வறுமை, பாரம்பரியம் மற்றும் பாலின சமத்துவமின்மை போன்ற பல்வேறு காரணங்களால் இலங்கை முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான இளம் பெண்களுக்கு, உரிய வயதை அடைவதற்கு முன்னராகவே அவர்களது பெற்றோர் திருமணம் செய்து வைக்கின்றனர். இது இளம் பெண்களின் வாழ்க்கையை படுகுழியில் தள்ளிவிடுகிறது.
இலங்கையில் சிறுவர் திருமணங்கள் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் முஸ்லிம்கள் மீதே அதிக கவனம் செலுத்தியுள்ளன. ஆனால், உண்மையில் சிறுவர் திருமணப் பிரச்சினை முஸ்லிம் அல்லது சிங்களப் பிரச்சினையல்ல, இது ஒரு தேசியப் பிரச்சினை என்பதை ஆதாரங்கள் காண்பிக்கின்றன.
அநுராதபுரம் மாவட்டத்தை மையப்படுத்திய ஆய்வு
2021ஆம் ஆண்டில் அநுராதபுரம் மாவட்டத்தில், ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் திலினி அகம்பொடி தலைமையிலான ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்விலேயே இந்த விடயங்கள் தெரிய வந்துள்ளன.
அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள சகல பிரதேசங்களையும் உள்ளடக்கும் வகையில் 3374 கர்ப்பிணித் தாய்மார்கள் மத்தியில் இந்த ஆய்வு நடாத்தப்பட்டுள்ளது. இவர்களில் மூன்று மாதங்களில் 254 இள வயதினர் கர்ப்பம் தரித்துள்ளனர். இதற்கமைய இம் மாவட்டத்தில் மாத்திரம் ஒரு வருடத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான இள வயது பெண்கள் கர்ப்பமுறுகின்றனர்.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 1041 பேர் முதன் முறையாக கர்ப்பம் தரித்தவர்களாவர். இந்த 1041 பேரில் 233 பேர் இள வயதினர். குறிப்பாக இம் மாவட்டத்தில் உள்ள பலுகஸ்வெவ, பதவிய மற்றும் விலாச்சிய ஆகிய கிராமங்களில் முதன் முறையாக கர்ப்பம் தரித்தவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இள வயதினராவர்.
இந்த ஆய்வின் போது இவர்களது உடல் மற்றும் உள ஆரோக்கியம் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கமைய, இவர்களில் 44 வீதமான இளவயதினர் அதிகம் கவலையுற்றவர்களாக இருந்தனர். 41 வீதமானோர் இந் நிலைமைக்கு தம்மைத்தாமே குற்றஞ்சாட்டினர். 9 வீதமானோர் தமது நிலைமை பரிதாபகரமானது எனத் தெரிவித்தனர். இவர்களில் 17 பேர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்வதற்கு எண்ணியதாகவும் இவர்களில் 11 பேருக்கு கடந்த 2 வாரங்களுக்குள் இந்த எண்ணம் தோன்றியதாகவும் பதிலளித்துள்ளனர். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் ஊட்டச்சத்துக் குறைபாட்டினாலும் 18 வீதமானோர் இரத்தச் சோகை நோயினாலும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் இருவர் தாம் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களுக்கு உட்பட்டதாகவும் எண்மர் உள ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் ஆறு பேர் கர்ப்பம் தரித்திருந்த காலப்பகுதியில் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இவர்களது கல்வி அறிவு குறித்தும் இந்த ஆய்வு கவனம் செலுத்தியது. இதற்கமைய இவர்களில் அதிகமான இள வயதினர் 11 ஆம் தரத்துக்கு மேல் கல்வியைத் தொடரவில்லை. இவர்களை திருமணம் செய்துள்ள ஆண்களும் கூட கல்வி அறிவில் குறைவான மட்டத்தையே கொண்டிருந்தனர். அத்துடன் இவர்களது கர்ப்பமும் திட்டமிடப்படாததாகவே அமைந்திருந்தன.
அதன் அடிப்படையில், சிறுவர் திருமணம் என்பது சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளை மீறுவதாகும். காரணம் எதுவாக இருந்தாலும், சிறுவர் திருமணம் அவர்களது எதிர்காலத்தை கடுமையாகப் பாதிப்பதுடன் அவர்களது எதிர்காலத்தையே முற்றாக சிதைத்துவிடுகிறது.
சுஜானியின் கதை
அநுராதபுரம், கனுகஹவெவ பகுதியைச் சேர்ந்த சுஜானி, தான் எவ்வளவு பெரிய இழப்புகளைச் சந்தித்துள்ளேன் என்பதை உணரவில்லை என்கிறார். “திருமணம் செய்து கொள்ள முடியாத அளவுக்கு இள வயதுடையவளாக நான் இருந்தேன். அழுதேன். நான் அதனை விரும்பவில்லை, திருமணத்தின் அர்த்தம் எனக்கு புரியவில்லை, நான் அதிகம் பயந்திருந்தேன்” என்கிறார்.
சுஜானியின் கதை யதார்த்தத்திலிருந்து அப்பாற்பட்டதல்ல என்பதை தரவுகள் காட்டுகின்றன. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 15 மில்லியன் பெண்கள் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொள்கிறார்கள். அதாவது இரண்டு செக்கன்களுக்கு ஒரு இள வயது பெண் திருமணம் செய்து கொள்கிறார்.
சுஜானியும் அவளுடைய இரண்டு தங்கைகளும் பெரும்பாலான நாட்களில் பசியுடன்தான் படுக்கைக்குச் செல்வார்கள். அவளுக்கு ஒன்பது வயதாக இருந்தபோது பெற்றோர் பிரிந்துவிட்டனர். இதனால் குடும்பத்தை முன்கொண்டு செல்வது இன்னும் கடினமாகிவிட்டது.
சுஜானியின் தாயாருக்கு தனது மூன்று இளம் பெண் குழந்தைகளுக்கும் உணவளிப்பது பெரும் கஷ்டமாகிவிட்டது. இதனால் சுஜானியின் தாய் தனது மூன்று மகள்களையும் பாட்டியின் பொறுப்பில் விட்டுவிட்டு வீட்டுப் பணிப்பெண்ணாக லெபனானுக்குச் சென்றார்.
“நான் பாடசாலை சென்று கல்வி கற்க வேண்டிய நேரத்திலேயே எனக்கு திருமணம் நடந்தது” என்று தற்போது 30 வயதாகும் சுஜானி கூறுகிறார். இப்போது அவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.
“எனக்கு திருமணமானபோது 15 வயது. எனக்கு உணவளிக்கவோ, உடை வாங்கவோ, கல்விக்கான செலவுகளை வழங்கவோ எனது தாயால் முடியாது என்பதை நான் அறிந்திருந்தேன்.திருமணம் செய்ய மறுத்தால், வேறு வழியில்லை என்பதையும் உணர்ந்திருந்தேன். அதனால் திருமணம் செய்து கொண்டேன்” என்கிறார் அவர்.
திருமணம் செய்த பின்னர் சுஜானி பாடசாலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக தனது கணவரைக் கவனித்துக்கொண்டார். ஆனால் அவளும் அவள் கணவனும் சாப்பிடும் அளவுக்கு கூட சம்பாதிப்பதற்கு சிரமப்பட்டனர். ஆனால் சுஜானிக்கு மிகப்பெரிய இழப்பு, அவளது சுதந்திரம்தான். “நான் எனது குடும்பத்துடன் தங்கியிருந்தபோது நான் விரும்பியதைச் செய்ய சுதந்திரமாக இருந்தேன். இப்போது நான் சுதந்திரமாக இல்லை. அவர் எனக்கு எதையும் விரும்பிச் செய்வதற்கான சுதந்திரத்தை தரவில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் மட்டுமே தீர்மானிப்பார்” என்கிறார்.
இத்தகைய சூழ்நிலைகளில் உள்ள பெண்கள் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துவதில்லை. அத்துடன் திட்டமிடப்படாத கர்ப்பம் மற்றும் எச்.ஐ.வி, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் உள்ளிட்ட பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளுக்குள்ளாகும் அதிக ஆபத்தில் உள்ளனர்.
15 –19 வயதுடைய இலங்கைப் பெண்களில், கர்ப்பத்துடன் தொடர்புடைய காரணங்களே மரணத்திற்கான இரண்டாவது முக்கிய காரணமாகும். குழந்தைப் பேறுக்கான உடல் முதிர்ச்சியின்மையும் உரிய மருத்துவ சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியாதிருப்பதும் இதற்குக் காரணங்களாகும்.
“நான் கர்ப்பமாக இருந்தபோது அதிக வலியை உணர்ந்தேன், ஏனென்றால் அந்த வயதில் நான் கருத்தரிப்பதற்கு தயாரான உடல் நிலையைக் கொண்டிருக்கவில்லை” என்று அவர் கூறினார்.
16 வயதில், பிரசவம் பற்றியோ, குழந்தையை எப்படிப் பராமரிப்பது என்பது பற்றியோ எந்தவித அறிவுமற்ற நிலையிலேயே சுஜானிக்கு மிகவும் வலியுடன் கூடிய பிரசவம் நிகழ்ந்தது “குழந்தையை எப்படிப் பிரசவிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. நானே ஒரு குழந்தையாக இருந்தேன். மேலும் 15 வயதிற்குட்பட்ட எவரும் நான் அனுபவித்த அதே வலிகளை அனுபவிப்பதை நான் விரும்பமாட்டேன்.” என்றும் சுஜானி கூறுகிறார்.
அவளது சிறு வயதுக் கனவுகள் பற்றிக் கேட்டபோது, “பொருளாதார கஷ்டங்கள் காரணமாக தான் பெரிய கனவுகள் எதனையும் கொண்டிருக்கவில்லை” என்றார். “என் வயதுடைய ஏனைய பிள்ளைகளைப் பார்த்தபோது, நான் அவநம்பிக்கையுடையவளாகவும் உதவியற்றவளாகவும் உணர்ந்தேன். என் பெற்றோரின் ஆதரவு இல்லாமல், என்னால் ஏணியை எட்ட முடியாது என்பது எனக்குத் தெரியும். இப்படி ஒரு வாழ்க்கை கிடைப்பதற்கு நாம் ஏதோ பாவங்களைச் செய்திருக்க கூடும்” என்றும் சுஜானி குறிப்பிடுகிறார்.
சுஜானி ஒன்பது வருடங்கள் களிமண் வீட்டிலேயே வாழ்ந்தார், அவர் அரசாங்க சமுர்த்தி திட்டத்தின் ஊடாக வீடு கட்டுவதற்கான நிதியுதவியைப் பெற்றார். எனினும் சமுர்த்தி நிதியில் கட்டப்பட்ட வீட்டின் சுவர் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. அதன் பின்னர் விமானப்படை அதிகாரிகள் வந்து சுஜானியின் வீட்டை முழுமையாக நிர்மாணித்துக் கொடுத்தனர். “இப்போது நாங்கள் வெறும் வயிற்றுடன் இருந்தாலும் மழையில் நனையாமல் கூரையின் கீழ் வாழ்கிறோம். எனது இரண்டு மகள்களுடன், கதவை மூடிக்கொண்டு இரவில் பாதுகாப்பாக தூங்குவதற்கு ஒரு வீடு இருக்கிறது. விமானப் படையினருக்கு எனது நன்றிகள்” என்கிறாள்.
பதிவாளர் நாயகம் திணைக்களத்தால் பராமரிக்கப்படும் புள்ளிவிபரங்களை ஆய்வு செய்தபோது, 2005 மற்றும் 2015 க்கு இடைப்பட்ட காலத்தில், 18 வயதுக்குட்பட்ட தாய்மார்களால் 105,000 க்கும் அதிகமான பிரசவங்கள் நாட்டில் பதிவாகியுள்ளதாக தரவுகள் கூறுகின்றன. 13 வயதில் குழந்தை பிரசவித்தவர்களின் எண்ணிக்கையும் இதில் அடங்கும்.
ஆனால், அரசாங்க தரவுகளில் குறைபாடுகள் உள்ளன. அரசாங்கம் தரவுகளை முறையாக சேகரித்து சிக்கல்களைக் கண்டறிய வேண்டும், அப்போதுதான் இள வயது திருமணத்திலிருந்து சிறுமிகளைப் பாதுகாப்பதற்கான கொள்கைகளை சரிவர அமுல்படுத்துவது சாத்தியமாகும்.
முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் தற்போது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது தவிர இள வயது திருமணத்தை ஒழிக்க நாட்டில் போதுமான சட்டங்கள் மற்றும் கொள்கைகள் உள்ளன. ஆனால், அவற்றைச் செயல்படுத்துவதில்தான் குறைபாடு உள்ளது.
டெய்லி மிரர் (23.03.2022) பத்திரிகையில் பியூமி பொன்சேக்கா எழுதிய கட்டுரையைத் தழுவியது
விடிவெள்ளி பத்திரிகை (24/3/2022)