பஞ்ச அபாயத்துக்கு வித்திட்ட ரஷ்யா!

மூலப்பொருள்‌ கிடைக்குமாயின்‌ அதிலிருந்து பிரித்துப்பிரித்து இதரப்‌ பொருட்களை உற்பத்திச்‌ செய்வதன்‌ ஊடாக ஏகநேரத்தில்‌ பலருடைய பல்வகையான தேவைகளையும்‌ பூர்த்தி செய்துக்கொள்ள முடியும்‌. ஆனால்‌, முடிவுப்பொருளை மட்டுமே நம்பியிருப்பது, கடன்தொகை எகிறிகொண்டே செல்லும்‌. தேவைகளும்‌ அதிகரித்‌துக்கொண்டே செல்லும்‌.

நமது நாட்டைப்‌ பொறுத்தவரையில்‌ எரிபொருள்‌ பிரச்சினை பாரிய தலையிடியாக இருக்கின்றது. அந்த வரிசைகள்‌ நீண்டு கொண்டே செல்கின்றன. பெற்றோல்‌ அல்லது டீசலை இறக்குமதி செய்வதிலேயே அரசாங்கம்‌ கூடுதல்‌ கவனம்‌ செலுத்திக்கொண்டிுக்கின்ற து.

எரிபொருளின்‌ மூலப்பொருளான மசகு எண்ணெயை இறக்குமதி செய்து, சுத்திகரிக்கும்‌ முறைமையை சீர்படுத்தினால்‌, அவற்றிலிருந்து மண்ணெண்ணெய்‌, தார்‌ உள்ளிட்ட இன்னும்‌ இதர பொருட்களை உற்பத்தி செய்துக்கொள்ளலாம்‌. இவை, ஏககாலத்தில்‌ பல தேவைகளை பூர்த்திச் செய்வதாய்‌ அமையும்‌.

இதனிடையே உலகில்‌ பஞ்சம்‌ ஏற்படும்‌ அபாயத்துக்கு ரஷ்யா கொண்டு செல்கின்றது என ஐரோப்பிய ஒன்றியம்‌ எச்சரித்துள்ளது. இலங்கையும்‌ பஞ்சத்தின்‌ விளிம்பிலேயே நின்று கொண்டிருக்கின்றது. தற்போதைய நிலைமை, இன்னும்‌ இரண்டொரு வாரங்களுக்கு நீடிக்குமாயின்‌ பஞ்சத்தை தடுக்கமுடியாது.

கருங்கடலை முற்றுகையிட்டுள்ள ரஷ்யா, உக்ரேனில்‌ இருந்து தானியக்‌ கப்பல்களை வெளியே செல்லவிடாமல்‌ தடுத்துவருவதாகக்‌ குற்றஞ்சாட்டியுள்ள அவ்வமைப்பின்‌ வெளியுறவுத்‌ துறை அமைச்சர்‌ ஜோசப்‌ போரெல்‌, இது உலக உணவுப்‌ பாதுகாப்புக்கு பெரும்‌ அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்றார்‌.

ரஷ்யா, உக்ரேன்‌ போர்‌, இலங்கையின்‌ மீதும்‌ நேரடியான தாக்கத்தை செலுத்திக்கொண்டுதான்‌ இருக்கிறது. இங்கு எப்பக்கத்துக்கு ஆதரவளிப்பது என்பது முக்கியமானதாகும்‌. ரஷ்யாவுக்கு ஆதரவளித்தால்‌, அமெரிக்கா முரண்பட்டுக்கொள்ளும்‌, உக்ரேனுக்கு ஆதரவளித்தால்‌, இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடனான உறவில்‌ ஓரளவுக்கேனும்‌ விரிசல்‌ ஏற்படும்‌. இன்றேல்‌, அவ்வாறான நாடுகளின்‌ கோபத்துக்கு ஆளாகநேரிடும்‌. இது, கிடைக்கும்‌ உதவிகளையும்‌ கிடைக்காமல்‌ செய்துவிடும்‌.

நாட்டின்‌ நெருக்கடிகளை உள்நாட்டு நெருக்கடியாக மட்டுமே கவனத்தில்‌ எடுத்தோமெனில்‌, தீர்வே கிடைக்காது. சர்வதேச இராஜதந்திரத்துக்குள்ளும்‌ சென்று ஆராயவேண்டும்‌. தற்போது உதவிக்கரம்‌ நீட்டிக்கொண்டிருக்கும்‌ நாடுகளின்‌ கைகளைக்‌ ‘கடித்து’விடக்கூடாது. அதேபோல, ஏனைய நாடுகளின்‌ உதவி, ஒத்துழைப்புகளையும்‌ பெற்றுக்கொள்ள காய்நகர்த்த வேண்டும்‌.

நாட்டின்‌ பொருளாதார நெருக்கடி ஒவ்வொருவரையும்‌ வாட்டி வதைத்துக்கொண்டு இருக்கின்றது. ஆகையால்‌, தேவைக்கு அதிகமாக அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைத்துக்கொள்ளாமல்‌ மற்றையவர்களுக்கும்‌ தேவைப்படும்‌ என்ற நல்லெண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்‌. பதுக்கி வைத்திருந்து கூடுதல்‌ விலைக்கு விற்பனைச்‌ செய்ய திட்டமிட்டிருக்கும்‌ முதலாளிமார்களே!

இது பண்டிகைக்காலம்‌ அல்ல; பட்டிணிக்காலம்‌ என்பதை நினைவில்‌ கொள்க. பட்டிணிச்சாவுக்கு உலகமே முகங்கொடுக்கபோகும்‌ இந்தக்காலத்தில்‌, எந்தப்பொருளாக இருந்தாலும்‌ வீணாக்காமல்‌, தத்தமது தேவைக்காக மட்டுமே பயன்படுத்திக்கொள்ள வேண்டும்‌. அதனூடாகவே, ஓரளவுக்கு சமாளித்துக்கொண்டு செல்லமுடியும்‌ என்பதை சகலரும்‌ நினைவில்‌ கொள்ளவேண்டும்‌.

TamilMirror 21-06-2022-Page 06

Check Also

பர்தா அணிந்த மாணவிகள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள்

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச அளவில் பேசப்படுகின்றது, ஆனால், இன்னும் உள்நாட்டில் பல காரண …

Free Visitor Counters Flag Counter