சிகரம் தொடும் அக்குறணை அஸ்ஹர் மாதிரி ஆரம்பப் பாடசாலை 2012 – 2022

முதலாம் தசாப்தம் கடந்த இரண்டாம் தசாப்தத்தில் நுழைந்துள்ள எமது பாடசாலையின் பெருமிதம் கொள்ளக்கூடிய வரலாற்றுக் குறிப்பு

ஒவ்வொரு பாடசாலை யும் காலத்துக்குக் காலம் வருடாந்த பூர்த்தி விழாக்களைக் கொண்டாடும், வருடங்கள் கடந்து செல்கையில் பாடசாலையின் சகல வழிகளிலான அபிவிருத்திகளும் ஆரோகணத்திலும், தவறுகள் மற்றும் குறைகள் அவரோகணத்திலும் செல்ல வேண்டும். அந்த வகையில் ஏனைய பாடசாலைகளுக்கு முன்னுதாரணமாகவும், முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் எமது பாடசாலை வரலாறு நிச்சயம் அமையும்.

வசதி,வனப்போடு இருக்கும் எமது பாடசாலை கடந்து வந்த பாதையில் பலரின் தியாகமும் அர்ப்பணிப்பும் பதிந்துள்ளது என்பது மறக்க முடியாத உண்மையாகும்.

2011ஆம் ஆண்டில் ஆட்சியிலிருந்த அரசாங்கத்தின் கல்விக் கொள்கையில் உதித்த ஆயிரம் பாடசாலைகளின் அபிவிருத்தி திட்டம் அக்காலத்தில் நாடுமுழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட விடயம். நாட்டிலுள்ள பிரபல பாடசாலைகள் ஆயிரத்தினை தெரிவு செய்து அவற்றை அத்திட்டத்தில் உள்வாங்கும் செயற்பாட்டை மாகாண கல்வித் திணைக்களங்கள் மூலம் மத்திய கல்வியமைச்சு மேற்கொண்டது.

இதில் கட்டுகஸ்தோட்டை வலயக்கல்வி அலுவலகத்தின் சிபாரிசில் இத்திட்டத்திற்குள் அக்குறணை பிரதேசத்தின் மிகப்பெரிய பாடசாலையான அஸ்ஹர் தேசிய பாடசாலை உள் வாங்கப்பட்டது. அப்போது அஸ்ஹர் தேசிய பாடசாலையின் அதிபராக இருந்த ஜனாப். ஏ. ஆர்.எம்.உவைஸ் அவர்களின் தலைமையில் பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் ஒன்றிணைந்து கல்வி அதிகாரிகளின் ஆலோசனைகளுடன் பிரதேச அரசியல்வாதிகளின் ஒத்துழைப்புடன் புதிதாக ஒரு ஆரம்பப் பாடசாலையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் புதிய பாடசாலைக்கான இடமொன்றைப் பெறுவதிலிருந்த கஷ்ட நிலைமை காரணமாக அக்குறணை 7ம் கட்டை குருகொடை சந்தியில் 1942 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, சுமார் 70 வருடங்கள் பூர்த்தியான போதும் வளப்பற்றாக்குறைகளுடன் மூடப்படும் நிலையில் இயங் கிக் கொண்டிருந்த க/குருகொடை முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தை மூடி புதிதாக அவ்விடத்தில் ஆரம்பப் பாடசாலை ஒன்றை அமைப்பது என்ற முடிவை எடுத்தனர்.

அதன்படி கட்டுகஸ் தோட்டை வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய திருமதி சி.டி.ஜி. மாயாதுன்னவின் சிபாரிசுடன் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் ரிஸ்வி பாரூக்கின் வேண்டுகோளின் படி மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்கவின் உத்தரவுக்கிணங்க மத்திய மாகாண கல்வியமைச்சு செயலாளரின் அனுமதியுடன் மாகாண கல்விப் பணிப்பாளர் ஈ.பி.டி.கே. ஏக்க நாயக்க அவர்களால் புதிய ஆரம்பப் பாடசாலை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டு 19.01.2012 இல் புதிய பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.

மேலே பெயர் குறிப்பிட்டவர்களுடன் அப்போதைய. மத்திய மாகாண கல்விப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த கல்வி அதிகாரி ஜனாப். என். எம். நஸார் உட்பட இதில் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கிய கல்வி அதிகாரிகள், அர்ப்பணிப்புடன் ஈடுபட்ட பெற்றோர், அஸ்ஹர் பழைய மாணவ சங்கத்தினர், நலன் விரும்பிகள் அனைவரும் வரலாற்றில் பதியப்பட வேண்டியவர்களே.

அதிபர் சேவை தரம் 2 அதிபரான ஜனாப். ஏ.எம்.எம். ஸரூக் அவர்களை முதலாவது அதிபராகக் கொண்டு தரம் ஒன்றில் நான்கு சமாந்தர வகுப்புகளுடன் 147 மாணவர்களுடன் ஆரம்பமானது. இப்பாடசாலை ஆரம்பத்தில் மிக மோசமான பௌதீக வளங்களுடனேயே இருந்தது.

80 x 20 என்ற அளவுள்ள மிகப்பழைமை வாய்ந்த கட்டடத்தை புனர்நிர்மாணம் செய்து புதிய நான்கு வகுப்புகளையும் அதிபர் காரியாலயத்தையும் அமைத்து இயங்கச் செய்தல், பாதுகாப்பு சுவர்கள் கட்டுதல். கற்றலுக்குரிய சூழலை ஒழுங்கமைத்தல் போன்ற சகல விதமான உத விகளையும் வசதிகளையும் அஸ்ஹர் தேசிய பாடசாலை பழைய மாணவர் ஒன்றியம் மற்றும் தரம் 1 வகுப்பின் பெற்றோர்கள் ஆகியோர் வழங்கியமை வரலாற்றின் பதிவுகளாகும்.

அபிவிருத்தித் குழு மற்றும் அஸ்ஹர் பழைய மாணவர் சங்கம் என்பவற்றின் கோரிக்கைக்கேற்ப முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜனாப் ரிஸ்வி பாரூக்கின் வேண்டுகோளுக்கு இணங்க மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவின் மாகாண ஒதுக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டவேலைகள் படிப்படியாக முடிவடைந்த போது அதிகரித்த மாணவர் தொகைக்கும். ஆசிரியர் தொகைக்கும் ஏற்ப இடப் பற்றாக்குறை ஓரளவு தீர்ந்தது.

பெற்றோர்கள். பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள்,பழைய மாணவர்கள் மூலம் பாடசாலையின் பாதுகாப்பு மதில்கள், வேலிகள், மல சலகூட வசதிகள், படிக்கட்டுகளின் ஒழுங்கமைப்புகள், பிரதான மண்டபத்திற்கு பதிலான தற்காலிக ஒன்றுகூடல் கூடாரம் போன்ற இன்னோரன்ன விடயங்கள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டன. இவற்றின் போது பாடசாலை அபிவிருத்திக் குழுவின் மூலம் வழங்கப்பட்ட ஒத்தாசையும் ஆலோசனைகளும் பங்களிப்பும் அளப்பரியது. தற்போதைய அதிபரின் காலத்திலேயே இப்பாடசாலை முழுமையான ஆரம்பப் பாடசாலையாக மாற்றம் பெற்றது.

2016ஆம் ஆண்டிலேயே இப்பாடசாலை முதன்முதலாக பொதுப்பரீட்சையான தரம் 5 புலமைப் பரீட்சைக்கு மாணவர்களை அனுப்பியது. அதில் 12 மாணவர்கள் சித்தியடைந்ததுடன் அதிகமான மாணவர்கள் 70க்கு மேல் புள்ளிகளைப் பெற்றிருந்தனர். தொடர்ந்தும் ஒவ்வொரு வருடங்களிலும் சிறந்த அடைவை எய்திக்கொண்டிருக்கிறது.

வளத்தேவைகளைப் பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் அருகி லுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டடத்தின் முதலிருமாடிகளும் பூர்த்தியாக்கப்பட்டுள்ளது டன் அதிலேயே அதிபர் காரியாலயம். வாசிப்பு அறை, கற்றல் வள நிலையம் இயங்குகின்றன. அரச நிதியிலிருந்து கட்டப்பட்ட பாதுகாப்பு மதிலும் ஒழுங்குபடுத்தி பூர்த்தியாக்கப்பட்டுள்ளது.

தற்போது தரம் 1 தொடக்கம் தரம் 5 வரை சுமார் 740 மாணவர்களையும் 24 ஆசிரியர்களையும் 01 கல்விசாரா ஊழியர்களையும் கொண்டு மாவட்டத்தின் பிரபல ஆரம்பப் பாடசாலையாக இயங்குகிறது. அனைத்து பாடவிதான, இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் ஈடுபடுகிறது. இவ்வாறு பாடசாலை மட்டப் போட்டிகள் நடைபெற்று எமது மாணவர்கள் கோட்டமட்ட, வலயமட்ட, மாகாண மட்ட தேசிய மட்டப் போட்டிகளிலும் சாதனை புரிந்த வருகின்றனர். எமது இணைப்பாட செயற்பாடுகளாக வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி, வருடாந்த கல்விச் சுற்றுலா, சிறுவர் சந்தை. ஆங்கில தினவிழா, தமிழ்த் தின விழா, மீலாத் விழா, வாசிப்புப் போட்டிகள் என்பவற்றுக்கு மேலதிகமாக வர்ண சீருடைத் தினம் என்ற தினமானது 2018ஆம் ஆண்டு முதன் முதலில் எமது பாடசாலையிலேயே அறிமுகப் படுத்தப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் சுமார் 600க்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்தாலும் நான்கு சமாந்தர வகுப்புகளுக்குரிய மாணவர்களை மாத்திரமே சேர்த்துக்கொள்ள முடிகிறது. மேலும் 4ம், 5ம், வகுப்புகளில் கற்கும் மாணவர்களிலிருந்து வருடா வருடம் தெரிவு செய்யப்படும் மாணவர் தலைவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் அவர்கள் மூலமாகவும் ஏனைய மாணவர்களுக்கு சிறந்த ஒழுக்க விழுமியங்களை கற்பிக்க பாடசாலை ஆசிரியர்கள் முன்னின்று செயற்படுவதாலும். பெற்றோர்களுக்கு தேவையான நேரங்களில் வழிகாட்டல் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து நடாத்துவதனாலும், SBPTD மூலம் ஆசிரியர் வாண்மை விருத்திக்காக தொடர் செயற்றிட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுவதனாலும் தேவையான நேரங்களில் நவீன தொழிநுட்ப முறைகளைப் பயன்படுத்தி எமது ஆசிரியர்கள் கரிசனையோடு கற்பிப்பதனாலும் எப்போதும் உயிரோட்டத்தோடு இந்தப் பாடசாலை உள்ளதனால் பிள்ளைகள் விரும்பி வரும் பாடசாலையாக இது மிளிர்கிறது.

அதனாலேயே தான் மத்திய மாகாணத்தில் இடைவிலகல் மிகவும் குறைந்த பாடசாலைகளில் ஒன்றாக எமது பாட சாலையும் உள்ளது. (தினகரன் 21/3/2022)

Check Also

75வருட பூர்த்தியினை காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் பாடசாலை

பவள விழா காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் முஸ்லிம் வித்தியாலயம் ஒரு பார்வை கண்டி மாவட்டத்தில் கட்டுகஸ்தோட்டைக் கல்வி வலயத்தில் …

Free Visitor Counters Flag Counter