எரிபொருள் நெருக்கடிக்கு, பிரதமர் ரணில் வளைகுடா நாடுகளை இன்னும் நாடாமல் இருப்பது ஏன்?

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம். ஸுஹைர்

எரிபொருள் மற்றும் எரிவாயு தேவைக்காக நாடளாவிய ரீதியில் மக்கள் பெரும் கஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளனர். அதேநேரம் இந்த எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவு மற்றும் உணவுப் பொருட்களை ஏற்றி இறக்குவதிலும் பயணிகள் சேவையிலும் போக்குவரத்துதுறை பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது. இவ்வாறான மனிதாபிமான நெருக்கடிக்கு நாடும் மக்களும் முகம் கொடுத்துள்ள சூழலில் எரிபொருள் மற்றும் எரிவாயுவை அதிகளவில் உற்பத்தி செய்யும் சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் தலைவர்களுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரடியாகத் தொடர்பு கொண்டு இப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி செய்யாதிருப்பதேன் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். ஸுஹைர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இப்பதவியை ஏற்று தற்போது ஒரு மாத காலம் கடந்துள்ள போதிலும் கூட அவர் இப்பிரச்சினைக்கு தீர்வு தேடும் நோக்கில் சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளுடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்ததாகத் தெரியவில்லை. அதிலும் குறிப்பாக நாட்டுக்குத் தேவையான அத்தியாவசிய எரிபொருளை மனிதாபிமான அடிப்படையிலோ அல்லது கடன் அடிப்படையிலோ பெற்றுக்கொள்வதற்கான உதவிகளைக்கூட அவர் நாடாதுள்ளார்.

வெளிநாட்டு முகவர்களை பணிக்கமர்த்துவதற்கு பதிலாக, இந்தியா தொடர்ச்சியாக சரியான நேரத்தில் வழங்கிவரும் உதவிகளுக்கு மேலதிகமாக மத்திய கிழக்கில் உள்ள தனது சகாக்களுடனும் பிரதமர் பேசி இருக்க வேண்டும். அவர்களே உலகில் தரமான எரிபொருளை பாரிய அளவில் உற்பத்தி செய்பவர்களும் ஏற்றுமதி செய்பவர்களுமாவர். நிச்சயமாக அவர்கள் நீண்டகால கடன் அடிப்படையில் இலங்கைக்கு உதவி செய்வார்கள். அதுமட்டுமன்றி முறையாக இவ்விடயத்தைக் கையாண்டால் இன்றைய நிலையில் இலங்கைக்கு மிகவும் அவசியமாகத் தேவைப்படும் முதலீட்டு திட்டங்களுக்கும் அவர்கள் உதவுவர்.

மிகுந்த அனுபவமுள்ளவரான பிரதமர் நாடு மிகவும் சிக்கலான சவால்களுக்கு முகம் கொடுத்துள்ள சூழ்நிலையில் மே மாதம் 13ஆம் திகதி ஆறாவது தடவையாகவும் இப்பதவியை பொறுப்பேற்றுள்ளார். பொருளாதார நெருக்கடியின் விளைவான கோபத்தாலும் பசியாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் கண்ணீர் அதிகரித்து வருகின்ற போதிலும் அதனைத் தடுக்க மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களோடு பேசி உதவிகளைப் பெற்றுக்கொள்ள 40 நாட்கள் அவருக்கு தேவை இல்லை.

மக்களின் கண்ணோட்டத்தில் நெருக்கடியின் அகோரத்தைப் புரிந்து கொள்ளவும், நாட்டிலுள்ள எல்லாக் குடும்பங்களினதும் வாழ்வியல் இருப்பு மற்றும் அதன் உடனடி சரிவு என்பனவற்றைப் புரிந்துகொள்ளவும் பிரதமர், இலத்திரனியல் ஊடகங்களின் தினசரி செய்தித்தொகுப்புகளை, குறிப்பாக சியத்த அதன் டெலிவெக்கிய நிகழ்ச்சி, சிரச மற்றும் அதன் தவஸ நிகழ்ச்சி மற்றும் நியூஸ்லைன் என்பனவற்றைப் பார்வையிட வேண்டும். இதனைச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.

எரிபொருள் மற்றும் எரிவாயு என்பனவற்றை தங்குதடையின்றி விநியோகம் செய்ய அரசாங்கம் தவறியதே அப்பாவி குடும்பங்கள் முகம் கொடுக்கும் வரலாறு காணாத துன்பங்களுக்கு வெளிப்படையான காரணமாகும். இந்த எரிபொருள் நெருக்கடியுடன் பின்னிப்பிணைந்ததே மற்ற எல்லா பிரச்சினைகளுமாகும். அரசியல் சாசன மற்றும் அரசியல் பிரச்சினைகள் கூட அதை பின் தொடர்ந்தே வருகின்றன. எரிபொருள் பிரச்சினையும் அதன் விளைவாக ஏற்படும் உணவுப் பிரச்சினையும் திறமையான முறையில் கையாளப்படாவிட்டால் இந்த அரசும் ஜனாதிபதியும் கூட நிலைத்திருக்க முடியாது.

இலங்கைக்கு கிடைக்கக்கூடிய ஆகக்கூடிய அந்நியச் செலாவணி வெளிநாட்டு வேலைவாய்ப்பு மூலம் கிடைக்கப்பெறுகின்றது. இது சராசரியாக வருடமொன்றுக்கு ஏழு பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது. அதில் 95 வீதம் மத்திய கிழக்கில் பணியாற்றும் இலங்கையர்களிடம் இருந்தே கிடைக்கின்றது. தரமான எரிபொருளும் எரிவாயுவும் கூட மத்திய கிழக்கில் இருந்தே பெற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசுகள் இந்நாடுகளுடன் நெருக்கமான நட்புறவுகளைப் பேணத் தவறியமை மன்னிக்க முடியாதவையாகும்.

தற்போதைய அமைச்சரவையில் இவ்விடயம் தொடர்பில் அறிவுள்ள ஒருவர் இருக்கின்றார். சவூதி அரேபியாவின் பெற்றோலிய மற்றும் கனிய வள பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். இப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் பெரும்பாலான வளைகுடா நாடுகளில் பெற்றோலிய மற்றும் கனிய வளத்துறையில் முக்கிய உயர் பதவிகளை வகிக்கின்றனர். இலங்கை அமைச்சரவையில் உள்ள ஒரேயொரு அரபு பேசத்தெரிந்த இவரை அவர் பதவியேற்ற சில தினங்களில் வளைகுடா நாடுகளுக்கு அனுப்பி பேச்சுவார்த்தைகளை நடாத்தி எரிபொருள் மற்றும் எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்திருக்கலாம்.

இவ்வாறான ஒருவருக்கு பெற்றோலிய விநியோகத்துறை அமைச்சை வழங்குவதற்கு பதிலாக சுற்றாடல் துறை வழங்கப்பட்டுள்ளது. இதைவிட இன்னும் மோசமான விடயம் என்னவென்றால், வளைகுடாவில் இருந்து டொலர்களைப் பெற்றுக்கொள்வதற்கு பதிலாக, முறையற்ற விதத்தில் ஒரு வெளிநாட்டவரான மாலைதீவின் அரசியல்வாதியும் அந்நாட்டின் சபாநாயகருமான நஷீட் அஹமட்டை அதற்காக நாடியதுதான். இலங்கை எரிபொருள் உற்பத்தி நாடுகளுடன் நெருக்கமான மற்றும் நேரடியான உறவுகளை வளர்த்துக்கொள்ள வேண்டிய தருணத்தில் அந்நாடுகளை விட்டும் தூர விலகி நிற்கின்றது.

இலங்கையில் பல நண்பர்களைக் கொண்டுள்ள மாலைதீவின் பாராளுமன்ற சபாநாயகர் நஷீட், 2012 இல் மாலைதீவின் ஜனாதிபதி பதவியில் இருந்து ராஜினாமா செய்தவர். அந்நாட்டின் குற்றவியல் நீதிமன்ற சிரேஷ்ட நீதிபதி ஒருவரை கைது செய்வதில் சம்பந்தப்பட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டு வலுவடைந்ததை அடுத்து ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பின் காரணமாகவே அவர் இராஜினாமா செய்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் மாலைதீவு பொலிஸார் மற்றும் இராணுவத்தின் பலவந்தம் காரணமாகவே தான் பதவியை இராஜினாமா செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதாக நஷீட் பின்னர் அறிவித்தார். இதுசம்பந்தமாக பொதுநலவாயத்தின் ஆதரவுடனான ஒரு குழு விசாரணைகளை நடத்தியது. அவ்விசாரணையின் முடிவில் நஷீட் நீதிபதியின் கைது மற்றும் சிறைவாசம் என்பனவற்றை அடுத்து ஏற்பட்ட மக்கள் கொந்தளிப்பின் காரணமாக தாமாகவே பதவியை இராஜினாமா செய்தார் என்று உறுதி செய்யப்பட்டது. தான் நிர்ப்பந்தம் காரணமாகத் துப்பாக்கி முனையில் இராஜினாமா செய்ய வைக்கப்பட்டதாக நஷீட் கூறியதை இவ்விசாரணைக்குழு நிராகரித்திருந்தது.

இங்கே எழுகின்ற பிரதான கேள்வி மத்திய கிழக்கு செல்வாக்குள்ள இலங்கை அமைச்சர் நஸீர் அஹமட்டுக்கு பதிலாக இலங்கையின் டொலர் பிரச்சினையைத் தணிக்க, தனது செயற்பாட்டு அறிக்கையை இன்னமும் பிரதமரிடம் கையளிக்காத நிலையில் முரண்பாடான கருத்தை இலங்கையின் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் தெரிவித்த மேலைத்தேச ஆதரவாளரான மாலைதீவு சபாநாயகர் நஷீட் அஹமட்டுக்கு ஏன் முன்னுரிமை அளிக்கப்பட்டது என்பதே. இவ்விடயம் பதில்களை விட கேள்விகளாலேயே நிரம்பி உள்ளது. ஒரு வேளை காலம் மட்டுமே இதற்கு பதில் அளிக்க முடியும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடிவெள்ளி பத்திரிகை -பக்கம் 04 – 24/6/2022

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter