எரிபொருள் வரிசையில் வாக்குவாதம்: துவான் தாஜுதீனின் கொலை தொடர்பில் மேலும் தகவல்கள்!

நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹொரகொல்ல பகுதி எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகே வைத்து இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு – 14 பகுதியைச் சேர்ந்த 29 வயதான துவான் தாஜுதீன் எனும் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொரகொல்ல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வரிசையில் நிற்கும் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலைக்கான காரணம் என தெரிய வந்துள்ளதாக விசாரணைகளை முன்னெடுக்கும் நிட்டம்புவ பொலிஸார் கூறினர்.

நேற்று முன்தினம் (20) இரவு ஹொரகொல்ல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக துவான் தாஜுதீன் எனும் இளைஞர் தனது மோட்டார் சைக்கிளில் வரிசையில் காத்துக் கொண்டிருந்துள்ளார். இதன்போது அதே வரிசையில் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக வந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவருக்கும் துவான் தாஜுதீனுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இடைநடுவே வந்து வரிசையில் புகுந்து பெற்றோல் பெற்றுக்கொள்ள முச்சக்கர வண்டி சாரதி முயன்றமையால் இந்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் அங்கிருந்து சென்றுள்ள முச்சக்கரவண்டியின் சாரதி, கொழும்பு – கண்டி பிரதான வீதியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அருகே காத்திருந்தார். இந்நிலையில் எரிபொருளை பெற்றுக் கொண்டு கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை வழிமறித்து கூரிய ஆயுதத்தால் தாக்கி, முச்சக்கர வண்டி சாரதி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிளுடன் வீழ்ந்து கிடந்த இளைஞர், உடனடியாக வேறு ஒரு வாகனத்தில், வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப்ட்டுள்ள நிலையில், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் கூறினர்.

சந்தேகநபரான முச்சக்கர வண்டி சாரதி நிட்டம்புவ பகுதியை அண்மித்து வசிப்பவர் என கூறும் பொலிஸார், அவரை அடையாளம் கண்டுள்ள நிலையில் கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(எம்.எப்.எம்.பஸீர்) metro news

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter