அது கடந்த மே 27 ஆம் திகதி வெள்ளிக் கிழமை. “மகள்…. கடைக்கு போய் கோழி இறைச்சி வாங்கிட்டு வாங்க…” என ஒரு தொகை பணத்தை சிறுமி ஆயிஷாவிடம் அவளது தாய் கொடுத்தனுப்பினார். அதன்படி சிறுமி ஆயிஷாவும் வீட்டிலிருந்து 200 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள கோழி இறைச்சிக் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது நேரம் முற்பகல் 10.00 மணிக்கும் 10.30 மணிக்கும் இடைப்பட்டதாக இருந்திருக்கும்.
கோழி வாங்கச் சென்ற ஆயிஷா வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இவ்வளவு நேரம் என்ன செய்கிறாள் என யோசித்தவாறு, ஆயிஷாவின் தாயார் கோழிக் கடை நோக்கி சென்றுள்ளார். போகும் வழியிலும் ஆயிஷாவை அவர் காணவில்லை. அதனையடுத்து கோழிக் கடை வரை சென்று விசாரித்த போது, 9 வயதான அந்த சிறுமி, கோழிக் கடைக்கு வந்து கோழி இறைச்சியை வாங்கிச் சென்றுவிட்டதாக கடைக்காரர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ஆயிஷாவின் தாயார் கலவரமடைந்துள்ளார். ‘மகள் எங்கே போனாள்’ என யோசிப்பதற்குள் பலரிடம் அவளைக் கண்டீர்களா என விசாரிக்கலாயினார். இதையடுத்து ஆயிஷாவைக் காணவில்லை என்ற கதை ஊரெங்கும் பரவியது.
ஆம், சம்பவம் நடந்த பண்டாரகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அட்டுலுகம எனும் அந்த முஸ்லிம் கிராமத்தை தாண்டியும் தகவல் பரவியது. அனைவரும் அந்த சின்னஞ் சிறு சிறுமியை தேடலாயினர். எந்த தகவல்களும் கிடைக்கவில்லை.
இவ்வாறான பின்னணியிலேயே, ஆயிஷாவின் தாயும், தந்தையும் தமது இரண்டே மாதங்களான கைக் குழந்தையுடன், பண்டாரகம பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடளிக்க சென்றனர். அப்போது நேரம் மாலை 4.00 மணியை கடந்திருந்துள்ளது.
பண்டாரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.பி. ராஜபக்ஷ அப்போது பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்துள்ளார். பொலிஸ் பொறுப்பதிகாரியை நேரடியாகவே சந்தித்த ஆயிஷாவின் தாய் ‘சேர் கோழி இறைச்சி கடைக்கு சென்ற எனது மகளை காணவில்லை, எனது மகளை தேடித்தாருங்கள்” என கதறியழுதுள்ளார்.
முற்பகல் வேளையிலிருந்து தேடுவது, இன்னும் எந்த தகவலும் இல்லாமல் இருப்பது தொடர்பில் முறைப்பாட்டின் போது அறிந்துகொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரி, நிலைமையின் பாரதூரத்தை உணர்ந்து உடன் செயற்படத் தொடங்கினார்.
தனது உயர் அதிகாரிகளான களுத்துறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சரத் குமாரவுக்கும் பாணந்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சமன் வெதகேவுக்கும் உடனடியாக அறிவித்துள்ள அவர், நேரடியாக களத்திலிறங்கி அட்டுலுகம பகுதிக்கு தனது குழுவுடன் சென்றுள்ளார்.
அட்டுலுகம பகுதியில் சிறுமி ஆயிஷாவின் வீடு அமைந்திருந்த பெரிய பள்ளிவாசலை அண்மித்த பகுதியிலிருந்து, அவர் இறைச்சி வாங்க சென்ற கோழிக் கடை வரையிலான பகுதியை பொறுப்பதிகாரி நோட்டமிட்டுள்ள நிலையில், கோழிக் கடையை அண்மித்து இருந்த சி.சி.ரி.வி. ஒன்றில் பதிவான காட்சிகளை நேரடியாகவே பரீட்சித்துள்ளார். அதில், ஆயிஷா கோழிக் கடைக்குள் சென்று இறைச்சி கொள்வனவு செய்துவிட்டு திரும்புவது தெளிவாக பதிவாகியிருந்த நிலையில், அதன் பிறகே அவருக்கு ஏதோ நடந்திருக்க வேண்டும் எனும் முடிவுக்கு வரும் பொறுப்பதிகாரி விசாரணைகளை விரிவு படுத்தினார்.
விபரங்களை தனது உயர் அதிகாரிகளுக்கு அவர் அறிவிக்கவே, உடனடியாக களுத்துறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் சரத் குமார, தனது நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் களுத்துறை மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் ஒலுகலவின் கீழான சிறப்புக் குழுவொன்றினையும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சமன் வெதகேயின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் வலய குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சமில திஸாநாயக்க தலைமையிலான குழுவினரையும் விசாரணைகளுக்காக அட்டுலுகம பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
விசாரணையாளர்கள் கோழி இறைச்சிக் கடைக்கு அருகே உள்ள சி.சி.ரி.வி கெமராவை பரீட்சித்த போது, சிறுமி இறைச்சியை வாங்கிய பின்னர் அங்கிருந்து திரும்பும் சந்தர்ப்பத்தில் அப்பாதையால் பயணித்த வேன் ஒன்று தொடர்பில் அவதானம் திரும்பியது. எனினும், அந்த வேன் வர்த்தக நிலையங்களுக்கு பொருட்களை விநியோகிக்கும் பிலியந்தலை பகுதியை சேர்ந்தது என்பது உடனடியாக முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் தெரிய வந்தது.
இந் நிலையில் மே 27 ஆம் திகதி மாலை சிறுமி ஆயிஷாவை தேடிய விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், ஆயிஷா என சந்தேகிக்க முடியுமான சிறுமியை புறக்கோட்டை, பாணந்துறை பகுதிகளில் அவதானித்ததாக சில தகவல்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன. உடனடியாக விசாரணையாளர்கள் அது தொடர்பில் புறக்கோட்டை, டாம் வீதி மற்றும் பாணந்துறை பொலிஸார் ஊடாக அந்த தகவல் தொடர்பில் தேடிப் பார்த்த போது அத்தகவல்களில் உண்மையில்லை என தெரியவந்துள்ளது.
இந் நிலையில் 28 ஆம் திகதி விடிய விடிய விசாரணைகள் நீடித்தன. இதனையடுத்து ஆயிஷாவின் வீடு முதல் கோழிக் கடை வரையிலான பாதையில் வேறு ஏதும் தடயங்கள் கிடைக்கிறதா என பொலிஸார் தேடலாயினர். அப்போது கோழிக் கடையை அண்மித்து உள்ள சி.சி.ரி.வி. கமராவுக்கு மேலதிகமாக, ஆயிஷாவின் வீட்டுப் பகுதியை அண்மித்த பாதையிலும் சி.சி.ரி.வி. கமரா ஒன்று உள்ளமை தெரியவரவே அதனை பொலிஸார் பரீட்சித்துள்ளனர். அந்த கமரா ஆயிஷாவின் வீட்டிலிருந்து சுமார் 50 மீற்றர்களுக்குள் உள்ள கமராவாகும்.
இதனையடுத்து அந்த சி.சி.ரி.வி. கமராவையும், ஆயிஷாவின் வீட்டிலிருந்து 200 மீற்றர் தூரத்தில் உள்ள கோழிக் கடையை அண்மித்துள்ள சி.சி.ரி.வி. கமரா காட்சிகளையும் ஒப்பீடு செய்து விசாரணையாளர்கள் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதன்போது வீட்டுக்கு அருகே உள்ள கமராவில், ஆயிஷா கோழிக் கடைக்கு செல்வது மட்டுமே பதிவாகியிருந்தது. கோழிக் கடை அருகேயான கமராவில் கோழிக் கடைக்கு வருவதும் அங்கிருந்து திரும்புவதும் என இரு காட்சிகளும் பதிவாகியிருந்தன.
இந் நிலையில் விசாரணைக் குழுவினர் ஒரு முடிவுக்கு வந்தனர். ஆம், சிறுமி இறைச்சியை வாங்கிக்கொண்டு, வீட்டை அண்மித்த 50 மீற்றர்களுக்குள் வரவே இல்லை என்பதே அந்த முடிவு. கோழிக் கடையை அண்மித்த 50 மீற்றர்களுக்குள்ளும் ஆயிஷாவுக்கு எதும் ஆகவில்லை என்பதை கோழிக் கடையை அண்மித்த கமரா ஊடாக பொலிஸாரால் ஊகிக்க முடியுமானது. எனவே இடைப்பட்ட 100 மீற்றர் தூரத்திலேயே அவருக்கு ஏதோ நடந்துள்ளது என்ற முடிவுக்கு வரும் விசாரணையாளர்கள், அந்த 100 மீற்றர் தூரத்தில் தடயங்களை தேடலாயினர்.
இதற்குள், ஆயிஷா முன்னைய தினம் இரவு அதாவது 26 ஆம் திகதி நித்திரைக்கு செல்லும் போது அணிந்த ஆடையை மோப்பம் பிடித்த பொலிஸ் மோப்ப நாயும் ஆயிஷா கோழிக் கடைக்கு சென்று திரும்பியதை ஒப்புவிக்கும் வகையில் நடந்துகொண்டது.
இந் நிலையில் தான், விடயம் நாடு முழுவதும் பரபரப்பு அடைய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் தனது ட்விட்டர் தளத்தில் உருக்கமான பதிவொன்றினை இட்டு, ஆயிஷா விடயத்தில் குற்றமிழைத்தோரை சட்டத்தின் முன் மிக விரைவாக நிறுத்துவோம் என அறிவித்தார்.
அவ்வறிவிப்பை அடுத்து பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவும், தனது பங்குக்கு, விசாரணையாளர்களுடன் இணைந்து செயற்பட, சி.ஐ.டி.யின் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் செயற்படும் மனிதப் படுகொலை மற்றும் திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் விசாரணை பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் ஹேமால் பிரசாந்தவின் கீழ் 12 பேர் கொண்ட குழுவொன்றினை அட்டுலுகமவுக்கு அனுப்பினார்.
இவ்வாறான பின்னணியில், பொலிஸார், சிறுமிக்கு அனர்த்தம் நிகழ்ந்திருக்கலாம் என நம்பிய 100 மீற்றர் பகுதியை ஆராய்ந்த போது, அங்கு காடுகளுடன் கூடிய ஒரு சதுப்பு நிலம் இருப்பது தெரியவந்தது. இந் நிலையில் விசாரணையாளர்களின் ஆலோசனைப் படி, 28 ஆம் திகதி அந்த சதுப்பு நிலப் பகுதியில் தேடுதல்கள் ஆரம்பிக்கப்பட்டன.
ஆம், அப்போது தான் சிறுமி ஆயிஷா உயிருடன் இல்லை என்பதற்கான சான்று வெளிப்பட்டது. சேற்றுக்குள் புதைந்திருந்த, காலின் ஒரு பகுதி சேற்றுக்கு மேலே தெரிய, சிறுமி ஆயிஷாவின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
பண்டாரகம அட்டுலுகம பிரதேசத்தில் பள்ளிவாசல் அருகில் வசித்து வந்த சிறுமியே ஆயிஷா. அவரது முழப் பெயர் பாத்திமா ஆயிஷா அக்ரம். மூத்த சகோதரர்கள் இருவர் மற்றும் இரு மாதங்களேயான இளைய சகோதரர் ஒருவர் உள்ளடங்கிய குடும்பத்தின் ஒரே பெண் பிள்ளை. 9 வயதான பாத்திமா ஆயிஷா மரணிக்கும் போது, அட்டுலுகம அல்-கஸ்ஸாலி முஸ்லிம் வித்தியாலயத்தில் 4ஆம் தரத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்தார்.
ஆயிஷாவின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பிரதேசம் எங்கும், ஏன் நாடெங்கும் அந்த தகவல் மிக வேகமாக பரவியது. மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இன, மத பேதமின்றி கண்ணீர் விட்டு அழுதனர்.
ஸ்தலத்துக்கு பொலிஸாரும், தடயவியல் பிரிவினரும், பாணந்துறை நீதிமன்றின் மேலதிக நீதிவானும், பாணந்துறை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்ட குழுவினரும் விரைந்தனர். நிலைமையை அவதானித்தனர்.
இந் நிலையில், பிரேத பரிசோதனைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அவ்விடத்துக்கு வந்த பாணந்துறை பதில் நீதிவான் இந்ரானி சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரேனும் வெளிப்பட்டால் உடனடியாக கைது செய்யுமாறும் கட்டளையிட்டார். இதனையடுத்து சிறுமி ஆயிஷாவின் ஜனாஸா, பிரேத பரிசோதனைக்காக பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இந் நிலையில் ஆயிஷாவை இவ்வாறு கொடூரமாக கொன்றவர்கள் யார், எதற்காக அவ்வாறு செய்தனர் என்பதை கண்டறிய, உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒலுகல தலைமையிலான குழுவினர் வலை விரிக்கலாயினர். அவர்கள் ஊர் மக்களிடம் துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச் சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள், பெண்கள், சிறுவர்கள் தொடர்பில் மோசமான பார்வைகளை செலுத்துவோர் உள்ளிட்டோர் தொடர்பில் தகவல்கள் இருப்பின் கோரினர். அட்டுலுகம மக்கள் அது தொடர்பில் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கி சிலரின் பெயர்களை கொடுத்திருந்தனர்.
இதனிடையே, பொலிஸாரும் தமது நுட்பத்துக்கு அமைய, சுமார் 30 இற்கும் அதிகமான வாக்கு மூலங்களை பதிவு செய்திருந்தனர்.
இந் நிலையில், அதுவரையான அனைத்து தகவல்கள், தடயங்களை வைத்து பார்க்கும் போது பிரதானமாக ஐவர் தொடர்பில் பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த ஐவரையும் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒலுகல தலைமையிலான விசாரணைக் குழுவினர் தமது பொறுப்பில் எடுத்து விசாரிக்கலாயினர்.
இதனைவிட, ஆயிஷாவின் தந்தை போதைப் பொருள் பாவனைக்கு பழக்கப்பட்டவர் என்பதாலும், மகளின் இறப்பின் பின்னரான அவரது நடவடிக்கைகளை மையப்படுத்தியும் அவரையும் பொலிஸார் விசாரணைகளுக்கு உட்படுத்தினர். பண்டாரகம பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்ட அவரிடம் சுமார் 5 மணி நேரம் பொலிஸார் வாக்கு மூலம் பெற்ற பின்னர் விடுவித்தனர்.
இவ்வாறான பின்னணியிலேயே பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்ட ஐவர் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்த போது, ஆயிஷாவுக்கு என்ன நடந்தது என்பதை பொலிஸாரால் வெளிப்படுத்த முடிந்தது. அந்த ஐவரில், ஆயிஷா காணாமல் போனது முதல் ஜனாஸா மீட்கப்படும் வரையில் ஆயிஷாவை தேடும் பணியில் மும்முரமாக இருந்த ஒருவர் ஊடாகவே அந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டது.
அந்த நபர், ஆயிஷா காணாமல் போன தினத்தில், நேரத்தில், ஆயிஷா ஆபத்தை எதிர் நோக்கியதாக பொலிஸார் சந்தேகிக்கும் 100 மீற்றர் எல்லையிலேயே இருந்தார் என பொலிஸார் பதிவு செய்த வாக்கு மூலங்கள் சிலவற்றின் ஊடாக வெளிப்படுத்தப்பட்ட நிலையில் அந்த சந்தேக நபரிடம் விஷேடமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதற்கு மேலதிகமாக, ஆயிஷாவின் ஜனாஸா மீட்கப்பட்ட சதுப்பு நிலத்துக்கு அருகே கீரை பாத்தி ஒன்றினை வளர்த்துவந்த நபர் ஒருவர் உள்ளிட்ட சிலரும் பொலிஸ் பொறுப்பில் இருந்தனர்.
இந் நிலையில் ஆயிஷா காணாமல் போனதாக பொலிஸார் நம்பிய 100 மீற்றர் எல்லையில் இருந்த சந்தேக நபர், ஆயிஷாவின் தாய் வழி உறவினர் என்பதால் அவர் தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தப்பட்டது.
இதன்போது, அந்த சந்தேக நபரின் கழுத்து பகுதியை அவதானித்த விசாரணையாளர்கள், அதிலே நகக் கீறல் காயம் இருப்பதைக் கண்டு, சந்தேகத்தை மேலும் அதிகரித்து விசாரணைகளை முன்னெடுக்கலாயினர்.
இந் நிலையில், தான் வசமாக சிக்கிக்கொண்டதை உணந்த சந்தேக நபர், நடந்தவைகளை பொலிஸார் முன் ஒப்புவிக்கத் தொடங்கியதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆம், அந்த சந்தேக நபர் கொத்து தயாரிக்கும் ஒருவர். பரவலாக அவரை ஊர் மக்கள் ‘கொத்து பாஸ்’ எனும் பெயரிலும், ‘பல்லிக் குட்டி’ எனும் பெயரிலும் அறிந்திருந்தனர். அவரது பெயர் மொஹம்மட் பாரூக். வயது 28. மூன்று பெண் பிள்ளைகளின் தந்தை.
ஆயிஷாவும் சந்தேக நபரின் மூத்த மகளும் நண்பிகள். அடிக்கடி ஒன்றாக கூடி விளையாடுபவர்கள். இவ்வாறான நிலையிலேயே சந்தேக நபர் ஆயிஷாவை கடத்தி கொலை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனைவிட சந்தேக நபரும் போதைப் பொருள் பாவனை பழக்கத்தினை உடையவர் என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸார் சந்தேக நபரை விசாரிக்க ஆரம்பித்த போது, சந்தேக நபர் நடந்தவைகளை ஒப்புவித்துள்ளார். (பொலிஸ் தகவல்கள் படி அந்த ஒப்புவித்தல் சுருக்கமாக வருமாறு)
‘சேர்…. நான் உண்மையை சொல்கிறேன்…. ஆயிஷா எனது மகளுடன் விளையாடும் போதே நான் அவள் மீது ஆசைப்பட்டுள்ளேன்… எனினும் எனது எண்ணப்படி நடந்துகொள்வதற்கான சந்தர்ப்பம் எனக்கு கிடைத்திருக்கவில்லை.
அன்று ஆயிஷா கோழிக் கடைக்கு வந்த போது நான் அவளை அவதானித்தேன். அப்போது நான் ஐஸ் போதைப் பொருளினை பயன்படுத்திவிட்டு கோழிக் கடையின் அருகே இருந்தேன். ஆயிஷா கோழி இறைச்சி வாங்கிக்கொண்டு திரும்புவதற்குள் நான் வேகமாக வந்து, சதுப்பு நில பகுதிக்குள் செல்லும் வழி அருகே ஆயிஷாவுக்காக காத்திருந்தேன். அவள் அந்த பாதை வழியே வந்த போது அவளை காட்டுப் பகுதிக்குள் இழுத்துச் சென்றேன். அவள் உடலை தொடும் போது அவள் கடும் எதிர்ப்புக் காட்டினாள். சப்தமிட்டு அழுதாள்.
‘என்னை விட்டு விடுங்கள் மாமா… நான் வீட்டுக்கு போக வேண்டும்… என்னை விடுங்கள் மாமா…” என அவள் கூக்குரலிட்டாள்.
இதனால் உடனடியாக எனது தோளில் இருந்த சாரத் துணியை கிழித்து அவளது வாயில் அடைத்தேன். அவள் போராடினாள். கை கால்களையும் கட்டினேன். அவள் மயக்க முற்றாள்.
எனக்கு பயம் வந்தது. அவளை அப்படியே விட்டுச் சென்றால், வெளியே சென்று என்னை காட்டிக் கொடுத்துவிடுவாள் என நான் எண்ணினேன். அவளுக்கு என்னை நன்றாக தெரியும் என்பதால் எனக்கு அப்போது அந்த பயம் ஏற்பட்டது. அவளை மேலும் சில மீற்றர்கள் இழுத்துச் சென்று சதுப்பு நிலத்தின் சேற்றுக்குள் வீசினேன்.
சத்தியமாக… நான் அவளை வன்புணர்வு செய்யவில்லை. அவள் ஆடைகளைக் கூட என்னால் கழற்ற இயலவில்லை…” என சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அப்படியானால் ஆயிஷா எப்படி இறந்தார்… எவ்வாறு கொலை செய்தாய் என பொலிஸார் சந்தேக நபரை குடைந்தனர்.
‘ சேர்… சதுப்பு நில சேற்றில் ஆயிஷாவின் முகத்தை அமிழ்த்தி அவளின் உடலின் முதுகுப்பகுதியில் எனது முழங்காலினால் ஊன்றிப் பிடித்தேன். அவள் இறந்துவிட்டாள். பின்னர் சேற்றுக்குள் அவளை மறைத்துவிட்டு, எனது காலடி தடங்களையும் அழித்துவிட்டு எதுவும் தெரியாதது போல் சென்றேன். வீடு சென்று குளித்துவிட்டு பள்ளிக்குச் சென்றேன். ஆயிஷாவை அனைவரும் தேடும் போது நானும் சேர்ந்து தேடினேன். எனினும் எனது மனதுக்குள் பயம் இருந்துகொண்டே இருந்தது. நீங்கள் என்னைப் பிடித்துவிட்டீர்கள்” என சந்தேக நபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
எனினும் அவனது வாக்கு மூலத்தை மட்டும் முழுமையாக நம்ப தயாராக இருக்காத பொலிஸார், சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கைக்காக காத்திருந்தனர்.
பாணந்துறை வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் எச்.கே.ஜே.விஜேவீர, உத்பல ஆட்டிகல உள்ளிட்ட மூவர் கொண்ட சிறப்புக் குழு நீதிமன்ற கட்டளை படி பிரேத பரிசோதனைகளை முன்னெடுத்தது.
மே 30 ஆம் திகதி திங்கட்கிழமை சட்டவைத்திய நிபுணர்கள் மூவரை உள்ளடக்கிய சிறப்பு குழுவால் இந்த பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. முற்பகல் 09.30 மணிக்கு ஆரம்பித்த பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் சுமார் 04 மணிநேரம் நீடித்து பிற்பகல் 01.30 மணியளவில் நிறைவுற்றிருந்தது.
பிரேத பரிசோதனை பிரகாரம் சிறுமியின் மரணத்திற்கு வாய், மூக்கு வழியே சேறு, நீர் என்பன உட்சென்று நுரையீரல் மற்றும் உடல் உள்ளுறுப்புக்களில் கலந்தமையே பிரதான காரணம் என சட்ட வைத்திய அதிகாரிகள் குழாம் தீர்மானித்துள்ளது. அது தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பித்துள்ள அந்த குழாம் சிறுமி பாலியல் வன்புணர்விற்கு உள்ளாகவில்லை என்பதை உறுதி செய்துள்ளதுடன், சிறுமியின் உடலில் ஒரேயொரு காயத்தை மட்டும் அடையாளமிட்டுள்ளனர். அது சிறுமியின் வாய் பகுதியில் அடையாளம் காணப்பட்ட காயம் என அறிக்கை ஊடாக அறிய முடிகிறது.
இந் நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையும் சந்தேக நபரின் வாக்கு மூலமும் பொருந்துவதை அவதானித்த பொலிஸார், அவரை பிரதான சந்தேக நபராக அறிவித்து, பாணந்துறை நீதிவான் ஜயருவன் திஸாநாயக்க முன்னிலையில் ஆஜர் செய்து 48 மணி நேர தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்று மேலதிக விசாரணைகளை நடாத்தினர்.
பின்னர், சந்தேக நபருக்கு எதிராக மனிதப் படுகொலை, கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்தமை, திட்டமிட்டு அசௌகரியம் ஏற்படுத்தியமை, காயம் ஏற்படுத்தியமை மற்றும் திட்டமிட்டு பலாத்காரம் செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களை முன் வைத்து சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.
ஜனாஸா நல்லடக்கம்
பிரேத பரிசோதனைகளைத் தொடர்ந்து திங்கட் கிழமை மாலை சிறுமி ஆயிஷாவின் ஜனாஸா உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜனாஸா அட்டுளுகமைக்கு கொண்டுவரப்படுவதை அறிந்த மக்கள் பெருந்திரளாக அட்டுளுகம பெரிய பள்ளிவாசலில் ஒன்றுகூடினர். சகோதர இன மக்களும் பிரசன்னமாகியிருந்தனர். எனினும் ஜனாஸா வந்து சேர மாலையாகிவிட்டது. பின்னர் மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து ஜனாஸா நல்லடக்கம் இடம்பெற்றது. ஜனாஸா தொழுகைக்கு முன்னர் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் அங்கு கூடியிருந்த பொது மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
“ இந்த ஊரிலோ இந்த நாட்டிலே இதன் பிற்பாடு இவ்வாறான எந்தவொரு சம்பவங்களும் இடம்பெறக் கூடாது என்ற செய்தியையே இந்த ஜனாஸா எமக்குச் சொல்கிறது. இந்த சிறுமியின் குடும்பத்திற்கு அல்லாஹ் உயர்ந்த கூலியை வழங்குவானாக. ஊரின் உலமாக்கள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் ஜனாஸாவை அனைவருக்கும் காண்பிக்க வேண்டும், அது அனைவருக்கும் ஒரு படிப்பினையாக அமையும் என விரும்பினார்கள். எனினும் ஜனாஸா வெளியில் காண்பிக்கக் கூடிய நிலையில் இல்லை. எனவே ஜனாஸாவை பார்ப்பதை விடுத்து அதற்காகவும் சிறுமியின் குடும்பத்திற்காகவும் நாம் அனைவரும் பிரார்த்திப்போம். நிச்சயமாக இந்த சிறுமி சுவனத்திலிருந்து நம் அனைவரையும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார். இந்த அநியாயத்தை இழைத்தவருக்கு சட்ட ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே நாம் அனைவரும் பொறுமையாக இருப்பதுடன் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அத்துடன் இந்த ஊரிலிருந்தும் நாட்டிலிருந்தும் போதைப் பொருள் பாவனையை முற்றாக ஒழிக்க நாம் பாடுபட வேண்டும். பெண்களும் சிறுவர்களும் பாதுகாப்பான முறையில் வெளியில் சென்றுவரக் கூடிய நிலைமை இந்த ஊரிலும் நாட்டிலும் ஏற்பட வேண்டும் என நாம் பிரார்த்திக்க வேண்டும்” என அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து ஜனாஸா தொழுகை இடம்பெற்றதுடன் ஜனாஸா நல்லடக்கமும் இடம்பெற்றது.
கோட்டா கோகம பிரதிநிதிகள் விஜயம்
ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொள்வதற்காக கொழும்பு காலி முகத்திடலில் 50 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கோட்டாகோகம பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
கொழும்பிலிருந்து பஸ் ஒன்றில் பயணித்த இவர்களில் பௌத்த, கிறிஸ்தவ மத தலைவர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் அடங்கியிருந்தனர். அட்டுளுகம பள்ளிவாசலில் ஒன்றுகூடிய இவர்கள் அங்கு குழுமியிருந்த ஊரின் முக்கியஸ்தர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் உரையாற்றினர்.
இங்கு வருகை தந்திருந்த பௌத்த பிக்கு ஒருவர் உரையாற்றுகையில், பள்ளிவாசலுக்குள் இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் அட்டுளுகம பள்ளிவாசலுக்குள் இருக்கிறேன். இது எனது முதல் அனுபவம். அட்டுளுகமயில் ஆயிஷாவுக்கு நடந்த சம்பவம் இறுதியானதாக இருக்கவேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனி ஒருபோதும் நடக்கக்கூடாது.
கொடூரமாக கொலை செய்யப்பட்ட பாத்திமா ஆயிஷாவின் தாயாரைச் சந்தித்து எமது அனுதாபங்களைப் பகிர்ந்து கொண்டோம். நான் ஒருபோதும் முஸ்லிம் பள்ளிவாசல்களுக்குச் சென்றதில்லை. இன்று சந்தோஷப்படுகிறேன். இன்று இந்த பள்ளிவாசலுக்குள் இருக்கிறேன்.
நாங்கள் இலங்கை மக்கள் என்ற வகையில் அனைவரும் ஒற்றுமைப் படவேண்டும். சிங்களவராக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும், தமிழராக இருந்தாலும் நாம் அனைவரும் சகோதரர்களாக ஒற்றுமையாக வாழ வேண்டும். உலகத்துக்கு உதாரண புருஷராக நாம் வாழ வேண்டும்.
நான் ஆர்ப்பாட்ட பூமியிலிருந்து உரையாற்றியதற்காக எனது தலைமை பிக்கு என்னை பன்சலையிலிருந்தும் வெளியேற்றியுள்ளார். நான் எனது காவியுடையை அனைவரையும் பாதுகாப்பதற்காகவே பயன்படுத்துகிறேன். நாட்டில் நாமனைவரும் ஒன்றிணைந்து இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கு முன்வரவேண்டும் என்றார்.
போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் சிறுமியின் இல்லத்துக்கு விஜயம் செய்து ஆறுதல் கூறியிருந்தனர்.
அத்துடன் கோட்டா கோ கமவிலும் இச்சம்பவத்தைக் கண்டித்து பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி அனுதாபம்
அதேபோன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் தனது டுவிட்டரில் அனுதாபத்தை வெளியிட்டிருந்தார். “ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவிக்கின்றேன்.இந்த கொடூர குற்றத்திற்கு அவரது குடும்பத்தினருக்கு விரைவில் நீதி கிடைக்க நான் உறுதியளிக்கிறேன். சிறுமி ஆயிஷா சுவர்க்கம் செல்ல எனது பிரார்த்தனைகள்” என அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.
அரசியல்வாதிகள் விஜயம்
அரசியல் கட்சித் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுமான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் ஆகியோரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா உட்பட பல உள்ளுர் அரசியல் பிரமுகர்களும் சிறுமியின் இல்லத்துக்கு விஜயம் செய்து தமது அனுதாபங்களை தெரிவித்தனர்.
சிறுமியின் தாய்க்கு ஆறுதல் கூறும் ரவூப் ஹக்கீம்
அத்துடன் சிறுமியின் கொலையை வன்மையாகக் கண்டிப்பதாகவும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் பல அரசியல் பிரமுகர்கள் அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர்.
அட்டுளுகமவில் ஆர்ப்பாட்டம்
சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும் போதைப் பொருள் விற்பனை மற்றும் பாவனைக்கு எதிராகவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அட்டுளுகம பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டது. இதன்போது பிரதேச மக்கள் குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் போதைப் பொருள் பாவனையை பிரதேசத்திலிருந்து முற்றாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் சில சம்பவங்கள் பதிவு
இதனிடையே கடந்த மே 23ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 11 வயது சிறுமி ஒருவர் அவரது உறவினர்களான இரு இளைஞர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பில் இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோன்று வவுனியாவில் 16 வயது மாணவியின் சடலம் ஒன்று கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவமும் பதிவாகியுள்ளது. வவுனியா, நெளுங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கணேசபுரம் 08 ஆம் ஒழுங்கையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 16 வயது மாணவியின் மரணம் கொலையா? தற்கொலையா என்பது தொடர்பில் வெளிப்படுத்த விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார். இந் நிலையில் அது குறித்து தெளிவாக வெளிப்படுத்திக்கொள்ள வவுனியா வைத்தியசாலையின் நேற்று மாணவியின் சடலம் மீது பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் இச் செய்தி அச்சுக்குச் செல்லும் வரை அதன் முடிவுகள் வெளியிடப்படவில்லை.
எவ்வாறாயினும் இதுவரை பொலிஸார் முன்னெடுத்துள்ள விசாரணைகளில், மேலதிக வகுப்புக்குச் சென்ற மாணவி அவரது தோழிகளுடன் வீடு நோக்கி வந்துள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார். எவ்வாறாயினும் வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் சிறு காட்டுப் பகுதியில் மாணவியின் புத்தகங்கள், காலணி என்பன மீட்கப்பட்டுள்ள நிலையில், பின்னர் அதனை அண்மித்த பகுதியில் கிணற்றிலிருந்து அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நாடெங்கும் அச்ச நிலை
சிறுமி ஆயிஷா கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து நாட்டின் பல பகுதிகளிலும் பெண் பிள்ளைகளும் தாய்மாரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். இவ்வாறு சிறுவர்களை இலக்கு வைத்த சம்பவங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்திகளைத் தொடர்ந்தே மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதன் காரணமாக சில பிரதேசங்களில் தனியார் வகுப்புகள், மத்ரஸாக்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
எவ்வாறிருப்பினும் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாதிருப்பது தொடர்பில் பெற்றோரும் சமூக தலைவர்களும் விழிப்புடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். குறிப்பாக பிரதேசம் தோறும் பள்ளிவாசல் சம்மேளனங்கள், நிர்வாகிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், உலமாக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து போதைப் பொருள் பாவனையை தடுக்கவும் இவ்வாறான குற்றச்செயல்கள் இடம்பெறாதிருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்.எப்.எம்.பஸீர் – விடிவெள்ளி 02/06/2022 பக்கம் 06