டு பார்த்தவர்கள், “வெளிநாடுகளில் வாழும் புலிகளே, அதன் பின்னணியில் செயற்படுகின்றனர்” என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.
எனினும், இளைஞர், யுவதிகளாகிய தாங்கள் அனைவரும் எவ்விதமான பிரிவினைகளும் இன்றி, ஓரணியில் திரண்டு நிற்கின்றோம் என்பதை, ‘கோட்டா கோ கம’ போராட்டக்காரர்கள் எடுத்து காட்டியுள்ளனர். பிரச்சினைகளின் முக்கியத் துவத்தை பகுத்தறிய வேண்டும். எரிபொருள்களுக்காக சாப்பாடு இன்றி, பல நாள்களாக வரிசைகளில் சகல இனங்களைச் சேர்ந்தவர்களும் எவ்விதமான பேதங்களுமின்றி நிற்கின்றனர்.
அவ்வாறானவர்களிடத்தில் சென்று, இனவாதத்தை கக்க முயலும் சரத் வீரசேகர போன்றவர்களுக்கு, அடுத்தடுத்த தேர்தல்களின் போது, மக்கள் நல்லபாடம் புகட்டுவார்கள்.
மீண்டும், மீண்டும் புலிப்பூச்சாண்டி காட்டுவதும், சிறுபான்மை இனங்களைச் சந்தேகக்கண்கொண்டு பார்க்கும் வகையில் போலியான பிரசாரங்களை முன்னெடுப்பதும் எதிர்காலத்தில் சாத்தியப்படாது. ஏனெனில், தற்போதைய நெருக்கடிகள் யாவும், இனம், மதம், மொழி ஆகியவற்றைப் பார்த்து தனித்தனியாக வரவில்லை; இந்த நெருக்கடிகளில் சகல இனங்களையும் சேர்ந்தவர்களுமே ஒருங்கே பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு, நாட்டு மக்களின் எதிர்காலம் இன்றைய சிறுவர்களே நாளைய பிரஜைகள்; அவர்களின் எதிர்காலம், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முகங்கொடுக்கும் வகையிலான திட்டங்கள் போன்றவற்றை வகுக்காமல், வெறும் பிரிவினைவாதத்தை கக்கியவர்கள் மட்டும் இந்நிலைமைகளுக்கு பொறுப்பாளிகள் அல்ல; இனவெறுப்பு பேச்சுகளை உள்வாங்கி, இரத்தத்தை சூடேற்றிக்கொண்டு, அவர்களின் பின்னால்சென்று, பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு வழிசமைத்தவர்களும் பொறுப்பாளிகள் தான்.
ஆக, கடந்தகால தவுகளை ஒரு படிப்பினையாகக் கொண்டு, எதிர்கால திட்டங்களை வகுத்து, முன்னோக்கி நகர்வதே காலத்தின் தேவையாகும் என்பதை சகலரும் புரிந்து நடத்தலே அவசியமாகும்.
TamilMirror 30/6/22 Page 6