எமது தாய் நாட்டைவிட்டு வெளியேறி வெளி நாடுகளில் பணிபுரியும் எங்களது மனநிலை எப்போது நாங்கள் நாடு திரும்புவோம் என்றே அமைந்திருக்கும் என்றாலும் தற்போது நாங்கள் சவூதியில் தர்மசங்கடமான நிலைக்கு உள்ளாகியுள்ளோம்.
இங்குள்ள ஏனைய நாட்டவர்கள் தற்போது எம்மைச் சந்திக்கும் போது “இலங்கைக்கு என்ன நடந்துள்ளது? என எம்மிடம் வினவுகிறார்கள், அரசியல்வாதிகள் அழகான எமது நாட்டை அழித்து நாசமாக்கிவிட்டார்கள் என்று தான் அவர்களுக்கு பதிலளிக்க முடியுமே தவிர வேறு என்னதான் கூறமுடியும் என இலங்கையைச் சேர்ந்த எஸ்.எச்.மௌலானா தெரிவிக்கிறார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்; ரியாதிலுள்ள சுப்பர் மார்க்கட் ஒன்றில் சாதாரண தொழிலாளியாக பணிபுரியும் இந்தியர் ஒருவர் என்னிடம் இதே கேள்வியைத்தான் கேட்டார். நான் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியிலே அந்த சுப்பர் மார்க்கட் அமைந்திருக்கிறது. நான் வீடு திரும்பும்போது அந்த சுப்பர்மார்க்கட்டுக்குச் சென்று சாமான்கள் வாங்கிச் செல்வது வழக்கம். இதனை நான் தவறவிடமாட்டேன். நான் சில தினங்கள் சுப்பர்மார்க்கட்டுக்குச் செல்லாவிட்டால் அங்கு பணிபுரிபவர்கள்” சேர் என்ன
நடந்தது? என்று கேட்பார்கள். நான் காரணம் தெரிவிப்பேன்.
அங்கு பணிபுரியும் ஒரு இந்திய பணியாளர் எப்போதும் நான் கொள்வனவு செய்த சாமான்கள் நிரம்பிய ட்ரொலி (வண்டியை) தள்ளிக்கொண்டு வந்து உதவுவார். எனது கார் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் இடம்வரை ட்ரொலியை தள்ளிக்கொண்டு வருவார். அவருக்கு நான் எப்போதும் பணம் கொடுப்பேன். அவர் சாமான்களை எனது காருக்குள் எடுத்து வைப்பார். சில தினங்களுக்கு முன்பு அவர் இவ்வாறே நடந்து கொண்டார். நான் அவருக்கு பணம் கொடுத்தேன். நன்றி கூறிவிட்டு திரும்பிச் சென்றவர் மீண்டும் என்னிடம் திரும்பி வந்தார்.
அப்போது நான் காரை இயக்கிக்கொண்டிருந்தேன். அவர் என்னிடம் ஏதோ கூறுவதற்கு வந்திருக்கிறார் என்று உணர்ந்து கொண்டேன். காரின் யன்னலை கீழிறக்கிறேன். ஏதும் கூறப் போகிறீர்களா என்று அந்த இந்திய பணியாளரை வினவினேன்.
சேர் ஏன் நீங்கள் இந்தியாவுக்கு வரக்கூடாது? என்று என்னை வினவினார்.
நான் பல தடவைகள் இந்தியாவுக்கு வந்திருக்கிறேன் பல முக்கியமான பகுதிகளுக்கும் விஜயம் செய்திருக்கிறேன் என்றேன்.
சேர் நான் என்ன கூறுகிறேன் என்றால் நீங்கள் எங்களது நாட்டுக்கு உங்கள் குடும்பத்துடன் வந்து குடியேறுங்கள் என்றார்.
உங்களது அழைப்புக்கு மிகுந்த நன்றிகள். ஏன் நீங்கள் இவ்வாறான ஒரு கோரிக்கையை இன்று விடுத்தீர்கள்? என்றேன்.
அவர் எனக்கு இவ்வாறு பதிலளித்தார். ” சேர் எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம். நான் வானொலி செய்திகள் கேட்கிறேன். தொலைக்காட்சி பார்க்கிறேன். பத்திரிகைகள் வாசிக்கிறேன். அச்செய்திகள் இலங்கையைப் பற்றி மோசமாகவே தெரிவிக்கின்றன என்றார்.
அந்த இந்தியரை சமாதானப்படுத்துவதற்காக நன்றிகளைத் தெரிவித்தேன். அது பற்றி எனது குடும்பத்தாருடன் கலந்து பேசி தெரிவிக்கிறேன் என்றேன்.
இது ஒரு சம்பவம் மாத்திரமே. நான் மாத்திரமல்ல இங்கு (ரியாதில்) வாழும் ஒவ்வொரு இலங்கையரும் இவ்வாறான தர்மசங்கடமான நிலைக்கு உள்ளாகிறார்கள். இவ்வாறான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
அரசியல்வாதிகள் எங்களது அழகான தாய்நாட்டை அழித்து விட்டார்கள். நாங்கள் வாழ்ந்து விட்டோம் ஆனால் நாங்கள் எமது பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுக்கு, எதிர்கால பரம்பரையினருக்கு எதனை விட்டுச் செல்லப் போகிறோம் என கவலைப்படுகிறோம்.
நன்றி: கொழும்பு டைம்ஸ். -ஏ.ஆர்.ஏ.பரீல்
Via: Vidivelli Paper 26/5/2022