அரசாங்கமே வன்முறைக்கு பொறுப்பு கூறவேண்டும்!

இவ்வளவு கடும்‌ கோபத்தையும்‌ வெறியையும்‌, மக்கள்‌ இவ்வளவு நாள்‌ அடக்கிக்‌ கொண்டு இருந்துள்ளனர்‌ என்பது, மஹிந்த ராஜபக்ஷவின்‌ ஆட்கள்‌, காலிமுகத்‌ திடலில்‌ அமைத்திருந்த அரச எதிர்ப்பு போராட்டக்‌ களத்தை தாக்கிய பின்னர்‌ தான்‌ தெரிகிறது.

கையில்‌ பணம்‌ இருந்தும்‌, பிள்ளைக்கு கொடுக்க ஒரு பைக்கட்‌ பால்மாவை தேடிக்‌ கொள்ள முடியாவிட்டால்‌, பல நாள்‌ சுஷ்டப்பட்டு தேடிக்‌ கொண்ட பால்மாவை கரைத்துக்‌ கொடுக்க வீட்டில்‌ எரிவாயுவோ மண்ணெண்ணெய்யோ உரிய நேரத்துக்கு மின்சாரமோ இல்லாவிட்டால்‌, வாடகை அறையில்‌ தங்கி இருப்பவர்‌ சாப்பாட்டுக்காக ஒவ்வொரு சாப்பாட்டுக்‌ கடைக்கும்‌ ஏறி இறங்க வேண்டியிருந்தால்‌, தமது சம்பளத்தால்‌ குடும்பத்தையே பராமரித்து வந்தவருக்கு ஒரு வருடத்துக்குள்‌ அந்தக்‌ கடமையை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டால்‌, அந்த மனநிலை வெறியாகவே வெடித்து வெளியேறும்‌. அதையே இப்போது காண்கிறோம்‌.

மக்கள்‌ இந்த ஆத்திரத்தை, பல மாதங்களாக அடக்கிக்‌ கொண்டு சமாளித்து வந்தனர்‌; பின்னர்‌, எந்த அடக்குமுறை வந்தாலும்‌ பரவாயில்லை என்று, தமது பிரச்சினைகளுக்குத்‌ தீர்வைத்‌ தேடி. ஆர்ப்பாட்டம்‌ நடத்தத்‌ தொடங்கினர்‌. ௮ந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும்‌ எவ்வித வன்முறையுமின்றி, உலக நாடுகளே பாராட்டும்‌ அளவுக்கு கட்டுப்பாட்டுடன்‌ நடத்தி வந்தனர்‌;

அந்த ஆர்ப்பாட்டங்களின்‌ போது, அவர்கள்‌ அரசாங்கத்துக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டு வந்த போதிலும்‌, பொருளாதார பிரச்சினைகளால்‌ மனதுக்குள்‌ குமுறிக்‌ கொண்டு தான்‌ இருந்தனர்‌. அவர்கள்‌ அச்சமின்றி, ஜனாதிபதி அலுவலகத்தையும்‌ பிரதமரின்‌ உத்தியோகபூர்வ இல்லமான “அலரி மாளிகை’யையும்‌ முற்றுகையிட, அந்த மனக்குழுறலே அவர்களைத்‌ தூண்டியது.

ஒரு மாத காலமாக ஜனாதிபதியின்‌ அலுவலகத்தின்‌ முன்னால்‌, ஆர்ப்பாட்டம்‌ நடத்தி வந்த போதிலும்‌ அவர்கள்‌, ஒரு சிறிய கல்லையேனும்‌ அந்த அலுவலகத்தின்‌ மீது எறியாமல்‌, மிகவும்‌ கட்டுப்பாட்டுடன ஆர்ப்பாட்டத்தை நடத்தி வந்தனர்‌.

இந்த நிலையில்‌ தான்‌, ஆளும்‌ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச்‌ சேர்ந்த குண்டர்கள்‌, திங்கட்கிழமை (09) அந்த இரண்டு இடங்களில்‌ இருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கினர்‌. அதன்‌ எதிரொலியையே நாம்‌ அன்று வடக்கு, கிழக்கு தவிர்ந்த நாட்டில்‌ ஏனைய பகுதிகளில்‌ கண்டோம்‌.

ஆர்ப்பாட்டக்காரர்கள்‌ தாக்கப்பட்டதன்‌ பின்னர்‌, நாடே பொங்கி எழுந்து, மக்கள்‌ வீதிகளில்‌ ஆர்ப்பாட்டம்‌ நடத்த ஆரம்பித்த போது, ‘வெறுப்பு வெறுப்பைத்‌ தணிக்காது; வெறுப்பு வெறுப்பையே வளர்க்கும்‌’ என்ற கெளதம புத்தரின்‌ கூற்றை, அப்போது பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ, தமது ‘டுவிட்டர்‌’ கணக்கில்‌ குறிப்பிட்டு இருந்தார்‌.

ஆனால்‌, வன்முறையை ஆரம்பித்த குண்டர்கள்‌, அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில்‌ இருந்து வருவதை நாடே, தொலைகாட்சி மூலம்‌ கண்டது. அவரும்‌ ஜொன்ஸ்டன்‌ பெர்னாண்டோ போன்ற அரசியல்வாதிகளும்‌, குண்டர்களை உசுப்பேற்றுவதையும்‌ தொலைக்காட்சியில்‌ காணக்கூடியாதாக இருந்தது.

ராஜபக்ஷர்கள்‌ தமது கொடுமைகளை எப்போதும்‌ சமயத்தையும்‌ மக்களின்‌ இனஉணர்வையும்‌ பாவித்தே நியாயப்படுத்தி வந்துள்ளனர்‌: ஆர்ப்பாட்டக்காரர்கள்‌ அலரி மாளிகை முன்னால்‌ ஆர்ப்பாட்டக்‌ களத்தை அமைத்த போது, அவர்களது கோஷங்கள்‌ கேட்காத அளவுக்கு, அலரி மாளிகையில்‌ இருந்து ஒலிபெருக்கி மூலம்‌, இரவு பகலாக ‘பிரித்‌’ ஓதப்பட்டது. இது சமயத்தை, அரசியலுக்காகப்‌ பாவிப்பதேயன்றி வேறோன்றுமல்ல.

பின்னர்‌, முதல்‌ நாள்‌ (08) அநுறாதபுரத்துக்குச்‌ சென்று, பல முக்கிய பெளத்த தலங்களைத்‌ தரிசித்‌துவிட்டு வந்த பிரதமர்‌, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக குண்டர்களை ஏவிவிட்டு, வெறுப்பைப்‌ பற்றிய புத்தரின்‌ போதனைகளை எடுத்துரைக்கிறார்‌.

ஆளும்‌ கட்சியினர்‌, மக்களின்‌ ஆர்ப்பாட்டங்களை மிகவும்‌ குறைவாகவே மதிப்பீடு செய்திருந்தனர்‌. இந்த ஆர்ப்பாட்டங்களின்‌ பின்னால்‌, மக்கள்‌ விடுதலை முன்னணியும்‌ முன்னணி சோஷலிஸ கட்சி ஆகியனவே இருப்பதாகவும்‌, மக்கள்‌ விடுதலை முன்னணி கடந்த பொதுத்‌ தேர்தலின்‌ போது, மூன்று சதவீத வாக்குகளையே பெற்றது என்றும்‌ முன்னணி சோஷலிஸ கட்சி 6,000 வாக்குகளையே பெற்றது என்றும்‌, இவர்கள்‌ நாட்டு மக்களின்‌ தலைவிதியைக்‌ கையிலெடுக்க இடமளிக்க முடியாது என்றும்‌ அண்மையில்‌ அக்கட்சியைச்‌ சேர்ந்த ஒர்‌ அரசியல்வாதி, தொலைக்காட்சி விவாதமொன்றின்‌ போது கூறினார்‌.

ஆனால்‌, இந்தப்‌ போராட்டம்‌ அவ்வாறானதல்ல என்பது, இப்போது தெளிவாகத்‌ தெரிகிறது. மக்கள்‌ விடுதலை முன்னணியினரும்‌ முன்னணி சோஷலிஸ கட்சியினரும்‌ ஆர்ப்பாட்டங்களின்‌ போது, முக்கிய பங்கை ஆற்றுவது உண்மைதான்‌. அனால்‌, பொருளாதார பிரச்சினைகளால்‌ இரத்தம்‌ கொதித்துக்‌ கொண்டு இருக்கும்‌ மக்களே, பொதுவாக ஆர்ப்பாட்டம்‌ நடத்துகிறார்கள்‌.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின்‌ ஒத்தழைப்புடன்‌, ஆர்ப்பாட்டக்காரர்கள்‌ மீது தாக்குதல்‌ நடத்த முன்னாள்‌ பிரதமர்‌ திட்டமிட்டாரா அல்லது, ஜனாதிபதிக்கு அறிவிக்காமலே அதைத்‌ திட்டமிட்டாரா என்பது தெளிவாகவில்லை. அவர்‌, ஐனாதிபதிக்கு அறிவிக்காமலே குண்டர்களை அலரி மாளிகைக்கு அழைத்திருந்தால்‌, ஐனாதிபதி அதை உளவுப்‌ பிரிவினர்‌ மூலம்‌ அறிந்திருக்கவில்லைய? எனவே, இந்த வன்முறையில்‌ தமக்கு எவ்வித பங்கும்‌ இல்லை என்று கூற ஜனாதிபதிக்கு முடியாது.

முதிர்ந்த, பல தசாப்தங்களாக அனுபவம்‌ பெற்ற, குறிப்பாக வன்முறை அரசியலைப்‌ பற்றிப்‌ பரிச்சயமுள்ள முன்னாள்‌ பிரதமர்‌ ஏன்‌ இவ்வாறு செய்தார்‌ என்பது, அடுத்த கேள்வியாகும்‌. தற்போதைய அரசியல்‌ நெருக்கடிக்குத்‌ தீர்வு காணும்முகமாகப்‌ பதவி விலகுமாறு, ஜனாதிபதி ஒரிரு நாள்களுக்கு முன்னர்‌, அமைச்சரவைக்‌ கூட்டமொன்றின்‌ போது பிரதமரிடம்‌ கூறியதாக செய்திகள்‌ வந்திருந்தன.

முன்னாள்‌ பிரதமர்‌ அதை ஏற்கவில்லையாம்‌. ஆனால்‌, பிரதமர்‌ பதவி விலக வேண்டும்‌ என்ற கருத்து, ஆளும்‌ கட்சிக்குள்‌ வலுத்து வந்தது. அந்த நிலையில்‌, ஜனாதிபதியை மேலும்‌ கஷ்டத்தில்‌ தள்ளிவிட்டு வெளியேறுவதற்காகவே பிரதமர்‌, இந்தத்‌ தாக்குதலை திட்டமிட்டு இருக்கலாம்‌ என்று ஒரு கருத்து பரவி இருக்கிறது.

ஆர்ப்பாட்டக்காரர்களின்‌ வன்முறைகளை நாம்‌ நியாயப்படுத்தாவிட்டாலும்‌, அந்த வன்முறையிலும்‌ ஒருவித கட்டுப்பாட்டை காண்கிறோம்‌. அவர்கள்‌ ஆளும்‌ கட்சியின்‌ சகல அரசியல்வாதிகளின து வீடுகளையும்‌ தாக்கவில்லை. ஆளும்‌ கட்சியைச்‌ சேரந்தவர்களில்‌, மக்களை வெகுவாகப்‌ பாதிக்கும்‌ அரசாங்கத்தின்‌ முடிவுகளை நியாயப்படுத்திக்‌ கொண்டு, மக்களின்‌ அறிவை பரிகசிக்கும்‌ வண்ணம்‌ நடந்து கொண்டவர்களையே, மக்கள்‌ குறி வைத்துள்ளனர்‌. ராஜபக்ஷர்கள்‌, ஜொன்ஸ்டன்‌, லான்ஸா, பிரசன்ன, ரோஹித்த போன்றவர்களின்‌ வீடுகளே தாக்கப்பட்டுள்ளன. நாம்‌, வன்முறையை நியாயப்படுத்தாவிட்டாலும்‌, இதன்‌ மூலமும்‌ மக்களின்‌ கோபத்தைப்‌ புரிந்து கொள்ளலாம்‌.

வன்முறைகள்‌ சிலவேளைகளில்‌, பொதுமக்களின்‌ அபிலாஷைகளுக்கு முற்றாகவே மாற்றமான நிலைமையை உருவாக்கலாம்‌. சிலவேளை, வன்முறைகள்‌ கடைகளை வீடுகளை கொள்ளையடிக்கும்‌ திசைக்குத்‌ திரும்பலாம்‌. 1982ஆம்‌ ஆண்டு தமிழருக்கு எதிரான வன்செயல்களின்‌ போதும்‌ 1987ஆம்‌ ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தத்‌ துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின்‌ போதும்‌ இதுவே நடந்தது.

இந்திய ஒப்பந்தத்துக்கு எதிராக வெடித்த ஆர்ப்பாட்டங்கள்‌, அடுத்த நாளே கடைகளையும்‌ வீடுகளையும்‌ கொள்ளையடிக்கும்‌ மாபெரும்‌ கலவரமாக மாறியது. அவ்வாறானதொரு நிலை இப்போது ஏற்பட்டால்‌, பணம்‌ உள்ளவரும்‌ இல்லாதோரும்‌ பட்டினியில்‌ தான்‌ இருக்க வேண்டியிருக்கும்‌. எனவே, ஆர்ப்பாட்டக்காரர்கள்‌ மீது செல்வாக்கு செலுத்தக்கூடிய மக்கள்‌ விடுதலை முன்னணி, முன்னணி சோஷலிஸ கட்சி போன்றவற்றின்‌ தலைவர்கள்‌, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்‌.

அதேவேளை, வன்முறைகள்‌ ‘இனக்கலவரமாகவும்‌ மாறலாம்‌. அவ்வாறானதொரு நிலைமையை ஆட்சியாளர்களே உருவாக்கலாம்‌.

தற்போதைய பிரச்சினையின்‌ அடிப்படை, பொருளாதார நெருக்கடி யாக இருந்த போதிலும்‌, சகல தரப்பினரும்‌ அதற்குத்‌ தீர்வாக, ஜனாதிபதி பதவி விலக வேண்டும்‌ என்பதைப்‌ போன்ற அரசியல்‌ தீர்வுகளையே முன்வைக்கின்றனர்‌. அரசியல்‌ மாற்றங்களால்‌, பொருளாதார பிரச்சினைகள்‌ உடனடியாகத்‌ தரப்போவதில்லை. ஆனால்‌, அந்தத்‌ தீர்வுக்கான அரசியல்‌ அடித்தளத்தை, ௮ம்‌ மாற்றங்களால்‌ இட்டுக்‌ கொள்ள முடியும்‌ என்பதாலேயே, அவ்வாறு அரசியல்‌ தீர்வுகளுக்கான ஆலோசனைகள்‌ முன்வைக்கப்படுகின்றன.

அதாவது, மக்களின்‌ கோஷங்களின்படி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியை இராஜினாமாச்‌ செய்வதால்‌, பொருளாதார பிரச்சினைகள்‌ உடனடியாகத்‌ தீரப்போவதில்லை.

அதேபோல்‌, கோட்டாபய ஜனாதிபதியாக இருக்கும்‌ வரையும்‌ இப்பிரச்சினைகள்‌ தீரப்‌ போவதில்லை. ஏனெனில்‌, அவரது அரசியல்‌ மற்றும்‌ பொருளியல்‌ அறிவு பூஜ்ஜியமாக இருப்பது, கடந்த இரண்டரை ஆண்டுகளில்‌ மக்கள்‌ புரிந்து கொண்டனர்‌.

அதேவேளை, ராஜபக்ஷர்கள்‌ பாரியளவிலான ஊழல்களை நோக்கமாகக்‌ கொண்டே, சகல பொருளாதார நடவடிக்கைகளையும்‌ எடுத்துள்ளனர்‌. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு, கோட்டாபயவின்‌ அவ்வாறான நடவடிக்கைகளே பிரதான காரணமாக அமைந்தது.

எனவே, பொருளாதார நெருக்கடிக்குத்‌ தீர்வு காண்பதாக இருந்தால்‌, பிரதானமாக ஆட்சி மாற்றம்‌ ஒன்று ஏற்பட வேண்டும்‌. அதன்‌ பின்னர்‌, பொருத்தமானதோர்‌ ஆட்சி அமைப்பை உருவாக்கிக்‌ கொள்ள வேண்டும்‌. இதற்காக பல ஆலோசனைகள்‌ ஏற்கெனவே முன்வைக்கப்பட்டுள்ளன. சர்வகட்சி இடைக்கால அரசாங்கம்‌ என்பது அவற்றில்‌ பிரதானமானதாகும்‌. இவை அனைத்தும்‌ தற்காலிக ஏற்பாடுகளாகவே இருக்க வேண்டும்‌.

இதுவரை செய்தததைப்‌ போல்‌, திருடர்களைத்‌ தெரிவு செய்யாது மக்கள்‌, தேர்தல்‌ மூலம்‌ நேர்மையானவர்களைத்‌ தெரிவு செய்து, மக்களாட்சியை உருவாக்கிக்‌ கொள்ளாவிட்டால்‌, இந்த நெருக்கடி அடுத்த தலைமுறைக்கும்‌ எடுத்துச்‌ செல்லப்படும்‌.
(MSM அய்யூப் – தமிழ்மிரர் 11/5/2022)

Check Also

ஆளை அடித்து வளர்த்தாட்டி இருக்கிறேன் – முஸ்அப் மரணத்தில் நடந்தவை

“தலையில் தொப்பி போடாது, நின்று கொண்டு ‘சூ’ பெய்திருக்கிறான் ஆளை அடித்து வளர்த்தாட்டியிருக்கிறேன்” சாய்ந்தமருது சபீலிர் ரசாத் மத்ரசாவில் மாணவர் …

Free Visitor Counters Flag Counter