ஜும்மா தொழும் இடங்களில் மாற்றம் – ஜம்இய்துல் உலமா

கொவிட் 19 பரவலுக்கு முன் ஜும்ஆத் தொழுகை நடைபெற்ற மஸ்ஜிதுகளில் மாத்திரம் இனி வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையை நடத்துமாறு அகில இலங்கை ஜம்இய்துல் உலமா அறிவித்துள்ளது.

அத்தோடு, தொடர்ந்தும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறும் உலமா சபை அறிவுறுத்தியுள்ளது.

ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித் மற்றும் ஃபத்வாக் குழு செயலாளர் அஷ் ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொவிட் 19 அதிகமாக பரவிக் கொண்டிருந்த காலகட்டத்தில் மக்கள் மஸ்ஜித்களில் ஒன்றுகூடும் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டிருந்த காரணத்தினால் ஜும்ஆக்களை தக்கியாக்கள், ஸாவியாக்கள் போன்ற பல இடங்களிலும் நடாத்துவதற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழிகாட்டியிருந்தது.

எனினும் தற்போது கொரோனாவுடைய தாக்கம் குறைந்து, மஸ்ஜித்களில் ஒன்றுகூடும் எண்ணிக்கை தளர்த்்தப்பட்டு, நிலைமை கட்டுக்கோப்பான ஒரு நிலைக்கு வந்திருப்பதன் காரணத்தினாலும், ஜும்ஆவுக்கென்று ஷாபிஈ மத்ஹபில் சில முக்கியமான நிபந்தனைகள் இருப்பதாலும் குறிப்பாக அனைவரும் ஒரு இடத்தில் ஒன்றுசேர முடியாத நிலைமை இருந்தாலே தவிர, ஒரு ஊரில் ஒரு இடத்தில் மாத்திரமே ஜும்ஆ நடாத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனைக்கு அமைவாக, ஏற்கனவே (கொவிட் 19 பரவலுக்கு முன்) ஜும்ஆத் தொழுகை நடாத்தப்பட்டுக் கொண்டிருந்த மஸ்ஜித்களில் மாத்திரம் சுகாதார வழிகாட்டல்களைப் பேணி ஜும்ஆக்களை நடாத்துமாறு மஸ்ஜித் நிர்வாகிகளை கேட்டுக் கொள்கின்றோம்.

சுகாதார வழிகாட்டல்களைப் பேணி ஒரு ஊரில் ஒரு இடத்தில் ஜும்ஆவை நடாத்த முடியாமல் இருந்தால் மாத்திரம் பிறிதொரு இடத்தில் ஜும்ஆவை நடாத்தலாம். எனினும் ஓர் ஊரில் மார்க்க வழிகாட்டல்களைப் பேணாது பிறிதொரு இடத்தில் ஜும்ஆ நடைபெறுமாயின் ஷரீஅத்தின் பார்வையில் இரண்டாவது ஜும்ஆ செல்லுபடியற்றதாகும் என ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனவே இதனை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் ஜம்இய்யாவின் கிளைகள் தத்தமது பிரதேசத்திற்கு ஏற்ப சம்பந்தப்பட்ட மஸ்ஜித் நிர்வாகிகளுக்கு வழிகாட்டி உதவுமாறு வேண்டிக் கொள்கின்றோம் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter