உலமா சபையின் தலைமைப் பதவியைத் தொடர்வாரா ரிஸ்வி முப்தி?

“அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் பதவியினை பொறுப்பேற்பது தொடர்பான இறுதித் தீர்மானத்தினை ஏழு நாட்களுக்குள் அறிவிப்பேன். இப்பதவி எனக்கு பாரிய சுமையானதொன்றாகும். இந்தத் தெரிவு தொடர்பில் எனது குடும்பத்தினருடனும், நண்பர்களுடன் கலந்துரையாடிய பின்னரே, அதனைப் பொறுப்பேற்பது தொடர்பிலான இறுதி முடிவினை அறிவிப்பேன்”

கடந்த சனிக்கிழமை (18/6/22) கண்டியில் நடைபெற்ற அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிர்வாகத் தெரிவின் பின்னர் ஏழாவது தடவையாக மீண்டும் தலைவராக தெரிவுசெய்யப்பட்ட அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி, தான் ஆற்றிய உரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

சுமார் 8,000க்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஜம்இய்யத்துல் உலமாவின் நிர்வாகத் தெரிவு அதன் யாப்பின் பிரகாரம் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கொரு முறை நடைபெறுவது வழமையாகும். இதன் அடிப்படையில் நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியிலும் ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுக்கூட்டம் கண்டி, கட்டுகலை ஜும்ஆ பள்ளிவாசலில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.

இந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள 139 கிளைகளுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பிவைக்கப்பட்டன. எனினும் இந்த பொதுக் கூட்டம் தொடர்பில் எந்தவொரு ஊடக அறிக்கையோ, ஊடகங்களுக்கான அழைப்பிதலோ ஜம்இய்யத்துல் உலமாவினால் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்றே கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுக் கூட்டமும் ஊடகங்களுக்கு மறைக்கப்பட்டது. எனினும், அப்போது ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராக றிஸ்வி முப்தி தெரிவுசெய்யப்பட்டதற்கு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராட்டினார் என்ற செய்தியின் மூலமே குறித்த கூட்டம் நடைபெற்ற விடயம் முஸ்லிம் சமூகத்திற்கு தெரியவந்தமை இவ்விடத்தில் நினைவுபடுத்தத்தக்கதாகும்.

எப்படியாயினும், இந்த வருடத்திற்கான பொதுக் கூட்டம் தொடர்பான தகவல் சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து, ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமைத்துவ மாற்றத்தின் அவசியம் தொடர்பிலான பதிவுகள் பேஸ்புக் மற்றும் வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடங்களில் பரப்பப்பட்டன. குறிப்பாக ரிஸ்வி முப்தி அப் பதவிக்குப் பொருத்தமற்றவர் எனவும் இளம் தலைமுறையைச் சேர்ந்த ஒருவருக்கு அப் பதவி வழங்கப்பட வேண்டும் என்றும் பலரும் கருத்துக்களை முன்வைத்திருந்தனர். மறுபுறம் அனுபவம், மொழியாற்றல் உள்ளிட்ட மேலும் பல தகைமைகளில் அடிப்படையில் ரிஸ்வி முப்தியே அப் பதவியைத் தொடர வேண்டும் என்ற கருத்தை மற்றொரு சாரார் வலியுறுத்தினர்.

இவற்றுக்கு மத்தியிலேயே இக்கூட்டம் திட்டமிட்ட படி சனிக்கிழமை காலை ஆரம்பிக்கப்பட்டது. முதலாவது அமர்வில் செயலாளர் அறிக்கை, பொருளாளர் அறிக்கை மற்றும் யாப்பு திருத்தம் போன்ற நிகழ்வுகள் பிரதானமாக இடம்பெற்றன.

எனினும் யாப்புத் திருத்தத்தின் போது மாத்திரம் சிறு சலசலப்பொன்று சபையில் ஏற்பட்டதாகவும் எனினும் இத்திருத்தங்கள் சபையோரினால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது.

மூத்த உலமாவான அஷ்ஷெய்க் ஏ.சீ. அகார் முஹம்மத், சுகயீனம் காரணமாக தற்போது ஓய்விலுள்ளமையினால் கடந்த பொதுக் கூட்டத்தில் அவருக்காக உருவாக்கப்பட்ட தலைவருக்கு சமனான அதிகாரங்களுடனான ‘பிரதித் தலைவர்’ எனும் பதவி இந்த பொதுக் கூட்டத்தில் நீக்கப்பட்டது.

அத்துடன் அரசியல் கட்சிகளின் செயற்குழுவினை ஒத்ததாக ஜம்இய்யத்துல் உலமாவின் நிர்வாகக் குழுவின் எண்ணிக்கையும் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக எம்.எச்.எம். அஷ்ரப் இருந்த போது காணப்பட்ட அதியுயர் பீட உ றுப்பினர்களின் எண்ணிக்கையான 23, தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீமின் வருகையினை அடுத்து 99 ஆக அதிகரிக்கப்பட்டது.

இதேபோன்று இது வரை காலமும் 33ஆக காணப்பட்ட ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை இந்த முறை 51ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னர் 25 பேர் தேர்தல் மூலமும் எட்டுப் பேர் நியமனம் ஊடாகவும் ஜம்இய்யத்துல் உலமாவின் செயற்குழுவிற்கு தெரிவு செய்யப்படுவர். எனினும், புதிய யாப்பின் பிரகாரம் 30 பேர் தேர்தல் மூலமும் 21 பேர் நியமனம் ஊடாகவும் நியமிக்கப்படவுள்ளனர். இவை இரண்டுமே யாப்புத் திருத்தத்தில் இடம்பெற்ற முக்கிய மாற்றங்களாகும்.
இதேவேளை, அஸர் தொழுகையினைத் தொடர்ந்து புதிய நிர்வாகத் தெரிவு ஆரம்பமாகி இரவு 9.00 மணி வரையும் நீடித்தது.

இந்த நிர்வாகத் தெரிவு வாக்கெடுப்பிற்கு முன்னதாக மத்திய குழு முன்னிலையில் றிஸ்வி முப்தி விசேட உரையொன்றினை நிகழ்த்தினார். இதன்போது விசேட வேண்டுகோளொன்றினையும் முன்வைத்திருந்தார்.

அதாவது, புதிய நிர்வாகத்தில் தன்னை மீண்டும் தலைவராக தெரிவுசெய்ய வேண்டாம் என்பதே அந்த வேண்டுகோளாகும். எனினும், குறித்த வேண்டுகோளினையும் மீறி ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவராக அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி மீண்டும் தெரிவுசெய்யப்பட்டார்.

இதேவேளை, செயலாளராக அஷ்ஷெய்க் எம். அர்கம் நூராமிதும், பொருளாளராக அஷ்ஷெய்க் ஏ.ஏ.அஹ்மத் அஸ்வரும் தெரிவு செய்யப்பட்டனர். கடந்த 15 வருடங்களுக்கு மேலாக ஜம்இய்யத்துல் உலமாவின் பொருளாராக செயற்பட்ட ஏ.எல்.எம். கலீல் மௌலவி, குறித்த பதவியிலிருந்து ஓய்வுபெறுவதாக இம்முறை அறிவித்திருந்தார்.
இதனை அடுத்தே, குறித்த பதவிக்கு அஹ்மத் அஸ்வர் தெரிவுசெய்யப்பட்டார். இவர், எகிப்தின் அல் – அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டத்தினை நிறைவுசெய்துள்ளார்.

இதேவேளை, ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர்கள் என முஸ்லிம் சமூகத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட அஷ்ஷெய்க் ஏ.சீ அகார் முஹம்மத் மற்றும் அஷ்ஷெய்க்; எம்.எச்.எம். யூஸுப் முப்தி ஆகியோர் இந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. எனினும், அவர்கள் இருவரும் ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழுவின் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த செயற்குழுவில் உப தலைவராக செயற்பட்ட அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவரான எஸ்.எச். ஆதம்பாவா, இம்முறை குறித்த பதவிக்கு தெரிவு செய்யப்படவில்லை.

அதேபோன்று, கடந்த செயற்குழுவில் உப செயலாளராக செயற்பட்ட அஷ்ஷெய்க் எம்.எம்.எம். முர்சித் முழப்பரும் இம்முறை குறித்த பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டவில்லை. அவரின் வெற்றிடத்திற்கு அஷ்ஷெய்க் ஏ.சீ.எம். பாசீல் ஹுமைதி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த செயற்குழுவில் உறுப்பினர்களாக இருந்த ஐந்து பேர் புதிய செயற்குழுவிற்கான ்தேர்தலில தெரிவுசெய்யப்படவில்லை. எனினும் இவர்கள் நியமன உறுப்பினர்களாக செயற்குழுவிற்கு உள்வாங்கப்படலாம்.

கடந்த செயற்குழுவில் உறுப்பினர்களாக செயற்படாத அஷ்ஷெய்க் எம். ரிபாஹ், அஷ்ஷெய்க் என்.டீ.எம். லரீப் மற்றும் அஷ்ஷெய்க் ஏ.எல். அப்துல் கப்பார் ஆகியோர் புதிய செயற்குழுவில் உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் தெரிவினை அடுத்து மத்திய சபையில் உரையாற்றிய அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி, “ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர்களாக தெரிவுசெய்யப்படக் கூடிய உமர்தீன் மௌலவி உள்ளிட்ட பலர் இங்குள்ளனர். அவர்களை தெரிவுசெய்திருக்க முடியும். எனினும் இப்பதவியினை பொறுப்பேற்பது தொடர்பான இறுதித் தீர்மானத்தினை ஏழு நாட்களுக்குள் அறிவிப்பேன்” என்றார்.

கட்டுகலை ஜும்ஆ பள்ளிவாசலில் றிஸ்வி முப்தி அறிவித்த எழு நாட்களுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மாத்திரமே உள்ளன. தான் இப் பதவியில் தொடர்வதா இல்லையா என்ற தனது தீர்மானத்தை அவர் பகிரங்கமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை உள்ளுர் மட்டத்திலும் சரி தேசிய மட்டத்திலும் சரி நிறுவனங்களின் தலைமைப் பதவிகளில் பல வருடங்களாக ஒரே நபர்களே தொடரும் நிலை நீடிக்கிறது. இது குறித்து சமூகத்தில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந் நிலையில் மேற்படி நிறுவனங்கள் பொருத்தமான நபர்களை, இளம் தலைமுறையிலிருந்து தெரிவு செய்து முக்கிய பதவிகளில் அமர்த்த வேண்டும். அதன் மூலமே நவீன சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் மேற்படி அமைப்புகளைக் கட்டியெழுப்பலாம்.

றிப்தி அலி விடிவெள்ளி பத்திரிகை – பக்கம் 05 – 23/6/2022

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter