சஹ்ரான் என்னை மூன்று தடவைகள் சந்தித்து காணி தருமாறு கோரினார்

கூரகலவுக்குப் பொறுப்பான நெல்லிகல வத்துகும்புரே தம்மரதன தேரர்

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல்தாரி சஹ்ரான் மூன்று தடவைகள் நெல்லிகலைக்கு வந்து என்னைச் சந்தித்துள்ளார். நெல்லிகலைக்கு அருகில் சஹ்ரானுக்கு நிலையமொன்றினை அமைப்பதற்கு காணி தேவைப்பட்டது. அதற்கான காணியை ஏற்பாடு செய்யுமாறு என்னைக் கோரினார். அதற்கு நான் இடமளிக்கவில்லை. இது பற்றி ஜனாதிபதி ஆணைக்குழுவில் நான் சாட்சியமளித்துள்ளேன் என ஜெய்லானி கூரகலவுக்குப் பொறுப்பான நெல்லிகல வத்துகும்புரே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.

Truth with Chamuditha எனும் யூ டியூப் நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் சமுதித்தவுடனான நேர்காணலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது,

சஹ்ரான் ஓர் அடிப்படைவாதியென நாம் 2016 முதல் அறிந்திருந்தோம். என்றாலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சஹ்ரான் உயிரிழந்த பின்பே அவர் பயங்கரவாதியென அறிந்து கொண்டேன். சிலர் இப்போது சஹ்ரான் பற்றி கூறும் கதைகளைக் கேட்கும்போது எனக்கு சிரிப்பு வருகிறது.

அரசாங்கத்தை பதவியில் அமர்த்துவதற்கோ, பதவியிலிருந்து நீங்குவதற்கோ நான் சாஹ்ரானின் பெயரை பயன்படுத்தவில்லை.

கூரகல பன்சல நிறுவுவதற்கு இராணுவம் உதவியுள்ளது. இதனை முழு நாடும் அறியும். நெல்லிகல பன்சலையை நிறுவி 8 வருடங்கள் ஆகின்றன. கூரகலயில் பன்சலை நிறுவுவதற்கு 15 ஆயிரம் இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

ஒரு டாக்டர் மாத்திரம் சைத்திய நிறுவுவதற்காக ஆயிரம் இலட்சம் ரூபாய் வழங்கினார். இவ்வாறு கூரகலக்கு பொது மக்களே உதவி வழங்கியுள்ளார்கள்.

இந்த நேர்காணலின் முழு விபரம் வருமாறு :

நீங்கள் ‘ஏர்ல் குணசேகரவுடன் இணைந்து புதையல் தோண்டியதாக பரவலாக தெரிவிக்கப்படுகிறதே?

இல்லை ஏர்ல் குணசேகர எனது எதிரி. இதிலிருந்தே தெரிகிறதல்லவா? இந்தக் குற்றச்சாட்டு சோடிக்கப்பட்டதென்று.
நெல்லிகல பன்சலை திட்டத்தை எதிர்த்தவர் அவர். இதுவரை நான் அவருடன் ஒருவார்த்தைகூட பேசியதில்லை.

அப்படியென்றால் இராணுவ தளபதியின் அரசியல் திட்டத்தையா நீங்கள் முன்னெடுக்கிறீர்கள்? அவருடன் ஏன் இந்த நெருங்கிய தொடர்பு?

இராணுவ தளபதி நாளைக்கு அரசியலில் இறங்கினால் நான் அவரிடமிருந்து தூரமாகிவிடுவேன். யார் கூறுவது நான் அவரது அரசியல் திட்டத்தை முன்னெடுப்பதென்று?

நீங்கள் ராஜபக்ஷவினரின் குழுவைச் சேர்ந்தவரல்லவா?

யார் கூறுவது அப்படி? எனது வாழ்க்கையில் என்னை அதிகம் நோகடித்தவர்கள் ராஜபக்ஷாக்கள். நெல்லிகல பன்சலையை நிறுவியபோது ராஜபக்ஷ அரசு எமக்கு ஒரு வருட காலம் மின் இணைப்பை வழங்காமலிருந்தது.

முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்ட முதல் பெளத்த குரு நீங்கள். கூரகலயில் முஸ்லிம் மக்களை விரட்டியடித்தீர்கள்.அப்படித்தானே?

சமுதித்த இப்படிப் பேசவேண்டாம். தெல்தெனிய திகனயில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டபோது யட்டிநுவர பகுதியில் 21 பள்ளிவாசல்களை ஒரு கல்கூட எறியப்படாது பாதுகாப்பு வழங்கியவன் நான். இரவு பகலாக இளைஞர்களுடன் இணைந்து இதற்காக பாடுபட்டேன். முஸ்லிம்களைப் பாதுகாத்தேன்.

நெல்லிகல, கூரகல திட்டங்களுக்காக முஸ்லிம் மக்களின் காணிகளை அபகரித்தீர்கள் அல்லவா?

யார் கூறுவது? நான் முஸ்லிம்களின் காணிகளை பணம் கொடுத்தே வாங்கினேன். இன்று என்னால் காணி உறுதிகளை காண்பிக்க முடியும். முஸ்லிம்கள் எனது தேவையை உணர்ந்து காணியின் பெறுமதியை விட கூடுதலாக விலை கூறி பணம் பெற்றுக்கொண்டார்கள். நான் ஒரு போதும் அவர்களது காணிகளை அபகரிக்கவில்லை. நான் அரச அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ளவில்லை. நான் ஒரு கொடியல்ல. ஒருமரம். எப்போதும் உறுதியாகவே இருப்பேன்… கூரகல திட்டத்தை முன்னெடுக்கும்போது கூரகல மக்களின் விவசாயத்துக்காக குளமொன்றை அமைத்தேன். கூரகலயில் ஒரு வீடு கட்டினேன். அது முஸ்லிம் ஒருவருக்காகும். அவரை அங்கு வசிக்கச் செய்தேன்.

உங்களுக்கு என் ஜி ஓ க்கள் மூலம் பணம் கிடைக்கிறதா?

ஒருபோதும் இல்லை.

ஒரு முறை உங்களுக்கு இரத்தினக்கல் கொத்தொன்று கிடைத்ததாக கூறப்படுகிறது. அது இப்போது எங்கே?

இதனை நீங்கள் அப்பகுதி மக்களிடமே கேட்க வேண்டும். நான் இரத்தினக்கற்களை எனது கண்ணால் கூட காணவில்லை.

நீங்கள் சுகபோக வாழ்க்கை வாழ்வதாக குற்றம் சுமத்தப்படுகிறது. ஏற்றுக்கொள்கிறீர்களா?

இல்லை. நான் துன்பப்படும் மக்களை நேசிப்பவன். அவர்களுக்காகவே சேவை செய்பவன்.

இன்று மக்கள் எரிபொருள் இல்லாமல், சாப்பிடுவதற்கு வசதியில்லாமல் துன்பப்படும்போது கூரகலயில் பாரிய சிங்கம் ஒன்றினை ஏன் நிர்மாணித்தீர்கள்? எங்களுக்கு இப்போது சிங்கம் ஒன்று மட்டும்தான் தேவையா?

கூரகலக்காக நாம் 50 வருடகாலமாக போராட்டம் நடத்தியே வெற்றி பெற்றுள்ளோம். கூரகலயை அரசியல்வாதிகளே தங்களது சுயநலத்துக்காக இதுவரை காலம் பயன்படுத்தி வந்துள்ளார்கள். இது அரசியல் வாதிகளின் பிரச்சினை.

கூரகலயில் சிங்கம் மாத்திரமல்ல தர்ம மண்டபம், சைத்திய, பன்சலை என்றெல்லாம் நிறுவியுள்ளேன். 30 அடி உயரமான சிங்கம் அது. அதற்காக சுமார் 30 இலட்சம் வரையில் செலவிட்டுள்ளேன். இதற்கு இரண்டு இளைஞர்கள் உதவினார்கள். அவர்களது செலவினாலே நிறுவப்பட்டது. எரிவாயு பிரச்சினை ஏற்படுவதற்கு முன்பே இது நிர்மாணிக்கப்பட்டது.

கோல்பேசில் போராடும் இளைஞர்களை ஆதரிப்பவன் நான். என்னிடம் அரசியல் இல்லை. ராஜபக்ஷாக்களின் கூரகல திட்டத்தையே நான் முன்னெடுத்ததாக கூறப்படுவது தவறு. இத்திட்டத்துக்கு அரசாங்கத்திடமிருந்து நான் ஒரு சதம் கூட பெற்றுக்கொள்ளவில்லை. ஒரு சீமெந்து மூடை கூடபெற்றுக்கொள்ளவில்லை. யார் இனவாதத்தை தூண்டிவிட்டு ஆட்சி செய்தார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும். அவர்கள் ஆட்சியிலுள்ளவர்களே.

கூரகல திட்டத்தை நிறுத்தி விடுவதற்கு நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிக்கு அதிகாரமிருந்தது. அதை கோத்தாபய ராஜபக்ஷ செய்யவில்லை. ஒரு தடவை கூரகலக்கு விஜயமும் செய்தார். அவரால் நிறுத்த முடியுமான காலத்தில் நிறுத்தவில்லை.
திகன தெல்தெனிய கலவரத்தை நிறுத்துவதற்கு நான் அங்கு சென்றதற்காக என்னை தேச துரோகி என்றார்கள்.

இன்று கூரகலக்கு சென்று பாருங்கள் நான் அமைத்த வாகன தரிப்பிடத்தில் தான் முஸ்லிம்கள் வாகனங்களை நிறுத்துகிறார்கள். நான் அமைத்த கழிவறைகளையே பயன்படுத்துகிறார்கள். முன்பு முஸ்லிம்கள் தமது கடமைகளுக்காக காடுகளுக்கே சென்றார்கள்.
இன்றும் தப்தர் ஜெய்லானியின் மின்விளக்குகள் பன்சலையின் மின் இணைப்பின் மூலமே எரிகின்றன. நான் ஒரு இனவாதியல்ல.

முஸ்லிம்களின் மரபுரிமை பிரதேசத்தில் கூரகல திட்டத்தை நிர்மாணித்துள்ளீர்கள்?

யார் கூறியது. அபுசாலியே இப்பகுதியை தனது சொந்த இடமாக பாவித்து வந்தார். இந்த இடத்திலே பள்ளிவாசல் நிறுவப்பட்டது. இது ஒரு குடும்பம் ஆட்சி செய்த பிரதேசம். குடும்பத்தின் பிரச்சினையை நாட்டுக்கு கொடுத்துள்ளார்கள். இனவாதப் பிரச்சினையிலிருந்து கூரகலயை விடுவித்ததா நான் செய்த குற்றம். முஸ்லிம்களுக்கு எந்த அநியாயமும் நான் செய்யவில்லை. நாளைக்கென்றாலும் அவர்களுக்கு பள்ளிவாசலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட முடியும்.
எப்போதும் கூரகலயில் இன ஒற்றுமையையும், சக வாழ்வையும் ஏற்படுத்தவதற்கான நடவடிக்கைகளையே முன்னெடுத்துள்ளேன்.

சவேந்திரசில்வா ஜனாதிபதியாவதற்கான முன்னெடுப்புகளையா நீங்கள் மேற்கொள்கிறீர்கள்?

ஒருபோதும் இல்லை. அரசியல் என்னிடம் இல்லை. எந்த அரசியல் லாபங்களையும் நம் பெற்றுக்கொள்ளவில்லை. நான் சுதந்திர பிக்கு.

சஹ்ரான் நெல்லிகலக்கு வருகை தந்து காணி பெற்றுக்கொள்வதற்காக உங்களை அச்சுறுத்தியதாக கூறப்படுகிறதே?

ஜனாதிபதி ஆணைக்குழுவில் நான் 6 மணித்தியாலம் சாட்சியமளித்துள்ளேன். அந்தச் சாட்சியத்தை உங்களால் சவாலுக்குட்படுத்த முடியும்.

சஹ்ரான் அடிப்படைவாதியென 2016இல் நாம் அறிந்துகொண்டிருந்தோம். சஹ்ரான் இறந்த போதே அவர் பயங்கரவாதியென அறிந்து கொண்டேன். சிலர் இப்போது சஹ்ரான் பற்றி கூறும் கதைகளைக் கேட்கும்போது எனக்கு சிரிப்பு வருகிறது. சில பிக்குகள் தமது சுயநலத்துக்காக சஹ்ரானின் பெயரைப் பாவித்தார்கள். சஹ்ரான் கருப்பா? வெள்ளையா என்று தெரியாத சிலர் இவ்வாறு செயற்பட்டார்கள்.

ஆனால் அரசாங்கம் பதவிக்கு வருவதற்கோ, அரசாங்கத்தை பதவியிலிருந்து நீக்குவதற்கோ நான் சஹ்ரானின் பெயரை பயன்படுத்தவில்லை.

3 தடவைகள் சஹ்ரான் என்னைச் சந்தித்துள்ளார். அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் என்னிடமுள்ளன. நெல்லிகலக்கு அருகில் சஹ்ரானுக்கு மத்திய நிலையமொன்றினை அமைப்பதற்கு காணியொன்று தேவைப்பட்டது. அவ்வாறு மத்திய நிலையமொன்றினை அமைப்பதற்கு நான் இடமளிக்கவில்லை. முதலில் அவர் எம்முடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். இரண்டாவது தடவையும் இவ்வாறே பேசினார். மூன்றாவது தடவை என்னுடன் தொலைபேசியூடாக உரையாடினார்.
நான் சஹ்ரானுடன் இவ்வாறு உரையாடியதற்காக எனக்கு பின்பு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று 10 நாட்களின் பின்பும் எனக்கு கொலை அச்சுறுத்தல் கடிதமொன்று கிடைத்தது. பொலிஸ் மா அதிபர், இராணுவ தளபதி மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கும் அக்கடிதத்தின் பிரதிகளை வழங்கியுள்ளேன். சமுதித, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளையே கண்டுபிடிக்காதவர்கள் எனது விவகாரம் பற்றி தேடிப்பார்ப்பார்களா?

உங்களுக்கு இன்னும் கொலை அச்சுறுத்தல் உள்ளதா?

அதுபற்றி எனக்குத் தெரியாது. இன்னும் எனக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழு மூலம் இரு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எனது பாதுகாப்புக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

யாரெல்லாம் உங்களுக்கு எதிராக இருக்கிறார்கள்?

இந்நாட்டில் இனவாதம், மத வாதத்தை தூண்டி ஆட்சிக்கு வருவதற்கு முயற்சிப்பவர்கள் எனக்கு எதிராக இருக்கிறார்கள். இந்நாட்டின் சம்பிரதாய முஸ்லிம்கள் மீது நான் மிகவும் அன்பு செலுத்துகிறேன். அடிப்படைவாதத்தை விதைக்கும், தேசியத்தை மதிக்காத மக்கள் என்னை எதிர்க்கிறார்கள்.

அரேபியாவில் இருந்து வந்த முஸ்லிம்கள் இலங்கைப் பெண்களை மணந்தார்கள். பிறந்த பிள்ளைகளுக்கு சிங்கள குடும்பப் பெயருடன் கூடிய பெயர்களை சூட்டினார்கள். சம்பிரதாய முஸ்லிம்களின் பெயர்கள் இவ்வாறே அமைந்துள்ளன. அந்தப் பிள்ளைகள் சிங்கள தாய்மார்களின் பாலை அருந்தியவர்கள். இந்த சம்பிரதாய முஸ்லிம்கள் மீது நான் அன்பு செலுத்துகிறேன். அவர்களுக்காக நான் என்றும் முன்நிற்பேன்.

முஸ்லிம் அடிப்படைவாதிகள் உள்ளனர். பதியுதீன்கள் இருக்கிறார்கள். விஷேடமாக அசாத்சாலி, ரியாஸ்சாலி போன்றவர்கள். ரியாஸ் சாலி செலவுகள் செய்து என்னை எதிர்க்கிறார். இதற்கான ஆதாரங்கள் என்னிடமுள்ளன. அடிப்படைவாத முஸ்லிம்கள் எனது முதன்மையான எதிரிகள்.

கூரகலக்காக நான் அரசியல்வாதிகளிடமோ, அரசாங்கத்திடமோ எவ்வித உதவியும் பெற்றுக்கொள்ளவில்லை. பலாங்கொடையைச் சேர்ந்த எம்.பி.யொருவர் வழங்கிய 15 இலட்சம் ரூபாவை நான் நிராகரித்தேன்.

நான் நெல்லிகல பன்சலையை நிர்மாணித்தபோது ஹலீம் என்னும் பெயருடைய முஸ்லிம் எம்.பி யொருவர் 15 இலட்சம் பணம் தந்தார். நான் கடிதம் மூலம் அதனையும் நிராகரித்தேன். இன்னொரு அரசியல்வாதி 25 இலட்சம் தந்தார். அதனையும் கடிதம் மூலம் நிராகரித்தேன். அந்த மூன்று கடிதங்களும் என்னிடமுள்ளன என்றார்.

ஏ.ஆர்.ஏ.பரீல் – விடிவெள்ளி பத்திரிகை 30/06/2022 பக்கம் 01

Check Also

பர்தா அணிந்த மாணவிகள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள்

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச அளவில் பேசப்படுகின்றது, ஆனால், இன்னும் உள்நாட்டில் பல காரண …

Free Visitor Counters Flag Counter