“ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராகக் கொண்ட புதிய அமைச்சரவை, பகுதி பகுதியாக இன்னமும் பதவியேற்று வருகின்றது. புதிய அரசாங்கத்தை, சர்வகட்சி அரசாங்கம்” என்று ஐனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்மொழிகிறார்கள்.
ஆனால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி போன்ற கட்சிகளின் நிலைப்பாடுகளுக்கு எதிராக, அக்கட்சிகளின் உறுப்பினர்களைப் பிரித்தெடுத்து அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து வைப்பதன் மூலம், அது எப்படி சர்வகட்சி அரசாங்கம் ஆக இருக்க முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் கேள்வி எழுப்புகின்றன. கோட்டா பதவி விலகினால் மாத்திரமே, சர்வகட்சி அரசாங்கமொன்றில் அங்கம் வகிக்க முடியும் என்பது, அந்தக் கட்சிகளின் நிலைப்பாடாக இருக்கிறது.
புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதும், மேற்கு நாடுகளும் அமைப்புகளும் அதற்காகவே காத்திருந்தவை மாதிரி, வரவேற்று கருத்துகளை வெளியிட்டிருந்தன. குறிப்பாக, இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சீர்செய்வதற்கு, புதிய பிரதமருக்கு ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகக் கூறின.
ஆனால், புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர், இடம்பெற்ற முதலாவது பாராளுமன்ற அமர்வில், பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் நடத்து கொண்ட விதம் குறித்து, மேற்கு நாடுகள் ஏமாற்றம் அடைந்திருக்கின்றன.
மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியிலிருந்து விலகினாலும், ஆட்சி அதிகாரம் என்பது பொதுஜன பெரமுனவின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கின்றது. அது, தன்னுடைய ஆட்சி அதிகாரம் குறித்த அரசியல் நிலைப்பாட்டிலேயே செயற்படுகின்றது.
அப்படியான நிலையில், ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தாலும், அவரது முடிவெடுக்கும் அதிகார வரம்பு எப்படிப்பட்டது? அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா என்றெல்லாம் ஆராயும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. இதனால், இலங்கையின் பொருளாதார மீட்சிக்காக ஒத்துழைப்பதாகக் கூறிய தரப்புகள், எல்லாமும் ஒதுங்கிக் கொள்ளத் தொடங்கிவிட்டன. இது நிலைமையை இன்னும் சிக்கலாக்கவே செய்யும்.
“பொருளாதாரக் கொள்கைகள் சரியாக வரையறுக்கப்படாத பட்சத்தில், இலங்கையுடன் இணைந்து பயணிக்க முடியாது. அதாவது, உதவிகளை வழங்க முடியாது” என்று சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட தரப்புகள் கூறிவிட்டன. இது, இலங்கையைப் பொறுத்தளவில் பாரிய பின்னடைவாகும்.
ஏற்கெனவே, நாட்டின் பணவீக்கம் பாரிய அளவில் அதிகரித்துவிட்டது. நாட்டில் உணவுப் பற்றாக்குறை பாரிய பாதிப்புகளை செய்யப் போகின்றது என்று பிரதமர், அமைச்சர்கள் என்று பொறுப்பிலுள்ள அனைத்து தரப்பினரும் கூறத் தொடங்கிவிட்டார்கள்.
எரிபொருள் தட்டுப்பாடு என்பது, உயிர்களைப் பலிவாங்கும் அளவுக்கு சென்று கொண்டிருக்கின்றது. எரிபொருள் நிரப்பு நிலையங்களை நோக்கி, இரண்டு முதல் மூன்று கிலோ மீற்றர் தூரத்துக்கு வாகனங்கள் வரிசையில் நிற்கின்றன. ஆனாலும், எரிபொருள் கிடைக்கும் என்கிற நிச்சயத்தன்மை எல்லாம் இல்லை. 48 மணித்தியாலம் கூட வரிசையில் நின்று, எரிபொருளைப் பெற முடியாத விரக்தியில் மக்கள் இருக்கிறார்கள்.
இவ்வாறான நெருக்கடிகளால், அனைத்துத் தொழிற்றுறைகளும் முடங்கிவிட்டன. அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த, ஏனைய ௮ரச உத்தியோகஸ்தர்கள் அலுவலகங்களுக்கு வர வேண்டாம் என்று அரசாங்கமே அறிவித்துவிட்டது.
அரசாங்கத்தை பொறுப்பெடுத்து, நாட்டைச் சீராக்குவதுதான் தன்னுடைய முதல் பணி என்று கூறிக்கொண்டு பதவிக்கு வந்த ரணிலுக்கு, ராஜபக்ஷர்களோடும் அவர்களின் ஆதரவுத் தரப்புகளோடும் வேலை செய்வது, எவ்வளவு சிக்கலானது என்று புரியத் தொடங்கிவிட்டது.
நாட்டு மக்கள் பாரிய நெருக்கடி யை எதிர்கொண்டிருக்கின்ற நிலையில், அது குறித்து எந்தவித விவாதத்தையும் நடத்தாமல், பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள், தங்களது எரிந்த வீடுகள் பற்றி மணிக்கணக்கில் பேசிக் கொண்டார்கள்.
அதுபோல, வீடுகளை இழந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, அரச செலவில் புதிய அடக்குமாடி குடியிருப்புகளை நிர்மாணிப்பது தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பேசியிருக்கின்றார்.
நாட்டில் சமையல் எரிவாயு, எரிபொருள், மருந்துப்பொருட்கள் தொடங்கி அத்தியாவசியமான அனைத்துக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது. நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது, புதிய பிரதமர் கூட ௮து பற்றி பிரஸ்தாபிக்கின்றார்.
ஆனால், அது தொடர்பில் எந்தவித அக்கறையாவது பாராளுமன்றத்துக்குள் ஆளும் தரப்பில் உள்ள உறுப்பினர்களுக்கு இல்லை. மாறாக, மக்களின் போராட்டங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, கடந்த காலத்தில் ராஜபக்ஷ யுகத்தில் தாங்கள் செயற்பட்டது மாதிரியே, மீண்டும் செயற்படுவோம் என்கிற நிலையில் இருக்கின்றார்கள்.
மக்கள் வீதிகளில் அத்தியாவசிய பொருட்களுக்காக அலைவது குறித்தோ, அவர்களின் பட்டிணி குறித்தோ எந்தவித சிந்தனையையும் பாராளுமன்றத்துக்குள் ஆளும் தரப்பில் உள்ள உறுப்பினர்கள் வெளிப்படுத்துகிறார்கள் இல்லை. இதனால், ரணிலின் புதிய அரசாங்கமும்கூட, ராஜபக்ஷர்களின் பாரம்பரிய ஆட்சி அதிகார கட்டமைப்பின் நீட்சியாகவே இருக்கின்றது.
அபிவிருத்தி அடைந்துவரும் நாடாகவே, இலங்கை இவ்வளவு காலமும் இருந்து வந்திருக்கின்றது. நாட்டின் பெரும்பான்மையான மக்கள் மத்தியதர வர்க்கத்தினர். ஆனால், இன்றைய பொருளாதார நெருக்கடி என்பது, நாட்டில் மத்தியதர வர்க்கம் என்கிற பிரிவையே இல்லாமல் செய்திருக்கின்றது.
மத்திய தர வர்க்கம் இல்லாமல் போய், வறுமைக் கோட்டுக்கு உட்பட்டோர் என்கிற பெரும் பிரிவு உருவாகியிருக்கின்றது. இந்த நிலைமை, வேலை வாய்ப்பின்மை, பசி பட்டினியின் அளவை நாளுக்கு நாள் அதிகரிக்கவே செய்யும்.
இன்றைக்கு அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்காக, தங்களிடம் இருக்கின்ற சேமிப்புகளையும் தங்க நகைகளையும் இழந்துவிட்ட பின்னரான நிலை என்பது, படுபயங்கரமாக இருக்கும். ஏனெனில், ஒரு கட்டம் வரையில்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை எவ்வளவுக்கு அதிகாரித்தாலும் அதனை எதிர்கொள்ளத் தயாராக மக்கள் இருப்பார்கள். அது எல்லைக்கோட்டைத் தாண்டும் போது, மக்கள் தங்களது நிதானத்தை இழங்கும் நிலை உருவாகும்.
வயிறு பசிக்கும் போது, வாழ்வியல் அறம், மனித மாண்பு பற்றியெல்லாம் யாரும் சிந்தித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அதனால், பொருளாதார நெருக்கடி என்பது, சமூக சீரழிவுக்கான கட்டங்களைத் திறந்துவிடும்.
எப்போதுமே சமூக ஒழுக்கம், இனம், மதம் அடையாளம், பாரம்பரிய சிந்தனைகள் என்பவற்றை பெரும்பாலும் தாங்கி நிற்பது மத்தியதர வர்க்கமே ஆகும். அதனை அடிப்படையாகக் கொண்டுதான், நாட்டின் அரசியலை முன்னெடுக்கின்ற தரப்புகள் இயங்கி வந்திருக்கின்றன.
ஆனால், மத்தியதர வர்க்கம் காணாமல் ஆக்கப்படும் போது, அது தாங்கிப் பிடித்திருந்த குண இயல்புகளும் காணாமல் போகும். சர்வதேச ரீதியில் பொருளாதார நெருக்கடியால் சமூக சீரழிவுக்குள் சென்றுசேர்ந்த பல நாடுகளை நாம் காணலாம். அவ்வாறான நிலையொன்றை அடைவதற்கான அனைத்து கட்டங்களையும் நாடு பிரதிபலிக்கத் தொடங்கிவிட்டது.
அவ்வாறான நிலையில், அவசர அவசரமாக நாட்டின் பொருளாதார சிந்தனைகளை சீர் செய்து, நெருக்கடியில் இருந்து மீள்வது குறித்து சிந்திக்க வேண்டும். அதற்கு கட்சி அரசியல், அதிகார போதை கடந்த ஆற்றலுள்ள சுயநலமில்லாதவர்கள் அரசாங்கத்தை செலுத்த வேண்டும்.
மக்களின் போராட்ட கோரிக்கைகளுக்கு எதிராக, ஜனநாயக விழுமியங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, ராஜபக்ஷர்களோடு இணைந்து ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள ரணில், இனியாவது மக்களின் குரல்களுக்கு செவி சாய்க்க வேண்டும்.
இல்லையென்றால் ஆபிரிக்க நாடுகள், சில கிழக்கு ஆசிய நாடுகள், தென் அமெரிக்க நாடுகள் போல, மீளமுடியாத பொருளாதார சமூக சீரழிவுக்குள் சிக்கிக் கொள்ள வேண்டிவரும்.
புருஜோத்மன் தங்கமயில் (தமிழ் மிர்ரர் 26/5/22)
“நாட்டின் பொருளாதார நெருக்கடி சமூக சீரழிவிற்கு வித்திடும்”