இனங்களுக்கு இடையே நல்லிணக்கம் பேணப்படும் போதுதான் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தையும், ஜனநாயக அரசியல் கலாசாரத்தையும், சட்ட ஒழுங்கையும் முன்னேற்ற முடியும் என்பது மிகவும் தெளிவாக நாட்டு மக்களினால் உணரப்பட்டுள்ளது. ஆயினும், இந்த நாட்டை இன்றைய நிலைக்கு கொண்டு வந்தவர்கள் இன்னும் தங்களின் ஒவ்வாத நடவடிக்கைகளில் இருந்து தம்மை திருத்திக் கொள்ளவில்லை. அதனால்தான் பல்லின மக்கள் வாழும் நாட்டில் ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற போர்வைக்குள் பௌத்த மயமாக்கலை மேற்கொள்வதற்குரிய திட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். மறுபுறத்தில் சிறுபான்மையினரின் பூர்வீகக் காணிகளை பௌத்த புனித பூமி, வன இலாகாவுக்குரிய பிரதேசம் என்று பல்வேறு பெயர்களில் காணிகளை அபகரித்துக் கொள்ளும் கொள்கைப் போக்கிலும் மாற்றங்களைக் காண முடியவில்லை.
கடந்த 9ஆம் திகதி அம்பாரை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பாலமுனையில் உள்ள முள்ளிமலை பிரதேசத்தில் உள்ள தனியார் ஒருவருக்கு உரித்துடைய காணி ஒன்றில் பௌத்த விகாரை ஒன்றினை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை தீகவாபி ரஜமகா விகாராதிபதியின் தலைமையில் இன்னும் சில தேரர்களும், தனிநபர்கள் சிலருமாக இரவோடு இரவாக மேற்கொண்டனர்.
ஆயினும் அன்றைய தினம் காலை பொது மக்களும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் குறித்த இடத்திற்கு வருகை தந்து தமது எதிர்ப்பைக் காட்டினர். இதனைத் தொடர்ந்து பௌத்த விகாரை அமைப்பதற்குரிய முயற்சியில் ஈடுபட்ட குழுவினர் அங்கிருந்து வெளியேறினர்.
பாலமுனை முள்ளிமலை பிரதேசத்தில் தனியார் ஒருவரின் காணியில் பௌத்த விகாரை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி முழுக்க சட்டத்திற்கு மாற்றமானது. அதற்குரிய எந்தவொரு அனுமதியும் சட்ட ரீதியாக பெற்றுக் கொள்ளப்படவில்லை என அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லாஹ் தெரிவித்தார்.
குறித்த முள்ளிமலை பிரதேசத்தில் உள்ள காணிகள் அங்குள்ள முஸ்லிம்களுக்குரியதாகும். அவர்கள் சட்டரீதியான அனுமதிப் பத்திரத்தையும் வைத்துள்ளார்கள். ஆயினும், இப்பிரதேசத்தை பௌத்தர்களின் பிரதேசமாக்கிக் கொள்வதற்குரிய முயற்சிகள் பௌத்த இனவாத தேரர்களினால் பல தடவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொது மக்கள் காட்டிய எதிர்ப்பினால் அந்த முயற்சிகள் கைவிடப்பட்டன. ஆயினும், குறித்த இடத்தில் பௌத்த விகாரை அமைப்பதற்குரிய முயற்சிகளை பௌத்த பேரினவாத தேரர்கள் கைவிடவில்லை என்பதனையே அண்மையில் இடம்பெற்ற முயற்சி மூலமாக புரிந்து கொள்ள முடிகின்றது.
இம்மாதம் 9ஆம் திகதியும் பொது மக்களும், அரசியல்வாதிகளும் எதிர்ப்புக் காட்டியதனை அடுத்து அங்கிருந்து வெளியேறிய குழுவினர் அங்கு பௌத்த விகாரை அமைக்க வேண்டுமென்பதில் உறுதியாக உள்ளார்கள் என்பது அவர்கள் மீண்டும் 13ஆம் திகதி பாலமுனை முள்ளிமலை பிரதேசத்திற்கு வருகை தந்திருந்ததன் மூலமாக ஊர்ஜிதமாகியுள்ளது. அன்றும் கூட பொது மக்களும், அரசியல்வாதிகளும் எதிர்ப்புக் காட்டினர். மீண்டும் குறித்த குழுவினர் அங்கிருந்து சென்றனர். ஆயினும், அவர்கள் மீண்டும் வருவார்கள் என்பதுதான் அனுபவமாகும்.
இது தனியார் ஒருவருக்குரிய காணி, அதற்குரிய ஆவணங்களும் முறையாக உள்ளன. அதே வேளை, சட்டத்திற்கு முரணான வகையில் பௌத்த விகாரை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களுக்கு இலங்கையின் காவல்துறையினர் பாதுகாப்பு அளித்தமையானது, சட்டவிரோத நடவடிக்கைக்கு வழங்கப்பட்ட அங்கீகாரமாகவே கருத வேண்டியுள்ளது.
பாலமுனைக் கிராமம் நூறு வீதம் முஸ்லிம்களைக் கொண்டது. அங்கு எந்தவொரு பௌத்தரும், கிடையாது. இத்தகையதொரு நிலையில் குறித்த பிரதேசத்தில் பௌத்த விகாரை அமைப்பதற்குரிய நடவடிக்கையானது பௌத்தர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே முரண்பாடுகளை தோற்றுவிப்பதற்குரிய சதியாகவே பார்க்க வேண்டியுள்ளது.
இலங்கை பௌத்த நாடாகும். நாட்டில் எல்லாப் பாகங்களிலும் வாழ்வதற்குரிய உரிமை பௌத்தர்களுக்கு மாத்திரமே உள்ளது. ஏனைய இனங்களுக்கு அத்தகைய உரிமை கிடையாது. அவர்கள் இங்கு வாழ்வதற்கு வந்தவர்கள் என்ற கொள்கையை பௌத்த பேரினவாத கடும்போக்குவாதிகள் இன்று வரை உச்சரித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கு ஆட்சியாளர்கள் உறுதுணையாக இருந்து வருகின்றார்கள்.
பாலமுனையில் பௌத்த விகாரை ஒன்று அமைப்பதற்குரிய முயற்சிகள் பௌத்த பேரினவாதத் தேரர்களினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அம்பாரை மாவட்டத்தில் உள்ள ஒரு சில அரசியல்வாதிகள் கட்சி பேதமின்றி தமது எதிர்ப்பை ஒற்றுமைப்பட்டு மேற்கொண்ட போதிலும், இம்மாவட்ட முஸ்லிம்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ், பைசால் காசிம், எச்.எம்.எம்.ஹரிஸ், முஸரப் ஆகியோர்கள் இச்சம்பவம் குறித்து வாய் திறக்கவில்லை.
முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காகவே அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கின்றோம் என்று இவர்கள் தெரிவித்துக் கொண்டாலும், பௌத்த பேரினவாதிகளின் முஸ்லிம் விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எந்தவொரு சிறு முயற்சியைக் கூட ஆட்சியாளர்கள் மேற்கொள்ளவில்லை. அதனால்தான் சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற பௌத்த தேரர் குழுவினருக்கு பாதுகாப்புத் தரப்பினர் பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.
இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் பாலமுனையில் விகாரை அமைப்பதற்கு எடுத்த முயற்சி குறித்து தமது பலத்த கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் முஸ்லிம்களின் மீது பௌத்த பேரினவாதிகள் பல தாக்குதல்களை மேற்கொண்டார்கள். இறக்காமம் மாயக்கல்லி மலையிலும் புத்தர் சிலை வைத்தார்கள். அப்போது முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அக்கட்சியின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியூதீன் மற்றும் அவரது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் அமைச்சர்கள் அந்தஸ்தில் இருந்தார்கள். ஆனால், அவர்களினால் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த இனவாதிகள் மேற்கொண்ட தாக்குதல்களை தடுக்க முடியவில்லை. மட்டுமன்றி தாக்குதல்களை மேற்கொண்டவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுமில்லை என்ற கசப்பான உண்மையையும் சொல்லியாக வேண்டியுள்ளது.
ஆளும் கட்சியில் ஒரு முகமும், எதிர்க்கட்சியில் ஒரு முகமுமாக சமூகத்தின் விவகாரங்களில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாடகமாட ஒருபோதும் இடமளிக்க முடியாது.
எஸ்.றிபான் விடிவெள்ளி பத்திரிகை 2022-03-17