தற்போது க.பொ.த சாதாரணதரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான, புதிய உயர்தர வகுப்புகளை, அம் மாணவர்களின் நலன் கருதி, சற்று காலதாமதமாக ஆரம்பிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.
கல்முனை பிரதேச தனியார் கல்விக் கூடங்கள், சாதாரண தர பரீட்சை முடிவடைந்த மறுநாளே, உயர்தர வகுப்புகளை ஆரம்பிக்க விளம்பரம் செய்து வருகின்றன. இது மாணவர்களின் உடல்உள நலத்துக்கு நல்லதல்ல என்று, கல்வியியலாளர்களும் மருத்துவர்களும் கூறுகின்றனர். க. பொ. த. (சா/த) பரீட்சை நேற்றைய (01) தினம்தான் முடிவடைந்துள்ளது. அதற்கிடையில், தனியார் கல்விக்கூடங்கள் முண்டியடித்துக்கொண்டு, அடுத்த பருவகால உயர்தர கற்கைநெறிகளுக்கான விளம்பரங்களை ஆரம்பித்துவிட்டன. ஏனிந்த அவசரம்? நிச்சயமாக இந்த அவசரம், மாணவர் நலனுக்காகவன்றி, பணம் சம்பாதிக்கும் இலக்கின் வெறித்தனமாகவே இருக்கமுடியும்.
புனிதமான இரண்டு துறைகளான வைத்தியமும் கல்வியும் இன்று ‘மாபியா’க்களால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. ஓரிரு மாதங்களுக்கு மாணவர்களை ஓய்வெடுக்கவிட வேண்டும்.
ஆன்மிக ரீதியில் அவர்களைப் புடம்போட, சற்றுக் கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். பெற்றோர் இந்த விடயத்தில் அக்கறை காட்ட வேண்டும். ஆன்மிக ரீதியான உந்துதல் இல்லாத வெறும் ஏட்டுக்கல்வியும், இன்றைய இளம் சந்ததியினர் போதைப்பொருள் உட்பட்ட பல்வேறு சீரழிவுகளுக்குள் வீழ்வதற்கு காரணமாகின்றது.
தனியார் கல்விக்கூடங்களே! உங்களின் பணம் சம்பாதிக்கும் வெறியை கொஞ்சம் தளர்த்தி, பரீட்சை முடிந்த மறுநாளே உயர்தர கற்கையை ஆரம்பிக்காமல் சற்றுப் பின்போடுங்கள்.
-த. சகாதேவராஜா- தமிழ்மிரர் 3/6/22 Page 6